தஸ்தயேவ்ஸ்கி, கிறிஸ்து, ஆன்மிகம்…

ஜெ,

வாழ்நாள் முழுக்க என்னை நானே முழுதளிக்க விரும்பிய எழுத்தாளர் தஸ்தாவஸ்கி. அவரது புனைவுகளை வாசிப்பது என்பது ஒருவிதத்தில் அவரையே வாசிப்பதாக இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மெல்ல மெல்ல ஒவ்வொரு படைப்பாக அவரை வாசித்து வந்திருக்கிறேன்.

அவர் மீதான வாசிப்பு கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இருந்து ஆரம்பித்தது. மிக நெருக்கமாக அருகில் செல்லவும் முடியாமல், வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு விலகிப் போகவும் முடியாமல் அவரை வேண்டும் வேண்டாம் என்ற இரட்டை மனநிலையில் சில வருடங்கள் வைத்திருந்தேன். இருப்பினும் பாதம் அமர்ந்து கல்வி கற்ற மானசீக ஆசிரியன் அவர். திடீர் என்று தன் வெறுப்பு முழுவதையும் தன் மாணவன் மீது திருப்பியவர் போன்று தஸ்தாவஸ்கியை ஒரு காலகட்டத்தில் உணர்ந்தேன். இனி இவர் வேண்டாம் என்றிருந்தேன். கடைசியாக வாசிக்காமல் மிச்சம் இருந்தது அவரது The Devils நாவல் மட்டும்தான். இதை வாசிக்காமல் விட்டால் இழப்பு ஒன்றும் இல்லையே என்று இந்த ஒரு நாவலை மட்டும் கிடப்பில் வைத்திருந்தேன்.

நல்லவேளையாக பி.கே.பாலகிருஷ்ணனின் நாவலென்னும் கலை நிகழ்வு பெரும் இழப்பை தடுத்து நிறுத்தி விட்டது. பெருங்காதலுடன் பி.கே.பாலகிருஷ்ணனை வாங்கி வாசித்தேன். நூலின் பெரும்பகுதி தஸ்தாவஸ்கி என்ற ஒருவரைப் பற்றி மட்டுமே இருப்பின் எப்படி இதை வாசிக்காமல் இருந்துவிட முடியும்! நூலை வாசித்து முடித்த பின்பு வேண்டாம் என்று வெகு தூரம் விலகிவந்த மானசீக ஆசிரியனிடம் என் கைப்பிடித்து அழைத்து வந்து மீண்டும் அதே ஆசிரியனின் பாதங்களில் அமர வைத்துவிட்டார் PKB. ஜேன் ஆஸ்டன், தாராசங்கர் பற்றி பேசும்போது மிகச்சிறந்த இலக்கிய (textual) விமர்சனமாக உணரப்பட்ட நாவலென்னும் கலை நிகழ்வு தஸ்தாவஸ்கியிடம் வரும்போது புத்தகத்தில் இருந்த விமர்சகன் உயிரடைந்து சன்னதம் கொண்ட பித்தனாக உருமாற்றம் அடைவதை கண்டு பிரமித்து போனேன்.

அதுவரை பிரதியைப் பற்றி பேசி வந்தவர் தீடீர் என்று படைப்பாளியைப் பற்றி பேச ஆரம்பித்தது வியப்பாக இருந்தது. ஆம் அது ஒரு சன்னதக்குரல்தான். தஸ்தாவஸ்கி என்னும் உன்னதக் கலைஞன் மீதான  சன்னதமுரைத்தல். அக்குரல் நான் மிச்சம் விட்டு வைத்த அந்தக் கடைசி நாவலையும் வாசித்து விட வேண்டும் என்று தீர்மானம் கொள்ளச் செய்தது. David Magarshack இல்லாத தஸ்தாவஸ்கியா! தற்போது Magarshack மொழிபெயர்ப்புகள் முற்றிலுமாக அச்சில் இல்லாமல் போய்விட்டன. Onlineல் பழைய பிரதிகளின் விலை எக்கச்சக்கம்.  இங்கிலாந்தில் Ph.D ஆய்வு செய்து வரும் நண்பரிடம் சென்னை வரும்போது Magarshackன் The Devils வாங்கி வரும்படி சொல்லி வைத்தேன்.

பிரதி வந்துசேரும் இந்த இடைப்பட்ட காலத்தில் Constance Garnettன் The Devils போதுமானதாக இருந்தது. வாசிக்க ஆரம்பித்த போது ஆவேசம் கொண்ட மற்றுமொரு சன்னதக் குரலாகப் பட்டது The Devils. படைப்பாளி ஒருவன் சீற்றத்தின் உச்சத்தில் அகங்காரம் கொண்டு அரசியல் வசைபாடல் ஒன்றை நிகழ்த்திய ரஷ்யாவின் சன்னதக் குரல் அது. இல்லை, இல்லை, கணக்கில் அடங்காத பேய்களை அந்த ரஷ்யாவை விட்டு எங்காவது பன்றிகளுக்குள் செல்லுங்கள் என்று கூறிய தேவ மைந்தனின் எதிரொலிக் குரல்.

And at once Jesus gave them permission. Then the unclean spirits went out and entered the swine (there were about two thousand); and the herd ran violently down the steep place into the sea, and drowned in the sea.

The Devils வாசித்து முடித்தக் கையோடு பின்தொடரும் நிழலின் குரல் வாசிக்க ஆரம்பித்தால் மிகச்சரியாக இருக்கும் என நினைத்தேன். பின்தொடரும் நிழலின் குரலின் விஷ்ணுபுரம் பதிப்பை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது வாங்கியே ஆகவேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டே இருக்கிறது. முதலில் தஸ்தாவகியின் உக்கிரமான அந்த சன்னதக்குரல் என் மனதில் இருந்து அடங்கட்டும் என்று காத்திருக்கிறேன்.

அன்புடன்

இரா. அருள்

நாவலெனும் கலைநிகழ்வு வாங்க

நாவலெனுக் கலைநிகழ்வு மின்னூல் வாங்க

அன்புள்ள அருள்,

எனக்கு தஸ்தயேவ்ஸ்கி பற்றிய ஆர்வத்தை ஊட்டியவர் பி.கே.பாலகிருஷ்ணன்தான். தமிழில் நான் எழுதவந்த 1986 வாக்கில் தஸ்தயேவ்ஸ்கி பற்றிய பேச்சு எங்குமிருக்கவில்லை. தமிழில் நான் வாசித்தவரை  தஸ்தய்வேவ்ஸ்கி பற்றிய எந்த விரிவான கட்டுரையோ குறிப்போ தென்படவில்லை. நான் தஸ்தயேவ்ஸ்கியை வாசித்த முன்னோடிகள் எவரையுமே தமிழகத்தில் சந்திக்கவுமில்லை.

மாறாக தல்ஸ்தோய் இங்கே மார்க்ஸியர் அல்லாதவர்களால் ஐம்பது அறுபதுகளில் விரிவாக வாசிக்கப்பட்டிருந்தார். காரணம் அவர் காந்தியுடன் இணைத்து அடையாளப்படுத்தப்பட்டார். நல்லொழுக்கம் போதிப்பவராகவும் மதிப்பிடப்பட்டார். காங்கிரஸ்காரர்களான டி.எஸ். சொக்கலிங்கம், க.சந்தானம் ஆகியோர் அவரை மொழியாக்கம் செய்தனர். ஆனால் எழுபதுகளில் தல்ஸ்தோயும் நவீன இலக்கியச் சூழலில் முழுமையாக மறக்கப்பட்டார். அவருடைய நாவல்கள் எவையும் இருபத்தைந்தாண்டுகளாக மறுபதிப்பாகவே இல்லை.

காரணம், அப்போது இங்கே மூன்று பார்வைகள் வழியாகவே மேலை இலக்கியம் அணுகப்பட்டது. ஒன்று, க.நா.சு மொழியாக்கம் செய்த  அன்புவழி, மதகுரு போன்ற ஐரோப்பிய நவீனச் செவ்வியல் நாவல்கள் வழியாக. இன்னொன்று, சுந்தர ராமசாமி முன்வைத்த காஃப்கா, காம்யூ போன்ற இருத்தலியல் – நவீனத்துவ எழுத்தாளர்கள் வழியாக. மூன்று, பின்நவீனத்துவச் சிந்தனைகளை பேசிய சாரு நிவேதிதா, ரமேஷ் பிரேதன், நாகார்ஜுனன் போன்றவர்கள் முன்வைத்த லத்தீன் அமெரிக்க எழுத்து வழியாக.

தஸ்தயேவ்ஸ்கியைப் பேசுபவனாக நான் இலக்கியத்துக்குள் அறிமுகமானேன். அவரைப்பற்றி நான் மட்டுமே ஒருவகை ஜ்வரவேகத்துடன் தமிழில் அன்று பேசிக்கொண்டிருந்தேன். ஏனென்றால் அவர் பேசிய ஆன்மிகம், மதம், அறம் ஆகிய பேசுபொருட்கள் எனக்கு முக்கியமானவை. என் தலைமுறையைச் சேர்ந்த பிறருக்கு அன்று அவை எந்த வகையிலும் ஆர்வமூட்டுவனவாக இருக்கவில்லை. அன்று முற்போக்கு பார்வை, அல்லது இருத்தலியல் பார்வை என இரண்டு கோணங்களே நவீனத் தமிழிலக்கியத்தில் இருந்தன. நான் சம்பந்தமே அற்ற தேடல்கொண்டவனாக கருதப்பட்டேன். இன்றும்கூட என் தேடலைப் பகிர்ந்துகொள்ளும் இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் காணவில்லை.

தல்ஸ்தோய், தஸ்தய்வேவ்ஸ்கியுடன் ஹெர்மன் ஹெஸ், நிகாஸ் கஸண்ட்ஸகீஸ், தாமஸ் மன் போன்றவர்களைப் பற்றி தொடர்ச்சியாக உரையாடினேன். அவர்களைப் பற்றி கட்டுரைகளும் எழுதினேன். கதைகளை மொழியாக்கமும் செய்துள்ளேன். அவர்கள் அனைவரிலும் நான் கண்ட பொதுக்கூறு ஆன்மிகம் மதம் சார்ந்த தத்துவநோக்குதான். அந்த தேடலில்லாதவர்களால் அவர்களை உள்வாங்கிக் கொள்ள முடியாதென்றே நினைக்கிறேன். அவர்கள் எளிய உளவியலம்சங்கள் சிலவற்றை மட்டுமே அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்.

தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் உள்ளிட்ட சிறுகதைகளின் ஒரு தொகுதி மட்டுமே அன்று தமிழில் கிடைத்தது. அவரது ஆங்கில மொழியாக்க நாவல்களும் அன்று ராதுகா பதிப்பகத்தில்கூட வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆகவே அவர் பற்றிய வாசிப்பு நிகழவில்லை. எழுபதுகளின் இறுதிவரை தஸ்தயேவ்ஸ்கி ‘கேடுகெட்ட மேதை’ என ரஷ்யாவாலும் அதை ஆதரித்த இடதுசாரிகளாலும் கருதப்பட்டார்.

ரஷ்யாவால் முன்வைக்கப்பட்டவர்கள் மக்ஸீம் கார்க்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ், மிகயீல் ஷோலகோவ், அலெக்ஸி டால்ஸ்டாய், லிர்மன்தேவ், நிகலாய் ஒஸ்திராவ்ஸ்கி போன்றவர்கள். அவர்கள் இங்கே மிகவிரிவாக வாசிக்கப்பட்டனர். எண்பதுகளின் தொடக்கத்திலேயே ருஷ்யாவில் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் ‘மறுவாசிப்பு’ செய்யப்பட்டு மீட்படைந்தனர். அவர்கள் ‘மனிதாபிமான’ எழுத்தாளர்கள் என வரையறை செய்யப்பட்டு வெளியிடப்பட்டனர். ஆகவே இங்கே ரஷ்ய இலக்கிய ஆர்வலர்கள் தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்காதது மட்டுமல்ல, அவர் மதம் சார்ந்த பிற்போக்கு நோக்கு கொண்டவர் என்றும் மதிப்பிட்டிருந்தனர். நான் அந்த மதிப்பீடுகளுடன் கடுமையாக விவாதித்து வந்தேன்.

பின்னர் தஸ்தயேவ்ஸ்கி மேல் ஒரு கவனம் உருவாகக் காரணம் கோணங்கி வெளியிட்ட தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ். அது வெளியாகக் காரணம், அன்று கிளாஸ்நோஸ்த் போன்ற ‘பனியுருகல்கள்’ நிகழ்ந்து இடதுசாரிக் கட்சிகளுக்குள் உருவான மெல்லிய நெகிழ்வு. இலக்கியம் நோக்கிய நகர்வு. (ஆனால் அது நீடிக்கவில்லை).

ஆனால் அந்த மலரில் சுந்தர ராமசாமி உள்ளிட்டவர்கள் எழுதிய கட்டுரைகள் அவர்கள் தஸ்தயேவ்ஸ்கியில் இருந்து தனிப்பட்ட முறையில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டின. ’அகஇருளை ஊடுருவும் மனிதபிமானி’ என்னும் எளிமையான ருஷ்ய முற்போக்கு பார்வையையே பெரும்பாலானவர்கள் முன்வைத்தனர். ஆனால் தஸ்தயேவ்ஸ்கியை அடுத்த தலைமுறையினர் வாசிக்கலாயினர்.

பின்தொடரும் நிழலின் குரல் – புதிய பதிப்பு

பின் தொடரும் நிழலின் குரல்- மின்னூல்

தஸ்தயேவ்ஸ்கியின் தேடல் அடிப்படையில் ஒரு நவகிறிஸ்துவுக்கானது. கிறிஸ்தவத்தின் மானுடம்தழுவிய கனவை மட்டுமே பிரித்து எடுத்துக்கொள்வதற்கான யத்தனம் அது. அந்த மனநிலையில்தான் பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் கினியாழ்வின் எழுதிய கதை, மனிதர்களும் புனிதர்களும் உள்ளிட்ட பகுதிகளை வாசிக்க முடியும். வாசியுங்கள். தமிழில் தஸ்தாயெவ்ஸ்கிய உளநிலைகள் கொண்ட ஒரே இலக்கியப்படைப்பும் பின்தொடரும் நிழலின் குரல்தான். வெண்கலக் குதிரைவீரன் போன்ற உருவகங்களை அவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும்

*

ஓர் ஆசிரியனின் ‘விளிம்புநிலை’ நூல்கள் சில உண்டு. மையமாகக் கவனிக்கப்படும் படைப்புகளில் அவை அமையாது. The Devils, நிலவறைக் குறிப்புகள் போன்றவை அத்தகையவை. அவை ஏன் முக்கியம் என்றால் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன

. அழகியல் விமர்சகர்கள் அத்தகைய படைப்புகளில் அந்த ஆசிரியன் தன் காலகட்டத்துடன் சரிவர உரையாடமுடியாமலானதனால் முழுமையடையாமல் போய்விட்ட படைப்புகள் அவை என்பார்கள். எந்நிலையிலும் இலக்கியமென்பது உரையாடல்தான். சமகாலச் சிந்தனையுடன் உரையாடும்போதே இலக்கிய ஆசிரியனின் அகத்தே இருக்கும் கரு முழுமையாக வளர்ந்து வெளிப்படுகிறது. விவாதத்தன்மை கொண்டு வடிவமுழுமை அடைகிறது.

அந்த உரையாடல் சிலசமயம் நடைபெறுவதில்லை. காரணம், அந்த ஆசிரியனின் மனதில் உள்ள அக்கருவுக்கு அவர் வாழும் காலகட்ட அறிவுச்சூழலுக்கு பொருத்தப்பாடு இருக்காது. அந்த அறிவுச்சூழலின் தேடலும், விவாதமும் வேறு திசை சார்ந்ததாக இருக்கும்.

. பின் நவீனத்துவ விமர்சகர்கள் முழுமையான படைப்பு அந்த ஆசிரியனால் முழுமையாக ‘கட்டி’ அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். அங்கே ஆசிரியன் தன் புனைவாளுமையை முழுமையாக கட்டி முன்வைத்திருப்பான். அந்தக் கட்டுமானம் பிழையற்றதாக அமையும்தோறும் ஆசிரியனை வாசகன் நம்பி ஏற்றேயாகவேண்டிய கட்டாயம் உருவாகிறது. ஆனால்  முழுமையடையாத படைப்பிலேயே வாசகன் ஆசிரியனை ‘கண்டடையும்’ விரிசல்கள் உள்ளன. ஆசிரியன் கைத்தவறுதலாக விட்டுவிட்ட இடைவெளிகள் அவை. அவற்றை வாசகன் கண்டடைந்து உள்நுழைந்துவிட முடியும்.

’முக்கியமற்ற’ படைப்புகள் பின்னாளில் வேறொரு சூழலில் வாசகர்களால் மீள்கண்டடைவு செய்யப்பட்டுள்ளன. நிலவறைக் குறிப்புகள் பின்நவீனத்துவச் சூழலில் மறுபடியும் பேசப்பட்டது. ஹெர்மன் ஹெஸியின் ஸ்டெபன் வுல்ப் அவ்வாறு ஹிப்பிகளால் மறுவாசிப்புக்கு உரியதாகியது. ஓர் இலக்கியப்படைப்பு அப்படைப்பாளியை மீறி நிகழுமென்றால் அது முக்கியமற்றதாக ஆகவே முடியாது. அவனுடைய பிழைகளும்கூட முக்கியமானவைதான்.

*

ஆனால் நான் அண்மையில் தஸ்தயேவ்ஸ்கி மேல் ஆர்வமிழந்துவிட்டேன். நீண்ட இடைவேளைக்குப் பின் இடியட் வாசித்தேன். ஏன் எல்லா கதைமாந்தரும் நரம்புநோயாளிகளின் இயல்புகொண்டிருக்கிறார்கள், ஏன் ஒவ்வொரு மானுடரிலும் உள்ள கோணல்கள் மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றன என்னும் எண்ணம் உருவானது, இருநூறு பக்கங்களுக்குப் பின் வாசிப்பை தொடரமுடியவில்லை. அது தஸ்தயேவ்ஸ்கியின் பிரச்சினை அல்ல. நான் என் சிந்தனை, என் உள்ளுணர்வு வழியாக வேறு திசைநோக்கி நகர்ந்துவிட்டேன்

ஜெ  

முந்தைய கட்டுரைமறுமலர்ச்சி
அடுத்த கட்டுரைகாந்தியை அறிமுகம் செய்தல் – நா.மெய்யப்பன்