சேலத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற விழாவில் தங்களை சந்தித்துள்ளேன்,யானை டாக்டர் கதையினை புதிதாக வரும் ஆறாம்வகுப்பு மாணவர்களுக்கு சொல்லிவிடுவேன்,சோற்றுகணக்கையும்தான்.ஆசிரியர் பயிற்ச்சி முகாமில் யானைடாக்டர் கதையினை ஒருமுறை கூறியுள்ளேன்,சமீபத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா2வில் யானை குடிலுக்கு வந்து நன்றி சொல்லும் காட்சியினை கண்டு கலங்கிவிட்டேன் படித்த நினைவு பொரட்டி எடுத்துவிட்டது.தங்களின் பாலைமலர்ந்ததில் இருந்த அரேபிய அருங்காட்சியகத்தினை மாணவர்களுக்கே காட்சிபடுத்தியுள்ளேன்,பயனாக இருந்தது நன்றி ஐயா.
கந்தசாமி சித்தையன்,
சேலம்.
அன்புள்ள கந்தசாமி
‘நலம்தானே? நலம். நீங்கள் அறம் கதைகளை மாணவர்களிடையே பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்கதைகளிலுள்ள அடிப்படையான ஒன்று அவர்களுக்கு சென்று சேருமென்றே அனுபவத்தில் கண்டிருக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ
அறம் தொகுப்பை அண்மையில் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பலரும் பலகாலமாகச் சொல்லிவந்தார்கள். எனக்கு அப்படி பலர் சொன்னதனாலேயே ஒரு தயக்கம். இப்போதுதான் வாங்கி வாசித்தேன். இந்நூலைப் பற்றி ஏன் இலக்கியவாதிகளில் ஒரு சாரார் அப்படி குறைகள் சொன்னார்கள் என்று 30 ஆண்டுக்காலம் சிற்றிதழ்களை வாசித்தவனாக என்னால் சொல்ல முடிகிறது. (ஞாபகமிருக்குமென நினைக்கிறேன். ஒரு முறை கணையாழி அலுவலகத்திலே கண்டதுண்டு. பெல்ஸ் ரோடு திருவல்லிக்கேணி)
தமிழ் இலக்கியம் ரொம்பச் சின்னது. ஆகவே தனித்தனி உலகங்களே இங்கே கிடையாது. ஒரே கூட்டம்தான். ஆகவே ஒரு காலகட்டத்தில் ஒரு கருத்து இங்கே வந்துசேர்ந்தால் அத்தனைபேரும் அதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதையே அல்டிமேட் உண்மை என்று நம்புவார்கள். 1970 களில் இங்கே எக்ஸிஸ்டென்ஷியலிசம் வந்தது. அதுக்கு முன் ஃப்ராய்டிசம். எது வந்தாலும் உடனே அடடா வந்துட்டுது உலகமகா உண்மை என்று கூத்தாடுவார்கள். அதை வைத்து கதை எழுதுவார்கள். வேறு எவராவது ஏதாவது எழுதினால் ’தெரியாதா, இப்ப இதான் உண்மை’ என்பார்கள். அதுக்குப்பிறகு போஸ்ட்மாடர்னிசம். கலகம் என்றபேரில் பகடி பண்ணுவது. எதையாவது குதறிக்குழப்பி எழுதுவது. செய்யக்கூடாது என்றில்லை. இலக்கியத்தில் எல்லாமே செய்யலாம்தான். ஆனால் அது மட்டும்தான் இலக்கியம் என்பதுபோன்ற அசட்டுத்தனங்கள்தான் கூடாது.
உண்மையில் அறம் இந்தியச் சூழலில் உருவான ஒரு அபாரமான இலக்கியப்படைப்பு. அறிவுள்ள இலக்கியவிமர்சகன் எவனும் அந்த கதைகள் ஏன் எந்தச் சூழலில் இங்கே எழுதப்பட்டன என்றுதான் ஆராய்ந்து சொல்வான். போஸ்ட் ட்ருத் காலகட்டம் என்று அமெரிக்காவிலே சொல்லலாம். நமக்கு ஃபங்ஷனல் ட்ருத் ஒன்று தேவைப்படுகிற காலம் அது. அந்த தவிப்பை அது எழுதியதனால்தான் அவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றது. இங்கே மட்டுமல்ல, இந்தியா முழுக்க இன்றைக்கு பேசப்படுகிறது. இலக்கியம் அப்படித்தான் பேசப்படவேண்டும்.
அற்புதமான கதைகள். நன்றி
சங்கரநாராயணன்
To order the book:
https://www.amazon.in/dp/9393986177
அன்புள்ள சங்கரநாராயணன்
நினைவுக்கு முகம் வரவில்லை. மீண்டும் நாம் சந்திக்கவில்லை.
இங்கே அறம் கதைகள் பற்றிப் பேசிய எவருக்கும் அக்கதைகளின் அமைப்பு, வடிவம், பேசுபொருள்தான் அன்று உலகளாவ உருவாகி வந்த புத்தம்புதிய இலக்கிய அலை என்பது தெரியவில்லை. அறம் கதைகளின் பேசுபொருள் மட்டுமல்ல, உண்மைக்கு அருகே செல்லும் அதன் புனைவு முறையும் டிரான்ஸ்ஃபிக்ஷன் வகையைச் சேர்ந்தது நீங்கள் சொல்வது சரிதான். அவர்களுக்கு பொதுவாக ஒரு புரிதல் முப்பதாண்டுகளுக்கு ஒருமுறை வந்துசேரும். அதை அப்படியே பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஜெ