சுரேஷ்குமார இந்திரஜித்- உரையாடல் பற்றி…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின்ஒரு பாடகி ஒரு மாயப்பிறவிகதையில் கதைசொல்லி, அக்ரஹாரத்தின் வழியாக செல்லும்பொழுது ஒரு வீட்டில் பெண் ஒருவர் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகள் பாடுவதைக் கேட்பான்இரண்டாவது நாளும் அவ்வழிச் செல்கையில் அவள் பாடும் கீர்த்தனையும் குரலும் பிடித்துப்போக, அவளது பக்கத்து வீட்டாரின் துணையுடன் அவள் வீட்டிற்குச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வான். அவள் அப்பாவிடம்,அவள் நன்றாகப் பாடுகிறாள், சபா ஒன்றில் பாட வைக்கலாம் என உள்ளேன் , இன்று அவள் பாடிய கீர்த்தனையின் ராகம் என்ன என்று கேட்பான். ‘கல்யாண வசந்தம் ராகம்என்பார் அவள் அப்பா. ‘மயக்கும் ராகும்என்பான் கதைசொல்லி. அந்த மயக்கும் ராகத்தில் விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார்நின்னையே ரதியென்று  நினைக்கிறேனடி கண்ணம்மாபாடலைப் பாடி , பிப்ரவரி 3 , சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள் கலந்துகொண்ட.நா.சு உரையாடல் அரங்கை இனிதே ஆரம்பித்துவைத்தார்.

தமிழ் விக்கி கணக்கின்படி சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள்  பதினோரு சிறுகதை தொகுப்புகள், நான்கு  நாவல்கள், ஒரு குறு நாவல், இரண்டு குறுங்கதைகள் தொகுப்புகள் என தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்நாவல், சுதந்திரத்திற்கு முன்னர் மதுரை ஆலயம் நுழைவைப் பின்னனியாகக்கொண்டும்,   ‘நான் லலிதா பேசுகிறேன்’  நாவல், பால்யவிவாகம் வழக்கில் இருந்த காலத்தைப் பிரதிபலிப்பதாகவும் வெளிவந்து வரவேற்பை பெற்றவை. நண்பர் பழனி ஜோதி,  ‘நான் லலிதா பேசுகிறேன்நாவலை வாசித்து, அந்தக் காலத்திற்கே சென்று சிறுவயதிலியே திருமணமாகி விதவையாகிவிட்ட குழந்தைகளின் இன்மைகளைப் புரிந்து உணர்வுப்பூர்வமாக உரையாடினார்காந்தியின் புகைப்படங்களைவிட கோட்டுச் சித்திரத்தில் வரையப்பட்ட வட்டக் கண்ணாடி காந்தியே  நினைவில் இருப்பவர் என்றார். அதைப்போல,’ நான் லலிதா பேசுகிறேன்நாவல்  அன்று வழக்கிலிருந்த பால்யவிவாகத்தின் கோட்டுச்சித்திரத்தைக் கொடுத்து இப்படி ஒரு காலத்தைக் கடந்து வந்தோமா என்று பதட்டத்தைக் கொடுக்கிறது என்றார். எழுத்தாளர், பாத்திரங்களின் பெயர்களை தேர்வு செய்வதில் உள்ள கவனத்தைக் குறிப்பிட்டு, நீல்கமல் பாத்திரத்தை உதாரணமாக சொன்னார். லலிதாநீல்கமலுக்கு ஹலூசினேசனில் எழுதும் கடிதங்களையும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1928-ல் சிறுமிகள் திருமணம் தவிர்க்கவேண்டியதை பற்றிய பேசிய உரை நாவலோடு பொருந்தி வருவதையும்,   நீல் கமலைப் பார்க்கச் செல்லும் லலிதா தன்னை எப்படித் தயார்படுத்திக்கொள்வாள் என்பதையும் நாவலின் நிகழ்வுகளோடு விளக்கி,  ‘நான் லலிதா பேசுகிறேன்நாவலாக எப்படி அமைந்து வந்துள்ளது என்று சொன்னார்

கொரானா தொற்றுக்காலத்தில், 2020-ல் எல்லோரும் வீடடங்கி, தனிமையில் இருக்கும் சூழ்நிலையிலிருந்து வாசகர்கள் வெளிவர அமைந்த காரணிகளில், சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள் எழுதிய குறுங்கதைகளும் ஒன்று. அவர் அப்பொழுது எழுதிய குறுங்கதைகளும், அதற்குப் பின்னர் தொடர்ந்து எழுதிய குறுங்கதைகளும் , பின்னனிப் பாடகர், தாரணியின் சொற்கள், என இரு தொகுப்புகளாகக் கிடைக்கின்றனநண்பர் சிஜோ, அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வைக் கலந்து, சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின்  குறுங்கதைகளை முன்வைத்து, சிறு உரையாற்றினார். ஒரு IT Engineer-ஆக குறுங்கதைகளை, zip File என்று அவர் சொன்னது புதுமையாகவும் பொறுத்தமாகவும் இருந்ததுவாசிப்பதற்குப் பகடிக்கதைகளெனத் தோன்றும் கதைகள் தொட்டுச்செல்லும் ஆழத்தை சொல்ல சிலவற்றை உதாரணமாக சொன்னார். ‘தயிர் டப்பாகதை மாமனார் மருமகள் சொன்ன ப்ராண்டை வாங்கமுடியாமல் திணறுவதில் இருந்த நகைச்சுவை, மகன் / மருமகள் வீட்டில் தங்கியிருக்கும் பெரியவரின் சங்கடங்களை சொல்லிச் செல்கிறது என்றார். ‘என் வாசகிகதையில் எழுத்தாளரைப் பார்க்கவரும் வாசகி, ஆஞ்சநேயர் பக்தைஅவருடன் நேரிலேயே பேசுவதாகவும்,எழுத்தாளர் துப்பறியும் , திகில் கதைகளை எழுதலாம் எனவும் அஞ்சநேயர் சொன்னாதாக சொல்வார். வாசகனின் மனதில்  நிற்பது அப்பெண்ணின் மனநிலை பற்றிய கவலைதான்.   ‘காமம்பேசுபொருளாக வரும் கதைகளையும் வெகு நுட்பமாக எடுத்துச்சொன்னார். சிஜோவிற்கு இதுவே முதல் உரை. Zoom-ல் பார்வையாளர்களின் புன்முறுவலைப் பார்த்ததை வைத்து அவர்கள் நன்றாக ரசித்தார்கள் என்றே சொல்வேன். ஒரு நண்பர், இனிமேல் நான் எந்த வடிவான பெண்ணையும்குதிரைபோல எனச் சொல்லப்போவதில்லை என்று உரையாடல் குழுவில்  நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்அதற்குசிஜோ’-தான் முன்னோடி என்றார்

பழனியின் உரையும், சிஜோவின் உரையுமே, வாசகர்களுக்கு சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புகளுக்கு மொத்தப் புரிதல் ஒன்றைக் கொடுத்தது என்றால், கேள்வி பதில் நேரம் மீதமிருந்த இடைவெளிகளை நிரப்பிவிட்டது எனலாம். அவர் கதைகளில் விவரணைகளுக்கு அவர் கொடுக்கும் இடம், அவரது நிலைப்பாடு,  ‘நான் லலிதா பேசுகிறேன்நாவலில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் உரையை வைத்த அனுபவம், விரித்த கூந்தல் கதை வந்த பின்னனி, குறுங்கதைகளுக்குத் தலைப்பு வைப்பதில் அவர் எடுக்கும் சிரத்தை, மரபை வாசிப்பதில் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் அனுபவம், இசையின் பரிச்சியம், ஆதர்ச எழுத்தாளர்என்று அவரையும் அவரது படைப்புகளையும் புரிந்துகொள்ளும் அளவு நண்பர்களின் கேள்விகள் இருந்தன. இயல்பாக , புன்முறுவலுடன் அவர் உரையாடியது, நண்பர்களை இலகுவாக உணரவைத்து மேலும் மேலும் கேள்விகளை கேட்க வைத்தது

.நா.சு உரையாடல் அரங்கில், சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களை அழைக்கலாம் என்று நண்பர்கள் முடிவு செய்தது முதல்நான், அவர்களது பிரதிநிதியாக, அவருடன் உரையாடி வருகிறேன். அவர் ஒரு Perfectionist என்பதை புரிந்துகொண்டேன்.   Zoom-ல்  லிங்க், வெளிச்சம் போன்றவை சரியாக இருக்கவேண்டும் என்று நினைத்தார். அதற்காக ஒரு ட்ரைல் ரன் வைத்தோம். அந்தச் சிறு உரையாடலில், ‘எடின்பரோவின் குறிப்புகள்’ என்ற குறுநாவலில்  முதல் பதிப்பில் ரிவால்வர் என்று தவறுதலாக குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அதை பிஸ்டல் என்று மாற்றவேண்டும் என்று அதற்கான அத்தாட்சிகளை தேடியதை சொன்னார். பழனி, ‘நான் லலிதா பேசுகிறேன்உரையில் , லலிதா, காதலனைப் பார்க்கும் முன் , பாதத்தை சுத்தம் செய்து தயாராவதை , கால் என்று தவறுதலாக குறிப்பிட்டதை சொன்னார்உங்கள் கதைகளில்,’வெந்தயக் கலர் புடவைஎனக்குப் பிடித்தது என்று சொன்ன நண்பரிடம், ‘வெந்தய நிறச் சேலைஎன்று திருத்தம் செய்தார். அவர் பெயரை , சுரேஷ்குமார இந்திரஜித் என்று அழைப்பதில் அவருக்கு உள்ள பிடிமானத்தை அறிந்திருந்தேன். நண்பர்களுடன் உரையாடலில் இருமுறை அவர் பெயரை சுரேஷ்குமார் என்று தவறுதலாக சொல்வதை நான் உணர்ந்தேன். ஆதலால் எனது வரவேற்புரையை எழுதியே வாசித்தேன்நிகழ்வு முடிந்தும் முடியாததுமாக அவரை அழைத்து , எல்லாம் சரியாகத்தானே சென்றது எனக் கேட்டுக்கொண்டேன். எல்லாம் நிறைவாக இருந்தது என்றார். நிகழ்வின் துவக்கத்தில், பாடிய பெண், கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளாமல் அவ்வளவு துல்லியமாக பாடமுடியாது , அவரிடம் பாராட்டுக்களை தெரிவிக்கச் சொன்னார்.

  

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைமானுட அறிவை நம்புதல்
அடுத்த கட்டுரைபயிற்சிகள் பற்றி…