நான் ஆங்கிலத்தில் A Fine Thread and Other Stories முதலில் வாசித்தேன். அதில் ஷேடோ குரோ என்னை மிகவும் பாதித்த கதை. அற்புதமான கதை. ஒரு வகையான விளையாட்டாக அந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது. வாழ்க்கைமேல் பற்று, அதாவது மெல்லுணர்வுகள் எந்தவகையில் ஒரு ஞானியிடம் இருக்கவேண்டும் என்ற கேள்வி. கலைகளுக்கு எந்தவகையில் ஆன்மிகத்தில் இடம்? உண்மையிலே கலை என்றால் என்ன? அந்தக் கேள்விக்கு விடையாக அந்தக்கதை அமைந்திருக்கிறது. எதையும் மிமிக் செய்வதே அதை வெல்வதற்கான வழி. கோவிட் வைரஸை மிமிக் செய்து அதை ஒழித்தோம். அதேபோலத்தான். கலை என்பது காமகுரோத மோகங்களை மிமிக் செய்கிறது. ஆனால் காமகுரோத மோகங்களுக்கு எதிரானதாகவும் அது இருக்கிறது.
ஆங்கில மொழியாக்கம் அழகானது. சரளமான மொழியாக்கம். இந்தியாவில் செய்யப்படும் பல மொழியாக்கங்கள் சிக்கலான மொழியில் அமைந்திருக்கும். அமெரிக்க பாணி மொழியாக்கங்கள் மிக எளிமையான சுருக்கமான சொற்றொடர்கள் கொண்டவையாக இருக்கும். மொழிபெயர்ப்பாளர் அமெரிக்காவில் வாழ்பவர் என்பதை கண்டேன். அவருக்கு நல்வாழ்த்துக்கள்.
கயிற்றரவு கதையின் மொழிபெயர்ப்பும் மிக நன்று. அதுவும் இந்திய தத்துவத்தை அழகான கதையாகச் சொல்லும் படைப்பு. மிகச்சிறப்பான கதைகள். அறம் கதைகள் நீதியுணர்ச்சியில் அமைந்தவை. அவற்றின் செல்வாக்கு உடனடியாக உருவாகும். அடிப்படைகளை கேள்விகேட்கும் வாசகர்களுக்குரியவை இதிலுள்ள கதைகள். இவை இன்னொரு வகையில் உங்களை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் என நினைக்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்
ராமானுஜம் நாராயணன்