பொலிவதும் கலைவதும் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் தொகுப்பை இன்றுதான் வாசித்தேன். ஒவ்வொரு கதையிலும் திகழும் மௌனம் என்னை ஆழமான உணர்வுகளை நோக்கிக் கொண்டுசென்றது. பொலிவதும் கலைவதுமே ஓர் உதாரணம். அக்கதையில் நிகழ்வதெல்லாமே மௌனமானவை. மேலே நிகழ்பவை குறியீடுகள். அடியில் மனம் விம்மிக்கொண்டே இருக்கிறது.
நான் ஒரு விஷயம் சொல்ல நினைத்தேன். பொதுவாக இந்தவகையான மௌனமான கதைகள் வலியையும் துன்பத்தையும் சொல்லும்போதே மௌனத்தை அடைகின்றன. இந்தக்கதைகளிலெல்லாமே வாழ்க்கையின் கொண்டாட்டமும் இனிமையும்தான் உள்ளது. ஆனால் அற்புதமான இனிமையுடன் இவை உள்ளன.
நான் ஊருக்குச் செல்லும்போது பனங்குருத்து சாப்பிடுவேன். அது இனிக்காது. ஆனால் இனிப்பதுபோலவும் இருக்கும். அந்தமாதிரியான கதையனுபவம் என நினைத்துக்கொண்டேன்.
ஜெயராஜ் சத்யானந்தன்
*
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் சிறுகதை தொகுதியை மிகுந்த பிரியத்துடன் வாசித்து முடித்தேன். ஆண்பெண் உறவின் வண்ணங்கள் எவ்வளவு என்று பிரமிப்பாக இருந்தது. எவ்வளவு வகையான கதைகள். ஒவ்வொரு கதையும் எங்கெங்கோ நிகழ்கின்றன. வழக்கமாக தமிழ்க்கதைகள் நிகழவே முடியாத இடங்களிலெல்லாம் கதைகள் நிகழ்கின்றன. தமிழ்ச்சிறுகதைகளில் இந்த அளவுக்கு வெரைட்டி வேறெந்த எழுத்தாளரிடமும் இல்லை என்று நினைக்கிறேன்
ராதாகிருஷ்ணன் மாம்பாடி