சிந்தனைப்பயிற்சி, கடிதம்

சிந்தனைப் பயிற்சி

அன்புள்ள ஜெ

சிந்தனைப்பயிற்சி பற்றிய கட்டுரையைக் கண்டேன். நான் உண்மையாகவே ஆசைப்படும் நிகழ்ச்சி இது. ஏனென்றால் இன்று கல்விக்கூடங்களிலே சொல்லிக்கொடுக்கப்படாத கல்வி என்பது இதுதான். ஆனால் இன்று இதை எங்குமே கற்க முடியாது. உண்மையிலேயே என்னிடம் இந்த பிரச்சினை உண்டு. என்னால் எங்கும் எவரிடமும் தெளிவாகப் பேசமுடிவதில்லை. ஒரு விஷயத்தை துல்லியமாகச் சொல்லவே முடிவதில்லை. கோர்வையாக யோசிப்பதுமில்லை. இதற்கு ஒரு பயிற்சி இருந்தால் நல்லது என்று நான் எண்ணியதுண்டு. ஆனால் அப்படி ஒரு பயிற்சிக்கு இன்றைக்கு அதிகமான இளைஞர்கள் வர மாட்டார்கள். எல்லாமே தங்களுக்குத் தெரியும் என்று நினைப்பவர்களே பெரும்பாலானவர்கள். என் தோழர்கள் எல்லாமே அப்படித்தான். அவர்கள் வந்தால்தான் அப்படி ஒரு வகுப்பு நடைபெற முடியும் என்பது பெரிய ஒரு சிக்கல்.

அப்படியென்றால் நாங்கள் என்ன செய்வது? உங்களுக்கு ஒரு முப்பதுபேர் தேறினால்தான் நஷ்டமில்லாமல் அதை நடத்த முடியும் என தெரிகிறது. அதற்கு நீங்கள் ஸ்பான்ஸர் ஏதாவது பிடித்துத்தான் இந்நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் யாருக்கு இதெல்லாம் தேவையோ அவர்களுக்கு இங்கே வருவதற்குண்டான நிதி இருக்காது. சொந்தமாக பணம் சேர்ப்பது மிகவும் கடினம். ஆகவேதான் இதையெல்லாம் எழுதினேன்.

அன்புடன் 

செல்வக்குமார்

 

அன்புள்ள செல்வக்குமார்

உண்மைதான். நம் இளைஞர்கள் பெரும்பாலானவர்களுக்குச் சிந்தனை என ஒன்று இருப்பதே தெரியாது. ஆகவே அவர்களிடம் இதைப்பற்றிப் பேசமுடியாது. அதனால் இத்தகைய பயிற்சிகளுக்கு வருவதில்லை. ஆனால் வேறுவழியே இல்லை. பெரிய நிறுவனங்கள் முன்னெடுக்கவேண்டும். அல்லது நீங்கள் சொல்வதுபோல் ஸ்பான்ஸர் அமையவேண்டும். பார்ப்போம். ஏப்ரலில் ஒரே ஒரு முறை மீண்டும் முயன்றுபார்க்கலாமென எண்ணுகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைவைணவ இலக்கிய வகுப்புகள் அறிவிப்பு
அடுத்த கட்டுரைA Fine Thread – Review