ஆலயக்கலை பயிற்சி – கடிதம்

அன்புள்ள ஜெ,

வெள்ளக்கோயில் என் சொந்த ஊர். பெயரிலேயே கோயில் இருப்பதாலோ என்னவோ கோயில்கள் மீதான ஈர்ப்பு எனக்கு இயல்பிலேயே வந்துவிட்டது. தவிர என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்களே. ஆகையால், கோயில்கள் மீதான ஈர்ப்பு என்னுள் வராமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியமே.

இப்போது நினைத்துப் பார்க்கையில் இதுவரையிலான என் வாழ்க்கையில் பெரும்பகுதியை நான் கோயில்களிலேயே கழித்திருக்கிறேன் என்பதை உணர்கின்றேன்.
குலதெய்வ கோயிலே பிக்னிக் ஸ்பாட்டாக இதுநாள் வரை எனக்கு இருந்து வந்திருக்கின்றது. ஒரு நாள் பயணமாக எங்காவது செல்லலாம் என்றால் பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் கோயில்களுக்கே என்னை அழைத்துச் சென்றிருக்கின்றனர். இரண்டு நாட்கள் சுற்றுலா என்றாலும் தென்னகத்து கோயில்களுக்கே சென்றிருக்கின்றோம். சில சமயங்களில் அது எனக்கு சலிப்பூட்டுவதாக இருந்திருக்கின்றது. ஆனால், பின்னர் அதை இனிமையான அனுபவமாக மாற்றிக் கொண்டு விட்டேன். ஆலயக்கலை வகுப்பும் கிட்டத்தட்ட கோயிலுக்குச் சென்று திரும்பியதைப் போன்ற ஓர் இனிய அனுபவமாகவே எனக்கு இருந்தது.

ஆசிரியர் ஜெயக்குமார் வேத காலக்கட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்திரனின் உருவ அமைப்பு, சங்ககால இலக்கியத்தில் நடுகல் பற்றிய குறிப்புகள், பக்தி இலக்கியத்தில் கோயிலின் வகைகள் பற்றிய குறிப்புகள், அதன்பின் வாஸ்து மற்றும் ஆகம சாஸ்திரம் ஆகியவற்றைப் பற்றிய அறிமுகங்களைக் கொடுத்துவிட்டு சிற்ப சாஸ்திரத்தைப் பற்றி விளக்கத் தொடங்கினார். கோயிலின் அங்கங்கள், அமைப்பு, இறை வழிபாடு, உருவகங்களின் வகைப்பாடுகள், ஹஸ்தங்கள், ஆபரணங்கள், கோயில்களின் வளர்ச்சி என ஒவ்வொன்றையும் சுவாரஸ்யத்துடன் விளக்கினார். கோயிலுக்குள் நுழைவது என்பது காலச்சக்கரம் கொண்டு அது கட்டப்பட்ட நூற்றாண்டுக்குள் நுழைவதைப் போன்றது என்று அவர் சொன்னது பெரும் திறப்பாக இருந்தது.

வகுப்பில் காட்டப்பட்ட கோயில்களுள் சிலவற்றிற்கு நான் சென்றிருக்கின்றேன். அங்குள்ள சிற்பங்களின் புகைப்படங்களை காட்டி அதை கவித்துவத்துடன் அவர் விளக்கியது பிரம்மிப்பாக இருந்தது. மிகச்சிறந்த சிற்பங்களை வடிவமைப்பதற்கு கவிதையே சிற்பிகளுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கின்றது என்பதை நினைக்கையில் வியப்பாக இருந்தது.

இந்த வகுப்பின் மூலம் நல்ல நட்பு வட்டம் ஒன்று உருவாகியது. பல்வேறு துறைகளில் களங்களில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர்களை ஒருசேர காண்கையில் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வகுப்பு முடிந்ததும் புகைப்படம் எடுக்கையில், ‘ஏன் எல்லாரும் சீரியஸா இருக்கிங்க?’ என்று கோலப்பன் கேட்கையில், ஒரு கணம் மின்னலென எல்லோர் முகத்திலும் புன்னகை தோன்றி மறைந்தது. பின்னர், அப்புகைப்படத்தை எடுத்துப் பார்க்கையில் அழகிய ஓவியம் ஒன்றைப் பார்ப்பதைப் போன்று மனதிற்கு நெகிழ்வாக இருந்தது. மகிழ்வும் நிறைவும் கொண்ட சிற்பமுகங்களைப் போன்ற இனிய முகங்கள்.

அன்புடன்,
நிதீஷ் கிருஷ்ணா.

முந்தைய கட்டுரைகட்டண உரை, கடிதம்
அடுத்த கட்டுரைஅஃக் இதழ்