அஞ்சலி: காந்தியர் விவேகானந்தன் – சிவராஜ்

மனதாழத்தில் நாம் தீவிரமாக நம்புகிற கனவுகுறித்த தொடர்ச்சியான பயணங்களில் ஒரு சந்தேகக் கேள்வி எழுகிறபொழுது, அதுவரை நெருக்கமாயிருந்த உறவுத்தோழமைகள் ஏதோவொருவகையில் தங்களை விலக்கிக்கொண்டு, பெரும் வசவுகளையும் குற்றச்சாட்டையும் சொல்லி நம்மைப் புறக்கணிக்கிற கையறுநிலையில், இரக்கமில்லாமல் வீசிய கத்திகள் நம் இருதயத்தைத் துளைத்திறங்கும் வலிமுகு துர்ச்சூழலில்நம்முள் எழுகிற வன்மம் ஒன்றுண்டு.

உண்மையற்ற அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு இல்லாமலாக்க நம்முள் அந்த வன்மம் பிறக்கிறது. தேள் தீண்டலின் கொடுநஞ்சென அவ்வன்மம் அரைநொடியில் நம் உடல்முழுதும் வேகமெடுத்துப் பரவும் அவ்வேளையில், ஒற்றைக்கணம்அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை தணியச்செய்து கடிவாய் வழியாக தானாகவே நஞ்சிறங்கும் அற்புதத்தை நிகழ்த்திவிடுகிறது. அவ்வாறு, வன்மந்தவிர்க்க நான் சென்றடைகிற ஒற்றைக்கண எண்ணக்குவியம் என்பது காந்தியம் தான்.

சில மாதங்களுக்கு முன்பாக, மனது நிலைகொள்ளாத அப்படியொரு சலனக்காலத்தில் நான், ஸ்டாலின், கெளசிக்மூவரும் சேர்ந்து இங்கிருந்து கிளம்பிச்சென்று வார்தாவில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்தை அடைந்தோம். ஒரு கிராமத்தில் பேருந்தைவிட்டு நாங்கள் இறங்கி, வேகவேகமாக வெயிலில் நடந்தவருகையில் ஐந்தாறு கன்னியாஸ்திரிகள் வழியில் வருவதைப் பார்த்தோம். அவர்களிடம் ஆசிரமத்திற்கு வழிகேட்டவுடன், அவர்கள் முதலில் தண்ணீர் தந்து குடிக்கச் சொன்னார்கள். தாகந்தணிந்து அவர்களுக்கு நன்றிசொன்ன பிறகு அவர்கள் பாதைக்கு வழி காட்டினார்கள்.

அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தாண்டி ஆசிரமம் இருந்தது. நடந்தே செல்லலாம் என மூவரும் முடிவெடுத்து நடந்தேவந்து சேவாகிராம் ஆசிரமத்தை அடைந்தோம். ஆசிரமத்திற்குள் வந்து அதன் பொறுப்பாளிகளைச் சந்தித்துப் பேசியதும், நாங்கள் தங்குவதற்கு ஒரு அறை தந்தார்கள். மண்ணாலான சுவர்கள் மற்றும் ஓடுகள் வேயப்பட்ட மேற்கூரையுடன் அந்த அறை இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த இடங்களைச் சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டே இருந்தோம். காந்தி உலாவிய இடமாகவும், காந்தியத் தொண்டர்கள் வந்தமர்ந்து தங்கிச் சென்ற இடமாகவும்அவ்விடத்தைப்பற்றிய பழங்காலக் காட்சிகளை நாங்கள் எங்களுக்குள் கற்பனைத்தவாறு அங்கங்கு உலாவினோம்.

விடியற்காலை நான்கு மணியளவில் ஒரு மணியோசை கேட்டது. மழை கொட்டித்தீர்த்து பெய்துகொண்டிருந்தது. காந்தி நட்டுவைத்த ஒரு அரசமரம், வளர்ந்து பேருருகொண்டு உயரந்தெழும்பி கிளைபரப்பி நின்றிருந்தது. அம்மரத்தின் அருகில் ஒரு சிறிய குடில். பாபூ (காந்தி) தங்கியிருந்த அறை அது. நாங்கள் கொஞ்சம் தாமதமாகப் போனதால் அவ்வறைக்குள் பிரார்த்தனை துவங்கியிருந்தது. ஆகவே, உள்செல்ல இயலாமல் அவ்வறைக்கு வெளியேயிருந்த சிறிய முற்றத்தில் மூவரும் நின்றிருந்தோம். பிரார்த்தனைக்குரல் உள்ளிருந்து ஒலித்தது. அக்கணமே எனக்குள் ஒருவித அழுகை நடுக்கம் உருவானது.ஏனெனில், நடுநடுங்கும் ஒரு வயோதிகக்குரலும், அக்குரல் ஒலித்தடங்கிய நொடியில் துவங்கும் பெண்குரலும், சூழ்ந்திருந்த முன்விடியல் இருளும்அப்பிரார்த்தனையை என் வாழ்வில் மறக்கவியலாத  ஒன்றாக மாற்றியது.

பிரார்த்தனை நிறைவுற்றபிறகு, சேவாகிராம் வளாகத்திலிருந்த நைதாலிம் பள்ளிக்கூடத்தைப் பார்க்கச் சென்றோம். சிறிய பள்ளிக்கூடமாகத் தெரிந்தது அது. ஆனால், ஒன்றே ஒன்றுமட்டும் எங்களை வெகு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அங்கிருந்த ஆசிரியர்கள் அனைவருமே அருகிலிருக்கும் கிராம்ப்பகுதிகளைச் சேர்ந்த மனிதர்களாக இருந்தனர். என் வாழ்நாளில் இதுவரையில் நான் சென்றுவந்த எல்லா மாற்றுப்பள்ளிகளிலும், அங்குபணிபுரியும் ஆசிரியர்கள் என்பவர்கள் வெவ்வேறு நிறுவனங்களில் வேலைபார்த்து பணியை விட்டவர்களாகவும், அறிவின் பின்னனியில் அங்குவந்துசேர்ந்த ஆட்களாகவுமிருந்தனர். ஆனால், நைதாலிம் பள்ளியின் அத்தனை ஆசிரிய முகங்களும் கிராமத்து முகங்கள்.

அதன்பிறகு, அப்பள்ளியின் முதல்வரான ஒரு அக்காவிடம் சென்று எங்களை அறிமுகப்படுத்தி உரையாடினோம். தரையில் உட்கார்ந்து வெகுநேரமாக எங்களுடன் அடுக்கடுக்காகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அப்பொழுது, தான் இந்தப்பள்ளியில் வந்துசேர்ந்த கதையை மனம் நெகிழ்ந்து எங்களிடம் விவரித்தார்

முதன்முதலா நான் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு வேல கேட்டு வந்தப்போ, என்னோட சான்றிதழ்கள் எல்லாத்தையுமே எடுத்துட்டு வந்தேன். நான் இதெல்லாம் படிச்சிருக்கேன். எனக்கு இன்னதெல்லாம் தெரியும். நான் என்ன செய்யணும்னு அவங்ககிட்ட கேட்டேன்அதுக்கு, அப்போதைய நிறுவனர் என்கிட்ட ஒன்னே ஒன்னுதான் சொன்னாரு. நீ இராத்திரி வீட்டுக்குப்போன உடனேயே, உன் வீட்டு சமையல்கூடத்துல சோத்துக்காக எரியுற நெருப்புல ஒவ்வொரு சான்றிதழையும் எடுத்துப் போட்ருமா. அதெல்லாம் எரிச்சுட்டு நீ இங்க வந்திடு. ஏன்னா, இதுவரைக்கும் நீ கத்துகிட்டது இங்க தேவப்படாது. குழந்தையோட குழந்தையா இங்கிருந்து கத்துக்கோன்னு அவரு சொல்லிட்டாரு. நானும் அப்படியே செஞ்சுட்டு இங்க வந்திட்டேன்…”

அக்கா பேசிமுடித்ததைக் கேட்டு நாங்கள் மனம்பொங்கி மெளனித்திருந்தோம். சிறிது நேரம் ஏதேதோ பேசிவிட்டு, மெல்ல அந்தப் பள்ளிவளாகத்தை சுற்றிப்பார்க்கத் தொடங்கினோம். அன்றைய தினம் அங்கு ரக்‌ஷாபந்தன் திருவிழா நிகழ்ந்தது! அங்கிருந்த பிள்ளைகளே நூல்நூற்று, சாயமேற்றாத அந்த நூல்கயிறினை அங்கிருந்த எல்லோர் கையிலும் கட்டிவிட்டார்கள். பிள்ளைகள் முந்தைய நாளிலிருந்ததே அந்த கயிறுகளைத் தயாரிக்க தாங்களாகவே நூல்நூற்றனர்.கூடவே ஒரு இனிப்பையும் தயாரித்து அனைவரும் வழங்கினர்.

ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இரு மருத்துவர்கள் அங்கு வந்திருந்தார்கள். பிள்ளைகள் நான்கைந்துபேர் சேர்ந்து சென்று யாரோ இரண்டு நபர்களை அழைத்துவந்தார்கள். அவர்களில் ஒருவர், அப்பள்ளிக்கூட வளாகத்தை கூட்டிச் சுத்தம் செய்யும் தாத்தா. இன்னொருவர், அப்பள்ளிக்கூடத்தின் சமையல்கார அம்மா. பிள்ளைகள் அவர்கள் இருவரையும் அழைத்துவந்து சிறப்பு விருந்தினர் பக்கத்தில் இருக்கச்செய்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. அந்த இரு மருத்துவர்களின் காலில் விழுந்து ஒருசில குழந்தைகள் ஆசி பெற்றனர்.

ஆனால், எல்லாப் பிள்ளைகளும் அந்த தாத்தா காலிலும், அந்த அம்மாவின் காலிலும் விழுந்து விழுந்து வணங்கி ஆசிபெற்றனர். தாத்தா காலில் விழுவது, தாத்தாவிடமிருந்து பொட்டு வாங்கிக்கொள்வது, தாத்தாவிற்குப் பொட்டு்வைத்துவிடுவது என அத்தனை குழந்தைகளும் ஆர்ப்பரிப்புடன் மகிழ்ச்சியாக அதைச் செய்தனர். அந்தத் தாத்தாவின் நெற்றி முழுக்க, குட்டி குட்டி விரல்களால் அழுத்தப்பட்ட திலகம் பரவியிருந்தது. இடமே அற்று அந்த நெற்றி திலக வண்ணத்தால் நிரம்பியிருந்தது.

சமையல் அம்மா வெளியே வந்தவுடன், அத்தனைக் குட்டிக்குழந்தைகளும் ஓடிச்சென்று அவரைச் சூழந்து அணைத்துக் கொள்கிறார்கள். அம்மாவின் இடுப்புயரத்தில் அத்தனைக் குழந்தைகளும் சூழநின்று கட்டிப்பிடித்து மகிழ்ந்து களித்திருந்தனர். எந்தக் கல்விக்கூடத்திலும் இதுவரையிலும் நான் பார்க்காத காட்சி அது! ஆன்மாக்கள் நிரம்பிவழியும் ஒரு பெரும்வெளியாக அவ்வளாகம் எனக்குள் நிறைந்தது. வாழ்த்துக்களை ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்து மகிழ்ந்தபடி அன்றையச் சூழல் மனதுக்குநிறைவாக அந்திகொண்டது.

மறுநாள் காலையிலும் மழை நன்குபெய்து நிலம் நனைந்து நீரோடியிருந்தது. நானும் ஸ்டாலினும் ஓரிடத்திலும், கெளசிக் வேறோரிடத்திலும் நின்றிருந்தோம். அங்கு, இரண்டு குட்டிப் பெண்பிள்ளைகள் பேசியதைக் கேட்டுவிட்டு கெளசிக் வேகவேகமாக வந்து எங்களை அழைத்துச்சென்று அப்பிள்ளைகளைக் காண்பித்தார். அந்தக் குழந்தைகள் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு துடைப்பத்தை வைத்து நிலத்தை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தனர். ஒரே சமயத்தில் இரு கைகளின் துடைப்பத்தின் வீச்சினை பார்க்க, நெசவின் நாடா போய்வருவதைப் போலவேத் தெரிந்தது. அவர்களைச் சுட்டிக்காட்டி கெளசிக் சொன்னார், “அண்ணா, இந்த பசங்க என்ன பேசிங்கிட்டாங்க தெரியுமா?! எல்லா இலையும் கொட்டிக்கிடக்கு. தாத்தா வந்தா மனசு கஷ்டப்படுவாரு. அவரு வரதுக்குள்ள நாம இதெல்லாத்தையும் கூட்டித் தள்ளிரணும்…”

எல்லா உதிரிலைகளையும் கூட்டிச் சுத்தம்செய்து ஓரிடத்தில் குவித்துவைத்தனர் அக்குழந்தைகள் இருவரும். அங்கிருந்து வேறுசில குழந்தைகள் வந்து, அந்த இலைக்குவியலை அள்ளிச்சென்று தூரத்திலிருந்த ஒரு மரத்துக்கு மூடாக்காகப் போட்டு பரப்பினார்கள். நாங்கள் பேச்சற்ற ஒரு நிலையில் இவை அத்தனையையும் கவனித்து பெருமரம் ஒன்றின் அடிநிழலில் நின்றோம். ஏராளமான சிறுமரங்கள் அந்த ஆசிரம வளாகம் முழுவதும் சீரான இடைவெளியோடு வளர்ந்திருந்தன. பரந்துவிரிந்த அந்த வளாகத்தினை அக்குழந்தைகளின் இரண்டு கரங்களிலுமிருந்த துடைப்பங்கள் ஓயாது சுத்தம்செய்தபடியே இருக்கின்றன. அந்தத் துடைப்பங்கள் நிலத்தை நீவுகையில் எழுகிற சப்தம்என் தலைக்குள் குகையொலியாக எதிரொலித்து எதிரொலித்து உள்ளமிழ்ந்தது.

சேவாகிராம் பள்ளிக்கூட முதல்வர் அக்கா எங்களிடம், “நீங்க பவ்னார் வினோபா ஆசிரமம் போங்க. அங்க உஷா ன்னு ஒருத்தவங்க இருப்பாங்க. நைதாலிம் சம்பந்தமா நிறைய பயணிச்சவங்க. அதுமட்டுமில்லாம வினோபாகூட கொஞ்சகாலம் இருந்தவங்க. நீங்க நிச்சயமா அவங்களப்போய் பாருங்கஎன்று சொல்லி அனுப்பிவைத்தார். அதன்பின், அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பி பவ்னார் வினோபா ஆசிரமத்திற்குச் சென்றடைந்தோம். இதற்கு முன்னமே ஒருமுறை வினோபா ஆசிரமத்துக்கு நான் சென்றிருந்தாலும் இம்முறை ஒருவித நிறைவுடன் உள்நுழைந்தேன்.

வினோபா பாவேயின் சிறிய நினைவுக்கூடம் ஒன்று அங்கிருந்தது. அக்கூடத்தில் அவருடைய அஸ்தி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அதன்கீழ் நான்கைந்து சம்பங்கிப்பூக்கள் மட்டும் இருந்தது. மேலும், எப்பவுமே அங்கு சில கடிதங்கள் காணக் கிடைக்கின்றன. வினோபாவின் நினைவைச் சுமந்து, எங்கோ தொலைதூரத்தில் இருந்து இப்பவும் அவருக்காக கடிதம் எழுதி இந்த ஆசிரமத்துக்கு ஒருசில மக்கள் அனுப்புகிறார்கள். அப்படி, அங்கு வந்தடைகிற ஒவ்வொரு கடித்தத்தையும் வினோபாவின் அஸ்திக்கு அருகில் வைக்கிறார்கள் ஆசிரமத்தினர். இலட்சோபலட்சம் எறும்புகள் அந்த நினைவுக்கூடத்தின் தரையில் ஊர்ந்து ஊரந்து வருவதும்போவதுமாக உயிரோடிக் கிடந்தது அந்த அறை.

அதற்கு வெளியே, பெரும் மரமொன்று வானளவ விரிந்து கிளைநிறை இலைகளோடு நின்றிருந்தது. அதில், மெலிந்து எலும்புந்தோலுமாக கர்த்தர்யேசுகுருசில் அறையப்பட்ட சிலுவைச்சிற்பமும், அதன்கீழ் உடல் இல்லாத கால்சிற்பமும் இருந்தன. அந்தக் கால்கள் யாருடையது? எக்காலத்துக்குமான பசியினை ஏற்று, தேசமெங்கும் அலைந்து பயணிக்கிற யாத்ரீகர்களின் தியாகப்பாதங்களாகவே அது எனக்குள் குறியீடு கொள்கிறது.

உஷா அவர்களையும், நவகாந்தியர் கெளதம்பாய் பஜாஜ் அவர்களையும் நேரில் சந்தித்துப் பேசினோம். உஷா அவர்கள் தீவிரமாக அனைத்து குறித்தும் அனுபவங்களைப் பகிரந்துகொண்டார். வினோபா எத்தகைய மனதுடையவராக இருந்தார்? நைதாலிம் பள்ளி எத்தகைய கல்விக்கூடத்தின் கனவு? தாகூரிடம் காந்தி கல்விகுறித்த கேட்டறிந்தபின் என்ன நிகழ்ந்தது? பவ்னார் ஆசிரமத்தில் நைதாலிம் கல்விமுறையால் உருவாகிய மாற்றங்கள் என்ன? ஒட்டுமொத்த அனுபவம் குறித்து உஷா சொல்லடுக்கித் தெளிவுபடுத்தினார்.

கெளதம்பாய் பஜாஜை சந்தித்தது யதேச்சையாக நிகழ்ந்த பெருவாய்ப்பு. இவர் சிறுவயதிலேயே, கிட்டத்தட்ட சிறுவனாக இருங்கையிலேயே வினோபாவுடன் இணைந்து பயணித்தவர். பூமிதான யாத்திரைப் பயணத்தில் வினோபா அவர்களோடு இணைந்து இந்தியாவெங்கும் நடந்தலைந்தவர். ஒட்டுமொத்த வினோபாவுடைய பயணத்தை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி, அதை மிக நேர்த்தியான புத்தகமாக மாற்றியிருக்கிறார். வினோபாவுடைய மொத்த வாழ்வையும் சொல்கிற விதவிதமான காட்சிப்படங்களின் வாழ்வியல் தொகுப்பாக அப்புத்தகம் பெரியளவில் இருந்தது.

அப்புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில், ஒரு புகைப்படக்கருவியின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. கையளவே உள்ள சின்னஞ்சிறிய அந்தப் புகைப்படக்கருவியை வைத்துதான் கெளதம்பாய் பஜாஜ் வினோபாவின் ஒட்டுமொத்த வாழ்வினையும் ஆவணப்படுத்தி உள்ளார். ஒரு வரலாற்றினை ஆவணப்படுத்த பெரியளவிலான தொழில்நுட்பக் கருவிகளோ, உயிரறிவியல் சாதனங்களோ தேவையில்லை. தேவையானது ஒன்றே ஒன்றுதான், எந்நிலையிலும் சோர்வுறாத உளவிருப்பம்! அத்தகைய உளத்தீவிரம் இருந்தால் கைவசமுள்ள சின்னஞ்சிறு கருவிபோதும், பேரத்தியாயத்தின் துவக்கத்தினை எழுத….

அப்புத்தகத்தில் வினோபாவின் வெவ்வேறு காட்சிச்சித்திரங்கள் காணக்கிடைத்தன. பாறைகளில் வினோபாவும் தொண்டர்களும் மேலேறுவது, கொட்டும் மழையில் வினோபா வேகங்குறையாமல் நடப்பது, கைக்குழந்தையை வினோபாவின் காலில்போட்டு ஒரு அம்மா அழுவது, ஒரு நக்சல்பாரி தன் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு வினோபாவுடன் சேர்ந்துநடப்பதுஎன ஒவ்வொரு புகைப்படம்மும் அக்காலகட்டத்தின் காட்சிச்சாட்சியாக சட்டகமடைந்திருந்தன அப்புத்தகத்தில்.

பவ்னார் வினோபா ஆசிரமம் முழுமுழுக்கப் பெண்களால் நிர்வகித்து நடத்தப்படுகிறது. அங்கு ஒரு கோவில் இருந்தது. முழுவதும் பெண்களே அதைப் பராமரிக்கிறார்கள். அவர்களே கருவறைக்குள் சென்று தெய்வத்தைத் தொட்டு அலங்கரித்து வழிபடுகிறார்கள். அன்றிரவு வரை அங்கிருந்தவர்களோடு உரையாடிவிட்டு கிளம்பும்வேளையில், யதேச்சையாக உஷா சொன்னார், “நீங்க தமிழ்நாட்ல இருந்து வந்திருக்கீங்க. இங்க ஒரு தமிழர் இருக்காரு. நல்லா தமிழ் பேசுவாரு. நீங்க போய் அவர சந்திககலாம்“. சரி என நாங்கள் உடனே ஒப்புக்கொண்டவுடன், “நாளைக்கு காலைல நேரத்திலேயே போய்டுங்க. இங்க ஆசிரமத்துக்குப் பக்கத்தில தான் அவர் இருங்கிற இடம். நீங்க போய் பாருங்க. அவரு பேரு விவேகானந்தன்என்றார்.

விடியும் முன்பாக அவரைச் சந்திக்க முடிவெடுத்து, அறைக்கு வந்து நாங்கள் மூவரும் உறங்கியெழுந்தோம். அதிகாலை மூன்றரை மணியளவில் அங்கு பிரார்த்தனை தொடங்கியது. அவருடைய வசிப்புக்கூடம் ஒரு நதிக்கிளையின் ஓரத்தில் அமைந்திருந்தது. சிறு மணியோசை ஒலிக்கவும், பிரார்த்தனைத் துவங்கி நிகழ்ந்தது. பெண்கள் எல்லோரும் கூட்டுக்குரலில் தெய்வப்பிரார்த்தனைப் பாடல்களைப் பாடினார்கள். அது நிறைவடைந்தபின், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட உடலுழைப்பு வேலைகளை சிறுதுநேரம் செய்தனர். உடலுழைப்பு முடிந்தபிறகு காலையுணவு. உணவு முடித்து நாங்கள் அவரைச் சந்திக்கப் போனோம்.

அது, ஆசிரமத்தை ஒட்டியே அமைந்துள்ள பெரும் சோளக்காடு. அதன் நடுவில் ஒரு ஒற்றையடிப்பாதை நீள்கிறது. அப்பாதையில் நடந்தால், பழமையான முதுமரங்களின் வரிசைகளைக் கடந்து அது மெல்ல நீண்டு நீண்டு, இரு ஓட்டுவீடுகளின் வாசலை அடைந்தது. ஒரு வீடு அச்சுக்கூடமாக இருந்தது. இன்னொரு வீட்டில் கதவு சாத்தப்பட்டிருந்தது, தாழிடப்படவில்லை. நாங்கள் அங்குசென்று, “அய்யாஅய்யா…” என்று கூப்பிட்டு நின்றோம். பழங்காலப் பென்டுலக் கடிகாரத்தின் ஊசல் சத்தம் மட்டும் அந்த வீட்டின் உள்ளிருந்து கேட்டது. மீண்டும் சிலமுறைஅய்யாஅய்யாஎனக் கூவி மீண்டும் இரண்டொருமுறை அழைத்தோம்.

யாரோ ஒரு மனிதர் வந்து கதவைத் திறந்தார். அவரைப் பார்த்தவுடன் அவருடைய தோற்றமே எனக்குள் கண்ணீரைப் பெருக்கெடுத்து நிலைகுலைய வைத்தது. தொண்ணூறு வயதுகடந்த முதுகிழவர். எலும்புந்தோலுமான மெல்லிய தேகம், சுருங்கிய தோலோடு முதுமைநிறைந்து நின்றிருந்தார் அவர். இடுப்பில் ஒரு காக்கி டவுசர் தவிர உடம்பில் துணியே இல்லை. அந்ந டவுசர், நாடா கட்டி அவர் உடம்மோடு இறுக்கப்பட்டிருந்தது. தோள்பட்டை இணையெழும்புகள் உட்குழிந்து, நெஞ்சுக்கூடு உள்ளொடுங்கிய மனிதராக அவர் உயிரின் எடையோடு கண்முன் வந்துநின்றார்.

எங்களை உற்றுநோக்கியாருங்க வேணும்என்றார். நாங்கள்அய்யாவிவேகானந்தன் அவங்களப் பாக்கணும்என்றோம். அவர்நான்தான்என்றார். அவர் உடலிலருந்து கனத்த வயோதிக வாடை வீசியது. மூத்திர மணமும் தோல்வியர்வை வாசமும் கலந்த நெடிமிகுந்த முதுமணமாக அதுவிருந்தது. எல்லோரும் தரையில் உட்காரந்து பேச ஆரம்பித்தோம். அடிப்படையான விசாரிப்புகளான பெயர், ஊர், தொழில் குறித்தான விவரங்களை எங்களிடம் கேட்டறிந்து கொண்டார். அவர்குரலில் மூப்பின் காரணமாக ஒரு நிரந்தர நடுக்கம் வந்துவிட்டிருந்தது. நடுங்கியதிரும் குரலில் தம் வாழ்க்கை நிகழ்வுகளை ஒவ்வொன்றாக அவர் எங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது, ஸ்டாலின் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார், “நீங்க எப்டிய்யா இங்க வந்துசேர்ந்தீங்க?” என. அதற்கு அவர், “என்னோட சொந்த ஊரு தேனிக்குப் பக்கத்துல ஒரு சின்ன கிராமம். சின்னவயசுல சுதந்திரப் போராட்டம் நடந்த சமயத்துல எங்கப்பா எங்கிட்டஉங்கூடப் பிறந்தவங்க எல்லோருமே வெள்ளக்காரன எதிர்த்து ஜெயிலுக்குப் போய்ட்டாங்க. நீ மட்டும் ஏன் வீட்ல இருக்க? இன்னைக்குவேற ஊருக்கு வினோபா வராறாமாம்…’ அப்டின்னு கேட்டாரு. அப்பா நம்மகிட்ட ஏதோ எள்ளலா சொல்றாரு போலன்னு அப்ப தோணுச்சு. ஆனா, அது என் வாழ்க்கைய மாத்தும்னு எனக்கு பின்னாடிதான் தெரிஞ்சுச்சு. சாயங்காலம் சும்மா நான் வினோபாவ பாத்துட்டு வரலாம்னு கிளம்பிப் போனேன்.

அங்கபோய் அவரப்பாத்தா அவ்ளோ கூட்டம் அங்க நெறஞ்சிருந்துச்சு. சனங்க எங்கெங்கயிருந்தோ வந்துட்டிருந்தாங்க. வத்திக்கிடந்த ஒரு கால்வாய்ல வெள்ளமா தண்ணி வர்ரதுமாதிரி இருந்துச்சு. வினோபா அந்த மொத்த கூட்டத்தையும் பார்த்து ரெண்டு கையையும் கூப்பி வணங்கி, ஒரு பிரார்த்தனைப் பாடலை பாடினாரு. அதப் பாடி முடிச்ச உடனேயே வினோபா பேச ஆரம்பிச்சாருஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொருத்தங்களா சேர்ந்த கூட்டம்தான் இது. உங்கள்ல யாருக்கு விருப்பம் இருக்கோ அவங்க இந்த யாத்திரைல கலந்துக்கலாம்ன்னு சில வார்த்தைகள் சொன்னாரு.

எனக்குள்ள என்ன நடந்துச்சுன்னே தெரியல. அவரு பேசுனத கேட்டுட்டே இருந்தேன். அப்டியே நானும் கூட்டத்துல சேர்ந்து நடக்க ஆரம்பிச்சிட்டேன். நடக்குறேன் நடக்குறேன் அந்தக் கூட்டத்தோடு நானும் நடந்துகிட்டே இருந்தேன். இருபதாவது நாள்எனக்கு கடுமையான காய்ச்சல் வந்து படுத்தபடுக்கை ஆகிட்டேன். அப்போ, வினோபாவோட சீடர்கள்கிட்ட நான், ‘ரொம்ப உடம்புக்கு முடியல. நான் வீட்டுக்குப் போறேன்ன்னு சொன்னேன். அத எப்டியோ தெரிஞ்சுக்கிட்ட வினோபா நேரா எங்கிட்ட வந்து, ‘இந்த இருபதுநாள் உன்னோட வீட்டப்பத்தியோ, அப்பாவப்பத்தியோ நீ நெனச்சயா? அவங்க சாப்டாங்களா இல்லையான்னு நெனச்சயா?… அவங்களப்பத்தி நீ நெனைக்கவேயில்ல.

முழுக்க இந்த யாத்திரையத்தான நீ மனசுல நெனச்சு நடந்த? இந்தக் கூட்டத்தோட கூட்டமாதான நீ கலந்துபோயிருந்த? அப்டின்னா நாங்கதான் உன்னய பத்திரமா பாத்துக்கணும். அப்பாம்மா உன்னைய தாங்கக்கூடாது. நாங்கதான் உன்னைய தாங்கணும்ன்னு சொல்லி எங்கிட்ட மூணு இடம் சொன்னாரு. ஒன்று காந்திகிராம் ஆசிரமம், இன்னொன்னு கேரளாவுக்குப் பக்கத்துல ஒரு ஆசிரமம், மூனாவதா இந்த பவ்னார் ஆசிரமத்த சொன்னாரு. எங்கயாவது தூரமாப்போனா நல்லதுன்னு அப்ப தோணுச்சு. உடனே, அங்கிருந்து கிளம்பி இங்க வந்துட்டேன்.

உடம்பு சரியில்லாத சூழ்நிலையால இங்கேயே தங்கி ஒய்வெடுத்தேன். இங்கிருந்தப்போ, வினோபா எழுதுன புத்தகங்கள், கடிதங்கள்ன்னு மெல்ல மெல்ல வாசிக்க ஆரம்பிச்சேன். வினோபா எப்படி தேவாரம், திருவாசகம் பாடுறாரு? எப்படி கத்துக்கிட்டாரு? வெறும் தயிர மட்டும் குடிச்சிட்டு எப்படி இவ்ளோ தூரம் நடக்குறாரு? இதெல்லாம் நெனச்சுப்பாத்தா எனக்கு ஆச்சரியமா இருக்கும். அந்த சமயத்துல நானா முடிவுபண்னேன். ‘சரி, நாம எங்கயும் போகக்கூடாது. வினோபாவோட எதாவதொரு வேலைய கையிலெடுத்து செய்யணும்னு நெனச்சேன்.

ஒருநாள் வினோபாவ நான் நேர்ல சந்திச்சேன். அப்ப, அவரு எங்கிட்ட, ‘உன் உயிரோட கடைசி நொடிவரைக்கும் உனக்குப் பிடிச்சமாதிரியான ஒரு வேலைய செய்றதுக்காக உன்னோட வாழ்க்கைய எடுத்துவைன்னு சொன்னாரு. எனக்கு ஒரே குழப்பமாயிடுச்சு. எனக்குப் பிடிச்ச வேலை எதுன்னே தெரியல. இப்படியே குழம்பிட்டிருந்த சமயத்துல ஒருநாள், ஆசிரமத்துல காலைப் பிரார்த்தனை நடந்துச்சு. அப்போ, கீதைப் பேருரையில இருந்து ஒரு பத்தி படிச்சாங்க. அவ்ளோதான்! அந்தக்கணம் முடிவாகிடுச்சுஅச்சுக் கோக்குறது, அச்சடிக்கிறது, புத்தகம் உருவாக்குறதுமேல எனக்குள்ள ஒரு ஆச இருந்திருக்கு போல. அது அப்ப வெளிய வந்திடுச்சு.

அப்ப முடிவுசெஞ்சேன், இனி நம்மளோட வேல முழுக்க புத்தகம் அச்சடிக்கிறதுதான்! வினோபா, காந்தி, அவங்க சொன்னத எல்லாத்தையுமே அச்சுல புத்தகம் கொண்டுவர்ரதுதான் என் வேலன்னு அன்னைக்கு முடிவுபண்ணேன். இந்த நொடிவரைக்கும் புத்தகம் இங்க அச்சாகுது…”

விவேகானந்தன் அய்யா தன்னுடைய வாழ்வுகுறித்த முழுமையாகச் சொல்லி முடித்தபோதுதான், எங்களுக்குள் ஒரு பேருண்மை துலக்கமானது. இன்று, இந்தியாவெங்கும் சென்றுசேர்கிற அத்தனை வினோபா நூல்களும், எவ்விடத்தில் வைத்து வடிவமைத்தலும் பிழைதிருத்தலும் அச்சாக்கமும் அடைகிறதென்றால், அது விவேகானந்தரின் இந்தச் சிறிய கூடத்தில்தான்! நடுநடுங்கும் விரல்களின் அச்சுருவாக்கத்தில், சதைமெலிந்து உள்ளொடுங்கிய உடலோடு, இன்னும் கிஞ்சித்தும் நம்பிக்கையிழக்காமல் அச்சுப்பணிகளைச் செய்துவருகிறார் விவேகானந்தன் அய்யா.

எங்களோடு அவர் பேசிக்கொண்டிருந்த தருணத்தில், அச்சக ஊழியரொருவர் வந்து ஏதோ காகிதக்கணக்கு சொல்லி சந்தேகம் கேட்டார். அதற்கு அவர், இன்னும் நான்கு பக்கங்கள் சேர்த்தால் அச்சுக்காகிதம் வெட்டுப்பட்டு பக்கம் வீணாகாது எனச்சொல்லி, அதில் மேலும் சில பத்திகளை அச்சுப்படுத்த அறிவுரைத்தார். எங்களுடன் தமிழில் பேசியபடியே ஊழியரிடம் இந்தியில் பதில்சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது, ஸ்டாலின் மீண்டும் அவரிடம் ஒரு கேள்வி கேட்டான். “அய்யாஎங்க கூடயிருந்த நண்பர்களோ உறவுகளோ சின்னதா ஒரு வார்த்தை நம்மளப்பத்தி தப்பா சொல்லிட்டாலோ, இல்லநம்ம நெனச்சது நடக்கலைன்னாலோ மனசு ரொம்ப தளர்ந்து போய்டுது. நீங்க எப்டிய்யா இத்தன வருசமும் அதே நம்பிக்கையோட…?”.

அதுவரைக்கும் வெகு இயல்பாக உரையாடிக் கொண்டிருந்த அவர், கைகளை மேலே குவித்து வான்நோக்கிப் பார்த்து, ” எப்பவுமே நாமாளா நடந்துபோறது இல்ல இந்த வாழ்க்க. நமக்கு முன்னாடி ஒரு கை நம்மளப்பிடிச்சு கூட்டிட்டுப் போகுதுன்னு நாம நம்பணும். அந்தக் கை வேற யாரோடதுமில்ல, சூட்சமத்துல இருக்க தெய்வத்தோட கைதான். அதுக்கு தெரியும் நாம போற பாதை. நம்ம கைய விடாம அது வலுவாப்பிடிச்சு கூட்டிட்டுப்போகும். அந்த நம்பிக்கைய எந்த காலத்துலயும் நம்ம மனசு தொலைச்சிடக் கூடாது. அந்தக் கைய எப்பவுமே நாம விட்ரக்கூடாது.

ஆனா, அது நமக்குத் தெரியவே தெரியாது. ஏன்னா, நம்ம பார்வ அறிவில இருந்து உதிக்குது. சூட்சமத்துல இருக்க அந்த கை நம்ம எல்லோரையும் கூட்டிட்டுப் போறதா நான் நம்புறேன். இப்பகூட, தினமும் காலைல என்னைய வினோபாதான் எழுப்பிவிட்றதாவும், அவர்தான் எங்கிட்ட வேல சொல்றாதாவும், எல்லா செயலையும் என்னோட குரு சொல்லிதான் நான் செய்றதாவும் நம்புறேன்அதுஅதுசத்தியமான நெஜம்…”

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழுதழுது இதைச் சொல்லி முடித்தபோது நாங்கள் அனைவரும் உணர்வுகலங்கி அழுதபடி நெகிழ்வுற்றிருந்தோம். அவர் மெல்ல அருகில்வந்து எங்கள் கைகளை அழுத்திப் பிடித்து, “எப்பவுமே நம்ம உள்மனசுல ஒரு விருப்பம் துடிச்சிட்டே இருக்கும். தினமும் அதிகாலைல அந்த விருப்பத்த எடுத்து பிரபஞ்சத்துல பிரார்த்தனையா வைக்கணும். அத நேர்மையானதா மாத்துன்னு அதுகிட்ட சொல்லணும். அதுபோதும்அது நேர்மையானதா மாத்தி நம்மளுக்கு வழிகாட்டும்என்றார்.

வாழ்வின் எந்நாளிலுமில்லாத பெரும் நிறைவுணர்வுக்குள் நான், ஸ்டாலின், கெளசிக்மூவருமே ஆட்பட்டிருந்தோம். விவேகானந்தன் அய்யாவோடு உரையாடி முடித்து அக்கூடத்தைவிட்டு வெளியே வந்தோம். ஆனாலும் உள்ளம் இயல்புக்குத் திரும்பியிருக்கவில்லை. அதே ஒத்தையடிப்பாதை வழியாக மீண்டும் நடந்துவந்து, சோளக்காடு தாண்டி வெளியே ஆசிரமத்துக்கு வந்தோம். அங்குவந்து இறுதியாக கெளதம்பாய் பஜாஜிடம் பேசினோம்.

அப்பொழுது அவர், “விவேகானந்தன் இந்த ஆசிரமத்துக்குக்கூட வரமாட்டாரு. அவருக்கு எல்லாமே அந்த அச்சுக்கூடம் தான். ஒரு சின்ன அடுப்புல அவரே சமையல் செஞ்சு சாப்ட்டுகிட்டு அங்கேயே தங்கியிருக்காரு. அந்த சோளக்காடு தாண்டி இந்த ஆசிரமத்துக்கு உள்ளே விவேகானந்தன் வந்து நாப்பது வருசத்துக்கும் மேலாச்சு. அவரோட வேல, அந்த கொட்டகைக்கு உள்ளேயே இத்தன  வருசமா துளியும் சலிப்பில்லாம நடக்குது…” என்றார்.

எண்ணிப் பார்க்கிறேன்…. நாற்பது வருடங்கள்ஒரே குடிலுக்குள்என்னமாதிரியான தியானிப்பு இது! எத்தகைய ஒப்புக்கொடுப்பு இது! வினோபாவுடைய ஒற்றை வார்த்தைக்கு ஒரு மனிதர் தன் முழுவாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறார். நாற்பது வருடங்களும் முழுமுழுக்க செயல்சார்ந்த முதல்நாள் தீவிரத்தோடு உயிர்கரைத்து வருகிறார். குருவின் சொல் உருவாக்கும் அருவிளைவு இது! அதை நாங்கள் கண்டுணர்ந்தோம் அன்று. என் உள்ளத்தளவில் அதுவரை யார்யார்மீதோ தோன்றியிருந்த சிறுவன்மங்கள் எல்லாம் வேரழிந்து, அவர்களுக்கான நலவேண்டலாக மாறியது அக்கணம்

நான்கைந்து நாட்கள் கழிந்து நாங்கள் சோவாகிராம் ஆசிரமத்திலுருந்து ஊருக்குத் திரும்ப தயாரானோம். மீண்டும் அதே ஒற்றையடிப்பாதை வழியாக விவேகானந்தன் அய்யாவின் அச்சுக்கூடத்தை அடைந்தோம். கூடத்தின் அருகே சென்று ஜன்னல் வழியாகப் பார்த்தோம். அக்கூடத்துக்குள் தனிநபராக இருந்து, டவுசர் கிழவராக முதுகுவளைத்து ஒரு அச்சு இயந்திரத்தை துடைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் நேரில்சென்று சொல்லிவிட்டு வருவதற்கான உளத்தைரியம் எங்கள் மூவரிடமும் எஞ்சியிருக்கவில்லை. ஆகவே, அவரைப் பார்த்த நிறைவுடன் ஊர் திரும்பினோம்

அதன்பின், திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைகழகத்தில் நிகழ்ந்தஇன்றைய காந்திகள்சுதந்திரத்தின் நிறம்புத்தக வெளியீட்டு நிகழ்வில், விவேகானந்தன் அய்யா குறித்த நினைவுகளை நான் பகிர்ந்துகொண்டேன். அப்பொழுது, அம்மா  கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தன்னிரு கைகளையும் கூப்பி, “விவேகானந்தன் ஜெகநாதனுக்கெல்லாம் குரு மாதிரி. அந்த அருட்பெருஞ்சோதி அவர காத்துக்கிட்டே இருக்கும்எனச்சொல்லி கண்ணீர் மல்கினார்.

சமீபத்தில்தான் செய்தி கிடைத்தது, விவேகானந்தன் அய்யா இந்தப் பரந்தவெளிக் காற்றில் கலந்துவிட்டார் என்று. வாழ்நாள் முழுக்க செயலின் அறத்தை அதன் மீதான தீவிரத்தை இறுகப்பற்றிக் கொண்டு, தன் ஆசிரியர் தந்த ஒரு சொல்லுக்கு வாழ்வை முற்றளித்த அந்த மனிதரின் மனத்தை, ஆன்ம வெளிச்சத்தை இறுகப் பற்றிக்கொள்கிறோம்.

ஆசிரியர் சொல் பிழைபடாது ஏற்ற செயலின் உண்மைக்காக வாழ்ந்த இந்த எளிய மனிதரைப் பற்றி எந்த ஊடகத்திலும் சிறு துண்டு செய்தியும் வெளியாகி இருக்கவில்லை. அவர் போன்றோர் இன்றைய உலகில் அறியப்படாதது ஒன்றும் புதிது இல்லை. ஆகையால், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், விவேகானந்தன் அய்யா குறித்து பகிர்ந்து கொள்வதென்பது வாழ்வு குறித்தான அர்த்தங்களை உண்மைக்கென வாழ்தலின் உன்னதத்தை மீண்டும் மீண்டும் நமக்கு நாமே நினைவுறுத்திக் கொள்ளும் காரணத்துக்காகத்தான்.

(வினோபவின் சமாதியில் தன்மீட்சி சமர்ப்பணம்)

காந்தி என்பதோ, காந்தியம் என்பதோ, வினோபா அல்லது விவேகானந்தன் அய்யா போன்றவர்களோ என்றுமே தனிநபர்களோ தனிச்சித்தாந்தமோ கிடையாது. மொத்த சனத்திரளின் உயிர்சாட்சியாக குறிப்பிட்ட காலங்களில் மேலெழுகிறார்கள். மனதோடு எண்ணத்தினை இணைத்து செயல்படுவதற்கான உத்வேகங்களை தங்கள் வாழ்வினூடாக நமக்களிக்கிறார்கள். புறத்திலிருந்து எழுகிற இரைச்சலைத் தாண்டி நம் அகக்குரலுக்கு செவிமடுக்கும் உளநிலையை அறவழியில் போதிக்கிறார்கள். தங்கள் உயிரின் கடைசிச்சொட்டு ஈரம் உலர்கிற வரையில், அவர்கள் தங்கள் செயல்மீது நம்பிக்கையிழக்காது தொடர்ந்தியங்கிமானுட நிமிர்வை இந்நிகழ்காலத்திலும் நிஜமாக்குகிறார்கள்.

இரு கைகளிலும் துடைப்பத்தை ஏந்தி நிலத்தை சுத்தப்படுத்தும் அந்தக் குழந்தைகளின் மனவிசை…. நடுநடுங்கும் விரல்களோடு தொண்ணூறு வயது முதுமையிலும் அச்சுக்கோர்க்கும் விவேகானந்தன் அய்யாவின் அர்ப்பணிப்புஏதோவொருவகையில், அந்த ஆன்மாக்களின் தூயதுளிகளிலிருந்து ஒற்றைத்துளியையாவது என் வாழ்வு முடிவதற்குள் பெற்றிடவேண்டும். அதுவே எக்காலத்துக்குமான எனது அகவேண்டல்.

~

சிவராஜ் 

குக்கூ காட்டுப்பள்ளி 

முந்தைய கட்டுரைகாட்டின் ஆற்றல்- கடிதம்
அடுத்த கட்டுரைஆர்.வெங்கடாச்சலம் பிள்ளை