அன்பு ஜெயமோகன்,
கோவர்தனன் எனக்கு இருபதாண்டு கால நண்பன்; ’மனிதர்கள் மட்டும்’ சிவராஜ் வழியாக அறிமுகமானவன். ஆம், அப்போது சிவராஜ் மனிதர்கள் மட்டும் என்கிற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்தான். அச்சமயங்களில் அடிக்கடி அறச்சலூர் சிவராஜ் வீட்டுக்குச் செல்வேன். இன்றுவரை நான் பெரிதும் நேசிக்கும் தர்மா, செந்தில்குமார்(நகுலன் வரைகலை), சுனில்(போஸ் டிசைனர்ஸ்), நவீன், ஆ.சுகுமார்(அண்ணன்), குமார் சண்முகம், மெய்யருள்(கவிஞர் மற்றும் வரைகலைஞர்), கெளரிசங்கர்(கவிஞர்) போன்றோர்(இன்னும் பலர்) அங்குதான் எனக்கு அறிமுகமானார்கள். இன்றுவரை அவர்களுடனான நட்பு தொடர்கிறது. கோவர்தனனும் அப்படியாக அறிமுகம் ஆனவன்தான்.
கோவர்தன்னை ஒருபோதும் நான் தனியாகச் சந்தித்ததில்லை. ராதிகா சகிதமே எப்போதும் வருவான். இருவரையும் ஒருசேர நண்பர் கூட்டங்களில் பார்ப்பது ஒருவித பரவசத்தைத் தரும். மணமாவதற்கு முன்பிருந்தே இருவரையும் தெரியும். சிரித்த முகங்களே அவர்களின் அகம். ஈரோடு புத்தகக் கண்காட்சி நாட்களில், அரங்குகளுக்கு வெளியே மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்போம். வருடத்தில் நாங்கள் சந்தித்துக் கொள்வதும், பேசிக்கொள்வதும் ஈரோடு புத்தகக் கண்காட்சி காலத்தில் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது. டீ, பேச்சு, போண்டா, டீ, பேச்சு என நீண்டு கொண்டே செல்லும் அந்நாட்களின் பகற்பொழுதுகள் மறக்க முடியாதவை. எங்களுடன் ராதிகாவும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார். அவரைப் பார்ப்பதற்குத்தான் பாவமாக இருக்கும்.
மிகச்சமீப வருடங்களில்தான் கோவர்தனனோடு அடிக்கடி பேசிக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அவன் ஈரோட்டில் எஸ்.பி.பி காலனியில் குடியிருந்தபோது அங்கு சென்றிருக்கிறேன். யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு உள்ளிட்ட சில நூல்களை அங்கு இருந்தே வாங்கி வந்திருக்கிறேன். அடிக்கடி எழுத்தாளர் தேவிபாரதியைச் சென்று சந்தித்து விட்டு வருவான். சிவராஜ் மீது அவனுக்குத் தனிப்பட்ட ப்ரியம் உண்டு. நான் சிவராஜின் செயல்பாடுகளில் மாறுபட்ட கருத்து கொண்டவன் என்பது தெரிந்தும், என்னிடம் வெறுப்பு கொள்ளாதவன். சிவராஜ்–க்கும் எனக்குமான உறவு பலருக்கு ஆச்சர்யத்தைத் தருவது என்றாலும், கோவர்தனனுக்கு அப்படி அல்ல.
தன்னுடைய இலக்கிய வாசிப்பு பற்றி அவனுக்கு இருந்த தாழ்வுணர்ச்சியை நான் மயக்கம் என்று பலமுறை அவனிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறேன். இக்காலப்பொழுதில் அவன் எழுதத் தொடங்கி இருந்தான். உயிர்மை இணைய இதழ், மணல்வீடு(அச்சிதழ்) போன்றவற்றில் ஓரிரு சிறுகதைகள் வெளிவரவும் ஆரம்பித்து இருந்தன. என்னிடம் தகவல் சொல்லி மின்ன்ஞ்சலில் அனுப்பியும் வைப்பான். சில கதைகள் எனக்குப் பிடிக்கவில்லை என அவனிடமே சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் எழுதிக் கொண்டே இரு என்றே அவனிடம் வற்புறுத்துவேன். காரணம், தொடர்ந்து எழுதினான் என்றால் அவனுக்கே பிடிபட்டு விடும் எனும் நம்பிக்கைதான். அந்நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் கோவர்தனன் இருந்தான்.
உயிர்மை இணைய இதழில் வெளிவந்த அவனுடைய செல்லம்மாவின் ரேடியோ சிறுகதை எனக்குக் கொஞ்சம் ஏற்புடையதாய் இருந்தது. அதை அவனிடம் சொல்லியபோது, மணல்வீட்டில் வெளியான வேறொன்றுமில்லை(https://manalveedu.org/verondrumillai/) சிறுகதையை அனுப்பி வைத்தான். எனக்கு அது பிடித்திருந்தது; அவனிடம் “தொடர்ந்து எழுது மாப்ள.. நெருங்கி வந்துட்ட” என உற்சாகம் கொடுத்தேன்.
சென்ற வருடம், கோவை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கில்தான் அன்றாடம் இருந்திருக்கிறான். கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன்(கவிஞர் குமரகுருபரன் விருதாளர்) நட்பு பற்றி என்னிடம் பலமுறை சிலாகித்துப் பேசியபடியே இருந்தான். அப்போதுதான் நான் சதீஷின் கவிதைகளை(https://www.jeyamohan.in/184289/) ஜெயமோகன் தளத்தில் வாசித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். அதனால் அவனிடம், “மாப்ள.. சதீஷ் கவிதைகள் சிறப்பா இருக்கு.. அவர்கிட்ட சொல்லிடு” என்று சொன்னபோது, சதீஷ் எனக்கு அவனைப்போலவே நெருக்கமாவான் எனத் தெரியாது. குமார் சண்முகம் சதீஷின் நம்பர் கொடுத்து, அவனிடம் பேசியபோது கோவர்தனனைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவனும் கோவர்தனனைக் குறிப்பிட்டுப் பேசினான். இன்றுவரை எனக்கும் சதிஷுக்குமான நட்பில் கோவர்த்தனன் ஒரு மறைசரடாகவே இருக்கிறான்.
அச்சமயத்தில், கோவர்தனனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்படுகிறான். கவிஞர் சதீஷ் மற்றும் ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்து கவனித்துக் கொள்கின்றனர். நண்பர்கள் பலவகைகளில் அவனுக்கு உதவுகின்றனர். மருத்துவமனையில் கோவர்தனனைச் சந்திப்பதில் எனக்கு விருப்பமில்லை. ராதிகாவிடம் மட்டுமே பேசினேன். அந்நேரம், முகநூலில் அவன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியானது. அப்புகைப்படத்தை ஒரு விநாடி கூட என்னால் பார்க்க முடியவில்லை; உடனே நகர்ந்து விட்டேன்.
சிகிச்சை முடிந்து கோவர்தனன் வீடு திரும்பியதற்கு ஒருவாரத்துக்குப் பிறகே அவனிடம் பேசினேன். அதுவும் மூன்று நிமிடங்கள். மீதி ஒரு மணி நேரம், ராதிகாவிடமே பேசினேன்; கோவர்தனன் அதைக்கேட்டுக் கொண்டிருப்பதாக ராதிகா சொன்னார். சில வாரங்களிலேயே வழக்கமான நிலைக்கு வந்து விட்டதாக நம்பும் அளவு, என்னிடம் பேசிக்கொண்டிருந்தான். இருவருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் வேலை கிடைத்ததைச் சொன்னான். வீட்டை அவிநாசி சாலை ஹோப்ஸ் பக்கம் மாற்றி விட்டதாகவும், அருகில் நண்பர் தங்கவேல்(திருமூலர் சத்துமாவு) குடியிருப்பதாகவும் சொன்னான். தங்கவேலையும் எனக்குத் தெரியும் என்பதால், கோவர்தனன் சொவதைக் கேட்க நிறைவாக இருந்தது. விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் சந்திக்கலாம் எனச் சொன்னேன்.
நான் மிக அணுக்கமாக உணரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் யுவன் சந்திரசேகர். ஆக, இம்முறை இரண்டு நாட்கள் அவசியம் இருந்து விட முடிவு செய்தேன். என்றாலும், தங்குமிடத்துக்கு முன்பதிவு செய்திருக்கவில்லை. குமார் சண்முகம், “வாங்க அண்ணா.. பார்த்துக்கலாம்” என்று தைரியம் கொடுத்து இருந்தான். முதல்நாள் நிகழ்வின் மாலைப் பொழுதில் கோவர்தனன்(ராதிகாவோடு) வந்திருந்தான். இரவு ஒன்பது மணிவரை இருவரும் எங்களோடு(கவிஞர் சதீஷ், குமார் சண்முகம், முருகானந்தம், நான்) இருந்தனர். இரவு எங்களுடனேயே தங்கிக் கொள்ளச் சொல்லிக் கேட்டபோது ராதிகா, ”வீட்டுக்குப் போய்ட்டு காலைல வந்துடறோம் அண்ணா!” என்றார். ”நான் ரூம் புக் பண்ணிருக்கேன்.. அங்க நீங்க தங்கிக்கங்க..” என்றான் கோவர்தனன். அதன்படியே தான் பதிவு செய்திருந்த விபரங்களையும், அறைச்சாவியையும் எங்களிடம் கொடுத்தபடி இருவரும் கிளம்பிப் போனார்கள்.
விஷ்ணுபுரம் நிகழ்வின் இரண்டாவது நாள் மதியம் மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. உணவு முடித்தவுடன் வெளியே வந்த நாங்கள்(கோவர்தனன், தங்கவேல், நான்) அருகிலிருந்த மரத்தடி தேனீர்க்கடைக்குச் சென்றோம். எதிர்பாராதவிதமாக, கோவர்தனன் எழுத்தாளர் குலசேகரனின் கதைகளைச் சொல்லத் துவங்கினான். அவன் சொன்ன விதத்தில் இருந்தே அணு அணுவாய் அக்கதைகளை அவன் ரசித்திருப்பது புரிந்தது. கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோவர்தனன் விரைவில் தேர்ந்த எழுத்தாளராகி விடுவதற்கான குறிகளும் எனக்குப் புலப்பட்டன. அவன் சொல்லி முடித்து ஓய்ந்த பொழுதில் ”மாப்ள.. வாசிப்பையும் நிறுத்தாத.. எழுதறதயும் விடாத..எவ்வளவு சிரமமாய் இருந்தாலும் தொடர்ந்து எழுதிட்டே இரு” என அழுத்திச் சொன்னேன். அதை ஆமோதிப்பது போல முகபாவம் காட்டியவன், “அண்ணா.. மணல்விட்டுல நரிப்பாழின்னு ஒரு கதை வரப்போகுது..” எனச் சொன்னான். “அதைப் படிச்சுட்டு உங்கிட்டே பேசறேன் மாப்ள.” என்று சொன்னேன். சபையைக் கலைத்து விட்டு விழா அரங்கு திரும்பினோம்.
விஷ்ணுபுர விழாவில் இருந்து கிளம்பிய பிறகு, அவனிடம் ஓரிரு முறையே பேச முடிந்தது. ஒருநாள் அவன் வீட்டுக்குச் செல்வதாயும் திட்டம் வைத்திருந்தேன். ஹோப்ஸ் வீட்டுக்கு நான் சென்றதில்லை. கூடவே, யுவன் சந்திரசேகரின் நாவல்கள் உள்ளிட்ட சில நூல்களை எனக்குத் தருவதாய் விழாச்சமயத்தில் சொல்லி இருந்தான். என்றாலும், சூழல் அமையாததால் காலம் தள்ளிக்கொண்டே போனது. இப்படியான சமயத்தில்தான், ஓர் ஆச்சர்யம்(அப்படித்தான் சொல்ல வேண்டும்) நிகழ்ந்தது. கோபிசெட்டிபாளையத்தில் தைப்பூச தினத்தன்று(ஜனவரி 26, 2024) தியாகு நூலகத்தின் தியாகராஜனை பவளமலை அடிவாரத்தில் சந்தித்தேன். அவருடனான முதல் சந்திப்பு அது. முகநூலில் பார்த்திருந்த முகத்தை வைத்து அவரை அடையாளம் கண்டது சுவாரசியமானதாக இருந்தது. அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
தியாகராஜனைச் சந்தித்த மறுநாள் முகநூலில் உலவிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு சிறுகுறிப்பைப் பகிர்ந்திருந்தார். அது கோவர்தனனின் நரிப்பாழி சிறுகதை பற்றியது. எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை. உடனே கோவர்தனனை அழைத்துத் தகவலைச் சொன்னேன். தியாகு நூலகத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதாகவும், தியாகராஜனை அறிந்ததில்லை என்றும் சொன்னான். உடனே அவருடைய எண்ணை அவனுக்கு அனுப்பிப் பேசச் சொல்லி விட்டு, நரிப்பாழி கதையை எனக்கு அனுப்பச் சொன்னேன். சில நிமிடங்களில் கதை வாட்ஸப்பில் வந்தது. சிறப்பான துவக்கம் என்றாலும், ஒட்டுமொத்தமாக கதை எனக்குப் பிடிக்கவில்லை. அதை அவனிடம் நேரில் சொல்லிக் கொள்ளலாம் என விட்டு விட்டேன்; அவனிடம் இனி சொல்லவே முடியாது என்பதை நான் யூகமாய்க் கூட யோசித்திருக்கவில்லை.
என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பில், இன்னும் சில மாதங்களில் கோவர்தனன் குறிப்பிடத் தகுந்த சில கதைகளை எழுதி இருப்பான். 2025-க்குள் அவன் கதைகள் ஒரு தொகுப்பாகவும் வெளிவந்திருக்கும்; நிச்சயமாக அத்தொகுப்பில் அவன் நன்றிக்குரியவர்கள் பட்டியலின் என் பெயரையும் குறிப்பிட்டிருப்பான். எனக்குக் கொடுத்து வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து அழுத்திய லெளகீக நெருக்கடிகளை ஒருபோதும் அவன் இலக்கிய வாசிப்பின் மீதான குற்றச்சாட்டாக வைத்தது இல்லை; யாரையும் அவன் காழ்ப்புடன் கரிந்து கொட்டியதும் இல்லை. இருபது ஆண்டுகள் கவனித்த வகையில் சொல்கிறேன். அவன் தன்னை எழுத்தாளனாகக் காட்டிக் கொள்ள வேண்டி எழுத முயன்றவனில்லை. இலக்கிய வாசிப்பைக் கூர் தீட்டிக் கொள்ளவே எழுத நினைத்தவன். என்னளவில், அப்படி வருகிறவர்களே சிறந்த எழுத்தாளர்களாகி இருக்கின்றனர்.
இலக்கிய உலகம் அறியப்படாத எழுத்தாளனாய் மரணித்திருக்கும் கோவர்தனனுக்கு, அவனை நன்கு அறிந்த அணுக்க வாசகனாய் என் அஞ்சலி.
முருகவேலன்(சக்திவேல்)
கோபிசெட்டிபாளையம்.