என்றுமுள்ள குருதி – கடிதம்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

ஆசிரியர் ஜெயமோகன் எழுதிய இஸ்ரேல் பாலஸ்தீன போர் பற்றிய கட்டுரையை வாசித்ததும் போரால் விளையும் பேரழிவு, பொருளாதார வீழ்ச்சி, பலியாகும் மனித உயிர்கள், இவையெல்லாம் இதயத்தை இரண்டாக பிளந்தெரியும் கர்ணகொடூர பாவச்செயல் அல்லவா? வஞ்சம், சூழ்ச்சி, போர் விதிமீறல்கொண்டு வீசப்பட்ட ரசாயன குண்டுகளால் குவிந்த மொட்டுக்களாய் அன்றலர்ந்த பூவாய் இப்புடவியில் வாழத்துடிக்கும் பிஞ்சுக் குழந்தைகள் நான்காயிரம் பேர்  பலியான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

குருஷேத்ர போர் மூண்டால் மைந்தரும் பெயர்மைந்தரும் களப்பலி ஆகிவிடக்கூடாது என்பதற்காக கௌரவப்பெண்டிர் அனைவரும்- குறிப்பாக அசலையும் காந்தாரியும்-போரை நிருத்துவதற்காக மெனக்கெடுகிற காட்சிகள் நினைவுக்கு வர,குருதிச்சாரல் எடுத்து மீண்டும் வாசித்தேன்.

அவையில் திரௌபதி சிறுமைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து பேரரசியும் தார்த்தராஷ்டிரர்களின் மனைவியரும் கொண்டிருக்கும் அகவுணர்வுகளை அவர்கள் பக்கமே நின்று தன்னைத்தான் பெருக்கி தான் திரண்டு எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

செந்நா நீரொழுக குறுதிவிடாய் கொண்டு காத்திருக்கும் குருஷேத்ர களம் பற்றி ஆசிரியர் இவ்வாறு எழுதிவருகிறார்.

“சரஸ்வதிக்கு தெற்கே திருஷ்வதிக்கு வடக்கே இக்ஷுமதிக்கு கிழக்கே அமைந்துள்ளது குருஷேத்ரம்.இங்கு வெறும்மண்ணில் படுத்து அசையாது உறங்கினால் விழிக்கையில் நம் உடலை மண் எழுந்து கவ்வத் தொடங்கியிருப்பதை காணலாம். மூண்டெழும் பசியினால் சிவந்த நிலம் என இதை சூதர்கள் பாடுகிறார்கள் குருஷேத்ரம் எப்போதும் ஈரமாகவே இருந்தது என்கின்றன நூல்கள்.”

குருஷேத்ர களத்தை பார்வையிட்டபின் சாயாகிருகத்திலிருந்து கிருபதம் நோக்கிச்செல்கிறாள் தேவிகை ..”புரவியின் பெருமூச்சை சினைப்போசை” என்கிறார் ஆசிரியர்.

“நிலவொளி ஊடு. நீரலை பாவு. நெய்யப்படுகிறது இவ்விரவு”என்று கவிதை தருகிறார்.மங்கையரின் நடிப்பை நடிப்பல்ல”நிலைப்பேணல் “என்கிறார்.
தேவிகை பால்கிஹ அரசன் பூரிசிரவஸை சந்தித்து போர் நிறுத்த தூது செல்ல பணித்துவிட்டு தேரில் அமர்ந்தபின் உளக்கொந்தளிப்பால் அவள் கால் கட்டை விரல் நெளிந்துகொண்டிருப்பதாக எழுதுகிறார்.திரௌபதி ஏற்பாளா கனிந்து வருவாளா என்று தேவிகை மனம் ஊசலாடும்போது”கனிவதெல்லாம் கனியல்ல “மிளகும் கனியே”என்கிறார் .

.போருக்கு முந்தைய இந்த நிகழ்வுகளை “நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சற்று முன்னர் விலங்களெல்லாம் முட்டி மோதிக்கொள்ளும்”என்று சாலப்பொருத்தமான உவமையை முன்வைக்கிறார் ஆசிரியர்.

அஸ்தினபுரியிலோ அசலையும் பானுமதியும் பேசிக்கொண்டிருக்கும்போது அசலை போரை தவிர்க்க விரும்புகிறாள்.பானுமதியோசிவந்த முகத்துடன் “அன்று நிகழ்ந்த அவைச்சிறுமையில் நீ என்னவாக இருந்தாய்?” என்றாள். அசலை “நான்…” என்றாள். “சொல்லடி, நீ என்னவாக இருந்தாய்?” அசலை “நான் திரௌபதியாக அவைநடுவே நின்று சிறுத்தேன். அவள் அனல்கொண்டு எழுந்தபோது நானும் உடன்கனன்றேன்” என்றாள். “ஆம், நீயும் நானும் அங்கிருந்த அத்தனை பெண்களும் அவ்வாறே அன்று எரிந்தோம். அந்த வஞ்சினம் அவள் உரைத்ததா என்ன? நானும் நீயும் உரைத்தது, பாரதவர்ஷத்து மகளிர் அனைவரும் அதை ஒருகணமேனும் தாங்களும் சொல்லியிருப்பார்கள். அது தோற்கலாகாது” என்றாள் பானுமதி.இங்கே ஆசிரியர் துலா முள்ளென நின்று எழுதுகிறார்.”பெண்பழி நிகர் செய்யப்படவேண்டும். அது தோற்றதென்றால் விண்ணமைந்த மூதன்னையர் சீற்றம்கொள்வார்கள். நம் கொடிவழிகளென எழுந்துவரும் பெண்கள் பழிதூற்றுவார்கள்” என்றாள் பானுமதி.

“அந்தக் குருதிசொட்டும் ஐம்புரிக் குழலை நான் முதல்முறை கனவில் கண்டது அவையில் குலச்சிறுமை நிகழ்ந்த அந்நாள் இரவில். எழுந்தமர்ந்து நெஞ்சைப் பற்றிக்கொண்டு விழிநீர் உகுத்தேன். அந்நாளுக்குப் பின் நான் அவர் என்னைத் தொட ஒப்பியதில்லை. பதினெட்டாம் நாள் என் மஞ்சத்தறைக்கு வந்தார். உள்ளே அழைத்து நான் சொன்னேன். என்னை தொடுக, ஆனால் என்னுள் ஐங்குழல் விரித்து அவள்தான் இருப்பாள் என்று. அஞ்சியவர்போல பின்னடைந்தார். ஒரு சொல் இன்றி என்னை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் திரும்பிச்சென்றார். அதன்பின் இன்றுவரை நாங்கள் விழிநோக்கிக்கொண்டதில்லை” என்று பானுமதி சொன்னாள்
“என்னை இளையவர் அந்நாளுக்குப்பின் அணுகியதே இல்லை” என்றாள் அசலை. “நானும் அதை விரும்பவில்லை என்பதனால் அவரை தேடிச் சென்றதுமில்லை. பதினான்காண்டுகளில் இருமுறை அவையில் அருகே நின்றிருக்கிறேன். ஒருமுறைகூட முகம்நோக்கவோ சொல்லாடவோ செய்யவில்லை.” தலையை அசைத்து எண்ணங்களை கலைத்தபின் “நான் சேடியர் வழியாக உசாவினேன். அவர் அதன்பின் எந்தப் பெண்ணையும் அணுகவில்லை. அவருக்கு பணிசெய்யும் பெண்களையும் விலக்கிவிட்டார். பெண்களை விழிநோக்கவே அவரால் இயலவில்லை என்றனர். ஆம், அது அவ்வாறே என நானும் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.

பன்னிரு படைக்களத்தில் நடந்த கொடுஞ்செயலால் பாதிக்கப்பட்ட கௌரவப்பெண்டிர் குருதிச்சாரல் வரை, கொஞ்சமும் வீரியம் குறையாமல் போர் துவங்கும் காலம் வரை போருக்கான அவசியம் என்ன காரணம் என்ன என்று வாசகனுக்கு உரைக்கிறார்.

அன்பிலிருந்து விடுதலை கொள்வதுதான் முதுமையோ?என்ற கேள்வியும் எழுப்புகிறார் ஆசிரியர்.மைந்தர் அனைவரும் களத்தில் இறந்து குவிந்து கிடந்தால்கூட ஒருதுளி விழிநீர் என்னில் எழுமென்று எனக்குத் தோன்றவில்லை. இது என் களமே அல்ல”என்கிறாள் காந்தாரி.மறுநாள் மாமியாரும் மருமகளும் (காந்தாரி,அசலை)
பீஷ்மரை சந்தித்து போரை நிறுத்தக்கோரி மன்றாட செல்கிறார்கள்.பீஷாமரோ தன்னால் ஆகவேண்டியது ஏதுமில்லை என்று கையை விரித்து விடுகிறார்.அதோடு அங்கனின் வலிமையை கொண்டே இந்த போர் துவங்க இருக்கிறது,அங்கன் இல்லையேல் இந்த போர் இல்லை என்று பீஷ்மர் கூறியதும் , சற்றே இந்த கருத்திலிருந்து நாம் மாறுபட்டு கடந்த காலத்தை எண்ணும்போது,ஆம்.கர்ணன் அருகில் இருக்கும் தைரியத்தில்தானே துரியன் பல தவறுகளையும் செய்துவிட்டான்.அதே தெம்பில்தானே போரையும் துவங்குகிறான்.

தனக்கு யார் மீதும் அன்பில்லை என்கிறார் பீஷ்மர்.ஒரு முதுதாதைக்கு இது சாத்தியமா என்று காந்தாரியிடம் வினவுகிறாள் அசலை.இதற்கு காந்தாரி அளிக்கும் சில அனுபவங்களோடு கூடிய பதிலை வாசிக்கும்போது ஆசிரியர் ஒவ்வொரு பாத்திரத்துக்குள்ளும் உட்புகுந்து எவ்வளவு துன்பப்பட்டு எழுதியிருப்பார் என்று திகைக்க வைக்கிறது.

ஆசிரியர் ஜெயமோகன்  கட்டண உரை ஒன்றில் பேசும்போது குறிப்பிடுவார்.”நாம் நல்ல அப்பா அம்மாவாக வாழ்வதற்கு காலமெல்லாம் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டியதாக இருக்கிறது”என்று.போலவே பீஷ்மரும் தான் ஒரு பிதாமகர் என்று நிருவுவதற்காக காலமெல்லாம் உழைத்துக்கொண்டே இருக்கிறார்.

” எந்தப் பேரன்பின் பீடமும் அன்பின்மை எனும் வேலியால் பாதுகாக்கப்பட்டே நிலைகொள்கிறது. அன்பின் எந்த எல்லையையும் இறுதிவரை சென்று தொட்டுப்பார், அப்பால் விரிந்திருக்கும் அன்பின்மையின் பெருவெளி காணக்கிடைக்கும். அதுவே மெய்மை. அவர் அங்கிருக்கிறார்” என்றாள் காந்தாரி.காந்தாரியை அரண்மனையில் விட்டுவிட்டு தான் மட்டும் பீஷ்மரைத்தேடி செல்கிறாள் அசலை.அங்கு இருவருக்கும் நடக்கும் வாக்குவாதம் வாசிப்புப் பேரின்பம்.பீஷ்மரும் மெல்ல கனிந்து அவையை கூட்ட ஆனணயிடுகிறார்.

துரோணர், கிருபர், மற்றும் விதுரர் ஆகியோரிடம் போர் தவிர்க்க வேண்டி பேசச்செல்கிறார்கள் அசலையும் காந்தாரியும்.”எப்போதுமே விதுரரை நான் விரும்பியதில்லை. எங்கோ உள ஆழத்தில் அவரும் என்னை வெறுக்கிறார் என்று அறிவேன். எங்கள் இருவருக்கும் தலைவர் ஒருவர் என்பதால்…”என்கிறாள் காந்தாரி.இங்கே பெரிய உள ஆராய்ச்சியை போகிறபோக்கில் தெரிவித்து செல்கிறார் ஆசிரியர்.

“குடிக்கும் மண்ணுக்கும் நெறிக்கும் சொல்லுக்கும் மேலானது வேதக்கடன்” என்கிறார் துரோணர்.”வேதம் வகுத்த வழியில் எனில் அந்தணர் அரசாள்வதெப்படி, ஆசிரியரே?” என்று கேட்ட அசலை”வேதம் அந்தணருக்கு வேள்வியையும் ஊழ்கத்தையும் மட்டுமே அறிவுறுத்தியது. இரந்துண்ணுதலும் துறந்து மீளுதலுமின்றி பிறிதொரு வாழ்வையே அவர்களுக்கு அது வகுக்கவில்லை. வில்லேந்தி போரிடுவதோ மண்வென்று முடிசூடுவதோ அவர்களுக்கு உகந்ததல்ல. வேதமறுப்பென்றால் அதன் முதன்மை பழி உங்களுக்கே அமையும்” என்றாள் அசலை.துரோணர் கோபப்படுகிறார்.அசலை கனியச்செய்கிறாள்.போர் தவிர்க்க தானும் ஒப்புகிறார்.

பேரரசரை சந்தித்து போரை நிறுத்த மன்றாடி வரலாம் என்று காந்தாரியை மீண்டும் சந்திக்க வருகிறாள் அசலை.ஒன்பது அரசியருடன் இருந்த பேரரசியிடம் தான் கண்ட துர்கனவுகளை சொல்லி துயர் கொண்டபோது சத்யசேனையின் ஒரு கேள்விக்கு அசலை கூறியதாவது:

“பெண்கள் கொழுநரை சற்றேனும் வெறுக்காமலிருக்க முடியாது, அரசி” என்றாள் அசலை. “ஏனென்றால் பெண்களின் முற்றுவகை முதிரா இளமையில் மட்டுமே. இளமையை இழப்பதே அவர்களின் துயர். அத்துயரின் விழிதொடு வடிவென இருப்பவர் கொழுநர்.”என்கிற ஆச்சர்யமூட்டும் வரிகளை இயல்பாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர்.

அசலை திருதராஷ்டிரரை காணசெல்கிறாள்.போரை நிறுத்த சொல்லி முறையிடுகிறாள்.திருதராஷ்டிரர் செவிகொள்ள மறுக்கிறார்.அசலையை வெளியேறச் சொல்லி ஆணையிடுகிறார்.அரண்மனை அதிரும்படி கூச்சலிடுகிறார்.அவளை வெளியே தூக்கி வீசச்சொல்லி சங்குலனை பணிக்கிறார்.பேரரசரின் பேருடல் அளவுக்கே ஆகிருதி கொண்ட சங்குலன் அசலை பேசுவதில் நியாயமிருப்பதாக எண்ணி திருதாவின் ஆணையை தவிர்க்கிறான்.அரசரோ அசலையை பேசவிடாது தொடர்ந்து கூச்சலிடுகிறார்.

விருட்டென எழுந்து வந்த சங்குலன் திருதராஷ்டிரரை பேரன்போடு மின்னல் வேகத்தில் தாக்கி இடுப்பில் உதைத்து கையை முறுக்கி அமைதியாக அமரும்படி கத்துகிறான்.திருதா அமைதியாக செவிகொள்ள சம்மதிக்கிறார்.
இதை வாசிக்கும் போது இரு கைகளையும் வானோக்கி ஏந்தி “இறைவா”என்று இறைஞ்ச தோன்றுகிறது.இசை நுணுக்கங்களளை அறிந்தவர்களும் அனுபவிப்பவர்களும் சட்டென நெகிழும் தன்மை கொண்டவர்கள் போலும்.

வெண்முரசு பாத்திரங்களில் திருதராஷ்டிரர் மட்டுமே மிகுந்த அனுதாபத்துக்குறியவராக படைக்கப்பட்டிருக்கிறார்.கர்ணன் கூட இரண்டாம் நிலைதான்.

குருஷேத்ர களம் காவு கேட்கிறது.
ஊழ் காவு தர சம்மதிக்கிறது.
சம காலத்திலும் அதுதானே நடக்கிறது.
ஊழை வென்றவர் யார்?

அன்புடன்
மூர்த்தி விஸ்வநாதன்
வாழப்பாடி.

முந்தைய கட்டுரைஇலக்கியம், காமம்
அடுத்த கட்டுரைதக்காணத்தின் காதலன்