யானம் (சிறுகதை)
அன்புள்ள ஜெ
கதையை படித்து முடித்த பிறகு, யானம் என்ற சொல்லுக்கு கூகுளில் பொருள் தேடினேன். வழி அல்லது பாதை என்று பொருள் வந்தது. அப்பொழுதுதான் கதையின் இன்னொரு கோணம் புரிந்தது. ராமும், லட்சுமியும் அமெரிக்க வாழ்கையில், பைபர் குமிழியில் அமெரிக்காவே வாழ்வது போல் அவரவர் வாழ்கையை, அவர்களும் தனித்தனியே வாழ்கிறார்கள். பாதை அடைபட்டு, மிக மெதுவாக செல்வது போல, அவர்கள் வாழ்கையும் மெதுவாக நின்று, நின்று செல்கிறது. அவர்கள் வாழ்க்கை இந்திய கலாசாரம் என்கின்ற நிறுத்தங்களும், தனிப்பட்ட விருப்பம் என்கின்ற முன்நகர்வுமாய் போயிகொண்டிருக்கிறது. இருவரும் சேர்ந்து வாழும் வாழ்கையின் பிரச்சனையையும், இருவரும் சேர்த்து செல்லும்பொழுது பாதையில் ஏற்படும் போக்குவரத்து தடங்கலையும் இனைத்து பார்த்தபொழுது ஏதோ உருவமில்லா எண்ணங்களும், கருத்து வேறுபாடுகளும் உருகொண்டு எழுவதுபோல் இருக்கிறது. பிரபா, லட்சுமி சந்திப்பையும் கார் ஆக்ஸிடன்ட்டுன் ஒப்பிடால் இன்னும் தெளிவு வருவதுபோல் உள்ளது.
மிக நீன்ட அசைபோட்ட ஒரு அருமையான கைதைக்கு நன்றிகள்
இப்படிக்கு
பாலு, கரூர்.
அன்புள்ள ஜெ
யானம் கதையை. என் கதையாகவே வாசித்தேன். இதைப்போல பிற உறவு ஏதும் இல்லை. எல்லாமே முறைப்படித்தான் இருவருக்கும். ஆனால் இருவர் நடுவிலும் எந்த உறவும் இல்லை. பேச்சும் அனேகமாக இல்லை. ஆனால் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கிறோம். பிள்ளைகளின் நலனுக்காக. இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் எந்த மதிப்பும் அன்பும் இல்லை. என் மனைவிக்கு அவருடைய தகுதிக்கு மிகச்சிறந்த கணவன் வந்திருக்கவேண்டும் என்ற எண்ணம். அதை என் மனைவியின் அம்மா திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதலே உருவாக்கி அவளுக்குள் நிறுத்திவிட்டார்கள். அதை இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையில் அது அவருடைய கற்பனை. என் மனைவி சுமாரான அழகுதான். சுமாரான படிப்பு. ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் மகள். பணமும் இல்லை. நான் அரசுப் பள்ளி ஆசிரியன். மேல்நிலைப்பள்ளி. முனைவர் பட்டம் பெற்றவன். ஆனால் என் மனைவி பார்ப்பதற்கு கனகா போல இருப்பதாகவும் பெரிய பணக்காரர்கள் அவரை மணந்துகொண்டிருக்கலாம் என்றும் மாமியார் நினைக்கிறார். அப்படி நினைக்க ஒரே காரணம்தான். அவருக்கு தன் கணவர் மேல் கடும் கசப்பு. கணவர் ஒரு கான்ஸ்டபிளாக இருப்பதனால் தாழ்வுணர்ச்சி. எஸ்.ஐ என்றுதான் எல்லாரிடமும் சொல்வார். அதனால் பலவகையான அவமானங்கள் வந்தாலும் அப்படித்தான் சொல்வார்.
எப்போதுமே மாமியாரிடம் ஓர் அதிருப்தி புகைந்துகொண்டே இருக்கும். அதற்குக் காரணம் கல்யாணமாகி முதல் வாரம் சினிமா பார்க்கப்போனபோது என் மாமனார் ஒரு எஸ்.ஐயின் மனைவிக்கு சல்யூட் அடித்ததுதான் என்று மாமனார் சொன்னார். என் மாமியார் தொடர்ச்சியாக பெண்பார்க்க வந்த அனைவரையும் அவமானப்படுத்தி அனுப்பி வந்தார். ஆகவே என் மாமனார் சட்டென்று என்னுடைய திருமணத்தை உறுதி செய்தார். ஆதனால் அது தனக்கு எதிரானது என்று மாமியார் நினைக்கிறார்.
ஒன்று மட்டும் உறுதி. ஒரு பெண் தன் கணவர் தன் தகுதிக்கு ஏற்றவர் அல்ல என்று நினைத்துவிட்டால் அதன்பின் அந்த குடும்ப உறவை என்ன செய்தாலும் சரி செய்ய முடியாது. அண்மையிலே ஒரு கல்யாணத்துக்காக வாடகைக்காரில் குடும்பமாகச் சென்றோம். நான் நினைத்தேன், வெளியே பார்த்தால் ஒரு அழகான அன்பான குடும்பம். உள்ளே எவ்வளவு மோதல் என்று. அந்த அனுபவமே அப்படியே யானம் கதையிலே இருக்கிறது. யானம் என்றால் வாகனம் அல்லது பயணம். மஹாயானம் ஹீனயானம் என்பார்கள். எங்கள் வாழ்க்கை ஒரு ஈனயானம்தான்.
எம்