மண்டயம், ஒரு நாவல்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி சிலசமயம் மிகப்பெரிய நாவல் ஒன்றை வாசிக்கும் அனுபவத்தை அளித்துவிடுகிறது. தற்செயலாக நான் மண்டயம் திருமலாச்சாரியார் என்னும் பதிவை வாசித்தேன். என்ன ஒரு மகத்தான சாகச வாழ்க்கை. மெய்சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை. ஆனால் ஒரு சோகநாடகமும் கூட. வெறும் சாகசங்களின் பயனில்லாத தன்மையையும் அதில் கண்டேன். ஆனால் மனிதர் வாழ்ந்திருக்கிறார் என்றும் தோன்றியது.

அந்தப்பதிவில் இருந்து தொட்டுத் தொட்டுச்சென்று மண்டயம் மரபைச் சேர்ந்த ஒவ்வொருவரையாக வாசித்தேன். அளசிங்கப்பெருமாள், பார்த்தசாரதி ஐயங்கார், திருமலாச்சாரியார். எவ்வளவு ஆளுமைகள். எல்லாருமே ஒருவருடன் ஒருவர் நெருக்கமான உறவு கொண்டவர்கள். ஒரு குடும்பம் தமிழ் சரித்திரத்தில் இவ்வளவு பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறது என்பதே ஆச்சரியமான விஷயம். ஒருவர் விவேகானந்தரை அமெரிக்கா அனுப்பி ஒரு பேரியக்கத்துக்கு வித்திட்டிருக்கிறார். ஒருவர் பாரதியை தேசியவாதி ஆக்கியிருக்கிறார். ஒருவர் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியை தொடங்கியவர்களில் ஒருவர். இப்படி ஒரே ஒரு குடும்பமே ஒரு புராணம் போல இருக்கிறது

இந்த ஒரு குடும்பத்தின் வரலாற்றை எவராவது எழுதினால் ஒரு பெரிய ஆவணமாக அது அமையும். ஒரு மாபெரும் நாவலுக்கான கருவும் இதிலேயே உள்ளது. தமிழ் விக்கியை வைத்தே அந்நாவலை எழுதிவிடமுடியும். அவ்வளவு தகவல்கள் தொடுப்புகள் வழியாக வந்தபடியே உள்ளன. வெறும் personal accounts அக எழுதப்பட்ட நாவல்களை வாசித்து சலித்துவிட்ட தமிழ் வாசகர்களுக்கு அது மிகப்பெரிய அனுபவத்தை அளிக்கலாம்

ரா.கிருஷ்ணன் ராமானுஜம்

மண்டயம் திருமலாச்சாரியார்

முந்தைய கட்டுரைஅஞ்சலி, முத்தம்மாள் பழனிசாமி- ம.நவீன்
அடுத்த கட்டுரைமருத்துவப் பயிற்சி, கடிதம்