புதிய குழந்தைக்குரிய கனவு – கடிதங்கள்

பனிமனிதன் புதிய பதிப்பு  வாங்க 

அன்புள்ள ஜெமோ,

தங்களின் பனி மனிதன் நாவலைப் பற்றி என்னுடைய வாசிப்பு அனுபவத்தை. எங்களுடைய அடுக்ககத்தில் உள்ள தமிழ் சங்கத்தில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு வாய்க்கப்பெற்றது. அந்த புத்தகத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்ட உறுப்பினர் ஒருவர்,அவருடைய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நாவல் சென்ற இடங்களுக்கெல்லாம் கற்பனையில் தான் சென்றதாகவும், ஒவ்வொரு காட்சியும் தன் முன் ஒரு படமாக விரிந்தாகவும் தெரிவித்தார். அவதார் படத்தில் காண்பிக்கபட்ட நிறைய விஷயங்களை தாங்கள் அதற்கு முன்னரே எழுதியிருப்பது கண்டு வியந்தாகவும், அதில் கூறப்பட்ட அத்தனை அறிவியல் விஷயங்களும் நிறைய தெளிவுகளை அளித்ததாகவும் கூறினார்.  இந்நாவல் இத்தனை காலமாக  திரைப்படமாக வரவில்லையே என்று வருத்தப்பட்டார். இந்த “பனிமனிதன்” 2001ல் எழுதப்பட்டிருந்தாலும் அவன் இன்னும் உருகவில்லை மாறாக படிக்கும் ஒவ்வொருவர் மனதும் உருகுகிறது.

யானை டாக்டர் கதையைப் போன்று “பனிமனிதன்” நாவலையும் ஒரு பாடமாகவே வைக்கலாம். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்படிக்கு

மகாலட்சுமி

அன்புள்ள ஜெ

பனிமனிதன் நான் அண்மையில் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நாவல். என் குழந்தைகளுக்கு அதை முழுமையாகவே வாசித்துச் சொன்னேன். பன்னிரண்டு நாட்கள் ஒரு பரபரப்பான காலகட்டம். ஒவ்வொருநாளும் குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்தன. ஏராளமான கதைகளை வாசித்துக் காட்டியுள்ளேன். லார்ட் ஆப்ஃத ரிங்ஸ் போன்ற சில கதைகளே பெரிய அளவில் தீவிரத்தை உருவாக்கின. பனிமனிதன் அந்த தீவிரத்தை உருவாக்கியது. இவ்வளவுக்கும் அதில் வில்லன்களே இல்லை. எதிர்மறை அம்சங்களே இல்லை. ஆனால் ஒவ்வொரு அறிவியல் குறிப்பும் பிள்ளைகளை பரவசம் அடையச்செய்தன. இருபத்தோராம்நூற்றாண்டு குழந்தைகளுக்கான நாவல் அது.

ஜா. கிருஷ்ணராஜ்

முந்தைய கட்டுரைவெண்முரசில் குலங்களின் நாயகர்கள் – காளிப்ரஸாத்
அடுத்த கட்டுரைஊரும் இலக்கியமும் – கடிதம்