யானம், கடிதங்கள்

யானம் சிறுகதை

அன்புள்ள ஜெ

யானம் உங்கள் கதைகளில் அவ்வப்போது வரும் கூர்மையான லௌகீகச் சித்தரிப்பு. நீங்கள் நீண்டநாட்களுக்கு முன்பு எழுதிய நைனிடால் என்னும் கதையை நினைவுபடுத்தியது. அன்பில்லாத, வெறுப்பு நிறைந்த வாழ்க்கையில் சிக்கிக்கொண்டவர்கள் பற்றிய கதை. சார்த்ரின்  No Exit கதையைப்போல ஒரு பொறிதான். இந்த கார் அந்தவகையான ஒரு எலிப்பொறி. அதில் அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா என்பது அந்த சாலை. பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக இருக்கிறார்கள். அவரவர் குமிழிகளுக்குள் இருக்கிறார்கள். ஆனால் இது அமெரிக்க வாழ்க்கை மட்டுமல்ல. அனைவரும் வாழும் வாழ்க்கைதானே? எங்கும் இதுதானே பெரும்பாலான வாழ்க்கைச்சித்திரம்?

சபரிராஜன்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

யானம் நீங்கள் முன்பு எப்போதோ எழுதிய ஒரு கதையை மீண்டும் ஞாபகப்படுத்தியது. அது ஒரு சர்ரியல் கதை. ஒரு வீட்டுக்குள் இருவர் சிக்கிக்கொண்டு வாழ்வார்கள். சுவர்கள் முழுக்க கண்களாக இருக்கும். 30 ஆண்டுக்கு முன் எழுதிய கதை என நினைக்கிறேன். இந்தசிக்கிக்கொண்டஅனுபவம் என்பது ஒரு கனவு போல. அது எல்லாராலாம் திரும்பத் திரும்ப எழுதப்படுகிறது. ஒரு ஃபைபர் பபிளுக்குள் சிக்கிக்கொண்டு கூட்டம் கூட்டமாக ஒரே சாலையில் டிராஃபிக் ரூல்களுக்கு பணிந்து ஒழுகிக்கொண்டே இருப்பதுதான் நவீன நாகரீகத்தின் வாழ்க்கையாக உள்ளது. ஒரு கசப்பை தாண்டி இன்னொரு கசப்பை நோக்கிச் செல்வதுதான் வாழ்க்கையாக உள்ளது. கதையில் அமெரிக்க வாழ்க்கையின் சலிப்பும் கசப்பும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் வாழ்க்கை அதைவிட கசப்பானதாகவே குறிப்புணர்த்தவும் படுகிறது.

ராஜேந்திரன் எம்

முந்தைய கட்டுரைபின்நவீனத்துவம் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசாமி சிதம்பரனார்