பெரு மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா,
எங்கோ கேட்ட உங்கள் பெயரை ஒரு முறை புத்தக கண்காட்சியில் தேட, நான் எடுத்ததது ரப்பர் நாவலையே. அதன் மூலம் உங்களை வாசிக்க ஆரம்பித்து உங்களின் இணையதளம் வந்தடைந்தேன் . அத்தளம் வழி நான் பெற்றுக்கொண்டது மிகப்பல. நிறைவெளிப்பதுவும் கூட.
எனது அலுவல் பணி வழியாகவே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளவும் இனிமையாக்கவும் செய்த முயற்சிகள் ஏதும் என்னை எங்கேயும் இட்டுச்செல்லவில்லை. என்னைச்சுற்றி இருந்த ஓய்வு பெற்றவர்களின் வாழ்க்கையை பார்த்தபின் அது வீண் தானோ என்ற எண்ணமும் தோன்றாமலில்லை. ஒன்று பக்தி இல்லையென்றால் அரசியல் சச்சரவு. வாழ்க்கை முழுக்க நிறைவளிக்கும் ஏதோ ஒன்றை செய்ய முனைய வேண்டும் என்று இருக்கையில் தோன்றியது தான் என்னுடைய இந்த தளம்.
https://translationsofshadowsvoice.blogspot.com/
உங்களின் புதினங்களும் சிறுகதைகளும் மொழிபெயராக்கப்படுவதை அறிந்த பின், உங்களின் இந்த இணைய கட்டுரைகளை மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. இதில் கூறப்படும் கருத்துக்களும், சிந்தனைகளும் இன்றைய சூழலில் மிக முக்கியமானவை. தமிழில் இதற்கு முன் நான் படித்தது பெரும்பாலும் தமிழ்ப்பெருமையை பறைசாற்றுவதாகவோ இல்லை தமிழ் மொழியையும், இனத்தையும் ஒடுக்கப்படுத்துவதகோவா சித்தரிக்கும் எழுத்துக்களே. உண்மையான சிந்தனையோ, அறிவார்ந்த விவாதமோ தமிழில் காணக் கிடைப்பது அரிது என்ற எண்ணமே எனக்கு உள்ளது. அந்த வகையில் தமிழுக்கான உண்மையான பங்காற்றலும், உலகார்ந்த பார்வையும் கொண்ட இந்த தளமும் இதன் கருத்துக்களும், விவாதங்களும் மிக முக்கியமானவை.
அதற்கு ஏதாவது வகையில் பங்களிப்பாற்ற முடியுமா என்ற எண்ணத்தின் அடிப்படை தான் மேற்கூறிய அந்த தளம். இத்தளத்தில் உங்களின் கட்டுரைகளில் எனக்கு மிக பிடித்த, என்னை மிகவும் பாதித்த சிலவற்றை என்னளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திட்டம். படித்த அனைத்தையும் மொழிபெயர்க்க எனது உலகியல் இடமளிப்பதில்லை. மிக சிலவற்றையே தெரிவு செய்ய முடிகின்றது.
இந்த எண்ணம் தோன்றியபின் இதை சரிவர செய்ய இயலுமா, என் ஆங்கில மொழி வளமை (அல்லது வளமின்மை) இதை சிதைக்குமா என்ற எண்ணமும் கூடவே பற்றிக்கொண்டது. உங்கள் கட்டுரைகளின் பிற மொழிபெயர்ப்புகளையும், புதினங்களின் மொழிபெயர்புகளையும் வாசித்தபின் எனது போதாமைகள் தெரிந்தது. தவிரவும், ‘கூகிள் ட்ரான்ஸ்லட்‘இன் (google translate) அளவே எண்னுடைய மொழிபெயர்ப்பும் இருக்குமாயின் அதன் அர்த்தம் தான் என்ன? ஆனால் அச்செயலியின் சில போதாமைகளும் புலப்பட்டன. அவற்றை என்னால் நிரப்ப இயலுமா என்ற கேள்வியை எதிகொள்வதே இந்த முயற்சி.
செயலின்மையை விட இது மேலானது. செயலின் வழி மேம்படவும், நிறைவடையுமே இதன் மூலம் எத்தனிக்கிறேன். எனது அலுவல் பணிக்காக நான் எழுதும் எழுத்துக்களும், மின்னஞ்சல்களும் மிகவும் தட்டையானவை. அலுவல் வழி சார்ந்த மொழிபோக்குடையவை. அதிலிருந்து மேலெழுந்தே இந்த மொழிபெயர்ப்புகள் வர வேண்டும். வரும் என்று நம்புகின்றேன்.
(இவ்வஞ்சலை எழுதும்முன் இதனால் என்னை உங்களிடம் முன்வைக்க பார்க்கின்றேனோ எனவும் எண்ணாமலில்லை. ஆனால் அவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு ஒரு அஞ்சல் எழுதிவிட வேண்டும் என்பதே பெரிதாக தோன்றியது)
– சுரேஷ்.
அன்புள்ள சுரேஷ்
எந்தப்பணியானாலும் எவர் கவனிக்கிறார்கள், எவ்வளவுபேர் ஆதரிக்கிறார்கள், என்ன விளைவு என்றெல்லாம் கணக்கிடாமல் அதை சிலகாலமாவது முழுமூச்சாகச் செய்யவேண்டும். அத்தகைய பணிகள் மெல்ல மெல்ல நம் அன்றாடமாக ஆகும். நம் ஆளுமையை மெல்ல மெல்ல அவை மாற்றும். அவ்வாறுதான் நாம் செயல்வழியாக நிறைவையும் விடுதலையையும் நோக்கிச் செல்ல தொடங்குகிறோம்.
வாழ்க
ஜெ