வைணவ இலக்கியம் – கடிதம்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

திவ்ய பிரபந்த வகுப்பு நிறைந்து (10/12/2023) பத்திரமாக வீடடைந்தோம்.

“பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப்பேடே சகலகலாவல்லியே!” (குமரகுருபரர் வாணி தேவிக்கு அருளிய திருப்பாடல்)

எனும் படி பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் எஙகள்பால் பொருந்தும்படி ஆக்கித்தந்த வெள்ளிமலை திவ்ய பிரபந்தம் 4000 வகுப்பிற்கே நன்றிகள்.

சுவராசியச் சேர்க்கை நிறைந்த பேச்சுக்கருத்தரங்குகள் தமிழகத்தில் நிறைய நிகழ்த்தப் பெறுகின்றன.ஆனால் உணர்ச்சி கடந்த உணர்வு நிலைக் கருத்துக்களை உள்விதைத்து அவை உள்ளூரும் வண்ணம் தெளிவுரை வழங்கி மனதில் ஆழப்பதிக்கும் வகுப்பாக திவ்ய பிரபந்த வகுப்பு அமைந்தது.

இந்நெறியியலை ஜெயமோகனார் உள்ளதன் நுணுக்கமாக கட்டமைத்து வழங்கியுள்ளார். இது பயன்பாடு மிக்க முறை. இன்னும் வளர‌வளர இது செறிவூட்டம் நிறைந்த இயக்கமாக மாறும். அந்த இயக்கம் அறிதலும் தெரிதலும் புரிதலும் நிறைந்த ஒரு சமூகம் உருவாதலில் பெரும்பங்கு வகிக்கும்.

பாரதியின் பாஞ்சாலிசபத்தில் வாணி தேவியிடம் வணங்கி வேண்டுவதான ஒருபாடல் உண்டு

தெளிவுறவே அறிந்திடுதல்,  தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப பார்க்கே

களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல  காட்டல் கண்ணீர்த்

துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம்  நீஅருளும் தொழில்க ளன்றோ?

ஒளிவளருந் தமிழ்வாணீ, அடியனேற்  கிவையனைத்தும் உதவு வாயே.

இது  திவ்யபிரபந்த வகுப்பில் ராஜகோபாலன் அவர்களால் கிடைக்கப்பெற்றது.

இடையிடையே பங்கேற்பாளர்களாகிய எங்களுக்கு நிறைய இடம் தந்தார். ஆதலின் வகுப்பு நீண்டது. அதுவும் நாங்கள் பெற்ற பேறே. நிறைய நிறையப் பெற்றோம் அது அயர்வு அல உயர்வு.

வைணவ வகுப்பில் சைவசித்தாந்தத்திற்கும் இடமளித்ததுபுரிதல் நிலையில் மேலோங்க வாய்ப்பளித்தது.சைவ திருமுறையும் சிவஞானபோதமும் இங்கு நடைபெற்றால் நலமாக இருக்கும் என்ற வேட்கையையும் வேண்டுகோளையும் ஜெயமோகன் அவர்களிடம் இவ்வேளையில் வைத்துவிடுகிறேன்.

செறிவெனப்படுவது நெகிழிசை இன்மை

சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம்

இவை தண்டியலங்கார இலக்கணம். அது போன்றே தத்துவச் செறிவும் ஆழ்வார் அருளிச் செயல்களின் சொற்களையும் பொருள்களையும் சுவைபட வாய்த்தது பெரும் பயனுற்றோம்.

உண்ணும் சோறு பருகும்நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்

கண்ணன் என்று சூக்குமமாய் அமைத்தளித்த இராஜகோபலனாரின் வகுப்பும்

சோறு , நீர், வெற்றிலை, ஈரச்சொல் என்று தூலமாய்த் தந்த அந்தியூர் மணி அவர்களின் பேணலும்

நிறைவாய் அமைந்தன.

சாற்று முறையில் திவ்ய பிரபந்த பாடல்களை மூலமுறை மாறாது மாலோலன் அவர்கள் ஓதி மனம் ஒருப்படச் செய்தார் தமிழ் மரபுச் செய்யுள்களை ஓசை இலக்கண முறையில் பாடும் அல்லது படிக்கும் முறை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்ற‌ எண்ணம் எழுந்தது.

அறிவார்ந்த நண்பர்கள் கூட்டம் அமைந்தது. நெஞ்சுக்கு இனியார்களாக அமைந்தனர். அவர்களின் நெடிய நட்பிற்கு இடமாய் அமைந்த வெள்ளிமலை வணங்குதற்குரியது.

ஜெயமோகன் அவர்களின் விதைகள் வளரத் தொடங்கியது. விளைவுகள் பல நலஙகளைக் கொண்டு வரும். ஒரு வலுவான சிந்தையோர் மரபு உருவாகும். வாய்த்தது நந்தமக்கு ஈதோர் வாய்ப்பு மதித்திடுகிறேன்.

எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் நெகிழ்ந்த நன்றியும் மகிழ்ந்த வணக்கமும்

– பேரா. கா. திருநாவுக்கரசு.

பேரூர் தமிழ்க்கல்லூரி, கோவை

ன்புள்ள திருநாவுக்கரசு அவர்களுக்கு,

சைவத் திருமுறை வகுப்புகளும் நிகழ்த்தவேண்டுமென்னும் எண்ணம் உண்டு. தகுந்தவர் அமையவேண்டுமென காத்திருந்தேன். சைவம் அல்லது வைணவம் அல்லது எந்த மதமாயினும் உள்ள முதன்மைச்சிக்கல் இன்றைய காலகட்டத்திற்குரிய ஆசிரியர், அறிவுச்சூழலுக்குரிய ஆசிரியர் அமைவது மிகக்கடினம் என்பதே.

ஒன்று மிகப்பழமையான மனநிலை கொண்டவர்ர்களாக இருக்கிறார்கள். தத்துவம், கவித்துவம், ஆன்மிகம் ஆகியவற்றைவிட நம்பிக்கை, ஆசாரங்கள் ஆகியவற்றை வலியுறுத்துகிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு ஒவ்வாமையை உருவாக்குகிறார்கள். அல்லது, எல்லாவற்றையும் அரசியலாக்குகிறார்கள். இவர்கள்  ஏதாவது ஒரு தரப்பின்மீதான கடும் காழ்ப்பையே கொள்கையாகவோ, தத்துவமாகவோ அள்ளிவைக்கிறார்கள்.கல்வி வழியாக எதிர்மறை மனநிலையை அடைவதென்பது ஓர் அறிவுத்தற்கொலை.

அவ்விரு கூறுகளும் இல்லாதவர்கள் மட்டுமே இன்றைய உள்ளத்துடன் உரையாட முடியும். அவர்கள் நவீன இலக்கிய அறிமுகம் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும். அவ்வண்ணம் ஒருவர் அமைந்ததும் சைவ ஆகமப்பயிற்சி நிகழும்

ஜெ

முந்தைய கட்டுரையானம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமா. சுப்பிரமணியம்