யானைடாக்டரின் அறம்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

போன மாதம் எங்கள் அலுவலகத்தின் ஆண்டு விழா மேடையில் என் நண்பன் உங்களது யானை டாக்டர் கதையை நாடகமாக போட வேண்டுமென ஆசைப்பட்டான். அந்தக் கதையின் இறுதிக் காட்சியை ஒரு பெரிய மேடையில் நிகழ்த்திக் காட்ட வேண்டுமென மிகவும் விரும்பினான். ஆனால், சில நடைமுறை சிக்கல்களால் அதனை எங்களால் நிகழ்த்த முடியவில்லை.

பின்னர், இரண்டு நாட்களுக்கு முன்னர் உங்களது தளத்தில் ஜிகர்தண்டா படத்துடன் யானை டாக்டரை தொடர்புபடுத்தி வந்தக் கட்டுரையை வாசித்தேன்.

அதன் பின்னர், நேற்று திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. எனக்குப் பிடித்த சில சிறுகதைகளை எடுத்து அதனை ஏன் எனக்கு பிடித்தது என்று ஆராய்ந்து, அந்த நுணுக்கங்களை நான் எழுதுகிற கதைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தோன்றியது.அப்படியாக, யானை டாக்டர் என்னிடம் மீண்டுமொருமுறை. வந்தார்.

மிஷ்கின் செவன் சாமுராய் பற்றிச் சொன்னது போல, ஒரு நாலைந்து முறை இந்தக் கதையைப் படித்திருக்கிறேன். இன்னும் ஆயிரம் முறை இந்தக் கதையை படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இந்தக் கதையை இன்று எனக்கு திணிக்கப்பட்ட ஒரு ஓய்வு நேரத்தில் படித்தேன். கிட்டத்தட்ட ஒரு 12 மணி இருக்கும். இந்தக் கதையில் நீங்கள் ஒரு குரங்கு எப்படிக் கத்தும், அது எப்படி ஒரு காவல் வீரனாக இருக்கும். அது சத்தம் எழுப்பியதும் எப்படி மான்கள் அதனைப் புரிந்து கொண்டு ஆள் நடமாட்டம் நீங்கியதும் வெளியே வரும், என்கிற புள்ளி வரை மட்டுமே எனது லாஜிக்கல் திங்கிங் வேலை செய்தது. ஆனால், அதன்பிறகு நான் எப்படி எனது நிஜ உலகில் இருந்து நழுவி அந்த கதை உலகத்தில் விழுந்தேன் என தெரியவேயில்லை. இத்தனைக்கும் நான் இந்தக் கதையை இதற்கு முன் பல முறை படித்திருக்கிறேன்.

கதை உலகில் நான் சென்ற பிறகு நான் என்னையறிமாலேயே என்னுடை Analysis வேலையை எல்லாம் விட்டு விட்டு அந்த வனத்துறை அதிகாரியாகவே மாறி அந்த உலகில் உலவிக் கொண்டிருந்தேன்.

இந்தக் கதையில் என் மீது அதிக தாக்கத்தைச் செலுத்துவது, இதில் வருகிற உச்சப் புள்ளிகள் அல்ல, பதிலாக அந்த உச்சப் புள்ளிகளுக்கு பின் வருகிற யானை டாக்டரின் எதிர்வினைகள் தான்.

உதாரணமாக, அந்த வனத்துறை. அதிகாரி, ஏன் டாக்டருக்கு பத்மஸ்ரீ கிடைக்க வேண்டுமென நினைக்கிறான் என்று உணர்ச்சி பொங்க பேசுவான். அது கிட்டதட்ட நீங்கள் ஏன் இந்த அறம் கதைகளை எழுதினீர்கள் என்று சொல்வது போல இருக்கும்.

இலட்சியவாதம் மீது உங்களுக்கு சோர்வு வந்த போது உங்களை நீங்களே மீட்க வேண்டும் என்ற புள்ளியில் இருந்து நீங்கள் இந்தக் கதைகளை தொடங்கியது போல,

அந்த வனத்துறை அதிகாரி அவன் தலைமுறை (என் தலைமுறை) இலட்சியவாதம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் Just Make Money என்று வாழ்பவர்கள் அந்த டாக்டரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறான். ஏங்குகிறான். உணர்ச்சி வசப்பட்டு அழுகிறான். அது வரை நமக்குள் எழுகிற அத்தனைக் கொந்தளிப்புகளும் உடைகிற புள்ளியாக, ‘“ஓஹ்… ஷேக்ஸ்பியர், இனாஃப்” என்று சிரித்துக் கொண்டே யானை டாக்டர் சொல்கிற இடம் இருக்கிறது.

எவ்வளவு பெரிய விஷயத்தை இந்த மனிதர் இப்படி எளிமையாக தூக்கி வீசிவிட்டு சிரிக்கிறார் என்பதே எனக்கு அதிகத் தாக்கம் கொடுக்கிற இடங்கள்.

இதே விஷயம் இரண்டாவது முறையாக நடக்கிறது. அந்த விருது டாக்டருக்கு இல்லை என்று அந்த அதிகாரி சொல்ல வரும் போது அதையும் நாம் எதிர்பார்த்தது போலவே டாக்டர் அலட்சியமாக தட்டிவிட்டு தனது வேலையில் மூழ்கிப் போகிறார். இது கண்ணீருடன் புன்னகையை வரவழைத்த இன்னொரு இடம்.

இவையெல்லாம், மலையேறும் போது நம் கண்களுக்குப் படுகிற காட்சிகள் மட்டுமே. இதன் உச்சி, இந்தக் கதையின் கடை வரி…

ஒரு மிகப்பெரிய நாடகத் தருணம். ஒரு காப்பிய நிகழ்வு, டாக்டரைத் தேடி வருகிற ஒரு குட்டி யானை டாக்டரின் மீது தும்பிக்கையை போட்டுக் கொள்வது, அதன் பின்னர் முதுமலையிலிருந்து டாப்ஸ்லிப் வரை அவரைத் தேடி வந்த ஒரு பெரும் யானைக்கூட்டம் மொத்தமாக தும்பிக்கையை தூக்கி பிளிறிக் கொண்டே இருப்பது. யானைகள் தங்களது நன்றியை தெரிவிப்பது. இயற்கையின் பேராற்றல் ஒன்று மனிதனின் முன் மண்டியிடுவது. இன்னும் சொல்லப் போனால் ஒரு வனமே, ஏன் உலகமே ஒரே ஒரு மனிதனுக்கு மரியாதை செய்வது. இனி இந்த மனிதனுக்கு பத்மஸ்ரீ உட்பட எந்த விருதும் இந்த மனிதனின் கால் தூசி என்று நாம் நினைக்கின்ற போது, டாக்டரின் எதிர்வினை,

‘“சரி, வா” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

இந்தக் கடைசி வரி தான். நெஞ்சை விம்மி எழ வைத்தது. உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த நான் உண்மையிலேயே எழுந்து நின்றேன்.

யாரும் என்னைப் பார்ப்பதற்கு முன்னர் அருகிலிருந்த ஒரு meeting room க்கு சென்று சில நிமிடங்கள் அழுது கொண்டிருந்தேன். இதன் தாக்கம் குறையக் கூடாது என்பதற்காக மதிய உணவை தனியனாக உண்டேன். மேலே சொன்ன வார்த்தைகள் எதுவும் எனக்கு அப்போது தோன்றியவை யில்லை. இதெல்லாம் ஒரு நான்கு மணி நேரம் கடந்து தோன்றியவை. ஏனென்றால், அப்போது வரை என்னால் லாஜிக்கல் ஆக எதுவும் செய்ய முடியவில்லை.

புனைவை எழுதுபவருக்கு வேண்டுமானால் லாஜிக் or இன்டலிஜென்ஸ் தேவைப்படலாம். வாசிப்பவனுக்கு அது தேவையில்லை என நான் நினைக்கிறேன். ஏனென்றால் புரிந்து கொள்ள கடினமான எதையும் எழுத்தாளர் முன் வைப்பதில்லை.

அதிகாரம் எப்படி செயல்படும் என்றும் அறம் என்றால் என்னவென்றும் எல்லோருக்கும் தெரியும் அதைத்தான் நமக்கு வாழ்க்கை சொல்லித் தருகிறது. ஆனால், அதனை உணர்ந்து கொள்ளத்தான் புனைவு தேவை. உணர்ச்சிவசப்பட வைக்கத் தான் புனைவு தேவை. இதயம் என்பது இரத்தம் செலுத்த மட்டுமல்ல கொஞ்சம் இது போல கசியவும் தான் என்பதைச் சொல்லத் தான் புனைவு தேவை. அதுவே இந்தக் கதையின் வெற்றி.

ஏன், வாசகனுக்கு லாஜிக் தேவையில்லை என்று சொல்கிறேன் என்றால், என்னுடைய லாஜிக்கல் திங்க்கிங் என்னிடம் கேட்கிறது. எப்படி இப்படி ஒரு மனிதன் இருப்பான்? அவனிடம் கொஞ்சம் கூடவா கீழ்மை இருக்காது? உண்மையிலேயே இப்படிக் கூட்டமாக யானைகள் முதுமலையிலிருந்து இந்த டாக்டரைத் தேடிச் செல்லுமா? போன்ற கேள்விகளைக் கேட்கிறது. இதற்கு பதில் தேடிக் கொண்டிருந்தால், உண்மையிலேயே புனைவாசிரியன் நம் முன் விரித்து வைத்திருக்கிற ஒரு உலகின் உள் செல்ல முடியாது. அதன் உச்ச உணர்வை நாம் அடையவே முடியாது. அதனால் தான் வாசிக்கிற எனக்கு லாஜிக் தேவையில்லை என்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னர் விமலாதித்த மாமல்லன் அவர்கள் அறம் கதையில் அந்த செட்டியாரம்மா ரோட்டில் அப்படி அமரவில்லை. அதனால், அதில் உண்மையில்லை. அந்தக் கதையின் உச்சம் பொய்யாக உருவாக்கப்பட்டது என்று அமேசான் கிண்டிலில் ஒரு புத்தகம் போட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை படிக்கும் போதே தோன்றியது, அது பொய்யாக இருந்தால் இருக்கட்டுமே, அது உண்மையா இல்லை  பொய்யா என்பதுவா பிரச்சினை? இந்த லாஜிக் அந்த வாசகன் அடைய வேண்டிய ஒரு உள எழுச்சியை நாசம் செய்து விட்டது.

வழக்கம் போல ஒரு நல்லக் கதையை படித்த பின் என் மனைவியிடம் அந்தக் கதையை சொல்வேன். நான் தொடங்கியவுடன் அவளே அந்தக் கதையை மேலோட்டமாக சொன்னாள். அவள் இலக்கியம் வாசிப்பவள் கிடையாது. நான் ஏற்கனவே பல முறை இதே கதையை சொல்லியிருக்கிறேன் என்றாள், இருந்தாலும் பரவாயில்லை. மீண்டுமொருமுறை கேள் என்று கதையின் இறுதிக் காட்சியை மட்டும் சொல்லி முடித்தேன்.

எனக்கு சில ஆசைகள் உண்டு, இந்தக் கதை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக இருக்கிறது.

எந்த ஆசிரியனும் இதனை சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் உணர்த்தும் கதையென மாணவர்களுக்கு அறிமுகம் செய்து விடக்கூடாது.

இதிலிருந்து ஏதேனும் ஐந்து மதிப்பெண் அல்லது பத்து மதிப்பெண் கேள்விகளை கேட்டு மாணவனுக்கு இந்தக் கதையை ஒரு வேலையாக மாற்றி அவனை இந்தக் கதையிலிருந்து விலக்கி விடக் கூடாது.

அனைத்து மாணவனுக்கும் இந்தக் கதை சென்று சேர ஆசிரியர்கள் இந்தக் கதையை சுவாரசியமாக சொல்ல வேண்டும்.

அவ்வளவு தான்.

 

இப்படிக்கு,

சபரிராஜ் பேச்சிமுத்து.

அறம் வாங்க  

அறம் மின்னூல் வாங்க

 

To order the book:
https://www.amazon.in/dp/9393986177

Author Interview – The Print

Kamal Haasan in conversation with Jeyamohan – Part 1:

Kamal Haasan in conversation with Jeyamohan – Part 2:
https://www.thehindu.com/books/watch-part-2-of-actor-kamal-haasan-in-conversation-with-writer-jeyamohan/article65710484.ece

Book Review – The Hindu:
https://www.thehindu.com/books/books-reviews/book-review-jeyamohan-stories-of-the-true-dream-factory-sujatha/article65684271.ece

Kamal Haasan in conversation with Jeyamohan – Article in The Hindu: https://www.thehindu.com/books/kamal-haasan-and-writer-jeyamohan-on-world-literature-filmmaking-and-the-power-of-narrative/article65657304.ece

Article in The Print:
https://theprint.in/pageturner/book-scene/over-300-books-2-rebirths-later-iconic-tamil-author-jeyamohan-says-translations-strange/1062686/

Book Review – The Open Magazine:
https://openthemagazine.com/lounge/books/a-search-for-moorings/

Book Excerpt – The Wire:
https://thewire.in/books/book-excerpt-idea-power-jeyamohan

Book Review – Scroll:
https://scroll.in/article/1033538/stories-of-the-true-this-collection-of-jeyamohans-stories-in-translation-is-rooted-in-real-life

Book Review – Mint newspaper:
https://lifestyle.livemint.com/how-to-lounge/books/stories-of-the-true-jeyamohan-moves-us-in-english-too-111663925714724.html  

Book Review – Hindustan Times:
https://www.hindustantimes.com/books/reviewstories-of-the-true-by-jeyamohan-101664549798092.html

Translator’s note – The Dispatch:
https://www.thedispatch.in/stories-of-the-true-this-is-the-first-major-translation-of-tamil-writer-jeyamohans-work-in-english/

Book Review – Frontline:
https://frontline.thehindu.com/books/true-as-false-the-world-of-jeyamohan/article66031750.ece

Contact the author at: [email protected]

Contact the translator at: [email protected] 

முந்தைய கட்டுரைDid the Persians create Hinduism?
அடுத்த கட்டுரைமானுடக் கலையின் ஆழம்.