“இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வாசித்து முடித்தேன்.”விஷ்ணு புரம்“வாசித்த போது பல கேள்விகளே எஞ்சியது. சில வருடங்களுக்கு முன்பு நடந்தது.இப்போது மீண்டும் வாசித்தால் மேலும் விளக்கம் கிடைக்கலாம்.
இந்த புத்தகம் வாசித்து முடித்தபோது இந்து தத்துவ மரபின் முடிவிலியை உணர முடிந்தது.பூர்வ மீமாம்சம் பற்றி குறிப்பிடும் போது அதன் செமிட்டிக் சாயலை மேலோட்டமாக குறிப்பிடுகிறீர்கள்.செமிட்டிக் மத தத்துவங்களுடன் வேதங்களின் உறவை எவ்வாறு பார்கிறீர்கள்?
மேலும் வேதாந்தம் பற்றி எழுதும் போது அத்வைதம் பற்றி விரிவாக எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்.வேறு எங்காவது எழுதியுள்ளீர்களா?எழுதியிருந்தால் அறியத்தரவும் உதவியாக இருக்கும்.நன்றி.
அன்புடன
ராஜன்,பளை.
அன்புள்ள ராஜன்
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூல் இந்து மரபுக்குள் உள்ள ஆறு தரிசனங்களைப் பற்றிய ஒரு தொடக்கச் சித்திரத்தை அளிக்கும்பொருட்டு எழுதப்பட்டது. அதில் வேதாந்தம் பற்றி வேறு வகையில் இங்கே தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. உபநிடத உரைகள், கீதை உரைகள் எல்லாமே வேதாந்த விளக்கங்கள்தான். மற்ற தரிசனங்கள் பற்றி பொதுவாக இங்கே அறிமுகமே இல்லை. ஆகவேதான் அந்நூல் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் கோரிக்கைப்படி எழுதப்பட்டது.
அதன்பின் நான் வேதாந்தம் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். அவை நூல்களாக வெளிவந்துள்ளன. வேதாந்தம் பற்றி மட்டுமாக நூல் ஏதும் எழுதவில்லை. எழுதும் எண்ணம் உண்டு. இவற்றை துண்டுதுண்டான விவாதங்களாக நிகழ்த்துவதன் பயனின்மையை உணர்ந்தபின் வகுப்புகளாக நிகழ்த்தலாமென்று தோன்றி விவாதிப்பதை குறைத்துக்கொண்டேன்.
இப்போது இந்து மரபை முழுமையாக கற்பிக்கும் தத்துவ வகுப்புகளை தொடர்ச்சியாக முகாம்களாக நடத்தி வருகிறேன். அவற்றில் இவற்றை எல்லாம் விரிவாகக் கற்பிக்கிறேன். இந்து வேதங்கள் உட்பட பொதுவாக உலகத்தின் தொல்ஞான நூல்கள் அனைத்துக்கும் ஒரே அடிப்படை ஊற்றுமுகம் உண்டு என்பதும், அது வரலாற்றுக்கு முந்தைய தொல்குடி வாழ்க்கையில் இருக்கிறது என்பதும் என் எண்ணம்.
ஜெ
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் நூல் வாங்க