தொடரும் நிகழ்வுகள்- கடிதம்

கிருமி, ரே பிராட்பரி- கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியர்க்கு

சட்டக்கல்லூரி முடித்துவிட்டு 1999 ம் ஆண்டு இறுதியில் போட்டித்தேர்வு தயாராவதற்காக சென்னை சென்றேன். வீட்டில் எதிர்ப்பு, கையில் பணமில்லை, சென்னையிலும் யாரையும் தெரியாது என்ற நிலையில், அங்கு சென்னை மருத்துவக்கல்லூரியில் பயின்று கொண்டிருந்த ஈரோடை சேர்ந்த ராஜ்குமார் என்ற நண்பன் என்னை அவனுடைய மருத்துவ கல்லூரி விடுதியில் சிறிது காலம் தங்கி கொள்ள அனுமதித்தான். என் சென்னை வாழ்க்கை அங்கிருந்துதான் ஆரம்பமாயிற்று

போட்டித்தேர்வு புத்தகங்களுடன் இடையிடையே வேறு சில புத்தகங்களை படிப்பதை கண்ட அந்த விடுதியில் இருந்த வேறோரு மருத்துவ மாணவர் என்னிடம் கன்னியாகுமரி நாவலை கொண்டுவந்து படிக்கச்சொல்லி கொடுத்தார். உங்கள் எழுத்துடனான முதல் அறிமுகம் அவ்வாறுதான் ஆரம்பித்தது. படித்ததும் பெரும் வியப்பு மற்றும் அதிர்ச்சி. என் சில மதிப்பீடுகளை தகர்த்துவிட்டது. நான் ஹீரோயிசம் என நினைத்த சில அம்சங்கள் அவ்வாறு இல்லை என்பது மட்டுமில்லாமல் அது எவ்வளவு பெரிய அசிங்கம் என காட்டியது. அப்படைப்பு என்னை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. ஒரு கதை புத்தகம் இப்படியெல்லாம் நம்மை பாதிக்குமா என முதன் முதலில் ஆச்சர்யம்

பிறகு உங்கள் படைப்புகளை தொடர்ந்து படிக்க வேண்டும் என முடிவு செய்தேன். பிறகு ஆயிரம்கால் மண்டபம் சிறுகதை தொகுப்பு. ஈரோட்டிலிருந்து சிறு பயணமாக கிருஷ்ணன் மற்றும் நண்பர்களுடன் பர்கூர் மலை தாமரைக்கரைக்கு சென்றோம் அங்கு கிருஷ்ணனிடம், ஆயிரம்கால் மண்டபம் தொகுப்பை கொடுத்து இப்படிப்பட்ட எழுத்தை இதுவரை படித்ததில்லை நீங்களும் படிக்கவேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் கிருஷ்ணன் படிக்க மறுத்துவிட்டார். அப்போது அவரின் பார்வையில் பொழுதை போக்குவதற்கு, பணி ஒய்வு பெற்றவர்கள், வீட்டில் சும்மா இருப்பவர்கள் படிக்கவேண்டியது கதை புத்தகம் என உறுதியாக நம்பியிருந்தார். மேலும் நாங்கள் ஒரு புதிய பாரதத்தை உருவாக்கி விடவேண்டும் என்ற கனவில், தீவிரமாக இயக்கப்பணியில் செயல்பட்டுக்கொண்டிருந்தோம் அல்லது அவ்வாறு நினைத்திருந்தோம். அரசியல், வரலாறு, அறிவியல் நூல்கள், சேகுவாரா போன்ற புரட்சி ஆளுமைகளின் வாழ்க்கை பற்றிய நூல்கள் என எங்கள் வாசிப்பு இருந்துகொண்டிருந்தது. எனவே கதை எல்லாம் படித்து நேரத்தை வீணாக்குவதற்கு கிருஷ்ணன் ஒப்பவில்லை. நான் அவரிடம் கரிய பறவையின் குரல் மட்டுமாவது படிக்கச்சொல்லி வற்புறுத்தினேன். பின்பு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அந்த தொகுப்பை எடுத்து படித்தார். இன்று தமிழகத்தின் முதன்மையான நுட்பமான இலக்கிய வாசகர்களில் ஒருவராகவும், உங்கள் மாணவனாக உங்களுடன் அவர் கொண்டுள்ள உன்னதமான உறவை அனைவரும் அறிவர்

பிறகு நாங்கள் உங்களை நேரில் சந்தித்தது, நீங்கள் ஈரோடு வந்தது, விஜயமங்கலம் பயணம் என்று தொடக்கி, என் வாழ்க்கையை பற்றிய பார்வை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக இருந்த 2008ல் உங்களுடனான இந்திய பயணம் என இன்றுவரை பல பயணங்கள். அன்றிலிருந்து நீங்கள் இல்லாமல், உங்கள் சொல் இல்லாமல் என் ஒரு நாளும் கழிந்ததில்லை.

சில தினங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி. பெயர் வசந்த் என்றும் பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் மருத்துவக்கல்லூரி விடுதியில் ஜெயமோகன் பற்றி நாம் பேசியிருக்கிறோம் உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா எனக்கேட்டு. எனக்கு பெரும் மகிழ்ச்சி. உங்கள் எழுத்தை அவர் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார் பின்பு அவரிடம் எந்த தொடர்பும் இல்லை. பெயர் அல்லது அவர் சம்பந்தப்பட்ட எதுவும் ஞாபகத்தில் இல்லை. உங்கள் தளத்தை தொடர்கிறார் அதன்மூலம் என்னை தெரிந்துகொண்டு எங்கோ நம்பர் பெற்று தொடர்பு கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு. உடனடியாக அவரை தொடர்புகொண்டு பேசினேன். எனக்கு ஒரு மகத்தான ஆசிரியரை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி கூறினேன். தற்போது தளத்தில் கிருமி, ரே பிராட்பரிகடிதம் எழுதிய Dr.வசந்தகுமார் நடேசன் தான் அவர்

புனைவுகளில் சில தருணங்களை நம் தர்க்க மனம் சந்தேகப்படும். இப்படியெல்லாம் நடக்குமா என வினா எழுப்பும். உண்மையில் நிஜ வாழ்க்கையில் புனைவை காட்டிலும் பல பல எதிர்பார்க்காத ஆச்சர்யங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் தான் கவனிப்பதில்லை

ஒரு சிறு புத்தகம் இனிமேல் என் வாழ்க்கையை தீர்மானிக்க போகும் காரணிகளில் ஒன்றாக அமையப்போகிறது என நான் உட்பட யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. அந்த புத்தகத்தை அவர் கொடுக்காமல் போயிருந்தால், உங்களை அறியாமலே போயிருக்க வாய்ப்புண்டு. என்னை தொடர்ந்து கிருஷ்ணனும்.  ஆனால் எங்கள் நல்லூழ் அந்த சிறு தருணத்தை எங்களுக்கு அளித்தது. எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமளித்த இந்த ஒரு தருணத்தை போல் சிலருக்கு ஏதோ  ஒரு தருணம் வாழ்க்கையின் மொத்த அர்த்தத்தையும் அழிக்கவும் காரணமாக உள்ளது தான் ஊழின்  புரிந்துகொள்ளமுடியாத புதிர்

வெண்முரசில் அரிஷ்டநேமியை சந்தித்து வந்த பின் அர்ஜுனனின் கேள்வி ஒன்றிற்கு இளைய யாதவர் இவ்வாறு பதிலளிப்பார்இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பனவற்றை மனுடனால் விளக்க முடியாது. முற்றிலும் அறிதலால் ஆனது மானுட உள்ளம். முற்றிலும் அறிதலுக்கு அப்பால் இருப்பது அது

V.S.செந்தில்குமார், சென்னை

முந்தைய கட்டுரைஅறியப்படாத எழுத்தாளனும், அணுக்க வாசகனும்
அடுத்த கட்டுரைஅரு.ராமநாதன்