கமல், கடிதங்கள்

கமல் முதல் கமல் வரை

அன்புடன் ஜெயமோகன்

தங்களுடைய கமல் முதல் கமல் கட்டுரையை படித்தேன் என் நினைவுகளை கிளறி விட்டது. மிகப்பெரிய எழுத்தாளர் ஆன உங்களுக்கே அவர் ஒரு மை ல் கல்லாக இருந்த போது எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு என்னவென்று சொல்வது .ஏகலைவனாக பாடம் கற்றுக் கொண்டோம். அவருடைய படங்களை நான் அதிகம் பார்த்ததை விட அவருடைய கட்டுரைகளையும் பேட்டிகளையும் தேடி தேடி கண்ட அடைவேன்.

அவருடைய ஆயிரத்தில்   ஒரு வார்த்தையான இந்த தாக்கம் தழுவல் விளைவு இல்லாதவர் எவரும் இலர் இருக்கவும் முடியாது 

இந்த வாசகத்தை அந்த காலங்களில் பிரசித்தமான தேவர் மகன் ஸ்டில்லில் அந்த வாசகங்களை எழுதி என்னை நான் வெளி காட்டிக் கொள்வேன். இதை படிக்கின்ற வீட்டுக்கு வருகின்ற உறவினர்கள் என்ன ஏது என்று கேட்பார்கள் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் படிக்கின்ற ஒரு சிலர் மண்டையை பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். ஆனால் அந்த தாக்கம் தழுவல் விளைவு என்பதற்கு விளக்கமே அவர் சொன்னது பிறகு தான் எனக்கே தெரியும் .இன்றைய தேதி வரை எனக்கு மனப்பாடமாக இருக்கின்ற அவருடைய வார்த்தை அது 

இந்தியா டுடே பத்திரிக்கையில்  ஒரு அரை இருட்டு அறையில் சற்று மங்களான மஞ்சள் கலந்த வெளிச்சத்தில் அவரை எடுத்த புகைப்படம் மற்றும் அவரது நீண்ட பேட்டி எனக்கு சில கதவுகளை திறந்து வைத்தன. மக்களுக்கு தகுந்த மாதிரி நமக்கு சொல்லத் தெரிய வேண்டும் என்ற வாதத்தை அன்று அவர் முன் வைத்தார். பல நீண்ட அனுபவங்களின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள் வெளிவந்தன .

எல்லோருக்குமே ஒரு தன் பர்சனாலிட்டி பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மை  இருக்கும் அந்த  எனக்கும் இருந்தபோது அந்த தயக்கத்தை அவர் தான் உடைத்தார் .வாழ்க்கையில் இந்த வயது வரை ஒரு எதிர்மறை சிந்தனைகள் இல்லாதவர். என்றாவது ஒரு நாளாவது இவருக்கு சலித்து ஒரு எதிர்மறை வார்த்தை பேசி விடுவார் என்று நினைக்கிறேன். இந்த நாள் வரை அது இல்லை. 

இப்பொழுதும் ஒரே தாழ்வு மனப்பான்மை தான் உள்ளது .அவரைப் போல் பல்துறை வித்தகராக முடியவில்லை என்பது 

அன்பு உத்திராபதி

அன்புள்ள ஜெ

கமல் முதல் கமல் வரை ஓர் அழகான கட்டுரை. மய்யம் இதழ் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தால் அதை இந்த தலைமுறையைச் சேர்ந்த என்னால் புரிந்துகொள்ள முடியாது. வார இதழ் என்னும் வடிவமே இன்றைக்கு வழக்கொழிந்து விட்டது. நான் பத்துப்பதினைந்து முறை குமுதம், விகடன் இதழ்களைப் புரட்டிப்பார்த்திருக்கிறேனே ஒழிய அதற்குமேல் அறிமுகமே இல்லை. ராணி தேவி எல்லாம் பார்த்ததே இல்லை. 

அந்த சூழலை சுருக்கமாக அறிமுகம் செய்த கட்டுரை. அதிலும் பல காலகட்டங்களாகவும், ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வகைபாடுகளாகவும் தெளிவான ஒரு மேப் போல அந்த வரலாற்றை சொல்லி அதில் மய்யம் எங்கே வருகிறது, அதன் பங்களிப்பு என்ன என்று சொல்லியிருந்தீர்கள். 

எனக்கே அது பிரமிப்பாகத்தான் இருந்தது. நான் கமல் ரசிகன். மய்யம் இதழ் தொகுப்பை வாங்கி வாசித்தேன். அப்போது அது பெரிதாக தோன்றவில்லை. ஆனால் இந்த கட்டுரைக்குப்பிறது அந்த இதழ் என்ன உத்தேசித்தது, எதை அடைந்தது என்று தெரிந்துகொண்டேன். நன்றி

ஶ்ரீதர் மாதவன்

 

முந்தைய கட்டுரைகணித அறிவியல் உரைகள்
அடுத்த கட்டுரைசித்தாந்தம்