பித்து எனும் அறிதல் நிலை

The Lord of Dance Nataraja Sculpture, 10th century Chola bronze
இந்திய உளவியல் – நித்ய சைதன்ய யதி

காலன் அகாலன்

அன்புள்ள ஜெ,

குருகு இதழில் குரு நித்யாவின் ஆழமான அதே சமயம் மிக சுவாரஸ்யமான இந்திய உளவியல்  கட்டுரை  அழகிய மணவாளன் அவர்களது மொழிபெயர்ப்பில் வெளியாகியிருந்தது. உளவியலின் மிக ஆதார மன பகுப்பில் தொடங்கி ஃப்ராய்ட் மற்றும் யுங்இருவரது கொள்கைகளையும் ஆய்வு முடிவுகளையும் இந்திய தத்துவத்துடன் ஒப்பிட்டு விளக்கியிருந்தார்

கட்டற்ற ஆதார விழைவான லிபிடோ, அது குவியும் கத்தெக்சிஸ், மற்றும் மானுடம் அதை ஒழுங்காற்றி முன்சென்று நிகழ்த்தும் உன்னதமயமாக்கல்மிக அற்புதமான விளக்கங்களை அளித்திருந்தார்ஃப்ராய்டின் துல்லியம், யுங்கின் எண்ணற்ற பிழைபுரிதல்கள் என ஒரே கட்டுரையில் ஒட்டுமொத்த சித்திரத்தை அளித்துள்ளார்நடராஜரின் காலில் கிடக்கும் முயலகனை கத்தெக்சிஸ் என்றால் அவரது தலையில் இருக்கும் பிறை உன்னதமயமாக்கல் என்றும் சொல்லியிருக்கிறார்.  

இன்று தங்களது வாசகர் மதுமிதாவின் கடிதத்திற்கு பதிலளிக்கையில்(கொஞ்சம்பித்து – கடிதம்) தலையில் சூடியவன் என இறைவனைச் சொன்னீர்கள். இப்பொழுது உன்னதமயமான பித்து என்பது மிக ஆர்வமூட்டும் புதிரான ஒன்றாக தெரிகிறது. அது எங்கே இட்டுச் செல்லும்? நம்மால் அதைக் கையாள முடியுமா?   கூர்முனைப் பாதையாகிய ஞானத்தேடலில் இந்தப் புதிரின் இடம் என்ன?

சங்கரன்  .ஆர்

அன்புள்ள சங்கரன்,

சற்றேனும் பித்து இல்லாமல் எவருமில்லை. ஏனென்றால் எல்லா அறிதலும் இரு அம்சங்கள் கொண்டவை. தர்க்கம்சார்ந்த, பயன்பாடு சார்ந்த ஓர் அறிதல். கூடவே உள்ளுணர்வு சார்ந்த, நம் கட்டுக்குள் இல்லாத ஓர் அறிதலும் நிகழ்கிறது. ஒரு புதிய கருவியை நீங்கள் கற்கும்போதுகூட ஒரு வகையான தர்க்க அறிதலும் கூடவே தர்க்கத்தை மீறிய ஓர் அறிதலும் நிகழ்வதை கவனித்தால் உணரமுடியும். அப்படியே மெய்மறந்துட்டேன் என நாம் அதைச் சொல்கிறோம். ‘அதிலேயே விழுந்து கிடந்தேன்’ என்று சொல்கிறோம். அந்த அனுபவமே கற்றலின் பித்து எனப்படுகிறது. அதுதான் நம் ஆழுளம் கற்றுக்கொள்ளும் வழி. ஆழுளம் கற்காதவை பெரும்பாலும் நம் குணாதிசயமாக மாறுவதில்லை. நமக்கு அவை தகவல்சேகரிப்புகளாகவே நின்றுவிடும்

(ஆகவேதான் மெய்யான கல்வி நிகழ உகந்த சூழலும் தேவை என சொல்லப்படுகிறது. நாம் வெறுக்கும் கல்வியறைகளில் ஓசைகள் மற்றும் குழப்பங்கள் நடுவே சரியாந கல்வி நிகழமுடியாது. அங்கே நம் ஆழுளம் சிதறிக்கொண்டே இருக்கிறது. குருகுலம் என்னும் கருத்துருவம் அங்கிருந்து உருவாகிறது. இயற்கையான அழகுள்ள, அமைதியான, கல்வி மட்டுமே நிகழும் ஒரு சூழல் உண்மையான கல்விக்கு மிக இன்றியமையாதது. அந்த இடம் கல்விக்குரியது, அங்கே வேறொன்றுக்கும் இடமில்லை என உங்கள் ஆழுளம் ஏற்றுக்கொள்ளவேண்டும்)

சாதாரணமான அறிதல்களிலேயே இந்த பித்து அம்சம் சற்று இருக்கையில் கலை, இலக்கியம், மெய்யறிதல், யோகம் அல்லது ஊழ்கம் ஆகிய தளங்களில் அந்தப் பித்து மேலும் மேலும் வலுவானதாக ஆகிக்கொண்டே செல்லும். எல்லா கலைகளிலும் அந்த பித்து அம்சம் உண்டு. இசை நேரடியாகவே பித்துதான். இலக்கியத்தை மெய்யாகவே  உணர்ந்து வாசிக்கையில் பித்துநிலையில்தான் இருக்கிறோம். நாம் நம்மைக் கடந்து சென்று வாசிப்பதே இலக்கிய வாசிப்பு

(ஆகவேதான் பெரிய நாவல்கள் உலகளவில் விரும்பப்படுகின்றன. சில பக்கங்கள் கடந்ததும் நாம் வாசிக்கிறோம் என்னும் பிரக்ஞையை இழந்து நாவலில் மூழ்கிவிடுகிறோம். அது மெய்யான வாழ்வுபோல ஆகிவிடுகிறது. அந்நாவலின் மொழியும் படிமங்களும் நம் உள்ளத்துள் தானாக நிகழ தொடங்குகின்றன. பிரக்ஞைபூர்வமாக வாசிப்பதென்பது இலக்கியத்துக்கு எதிரான செயல்பாடு. முனைவர் பட்ட ஆய்வுக்கு அன்றி வேறெதற்குச் செய்தாலும் அது வெட்டிவேலை)

எந்தக் கல்வியும் அந்தப் பித்தை கட்டுக்குள் வைக்கும் அம்சத்தையும் கொண்டிருக்கும். கலை, இலக்கியங்களில்வடிவம்என்பது பித்தை கட்டுக்குள் கொண்டுவரும் அம்சம். இசையின் உணர்வுப்பெருக்கு கட்டற்ற பித்து. ஆனால் ராகம் என்னும் வடிவ அம்சம் அதை கட்டுப்படுத்துகிறது. இலக்கியம் பித்துநிலையை அளிக்கும். ஆனால் அதன் காவிய வடிவம் அல்லது நாவல் வடிவம் அந்தப் பித்தை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டதாகவும் திகழ்கிறது. ஒரே சமயம் நாம் பித்து நிலையில் இருந்தாலும் அந்த கலையிலக்கிய வடிவம் நம்மை அறியாமல் நம்மை கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்துள்ளது.

ஊழ்கம் பித்தை வெளிக்கொண்டுவரும் நிகழ்வுதான். மண்ணைத் துளைத்து ஆழத்து நீரை ஆர்ட்டீசியன் ஊற்று போல பீரிடச்செய்யும் கலை அது. ஊழ்கம் அபாயமாக ஆவது அதனால்தான். அதை எப்படி வெளிக்கொண்டு வருவது, அப்போது எப்படி கட்டுப்படுத்துவது என பல வழிமுறைகள் கண்டடையப்பட்டுள்ளன. பதஞ்சலி யோகசூத்திரம் தொட்டு ஏராளமான நூல்கள் உள்ளன. இங்கு மட்டுமல்ல, வேறு பண்பாடுகளிலும் ஏராளமான பயிற்சிகளும் நூல்களும் உண்டு.

தீவிர நிலையில் ஊழ்கம் என்பது பித்தை எடுத்து அதையே அறிதல்முறையாகக் கொண்டு அதனூடாகப் பயணம் செய்தல். ( எளிய நிலையில் ஊழ்கம் என்பது நம் புறவாழ்க்கையின் சிதறல்களுக்கு தீர்வாக அகத்தை குவித்துக்கொள்ளுதல். கொஞ்சம் பித்தை எடுத்து வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பதுபோல நம் பிரக்ஞையின் ஓரமாக வைத்துக்கொள்ளுதல்)  ஆகவேதான் ஊழ்கத்தை முறையான ஆசிரியர்களுடைய நேரடியான வழிகாட்டலின்படி மட்டுமே செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நம்மை கண்காணித்து, வழிநடத்தும் ஒருவர் நம்முடன் இருந்துகொண்டிருக்க வேண்டும். இல்லையேல் அந்த அகமீறல் கட்டற்றுச் செல்லக்கூடும். அழிவை உருவாக்கக்கூடும்.

இலக்கியத்தைக் கற்பதில் பித்து ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒரு நல்ல இலக்கிய ஆக்கம் ஓர் எல்லையில் தூய தர்க்கத்தையும் இன்னொரு எல்லையில் கட்டற்ற பித்துநிலையையும் ஒரே சமயம் கொண்டிருக்கும். அந்த தர்க்கம் மூன்று வகையில் அதிலிருக்கும். ஒன்று, அந்த படைப்பின் வடிவத்தர்க்கம். இரண்டு , அந்தப் படைப்பின் வரலாறு மற்றும் தத்துவம் சார்ந்த தர்க்கம். மூன்று, அந்தப்படைப்பு உருவாக்கும் கருத்துநிலையை அப்படைப்பு   கோத்து முன்வைக்கும் முறையிலுள்ள தர்க்கம். 

ஆனால் அதை மீறிச்செல்லும் பித்துப்பகுதிகள் அதிலேயே இருக்கும். அவை வேறொரு வகை மொழியும் அமைப்பும் கொண்டிருக்கும். பலசமயம் மீறி வெளியே வழிந்து கிடப்பவையாகவும் அவை தென்படும். விஷ்ணுபுரம், கொற்றவை, குமரித்துறைவி மற்றும் வெண்முரசு போன்ற நாவல்களில் நிறையவே அவை உள்ளன.  

அந்த மீறல்கள் மூன்று வகை.

அ. மொழியின் கட்டற்ற தன்மை. மந்திர உச்சாடனம் போன்ற தன்மை. (சில  உத்திச்சோதனை நாவல்களில் இதை செயற்கையான உருவாக்கியிருப்பார்கள். ஒரே சொற்றொடரை பல பக்கங்களுக்கு எழுதுவது, சுழலும் சொற்றொடர்களை அமைப்பது என.  அவை போலியான எழுத்துமுறைகள். நான் அதைச் சொல்லவில்லை)

ஆ. படிமங்களின் கட்டற்ற ஒழுக்கு. நல்ல படைப்பிலக்கியங்களில் அவ்வகையான படிமப்பெருக்கு அரிதாக நிகழும். அந்த படைப்பிலக்கியத்தின் ஓர் உச்சமாகவும் அதேசமயம் சம்பந்தமற்றதாகவும் அது திகழும். படைப்பிலக்கியம் உருவாக்கும் தர்க்கபூர்வமானதும் அழகியல்நம்பகத்தன்மை கொண்டதுமான புனைவுவெளிக்கு மேல் அது அமைந்தாலொழிய அதற்கு மதிப்பில்லை (அதையும் செயற்கையாக நகலெடுத்து செயற்கைப் படிமப்பெருக்காக எழுதலாம். அவை பாழ்முயற்சிகள்)

இ. அரிதாக நிகழும் ஒருவகை இடைவெளி. ஒரு தாவல். தியானத்தில் அது நிகழும். ஒரு அகப்பெருக்கு உடைந்து இன்னொன்று சற்று தள்ளி நிகழும். அந்த அகழி அமைதியும் முடிவின்மையும் கொண்டது. அது புனைவிலக்கியத்திலும் உண்டு.

அவற்றை வாசகன் தன் பித்துநிலையைக் கொண்டே வாசிக்கிறான். அதைத்தான் அவன் பரவசநிலை என்றோ மெய்மறந்த நிலை என்றோ சொல்கிறான்.  அவற்றினூடாக அவன் தான் தர்க்கபூர்வமாக அறிந்தவற்றுக்கு அப்பால் ஒரு தளத்தை அடைகிறான். அங்கே அனுபவம் முதலில் நிகழ்கிறது. அதன்பின்னரே அறிதல் நிகழ்கிறது. அதாவது ஆழுளம் அறிந்துவிடுகிறது. அதன்பின் தர்க்கமனம் அதை வகுத்து தொகுத்து புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறது. 

அந்த அறிதல் நிகழ்கையிலேயே ஓர் இலக்கியப்படைப்பு மெய்யான கலைப்படைப்பாக ஆகிறது. ஏனென்றால் கலையின் நோக்கமே நம் பிரக்ஞையுடன் உரையாடுவது அல்ல. நம் ஆழுளத்துடன் உரையாடுதல். (ஆகவேதான் கலைப்படைப்புகளை பிரித்து பகுத்து ஆராயும் கல்வியாளர்களோ அரசியலாளர்களோ மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவற்றைச் செய்கையில் அவை இலக்கிய வாசகனுக்கு அபத்தமானவையாகவும் மிகக்கீழ்நிலையில் நிகழ்வனவாகவும் தோன்றுகிறது. அவன் அறிந்ததை அவர்கள் அறிவதில்லை. மலரை கிழித்து ரசாயனச் சோதனை செய்பவர்கள் அறிவது மலரை அல்ல)

ஆகவே பித்துநிலையை அஞ்சவேண்டியதில்லை. அது அறிதலின் ஒரு பகுதி. அதை கலை, இலக்கியம், மெய்யியல், ஊழ்கம் ஆகிய தளங்களில் அவற்றுக்குரிய நெறிகளின் படி கையாள்வதென்பது ஒரு யோகம். ஞான யோகம் முதல் விபூதி யோகம் வரை அத் பல படிகளாகச் செல்வது.  

நடராஜகுரு மிக அற்புதமாக சொன்னதுபோல முயலகன் என ஞான சாதகன் அலகிலா அறிதலின் காலடியில் கிடக்கிறான். அது கதார்ஸிஸ். உணர்வுநிலைக் கொந்தளிப்பு மற்றும் நுண்மையாக்கம் வழியாக அவன் ஒன்றை அறிகிறான். சடையில் சூடப்பட்ட பிறை நிலைவு என்பது பித்து. அது உன்னதமாக்கல் அல்லது சப்ளிமேஷன். அதன் வழியாக அவன் இன்னொன்றை  அறிகிறான். அது உச்சி. இரண்டுமே அறிதல்கள். இரண்டுமே ஒன்றையொன்று நிரப்புபவை.  

ஜெ

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க 

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் நூல் வாங்க

இந்திய ஞானம் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைகொல்லிப்பாவை
அடுத்த கட்டுரைமல்லற்பேரியாற்றுப் புணை