காலமும் இருத்தலும்- கடிதம்

தொலைவில் எங்கோ- வல்லினம்

ஜெ

அண்மையில் உங்கள் கதைகளில் மிகவும் அலைக்கழித்த கதை . அதைப்பற்றி கொஞ்சம் நாள்கடந்தே எழுதவேண்டும் என நினைத்தேன். அந்தக்கதை சரியான முறையில் நம் வாசகர்களால் உள்வாங்கப்படவில்லை என்ற எண்ணமும் ஏற்பட்டது. கடிதங்கள் சுமாரானவையாகவே இருந்தன. உர்ஸுலா லெ க்வின் கதைகள் எனக்குப் பிடித்தமானவை. அவை அறிவியல் கதைகள் போன்ற ஒரு பாவனையில் எழுதப்பட்ட மாயக்கதைகள். அல்லது நவீன நீதிக்கதைகள். அந்தக்கதைகளின் சாயல் இதில் இருந்தது. இதிலுள்ள விந்தை என்பது அறிவியல் விந்தை அல்ல. பிரக்ஞை சார்ந்த ஒன்று. அந்த விந்தையை கொஞ்சம் மூளையை திறந்து கவனிப்பவன் உணரமுடியும். ஒரு நல்ல தியானத்தை செய்தவன் உணரமுடியும். ஆனால் அதை ஓர் அறிவியல்கதையகாச் சொல்லியிருக்கிறீர்கள். அற்புதமான கதை.

மூளையைப் பற்றி நான் யோசிப்பதுண்டு. நம் தலைக்குள் இப்படி ஒரு சுருட்டிவைக்கப்பட்ட கைக்குட்டைபோல ஒன்று இருந்துகொண்டு தன்னையும் காலத்தையும் உணர்ந்துகொண்டே இருக்கிறது. எவ்வளவு விந்தையான விஷயம். அது நான் என உணர்கிறது. அந்த நான் இருப்பது வழியாகவே காலத்தில் நகர்கிறது. பழசாகிக்க்கொண்டும் இருக்கிறது. நான் என அது உணர்கிற அந்த சப்ஜெக்டிவிட்டி மட்டும் நிலையானது. ஆகவே அது வெளியே உணரும் உலகம் நிலையற்றது. ஆனால் அந்த சப்ஜெக்டிவிட்டியும் மாறிக்கொண்டிருக்கிறது என்று அதற்கு தெரியும். அதனுடன் மூளை போராடிக்கொண்டே இருக்கிறது. மூளையின் வாழ்நாள் முழுக்க நீடிக்கும் போராட்டமே தன்னை நிலையாக மாறாக டிஃபைன் செய்துகொள்வதற்காக மட்டும்தான்.

இந்தக்கதை பல சிக்கலான உணர்வுநிலைகளை உருவாக்குகிறது. நாம் உணரும் உலகம், நாம் அறியும் நம்முடைய சொந்த அடையாளம் எல்லாமே நம்மைச்சுற்றியுள்ள புற உலகம் மாறாமலிருப்பதனால்தான் நமக்கு கிடைக்கிறது. மாறிக்கொண்டிருக்குமென்றால் ஒன்றுமில்லை. ஆனால் நம் புற உலகம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அந்த மாற்றம் கொஞ்சம் மெல்ல நடப்பதனால் நமக்குத்தெரியவில்லை. தெரியாததனால் நாம் அது நிலையானதாக இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிறோம். அப்படியென்றால் இந்த நிலையான தன்மை ஒரு மாயை. ஆகவே எல்லாமே மாயை. பௌத்தர்களின் மாயாவாதம் என்பது அகம் மாயை என நிறுவவில்லை. புறம் மாயை என நிறுவியது. ஆகவே அகமும் மாயையே என்று காட்டியது.

பலவகையான அகக்கொந்தளிப்பை ஒரு கதை உருவாக்கமுடியும் என்றால் அது ஓர் அற்புதமான படைப்பு

சிவராஜ் ஆறுமுகம்

தொலைவும் காலமும் – கடிதங்கள்

தொலைவில் – கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அடுத்த கட்டுரைநூல்களுடன், கடிதம்