இந்நாவலின் மையக் கதாபாத்திரம் ராணு. ராணுவின் கணவன் திலோக்கா ஒரு குடிகாரன். அவன் எப்போதும் காலையில் ராணுவை கன்னத்தில் அடிப்பான், இரவிலோ அவள் கால்களை பிடிப்பான்.
காமம் கொள்ளும் போது மட்டும் அவன் காதலனாக உருமாறுவான், காமம் முடிந்த பின்னே அவன் வெறும் ஆண்மகனாக நிலைகொள்வான்.
இப்படிப்பட்ட கணவன் ஒரு நாள் தகாத வேலை செய்துகொண்டிருக்கும் போது கொலை செய்யப்படுகிறான், அதனால் தன்னுடைய கணவனின் தம்பியான மங்களை மணம் செய்யவேண்டிய நிலை ராணுவிற்கு ஏற்படுகிறது.
மங்களோ, அண்ணியை அன்னை என்றே நினைப்பவன். பெற்ற தாயை பெரியம்மா என்றும், அண்ணியை அம்மா என்றும் அழைப்பவன். இவர்களின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே இந்நாவலின் மீதிக் கதை.
ராணுவின் கதாபாத்திரம் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தன் கணவன் இறந்ததை அறிந்தும் அவளுக்கு கண்ணீர் வரவில்லை, எவ்வளவு முயற்சித்தும் விழிநீர் விழவில்லை. பார்க்கும் ஊர்காரர்கள் என்ன நினைப்பார்கள் என்று அஞ்சி, வெங்காயத்தை கசக்கி கண்ணில் இட்டுக்கொள்ளலாமா என்று எண்ணுகிறாள்.
மற்றொரு இடத்தில், கணவனின் பிணத்தை பார்த்த பின்பு அவளுக்கு புதிய சேலையும், நிறைய நகைகளும் அணிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது. ஆனால் இதையெல்லாம் அறியாத அவள் தோழியர்கள் அவள் கைவளையல்களை சுவற்றில் மோதி உடைக்கின்றனர், மண்கட்டியை எடுத்து அவள் தலையில் போடுகின்றனர்.
ஒரு கட்டத்தில் வறுமையின் நிழல் குடும்பத்தின் மீது படிகிறது. இருப்பதோ கொஞ்சூண்டு சோறு. அதைதான் அவள், மாமனார், மாமியார், பிள்ளைகள் அனைவரும் பங்கிட்டு சாப்பிட வேண்டும். அவளுக்கு இருந்த பெரும் பசியில் உப்பு புளி கூட இல்லாத வெறும் சோற்றை சிறிதும் மிச்சம் வைக்காமல் உண்டுவிடுகிறாள். உண்ட பிறகே எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டோமே என்ற குற்றவுணர்வு அவளுக்கு ஏற்படுகிறது.
மிகவும் கச்சிதமான நாவல் இது. ஒரு சொல் கூட வீணாக்கப்படவில்லை. இந்நூலின் ஆசிரியர் ராஜேந்திர சிங் பேதி சுருங்கச் சொல்வதே செம்மை என்ற நிலைப்பாடு கொண்டவர் போல. சொற்களை எண்ணி எண்ணி எழுதியிருக்கிறார்.
சான்றாக, இந்நாவலில் வரும் சாமியாரை ஆசிரியர் இரும்பு லங்கோடு அணிந்தவர் என்று குறிப்பிடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த சாமியார் கைது செய்யப்படுகிறார், ஏன் அவர் கைது செய்யப்பட்டார் என்பதை ஒரே வரியில் “அவர் அணிந்திருந்தது இரும்பு லங்கோடு அல்ல, துணியினால் ஆனது” என்கிறார்.
இப்படி சொல்வேண்டிய அனைத்தையும் சுருங்கச் சுருங்கச் சொன்னதால், நாவலே அளவில் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. மொத்தமே 117 பக்கங்கள் தான்.
இந்நாவல் எனக்கு நல்லதொரு படைப்பை படித்த மனநிறைவை அளித்தது. இந்நூலினை பரிந்துரைந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.
உருது மொழியில் எழுதப்பட்ட இந்நாவல், தமிழில் “பொலிவு இழந்த போர்வை” என்ற பெயரில், நாமெல்லாம் பிறப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்பு, டைனோசர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தில் சாகித்திய அகாதமி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. எப்போதும் போல் மறுபதிப்பு ஆகவில்லை. இனியும் ஆகாது. Pdf-யில் கிடைக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். ஆமென்.
– மணிமாறன்