அன்புள்ள ஜெ,
நான் 25 வயது நிரம்பியவள். உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது.
தொடர்ந்து பண்டிகை காலம் வந்த வண்ணம் இருந்தது. வீட்டில் முதியவர்கள் இருக்க அவர்கள் சொல்கின்ற படி தெய்வத்திற்கு படைக்க வேண்டும் என சொல்லிச் சொல்லி சில ஆண்டுகளாக வெறுப்புணர்ச்சி வந்தது போல் தோன்றுகிறது.
இன்று உங்கள் பேச்சை கேட்டேன் bhimbetka குகை ஓவியங்கள் கொண்டு முருகு வேலன் கேரளத்தில் நீங்கள் கண்ட வெறியாட்டம் என்றெல்லாம் கேட்ட பிறகு எனக்கு சில சந்தேகங்கள் தோன்றியது.
வீடுகளில் தற்போது வழிபடும் முறை தொடர வேண்டுமா? சடங்குகள் என நம் வீட்டில் ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் இப்படி கும்பிட வேண்டும் என்று சொல்வதை ‘இது நம் பழக்கவழக்கங்கள் பண்பாட்டுக்கூறாக காட்டப்படும் எதிர்காலத்தில்’ என தொடர வேண்டுமா? கலை அது இவை வேறு என விட்டுவிட வேண்டுமா? எந்த கண்ணோட்டத்தில் காண வேண்டும் இந்த வழிபாடுகளை.
குழப்பமாக உள்ளது. தெளிவுபெற உங்கள் பதிலை எதிர்பார்கிறேன். நன்றி.
இப்படிக்கு,
ஜீ.
அன்புள்ள ஜீ,
சடங்குகள் இல்லாமல் வாழ முடியாது. அண்மைக்காலமாக பிறந்தநாள் கொண்டாடுகிறோம். பகுத்தறிவுப்பார்வையில் அது என்ன? ஒருவர் தான் பிறந்த நாளை ஒரு சிறப்புநாளாக கருதுவதற்கு என்ன தர்க்கம் இருக்கமுடியும்? ஒரு வீடு கட்டுகிறோம். அதில் முதன்முதலாக குடிபுகுவது கொண்டாட்டமாக ஆவதில் என்ன பொருளிருக்கமுடியும்? பொருள் உண்டு. நாம் அளிக்கும் பொருள்.
அதேபோலத்தான் நீத்தவர்களுக்குப் படைப்பது. அன்றொருநாள் அவர்களை, அவர்களின் சுவைகளை எண்ணிக்கொள்கிறோம். தெய்வத்திற்கு படைப்பதும் அவ்வாறே. அது ஒரு நம்பிக்கை சார்ந்த சடங்கு. அதை அர்த்தமாக்கிக் கொள்வது நம் மனநிலை மட்டுமே. அந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கு ஒரு சாதகமான சிறு முயற்சி போதும்.
இல்லத்தில் நிகழும் இத்தகைய சடங்குகள், வழிபாடுகளில் முதன்மையாகக் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் பார்வையில் வீடு என்பது ஒரு சலிப்பூட்டும் அன்றாடச் செயல்சுழற்சி மட்டுமே. அதில் இப்படி எந்த ஒரு தனிநிகழ்வு நிகழ்ந்தாலும் அவை மகிழ்கின்றன. அவற்றின் நினைவில் நீடிப்பவையும் பண்டிகைகள், கொண்டாட்டங்கள், பூசைகள் போன்ற தனிநிகழ்வுகளே. அந்த மகிழ்ச்சியை மறுக்க நமக்கு உரிமை இல்லை.
ஒரு வீடு என்பது சிலர் தங்கியிருக்கும் ஒரு கட்டிடம் மட்டுமே. அதை அங்கே நிகழும் சடங்குகள், பண்டிகைகள், பூசைகள் போன்றவை நமக்கு அணுக்கமாக்குகின்றன. எந்த ஒரு நல்லச் சடங்கும் ஓர் இடத்தை அழகும் மங்கலமும் கொண்டதாக ஆக்குகிறது.
ஆனால் அக்கொண்டாட்டங்களை அத்தகைய நேர்நிலை ஊக்கத்துடன் மட்டுமே செய்யவேண்டும். அதையே ஒரு கெடுபிடியாக ஆக்கி, பதற்றப்பட்டு, அவஸ்தைப்பட்டு, பிறரையும் துன்புறுத்துவோர் உண்டு. அது அபத்தம்.
ஒரு வரி சொல்கிறேன். தர்க்க அறிவு, ஆய்வு அறிவு அடிப்படையில் மகிழ்ச்சிக்கு எதிரானது.
ஜெ