வாழ்விலே ஒருமுறை வாங்க
வாழ்விலே ஒருமுறை மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
உங்கள் வாசகர்கள் அடிக்கடிச் சந்திக்கும் ஒரு கேள்வி, ‘ஜெயமோகன் படைப்புகளில் எதை முதலில் படிக்கலாம்?’ ஏனென்றால் உங்கள் வாசகர்கள் உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நண்பர்கள் அந்தக் கேள்வியை கேட்காமல் இருக்க முடியாது. இதுவரை நாங்கள் அறம் நூலைத்தான் உடனே பரிந்துரைப்போம். அதிலுள்ள நேரடியான கதையோட்டமும், உணர்ச்சிகரமும் எல்லா வாசகர்களையும் உள்ளிழுத்துவிடும். சென்ற பத்தாண்டுகளில் நவீன இலக்கியத்திற்குள் வந்த பலர் அறம் வழியாக வந்தவர்கள்.
கொஞ்சம் தமிழார்வம் உள்ளவர்கள் என்றால் சங்கச்சித்திரங்களை பரிந்துரைக்கலாம். கொஞ்சம் மரபுசார்ந்த மனம் கொண்டவர்களுக்கு குமரித்துறைவி ஆழமான உணர்வை உருவாக்குகிறது. இரவு, அனல்காற்று போன்ற நாவல்களைச் சிலருக்கு நான் பரிந்துரைத்துள்ளேன். சில இளைஞர்களுக்கு உலோகம், கன்னிநிலம், ஆலம் ஆகிய நாவல்களையும் அளித்துள்ளேன். துளிக்கனவு கூட ஒரு நல்ல பரிந்துரைதான்.
அண்மையில் வாசித்த வாழ்விலே ஒருமுறை புதிய வாசகர்களுக்கு அளிக்க மிகச்சிறந்த ஒரு நூல். புதிய வாசகர்களுக்கு கதையின் வலிமை தெரியாது. ‘இது கதையா சார்?’ என்றுதான் கேட்பார்கள். கதை என்றால் அது ப்ய் என்றும் ஒரு படி கீழே என்றும் நினைப்பு உண்டு. கதையாகவும் நேரடியான வாழ்க்கையனுபவமாகவும் உள்ள படைப்பு என்றால் அவர்களால் இன்னும் ஆழமாக உணரமுடியும். வாழ்விலே ஒருமுறை அப்படிப்பட்ட தொகுப்பு. எல்லா கட்டுரை-க்கதைகளிலும் வாழ்க்கையின் ஒரு கீற்று உள்ளது. அதேசமயம் கதைகளுக்குரிய அபாரமான வாசிப்பனுபவமும் உணர்ச்சிகரமும் இருக்கிறது.
இந்தத் தொகுதி நீண்டநாட்களாக அச்சில் இல்லை என நினைக்கிறேன். நான் இப்போதுதான் வாசித்தேன். நல்ல பதிப்பு. வாழ்த்துக்கள்
சேதுராமன் மகாலிங்கம்