(மானுட அறிவை நம்புதல் என்னும் உரைக்குப்பின் எழுந்த கேள்விகளும் பதில்களும். அந்த உரை எவ்வளவு முக்கியம் என்பதற்கான சான்றுகளை யூடியூபில் அதற்குக் கீழே வந்துள்ள எதிர்வினைகளே அளிக்கின்றன)
கேள்வி பதில்கள்
கேள்வி 1: அறிவியலைப் பற்றி பேசினால் கார்ல் பாப்பரின் பெயர் எப்படியும் வந்துவிடுகிறது. பொய்ப்பித்தல் (Falsification) இருந்தால்தான் அது அறிவியல் என்பது அவர் முன்வைத்த கருத்து. அதற்கு அவரது காலத்திலேயே எதிர்ப்பு இருந்தது. ஃப்ராய்ட் போன்றவர்கள் தங்களுடைய உளப்பகுப்பாய்வு (Psychoanalysis) அறிவியலாகாதா, ஐன்ஸ்டைன் சொல்வது மட்டும்தான் அறிவியலா என்றெல்லாம் கேட்டனர். இந்த பொய்ப்பித்தல் எனும் கருத்தாடலை பாப்பர்தான் முதன்முதலில் முன்வைத்தாரா ? அல்லது இந்திய அறிவியல், இந்திய தர்க்கம் போன்றவைகளில் இந்த கருத்தாடல் இருந்ததா ? இந்திய அறிஞர்கள் என்று நாம் சொல்லக்கூடியவர்கள் அதுபோன்ற கருத்துகளை முன்வைத்திருக்கிறார்களா ?
பதில்: பொதுவாக மேலை தர்க்கம், இந்திய தர்க்கம் என இரண்டாக சொல்லலாம். நான் ஓரளவுக்கு கவனித்துப் பார்த்தது இந்திய தர்க்கம் (Indian Logic) தான். இந்திய தர்க்கங்களில் இத்தகைய நிரூபணவாதம் (அ) கருத்துகளின் நிரூபணம் என்பது நியாய சாஸ்திரத்தில் கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. கௌதமரின் நியாய சாஸ்திரம் இங்கு ஒரு புறவயமான அறிவுத்தரப்பாக இருந்துவருகிறது. வேதாந்திகள், பௌத்தர்கள், சமணர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நியாய சாஸ்திரம் என்பது ஒரு அடிப்படையான விவாத முறை. ஒரு கருத்தை நீங்கள் முன்வைத்தீர்கள் என்றால் அதை நிரூபிக்க வேண்டும். எதிர்தரப்பு அதை பொய்ப்பிக்க வேண்டும். பொய்ப்பித்தலுக்கான அறைகூவலையே நீங்கள் விடுக்கிறீர்கள். எனவே பொய்ப்பித்தல் என்பதும் இந்திய மரபிலும் இருந்துகொண்டுதான் உள்ளது. ஆனால் அது கார்ல் பாப்பரில் இருந்து வேறுபடுகிறது.
இந்திய தர்க்க முறைமை அந்த பொய்ப்பித்தலுக்கான வாய்ப்பை அளிப்பதும் விவாதம் நடப்பதும் அறிஞர் வட்டத்துக்குள்ளேதான், அனைவர் மத்தியிலும் அல்ல. நியாய சாஸ்திரத்தின்படி ஓர் உண்மைக்கு ஓர் உவமையை நீங்கள் சொல்லலாம். அந்த உவமையை நிறுவினால் அந்த உண்மை நிரூபிக்கப்பட்டதைப் போன்றே. உபமானப் பிரமேயம் என்று அதை சொல்கின்றனர். அதை ஒரு அறிஞர் அவை ஏற்றுக்கொண்டதென்றால் அந்த அறிஞர் அவைக்கு அது உண்மையாகிறது. நியாயம் சொல்வது அத்தகைய அறிஞர் அவைக்கான நியாயமே ஒழிய ஒட்டுமொத்த உலகத்துக்கான நிரூபணத்தை அல்ல.
ஆனால் பாப்பரின் அறிவியல் என்பது அறிஞர் அவைக்கான நிரூபணவாதம் பற்றியதல்ல. அது உலகம் முழுமைக்குமான விஷயத்தைப் பற்றி பேசுகிறது. இதைத்தான் அடிப்படை வேறுபாடாக நான் கருதுகிறேன். முந்தையது தத்துவம் மற்றும் மெய்யியலுக்கே சரிவரும். பாப்பருடைய தர்க்கமுறை அறிவியலுக்குரியது.
*
கேள்வி 2: ஆன்மிகத் தளத்தில் அறிவியலை முற்றிலும் புறந்தள்ளி விடுவது சரிதானா ?
பதில்: ஆன்மிகம் என்று சொல்லும்போதே அது ‘ஆன்மா‘ என்பதைப் பற்றியதாகிறது. அது அகவயமானது, தனிப்பட்டது (subjective). ஒரு அகவயமான அறிதல் இருக்கமுடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். உதாரணமாக, எனக்கு என் மனைவி மேல் இருக்கும் அன்பை நான் புறவயமாக நிரூபிக்க முடியாது. அது எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம். பல சமயங்களில் மனைவியிடம்கூட அதை நிரூபிக்க முடியாது. அதுபோன்று பல்லாயிரம் அகவயமான விஷயங்கள் உள்ளன. அவைகளுக்கெல்லாம் புறவயமான நிரூபணத்தையோ அளவுகோல்களையோ உருவாக்க முடியாது. ஆகவே ஆன்மிகம் என்பது முழுக்க முழுக்க அகவயமானதாகத்தான் இருக்கமுடியும். அதில் இருக்கும் புறவய அம்சம் என்பது அதன் தத்துவத் தளம் மட்டுமே.
உதாரணமாக, பிரம்மம் (அ) இறையுணர்வு ஒருவருக்கு வருவதென்பது அகவயமானது. அதை நிரூபிக்க முடியாது. ஆனால் பிரம்மம் எனும் கருதுகோளைப் பற்றி வேதாந்தம் தனியே ஓர் அவையில் விவாதிக்கும். அது தத்துவம். அதற்கான நெறிகள், விவாத முறைகள், ஏற்பு -மறுப்புகள் தனியே உள்ளன. ஒன்று, நீங்கள் அகவயமான அனுபவத்தில் செல்லலாம். அப்போது விவாதம் அவசியமற்றது. ”உளனெனில் உளன் இலனெனில் இலன்” என்று சொல்லப்படுவது அதைத்தானே. அல்லது, தத்துவத் தரப்பை எடுத்துக்கொண்டு பிரம்மவாதியாகவோ சைவசித்தாந்தியாகவோ கிறிஸ்தவ இஸ்லாமியராகவோ இருந்துகொண்டு தத்துவ விவாதம் செய்யலாம்.
ஆனால் தத்துவார்த்தமான விவாதத்திற்கு உங்களை யாரேனும் அறைகூவும்போது அகவயமான அறிதல் என்று இந்தப் பக்கம் வந்துவிடுவீர்கள் என்றால், அகவயமான விஷயங்களைப் பற்றி யாரேனும் பேசினால் அதற்கு தத்துவார்த்தமாக எதிர்வினையாற்றுவீர்கள் என்றால் அது பிழை. அப்படி இருக்கமுடியாது.
மேலும், இந்தியாவில் மிக அபத்தமாக நடந்துகொண்டிருப்பது ஆன்மிகமான விஷயங்களுக்கு அறிவியல் நிரூபணங்களை சொல்வது. சிவலிங்கத்தை வணங்கினால் இன்னின்ன பலன்கள் உண்டு என்று ‘மருத்துவரீதியாக’ சொல்லப்படுகிறது, விபூதி பூசினால் சளி குறைகிறது என்பது போன்ற கருத்துகள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. (அதற்கு விக்ஸே பூசலாமே?) இதுபோன்று நிரூபணவாதத்தை மதத்தோடு இணைத்துக்கொள்வது, அறிவியலைக் கொண்டு ஆன்மிகத்திற்கு சான்று பகர முயல்வது. இவை யாவுமே அறியாமையே. இத்தகைய போக்கை கண்ணதாசன்தான் தொடங்கிவைத்தார். அதன்பின் பலரும் அவ்வாறு எழுதிவருகின்றனர்.
ஆன்மிகமான எதற்கும் நிரூபணவாத அறிவியல் சான்றளிக்காது. அதேபோலத்தான் ஆன்மிகமான அறிதலை அந்தப் புறவய அறிதல் மறுக்கவும் முடியாது. ஒருவருடைய ஆன்மிகமான உணர்வுநிலையை ஒரு நாத்திகர் அறிவியலைக் கொண்டு எதிர்ப்பது எவ்வளவு மடத்தனமோ அதேபோன்றதுதான் ஆன்மிகமான அறிதலை அறிவியலைக் கொண்டு நிரூபிக்க முயல்வதும். இந்த இரண்டு மடத்தனங்களும் இங்கு மாறி மாறி நிகழ்கின்றன.
”விண்ணில் பறக்கும் புள்ளெல்லாம் நான்” என்று ஒருவன் உணர்கிறான். அவனை அமரவைத்து நிரூபித்துக்காட்டு என்று கேட்கமுடியுமா ? அது அவன் அடைந்த பேருணர்வு. அந்த உணர்வு அவனுக்கு அளிக்கும் விடுதலை என்பது உண்மை. அறிவியல் அதைப் புரிந்துகொள்ளத்தான் முயலுமேவொழிய அதை பொய்ப்பிக்கவோ நிரூபிக்கவோ முயலாது.
*
கேள்வி 3: அப்படியெனில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு உண்மை உள்ளது. அதாவது, இலக்கிய உண்மை, தத்துவ உண்மை, அறிவியல் உண்மை என்பதாக சொல்லலாமா ?
பதில்: சில தளங்களில் அதற்கான முறைகள் இருக்கும். பொதுவாக, ஒரு விரிந்த பார்வையில் மூன்றுவித அறிதல் முறைகள் உள்ளன.
(1) தர்க்கம் (Logic) – இதற்குள்தான் அறிவியல் வருகிறது.
(2) கற்பனை (Imagination) – இதற்குள் அறிவியல் வரவே முடியாது. இது இலக்கியம் செயல்படும் தளம். நூறாண்டுகளுக்குப் பின் உலகம் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். நீங்களும் அந்த கற்பனைக்குள் வருகிறீர்கள். நாம் இருவரும் சேர்ந்து ஒரு கற்பனையை உருவாக்குகிறோம். இது எழுத்தாளனும் வாசகனும் சேர்ந்து முடிவு செய்யும் ஒரு உலகம்.
(3) உள்ளுணர்வு – ஆன்மிகம், யோகம் போன்று முழுக்கமுழுக்க உள்ளுணர்வு சார்ந்த தளங்களும் உண்டு.
இம்மூன்றும் ஒன்றுக்கொன்று கலந்து கொள்ளவே முடியாது. அறிவார்ந்த தளம் என்பது புறவயமானது. அந்தத் தளத்தில் கற்பனைக்கோ உள்ளுணர்வுக்கோ பெரிதாக இடம் கிடையாது. அறிவியல் என்பது தர்க்கபூர்வமாக அறிந்து முன்வைத்து நிரூபிக்கப்பட வேண்டியது.
*
கேள்வி 4: இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், சிலர் இந்தவகை உண்மைதான் மேலான உண்மை என்பதுபோன்று பேசுகிறார்கள். சமய உண்மைதான் மேலானது என்றும் இலக்கிய உண்மைதான் மேலானது என்றும் சொல்கின்றனர். இம்மூன்றும் வெவ்வேறு அறிதல்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாததால்தானே இத்தகைய உரசல்கள் வருகின்றன ?
பதில்: ஒருவர் தனது அறிதல் முறையையே உண்மை என்று சொல்லலாம். ஆனால் அவையவை அந்தந்தக் களங்களில்தான் செல்லுபடியாகும். அறிவியல் களத்தில் அறிவியல் உண்மைகள்தான் செல்லுபடியாக முடியும். அங்கு சென்று ஆன்மீக உண்மையை சொல்லமுடியாது. நீங்கள் எவ்வளவு பெரிய ஆன்மீகவாதியாக இருந்தாலும் காசு கொடுத்தால்தான் கடையில் பொருள் கிடைக்கும். அந்தத் தளம் வேறுதானே ?
இலக்கியவாதி தனது உலகிற்குள் அறிவியலையும் ஆன்மீகத்தையும் கலந்து ஒரு கற்பனை உலகை உருவாக்குகிறான். அதுபோல ஆன்மிகம் வேறொரு தளத்தில் உள்ளது. மனிதகுல வரலாற்றில் நீதி, கருணை, பிரியம் போன்ற விஷயங்கள் உருவாகி வந்ததற்கான விளக்கத்தை அறிவியல் அளித்துவிட முடியாது. அதற்கு ஒரு ஆன்மீகமான விளக்கம்தான் இருக்கமுடியும். ஆனால் அதற்கு அங்குதான் மதிப்பேவொழிய அதை எல்லா இடங்களிலும் பொருத்த முடியாது. ஆன்மீகத்தில் மட்டும் செல்லுபடியாகும் ருபாய் நோட்டை எடுத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் சென்று பொருள் வாங்கமுடியாது. ஆன்மீகக் கடைகளில்தான் அதற்கு பொருள் கிடைக்கும்.
*
கேள்வி 5: இந்திய கருத்துவெளியில் அறிவியல் பற்றிய இந்த rhetoric வளர்வதற்கு பெரும் தடையாக இருப்பது இங்கு நிலவிவரும் வெகுஜன நம்பிக்கை சார்ந்த ஒரு rhetoric என்று தோன்றுகிறது. ஒரு எழுத்தாளராக அறிவியல் சார்ந்த இந்தப் புரிதலைப் பகிர இலக்கியத்திற்கு, குறிப்பாக அறிவியல் புனைவு என்ற வடிவத்திற்கு என்ன பங்கு உள்ளது ?
பதில்: இப்போது நான் பேசும் இவ்விஷயத்தை உலகமெங்கும் எழுத்தாளர்கள் பேசமாட்டார்கள். ஏனெனில் இதைப் பேசவேண்டியவர்கள் அறிவியலாளர்கள். இது அறிவியலின் மையப்போக்கு சார்ந்த விஷயம். உலகம் முழுக்க எழுத்தாளர்கள் அறிவியலுக்கு அப்பால் உள்ள விஷயங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். ஏனெனில் அறிவியல் பற்றிய விஷயங்கள் எல்லாமே ஏற்கெனவே பேசப்பட்டு மக்களால் ஏற்கப்பட்டுவிட்டதாக இருக்கும்.
ஆனால் தமிழ்ச்சூழலில் பொதுவாக ஆசிரியர்கள், பேச்சாளர்கள், அறிவுஜீவிகள் யாருமே அறிவியலை சார்ந்து பேசுவதில்லை. அறிவியலுக்கு மாற்றான மதக்கருத்துகளையும் இன- சாதிவெறிக் கருத்துகளையும்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். அதனால் நான் இதுபற்றி பேசவேண்டியுள்ளது. உண்மையில் இது என்னுடைய வேலை அல்ல. இலக்கியம் எப்போதுமே கற்பனையைத்தான் முன்வைக்கும், அறிவியலை அல்ல.
நான் அறிவியல் புனைவுகளை எழுதியிருக்கிறேன். அறிவியல் புனைவுகளை எடுத்துக்கொண்டால் அது எப்போதுமே அறிவியலின் மைய ஓட்டத்தில் நிற்காது. அறிவியலின் இறுதிஎல்லைகளையே அது பரிசீலிக்கும். அறிவியல் நிற்கும் எல்லைகளில் இருந்து மேலே செல்லத்தான் அறிவியல் புனைவு முயலும்.
சமீபத்தில் ஐசக் அசிமோவின் (Isaac Asimov) ஒரு கதை படித்தேன். ஒரு மனித உடலில் வைரஸ் புகுந்து மனித செல்களையெல்லாம் replace செய்து தன்னை அதில் இருத்திக்கொண்டு வைரஸ்ஸால் ஆன ஒரு உடலாக அந்த மனித உடலை மாற்றிவிடுகிறது. இது அறிவியல் சாத்தியமற்றது. ஆனால் அசிமோவ் அதை எழுதியிருக்கிறார். இப்படி ஒன்று நிகழ்ந்தால் என்னவாகும் என்பதைத்தான் அறிவியல் புனைவு எழுதும். சாதாரண அன்றாட அறிவியலை அது எழுதாது.
அறிவியல் புனைவு என்பது அறிவியலை பிரச்சாரம் செய்வதாக அமையமுடியாது. அது அறிவியலைக் கொண்டு மேலும் வாழ்க்கையை கற்பனை செய்வதாகவே அமையமுடியும். அது அறிவியலில் இருந்து சில படிமங்களை எடுத்துக்கொண்டு தத்துவக் கேள்விகளையும் வாழ்க்கை பற்றியும் கற்பனை செய்வதாகவே அமையும். ஆகவே அறிவியல் புனைவின் அடிப்படை என்பது அறிவியல் அல்ல, கற்பனையே.
*
கேள்வி 6: காந்தி இந்தியச் சூழலில் மேலை அறிவியலை கையாண்டார். மேலை அறிவியல் முறைக்கும் இந்திய ஞானமரபுக்கும் சமரசம் தேவைப்படுகிறதா ? அல்லது உலகளாவிய அறிதல்முறை என்று ஒன்று உண்டா ?
பதில்: இந்திய அறிவியல் முறை என்பதும் இந்திய ஞானமரபு என்பதும் வேறுவேறு. நான் ஏற்கெனவே சொன்னதுபோல, தொடக்ககாலத்தில் தத்துவம்தான் அறிவியலையும் கையாண்டு வந்தது. அதனால் இந்திய அறிவியல் என்பது இந்திய தத்துவத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்துவந்துள்ளது. உதாரணமாக, ஆயுர்வேதத்தை எடுத்துக்கொண்டால் அது இந்தியத் தத்துவத்தின் ஒரு பகுதியாகத்தான் இருக்கமுடியும். இந்திய தத்துவத்தில் முக்குணங்கள் பற்றிய கருத்து உள்ளது. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்கள் சாங்கியத்தில் சொல்லப்படுகின்றன. அதிலிருந்து வேதாந்தத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிலிருந்துதான் திரிதோஷம் என்று சொல்லப்படக்கூடிய வாதம், பித்தம், கபம் என்ற விஷயத்திற்கு ஆயுர்வேதம் சென்றடைகிறது. அதனால் ஆயுர்வேதம் தத்துவத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்திய அறிவியல் முறையையும் இந்திய தத்துவத்தையும் பிரித்துதான் பார்க்கவேண்டும். இந்திய தத்துவ முறை மேலைத் தத்துவத்தோடுதான் உரையாட முடியுமேயன்றி மேலை அறிவியலோடு உரையாட முடியாது. அதுபோல இந்திய அறிவியல் முறைகளான ஆயுர்வேதம், சிற்பவியல் உள்ளிட்டவை மேலை அறிவியலோடுதான் உரையாட முடியும். அத்தகைய உரையாடல் நிகழ்ந்துகொண்டும் உள்ளது. இந்திய சிந்தனைக்கு அறிவியல் எதிரானதாக இருக்கமுடியாது.
மேலை அறிவியல் என்ற சொல்லே தவறு. அது அறிவியல்தான். மனிதகுலத்துக்கே பொதுவான அறிவியல்தான் உண்டு. அந்த அறிவியலுக்கென்று சில பார்வைகள், புறவயத்தன்மைகள் உள்ளன. அதை நிறைவு செய்யும்போது அது ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் சீனாவின் மரபார்ந்த மருத்துவத்திற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அந்த மருத்துவமுறை என்பது அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. ஆனால் அலோபதிக்குரிய புறவயமான நெறிகளை வைத்துப் பார்க்கும்போது அந்த மருத்துவம் நிரூபிக்கப்பட்டதால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுபோல இந்திய மருத்துவம் அலோபதிக்கு முன்னால் தன்னை நிரூபிக்க முடியுமென்றால் அலோபதி அதை ஏற்கவே செய்யும். ஆகவே இந்திய தத்துவம் வேறு, இந்திய அறிவியல் வேறு.
*
கேள்வி 7: ‘அறிவியலை நம்புதல்‘ என்கிற பெயரே சுவாரஸ்யமான ஒரு முரண்தொடையாக அமைந்திருக்கிறது. பொய்ப்பித்தலுக்கு வாய்ப்பளிக்கும் அறிவியலானது ஒருவித அவநம்பிக்கைவாதத்தில் மையம் கொள்வதாக புரிந்துகொள்ளப்படுவதால் அறிவியல் மீதான வெறுப்பு (அ) விலகல் உண்டாகிறது என்று நினைக்கிறீர்களா ?
பதில்: முதல் விஷயம், இது ‘அறிவை நம்புதல்‘ அல்ல. ‘மானுட அறிவை நம்புதல்‘. அதாவது மானுட அறிவு எனும் செயல்பாட்டை நம்பவேண்டும். அதன் எல்லா முடிவுகளையும் அப்படியே நம்பி ஏற்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு மனித அறிவு தொகுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை Objective Cumulative என்பர். மனித மனதுக்கு வெளியே மனித அறிவு தொகுக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. மொழிவழியாக நூல்களிலும், அதன்பின்னர் மின்னணு முறையிலும் மனித அறிவு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான அமைப்பு மீது நமக்கு ஒரு ஏற்பு, நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கையில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
அந்த நம்பிக்கை இல்லையென்று எவருமே சொல்லமுடியாது. உடல்நிலை சரியில்லை என்றால் எல்லோருமே மருந்து சாப்பிடுகிறோம். அறிவியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள் காடுகளில் வாழவில்லையே. வீட்டில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்! அறிவியல் உருவாக்கிய விமானத்தில் அமர்ந்திருப்பவர் எதை நம்பி அமர்ந்திருக்கிறார் ? ஏறத்தாழ ஐம்பதாயிரம் அடி உயரத்தில் ஒரு இயந்திரத்தில் அமர்ந்திருக்கிறோம் என்றால் அந்த இயந்திரம் இயங்கும் நூறு இருநூறு அறிவியல் விதிகளை நம்பித்தான் அமர்ந்திருக்கிறோம் அல்லவா. அதையே நான் சொல்கிறேன். அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் அது உங்களை மேலும் கேள்விகளை நோக்கி செலுத்தும். அப்போது உங்களுக்கான விடைகளை நீங்கள் கண்டடைய முடியும். இதில் எவ்வித முரண்பாடும் கிடையாது.
உண்மையில் அறிவியல் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அறிவியலுக்கு எதிரான பேச்சு ஒரு பாவனையாக நம்மிடம் உள்ளது. நான் சுட்டிக்காட்டுவது அதையே. தொழில்நுட்பம் பற்றியோ மருத்துவம் பற்றியோ யாரேனும் ஒன்றை சொன்னால் அது அறிவியல்ரீதியாக சரியா என்று கேட்கிறோம். அதேபோல, ”உனது இனம்தான் தூய்மையான இனம்” என்று உங்களிடம் ஓர் அரசியல்வாதி சொல்லும்போதும் அதற்கு அறிவியல் நியாயம் இருக்கிறதா என்று கேளுங்கள். உன் மொழிதான் உலகிலேயே உயர்ந்த மொழி அல்லது தொன்மையான மொழி என்று சொல்லும்போது ஆதாரம் கேளுங்கள். நிரூபிக்கச் சொல்லுங்கள். மற்ற விஷயங்களில் நமக்கிருக்கும் அறிவியல் நிபந்தனைகள் நம் மதம், இனம், மொழி சார்ந்த விஷயங்களிலும் இருக்கவேண்டும்.
பொய்ப்பித்தல் என்பது எல்லாவற்றையும் பொய்யாக்குவது அல்ல. நம் முன்னால் சொல்லப்படக்கூடிய அனைத்தையும் பொய்ப்பிக்க முயன்று, எதுவொன்று பொய்ப்பிக்கப்பட முடியாததோ அதை உண்மை என்று ஏற்றுக்கொள்வது. ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் இணைந்தால் தண்ணீர் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அணுவைப் பிளக்கமுடியாது என்பது ஒரு கருத்தாக இருந்தது. ஆனால் அப்படிப் பிளந்ததும் அக்கருத்து பொய்யாகிவிட்டது. சில உண்மைகள் நிரந்தரமான உண்மையாக இருக்கலாம். சில பொய்ப்பிக்கப்படலாம். இது ஒரு பெரும் பயணம். இந்தப் பயணம் கடந்த முப்பதாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் நடந்துள்ளது. குகை ஓவியங்களில் இருந்து ஐன்ஸ்டீனில் வரை இது நடந்துகொண்டிருக்கிறது. அதை நம்பவேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.
*
கேள்வி 8: பொதுவாக மேலை நாடுகளைவிட கீழை நாடுகளில் மக்களிடம் அறிவியல் மனம் குறைவாக இருக்கிறது. அறிவியல் அறிவு, அறிவியல் வளர்ச்சி போன்றவைகளில் நாம் குறைவான நிலையிலேயே இருக்கிறோம். இது எப்படி கட்டமைக்கப்பட்டது ? உலகில் ஒரு பகுதி அறிவியலில் மேல்நிலையில் இருப்பதாகவும் மற்றொரு பகுதி ஆன்மீகத்தில் மேல்நிலையில் இருப்பதாகவும் எவ்வாறு பிரிவுபட்டிருக்கிறது ? யாரோ ஒருவர் திட்டமிட்டு பிரித்ததுபோல இது எவ்வாறு நிகழ்ந்தது ?
பதில்: முதலில் இவ்விரண்டு இடங்களில் இருக்கும் வரலாற்றை எடுத்துப் பார்க்கவேண்டும். பதிவுசெய்யப்பட்ட தகவல்சார்ந்த வரலாறு உள்ளது. அப்படிப் பார்க்கும்போது ஐரோப்பிய பண்பாட்டில் இன்றைய நவீன அறிவியலின் தொடக்கம் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் உள்ளது. அதிலிருந்து தொடர்ந்து நானூறு ஆண்டுகள் அங்கு அறிவியல் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. சில மன்னர்கள் அறிவியலுக்கு பெரும் ஊக்கமளித்துள்ளனர். உதாரணமாக, ரஷ்யாவில் மகா பீட்டர் (Peter the Great), சுவீடனில் மன்னர் சார்லஸ் (Charles), ஸ்பெயினில் இசபெல்லா (Isabella) போன்ற ஆட்சியாளர்கள் தொழில் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
ஐரோப்பாவின் இந்த காலகட்டத்தை அறிவியலின் வளர்ச்சி காலகட்டம் என்று அறிஞர்கள் சொல்கின்றனர். இன்று உலகையே மாற்றிய பல கண்டுபிடிப்புகள் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளன. Screw ஒரு எளிய கருவி. ஆனால் screw இல்லாமல் இன்று உலகமே இல்லை. ஆனால் மகத்தான ஞானிகள் என்று சொல்லப்படக்கூடிய நம் முன்னோர்கள் யாரும் screw வைக் கண்டுபிடிக்கவில்லை. அதுபோல Valve இல்லையனில் மொத்த Automobiles ம் கிடையாது. இது சார்லஸ் அவையில் ஒரு வேடிக்கைக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகே அதன் பயன் தெரியவந்தது. பல தொழில்நுட்பக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பதினேழாம் நூற்றாண்டு காலகட்டத்தை கருமான்களின் (கொல்லர்களின்) பொற்காலம் என்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன.
இந்த நானூறு ஆண்டுகளும் இந்தியாவிலும் சீனாவிலும் என்ன நடந்தது ? புறவயமான வரலாறு அதைக் காட்டுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் தொடர்ச்சியாக அரசியல் மோதல்களும் அரசியல் நிலையற்ற தன்மையுமே இருந்தன. இந்தியா அரசியல்ரீதியாக சிதைந்து ஒரு தேங்கிய சமூகமாகவே இருந்தது. அதன்பிறகு பதினெட்டாம் நூற்றாண்டில் காலனியாதிக்கம் வருகிறது. அதன் பிறகுதான் நவீன அறிவியலும் கல்வியும் இங்கே அறிமுகமாகின்றன. ஆகவே முன்னூறு முதல் நானூறு ஆண்டுகாலம் நம் சமூகம் வளர்ச்சியின்றி தேங்கிய நிலையில் இருந்தது என்பது வரலாற்று உண்மை.
நமது தத்துவத்தில் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னர் புதிதாக எதுவும் நிகழவில்லை. மத்வர், நிம்பர்கர், வல்லபர் என்பவர்களோடு அது நின்றுவிட்டது. அதன்பிறகு விளக்கவுரைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. ஆயுர்வேதத்திலும் சிற்ப சாஸ்திரத்திலும் முக்கிய நூல்களே எழவில்லை. தமிழ் இலக்கியத்தையே எடுத்துப் பார்த்தாலும் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த செவ்வியல் படைப்பு என்று ஏதாவது உண்டா ? கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றோடு அது நின்றுவிடுகிறது. ஆகையால் அந்த நானூறு ஆண்டு தேக்கநிலையில் ஐரோப்பியர்கள் நம்மைவிட முன்னே சென்றுவிட்டனர். நாம் பின்தங்கிவிட்டோம்.
நவீன காலகட்டத்தில் ஆங்கிலேயர் நம்மை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தின் சில மனநிலைகள் நம்மை ஆட்டிப்படைத்தன. ஐரோப்பியர்கள் இங்கே வரும்போது ஒரு நவீன அரசாங்கத்தின் ஆற்றலோடு வந்தனர். நவீன இராணுவமும் நவீன போர்க்கருவிகளும் அவர்களிடம் இருந்தன. ஒட்டுமொத்தமாகவே அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் எண்ணிக்கையில்தான் ஆங்கிலேயர் இங்கு இருந்திருக்கின்றனர். அவர்கள் முப்பத்தைந்து கோடி பேரை ஆள்வதைப் பார்க்கும்போது அவர்கள் அசாதாரணமானவர்கள் என்ற எண்ணம் இந்தியர்களிடம் ஏற்பட்டது. அதனால் அதுபற்றி நமக்கு மிகப்பெரிய தாழ்வுணர்ச்சி ஏற்பட்டது. ஆகவே சுதந்திரப்போராட்ட காலகட்டத்தில் இந்தியர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஊட்டும்படியாக பேசவேண்டியிருந்தது. இங்கும் மாபெரும் அறிஞர்கள் இருந்திருக்கின்றனர், நூல்கள் இருந்திருக்கின்றன என்று நம் தலைவர்கள் சொன்னார்கள். இங்கும் வேதங்கள், உபநிடதங்கள், திருக்குறள், கம்பராமாயணம் எல்லாம் இருந்திருக்கின்றன என்று சொல்லவேண்டிய தேவை அன்று ஏற்பட்டது. ஆகவேதான் அன்றிருந்தவர்கள், ”ஐரோப்பியர்கள் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கலாம். ஆனால் நாம் ஆன்மீகத்தில் வேறு உயரத்தில் இருக்கிறோம்” என்று சொல்லிவந்தனர்.
ஆனால் மேலைச் சிந்தனைகளை கொஞ்சம் புரட்டிப்பார்த்தால் தெரிவது, அங்கு ஆன்மீகத்திலும் மகத்தான வளர்ச்சி உள்ளது என்பதே. தத்துவத்திலும் ஆன்மீகத்திலும் மாபெரும் சிந்தனையாளர்கள் அறிஞர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். அதனால் இந்தியாவைவிட அவர்கள் எவ்வகையிலும் ஒருபடிகூட கீழானவர்கள் அல்ல. பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அவர்கள் அடைந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்துமே நம்மைவிட மேம்பட்டதே. ஆகவே நாம் வேறு தளத்தில் மேம்பட்டவர்கள் என்று கற்பனை செய்துகொள்ளலாமேயன்றி அது உண்மையன்று.
*
கேள்வி 9: ஐரோப்பிய வரலாற்றில் அறிவொளி காலகட்டம் (Age of Enlightenment), மறுமலர்ச்சி காலகட்டம் (Renaissance) என்றெல்லாம் சொல்கிறோம். நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது இந்தியாவில் ஒரு பெரிய இருண்டகாலம் (Age of Darkness) இந்ததுபோன்றுதான் தெரிகிறது. நமக்கு ஏன் அத்தகைய அறிவொளி காலகட்டம் நிகழவில்லை ?
பதில்: ஐரோப்பிய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அங்கும் ஒரு பெரிய இருண்டகாலம் உள்ளது. அது கத்தோலிக்கப் பேரரசுகள் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவை ஆண்ட காலம். அத்தகைய காலகட்டத்தில் அதற்கு எதிரான விழிப்புணர்வாக அங்கு மொழிவழி தேசியங்கள் உருவாகிவந்தன. சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் உருவாயின. அதன் தொடர்ச்சியாக ஒரு சுதந்திரமான தத்துவ சிந்தனை உருவானது. நன்மை தீமைகளை மனிதன் தானாகவே முடிவுசெய்துகொள்ள முடியும் என்ற விழிப்புணர்வு உண்டானது. அதை Free Will Movement என்கின்றனர். இவையெல்லாம் சேர்ந்ததுதான் ஐரோப்பிய மறுமலர்ச்சி. அதுபற்றி தமிழிலேயே நல்ல நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. அந்த மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்த தத்துவார்த்தமான மறுமலர்ச்சியைத்தான் அறிவொளி காலம் என்கின்றனர். அது கிட்டத்தட்ட இருநூறாண்டுகாலம் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒரு மாபெரும் தத்துவ விழிப்புணர்வு இயக்கம். ஐரோப்பிய அறிவொளி காலத்தின் ஒரு முனையில் மார்ட்டின் லூதர் (Martin Luther), ஹுஸ் (Jan Hus) போன்ற சிந்தனையாளர்கள் உள்ளனர். மற்றொரு முனையில் ஃபாயர்பாக் (Ludwig Feuerbach), மார்க்ஸ் (Karl Marx) போன்ற நாத்திக தரப்பினர் உள்ளனர். இதற்கு இடையே அநேக அறிஞர்கள் உள்ளனர்.
அப்படியொரு விழிப்புணர்ச்சி அங்கு நிகழ்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.ஒன்று, ஐரோப்பா ஒரே பண்பாட்டு மண்டலமாக இருந்தது மிக முக்கிய காரணம். ஆகவே கொண்டும் கொடுத்தும் உரையாடியும் அவர்கள் வளரமுடிந்தது. ஒரு மொழியில் வெளிவந்த படைப்பு சில ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து மொழிகளிலும் சென்றுவிடும். அவர்களது அதிவேக வளர்ச்சிக்கு அதுவொரு காரணம். போலந்து தமிழகத்தைவிட சிறிய நாடு. ஆனால் நோபல் பரிசைப் பெற்ற பலர் அந்நாட்டை சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் அதுபோன்ற மறுமலர்ச்சி ஏற்படாததன் பல காரணங்களுள் ஒன்று நாம் ஒரே கலாச்சார மண்டலமாக இல்லை என்பதே. மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு பத்து எழுத்தாளர்கள் பெயரையோ கர்நாடகாவில் உள்ள ஒரு கலைஞரின் பெயரையோ கேட்டால் நமக்குத் தெரியாது. இந்தியா இன்னும் துண்டுதுண்டாகவே உள்ளது. இது இன்னும் ஒரே கலாச்சார மண்டலமாக ஒரு உரையாடலுக்குள் வரவேயில்லை. அதற்கான தொடக்கமே 1920 களில்தான் ஆரம்பிக்கிறது. இந்திய மறுமலர்ச்சி என்பதே 1900 களில் தொடங்கியதே. ஆனால் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குக்கூட அது நீடித்திருக்கவில்லை. அந்த ஐம்பதாண்டு காலகட்டத்தில் தாகூர், பிரேம்சந்த் போன்றோர் இந்தியா முழுக்க படிக்கப்பட்டனர். அதன்பின் அந்த இணைப்பும் இல்லாமல ஆகி விட்டது இந்த நிலைக்கு காரணம் நம் மொழிகளுக்கிடையே இணைவு இல்லை என்பதே. மேலும் வேறுபல காரணங்களும் இருக்கின்றன.
உதாரணமாக ஐரோப்பிய மறுமலர்ச்சியை உருவாக்கியதற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கு ஒரு பெரும் பங்களிப்பு உள்ளது. சார்போன் பல்கலை., உப்சாலா , ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் கலையிலும் தத்துவ சிந்தனையிலும் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளன. அதைப் போன்ற ஒன்றை கனவுகண்டுதான் இந்தியாவில் காசி வித்யா பீடம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகள் உண்டாக்கப்பட்டன. ஆனால் அந்த கல்வி நிறுவனங்கள் 1950 களுக்குள்ளாகவே சீர்குலைந்துவிட்டன. இன்று மேலை நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு இருக்கும் மதிப்பு இந்தியாவின் எந்தப் பல்கலைக்கும் கிடையாது. இதுவும் ஒரு காரணம். இவ்வாறு பல காரணங்கள் இருக்கின்றன.
*
கேள்வி 10: ஆனால் அதே இந்தியாவில்தான் ஐ.ஐ.டி. யும் உள்ளது. அதை ஒரு பெரும் சாதனையாக அனைவரும் சொல்கின்றனரே ?
பதில்: எனக்கு தொழில்நுட்பம் சார்ந்து அதிகமாக சொல்லத்தெரியவில்லை. இருப்பினும் ஐ.ஐ.டி என்பது மேலைநாட்டு தொழில்துறைக்குத் தேவையான ஊழியர்களை உருவாக்கிக் கொடுக்கக்கூடிய பயிற்றுநர் அமைப்பாகவே உள்ளது. மெய்யான அறிவியலாய்வுகள் நடைபெறக்கூடிய இடமாக அது இல்லை. அங்கிருந்து அறிவியலறிஞர்கள் யாரும் வரவில்லை. தொழில்நுட்ப ஊழியர்கள்தான் வந்துகொண்டிருக்கின்றனர் என்பதே என் கருத்து.
*
கேள்வி 11: இந்திய சூழலியல் போதாமைகள் பற்றி இன்னும் விளக்க முடியுமா ?
பதில்: இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் சூழலியல் உருவாகி வந்தபோது அதன் தொடக்ககாலத்தில் அதோடு நான் தொடர்புகொண்டிருந்தேன். கேரளத்தில் சுகதகுமாரி (Sugathakumari) சூழலியல் சார்ந்த பிரச்சனைகளை பேசத்தொடங்கும்போதே மிக இளைஞனான நான் அதில் பங்கெடுத்துள்ளேன். தமிழகத்தில் ஈரோடு மருத்துவர் ஜீவா, அமைதி அறக்கட்டளை பால் பாஸ்கர் (Paul Baskar), கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்றவர்கள் அதில் ஒரு விழிப்புணர்வை தொடங்கியபோது நான் அதோடு தொடர்புபட்டிருக்கிறேன். மிக தொடக்க காலத்தில் சூழலியல் செயல்பாடுகளில் எனக்கு ஒரு சிறு பங்களிப்பு இருந்தது. அண்மையில் ஈரோட்டில் ஜீவா அவர்களின் நினைவிடத்தை திறந்து வைப்பதற்காக வந்த மேதா பட்கர் என்னை பழைய சூழலியல் செயல்பாட்டாளனாக அடையாளம் கண்டுகொண்டது நிறைவளிப்பதாக இருந்தது.
இந்த சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை தொடக்கத்தில் முன்னெடுத்தவர்கள் அனைவருமே முறையாக அறிவியல் கற்றவர்கள், அறிவியல் சார்ந்த அறிதல் கொண்டவர்கள். இவர்கள் எல்லோருமே அறிவியல் தன்னை சரிசெய்து கொள்ளவேண்டும் என்பதாகப் பேசியவர்கள். அதற்கொரு அரசியல் அழுத்தமும் சமூக அழுத்தமும் கொடுக்கவேண்டும் என்று பேசியவர்கள்.
ஆனால் அந்த சூழலியல் இயக்கங்களின் அடுத்தகட்டம் வந்தபோது அதை இரண்டு தரப்பினர் கைப்பற்றிக் கொண்டதாக எனக்குத் தோன்றியது. ஒரு தரப்பு, அதை பழமைவாதம் நோக்கி கொண்டுசென்றனர். நவீன கல்வி, நவீன மருத்துவம், வாழ்க்கை முறை என அனைத்துக்கும் அவர்கள் எதிராக இருந்தனர். தடுப்பூசிகளுக்கு எதிராகப் பேசுவது, மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்துக்கொள்ளக்கூடாது என்று பேசுவது என்பதாக ஒருவித அதீத பழமைவாத நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தனர். அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் அது பொதுமக்கள் சார்ந்த ஒரு விஷயமாக மாறவே மாறாது. ஒரு சிறு கூட்டத்தின் பிடிவாதமாகவே எஞ்சும். தென்னகத்தில் சித்தர் மரபு, சாகாக்கலை போன்றவற்றோடும் வட இந்தியாவில் வேதகால பண்பாடு, ரிஷிகளின் வாழ்க்கை போன்றவைகளோடும் சூழலியலை கொண்டு சேர்த்தனர். இவ்வாறு மதம், இனம், மொழி சார்ந்த பழமைவாதங்களுக்குள் சூழலியலை கொண்டுசேர்ப்பது நிகழ்ந்தது.
மற்றொருபுறம், அறிவியலில் இருக்ககும் ஆதிக்கத்தை மட்டும் பேசி அதிலிருக்கும் அடிப்படையான வசதிகளை நிராகரிக்கும் போக்கு உருவானது. அறிவியல் என்பதே அமெரிக்காவின் மோசடி, அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே வளர்ந்த நாடுகளின் கருவிகள்தான் என்று பேசும் ஒரு மூர்க்கத்தனம் உருவாகியது. இந்த இரண்டு போக்குகளுமே சூழலியல் சார்ந்த நம்பகத்தன்மையை மக்களிடம் உண்டாக்காமல் போயிற்று. அவற்றைக் கடந்துதான் இன்று சூழலியல் செயல்படவேண்டியுள்ளது. சூழலியலில் செயல்படுபவர்கள் தாங்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்ல, அறிவியலை சரிசெய்து, அதை வழிநடத்துபவர்கள் என்ற விழிப்புணர்வுடன் செயல்படுவதுதான் ஒரே வழி என்று நினைக்கிறேன்.
*
கேள்வி 12: இந்தியாவில் இவ்வாறு அறிவியலுக்கும் மற்ற இசங்களுக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டதென்பது கடந்த பத்தாண்டுகளில் கூடுதலாக இருக்கிறதோ ? ஒரு குறிப்பிட்ட கட்சி ஒரு குறிப்பிட்ட மதவாதத்தை முன்வைப்பதனால் அது ஏற்பட்டிருக்குமா ? அல்லது இந்தியாவின் இத்தகைய நிலைமை எப்போதுமே இவ்வாறே இருந்துவந்துள்ளதா ?
பதில்: இந்தியாவில் அறிவியலுக்கு எதிரான ஒரு மனநிலை என்பது எப்போதுமே உண்டு. அறிவியல் என்பது நவீன சிந்தனை முறையோடும் நவீன வாழ்க்கையோடும் தொடர்புடையது. நாம் முந்தைய காலகட்ட சிந்தனைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள். படிப்படியாக கல்வி பரவலாகும்போது அறிவியலறிவும் வளரும். அந்தப் பரவலாக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவை. இங்கு பொதுக்கல்வி என்பதே 1920 களில் இருந்தே அறிமுகமாகிறது. பலர் நினைப்பதுபோல அது ஆங்கில அரசால் கொண்டுவரப்பட்டதல்ல. ஆங்கில அரசின் பங்களிப்பு என்பது ஓரளவுக்குத்தான். பெரிய அளவில் இந்தியாவில் கல்வியைக் கொண்டுவந்தது காங்கிரஸின் தேசிய கல்வி இயக்கம்தான். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்கிற உணர்வை காங்கிரஸ்தான் கொண்டுவந்தது. ஆனால் 1947 சுதந்திரத்திற்குப் பின்னர்தான் இந்தியாவில் நவீன கல்விமுறை வேரூன்றியது. இந்திய அரசு திட்டமிட்டு அதை செய்தது. இந்த அறிவியல் கல்வி ஒட்டுமொத்த நாட்டின் சிந்தனையை மாற்றுவதற்கு முப்பது நாற்பது ஆண்டுகள் ஆகலாம்.
ஆனால் அத்தகைய மாற்றம் நிகழ்வதற்குள்ளாக வேறொரு மாற்றம் நிகழ்ந்தது. ஜனநாயகச் சூழலில் மக்கள் மத்தியில் அவர்களுடைய இனம், மதம், மொழி சார்ந்த வெறியை ஊட்டி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற மனநிலை இந்தியா முழுக்கவே உருவானது. தமிழ்நாட்டில் தமிழ் மொழிவெறி, மகாராஷ்டிரத்தில் மராட்டிய இனவெறி, பஞ்சாபில் சீக்கிய மதவெறி, அசாமில் இனவெறி, மத்திய இந்தியா முழுக்க இந்துத்துவ வெறி பரவலாகியது. இது சாத்தியம் என்பதையும் ஆட்சியைப் பிடிக்க எளிய வழி என்பதையும் கண்டுபிடித்தவுடன் அறிவியலை மறுக்கும் ஒரு பெரிய அணி அரசியலில் உருவானது. ஏனெனில் அறிவியலை மறுத்தால்தான் இன மத வெறிகளை முன்வைக்கமுடியும். அவர்களின் ஆதிக்கம் அரசியலில் உருவானது. அது அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானதாக வளர்ந்தது.
இந்தியாவின் பெரிய நல்லூழ் என்பது அறிவியலில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஒரு மாமனிதர் (ஜவஹர்லால் நேரு) நமது முதல் பிரதமராக இருந்ததே. இந்தியாவின் அறிவியலமைப்பு, அறிவியல் சார்ந்த கல்விமுறையை உருவாக்கியவர், இந்தியாவுக்கு அறிவியல் வழிகாட்டி என்று சொல்லத்தக்கவர் நேருதான். நேரு யுகம் என்பது அறிவியல் சார்ந்ததாக இருந்தது. ஆனால் அதன்பிறகு கிட்டத்தட்ட இந்திராகாந்தி காலத்திலேயே அதன் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. இன்று அதன் உச்சத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்று மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை ஒரு பிரதமரே பேசிக்கொண்டிருக்கிறார். முக்கிய அமைச்சர்கள் மேடைகளில் பேசுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு அசட்டுத்தனம் காதில் விழுகிறது. அது இந்தியா முழுக்க அறிவியலுக்கு எதிரான ஒரு மனநிலையை கட்டமைக்கிறது. அறிவியலைப் பற்றி ஒரு எழுத்தாளனான நான் பேசவருவதே இதற்காகத்தான். உண்மையில் இது நான் பேசவேண்டிய விஷயமே இல்லை. ஆனால் பேசவேண்டிய கட்டாயம் உள்ளது.
*
நிறைவு: இது சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி என்பதால் சிங்கப்பூர் பற்றி ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன். நாம் இதுவரைக்கும் பேசியவை இந்தியாவின் சூழலைப் பற்றி. சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில் இதுபோன்ற போக்குகள், முரண்பாடுகள் அந்த அளவுக்கு இல்லை எனலாம். ஏனெனில் இந்த நாட்டின் அரசியல் அடிப்படை, வாழ்க்கை முறை, அறிவுத்தள சூழல் என அனைத்துமே வேறாக உள்ளன. இந்நிகழ்வில் பங்கேற்ற சிங்கப்பூரர்களுக்கு இது ஏதோ ஒருவித அந்நியத்தன்மை கொண்ட விவகாரங்களாகவே படுகிறது. எப்படியிருப்பினும் இந்நிகழ்வில் பங்கெடுத்து உரையாடியமைக்கு நன்றி.
பதில்: நீங்கள் சொல்வது முக்கியமான ஒன்றுதான். நான் சிங்கப்பூரில் இருந்தபோது அங்குள்ள பொதுக்கல்வி முறை என்பது முழுக்கவே அறிவியல் சார்ந்ததாகவும் குறுகிய எண்ணங்களுக்கு எதிராக இருந்ததையும் கவனித்திருக்கிறேன். அதைச் சார்ந்து அத்தனை பேருக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டாக வேண்டும் என்பதுதான் என் எண்ணம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
***
(11 ஜனவரி 2024 ல் சிங்கப்பூர் தேசிய நூலகம் ஒருங்கிணைத்த ‘மானுட அறிவை நம்புதல்’என்னும் உரைக்குப்பின் நிகழ்ந்த உரையாடல். அருண் மகிழ்நன் வழிநடத்தினார்)
எழுத்து வடிவம் விவேக் ராஜ்