வணக்கம் ஜெ
ஆலம் வாசிக்கையில் சக மனிதர்களுக்குள் இத்தனை துவேஷம் வெறுப்பு இருக்க முடியுமா என்றே முதலில் எண்ணத்தோன்றியது. பல ஆண்டுகள் பல தலைமுறைகள் கடந்தும் வெறி வைரஸ் என பரவுகிறது, குருதி படையல் கேட்கிறது, படைப்பதற்கு பலி தெய்வங்கள் உருவாகி வந்தபடியே உள்ளன.
இன்று சைமன் ரீவ்ஸ்-ன் Wilderness எனும் இயற்கை ஆவணப்படத் தொடர் பார்த்தேன். உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடான காங்கோ காட்டிற்குள் பயணம் செய்கிறார். அங்கு பாகா (Baka) எனும் மக்கள் குழுவை சந்திக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக காட்டினுள்ளேயே வாழ்ந்து வரும் இனம். பழங்கள், தேன், மாமிசம் என உண்டு நான்கைந்து நாட்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்காமல் நகர்ந்தபடி இருக்கும் நாடோடி பழங்குடி மக்கள். குழந்தைகள், பெண்கள் என மொத்தம் கிட்டதட்ட 100 பேர் கொண்ட இனக்குழு. ஆண்கள் உணவு சேகரிக்க வேட்டையாட செல்ல பெண்கள் கூடாரம் பின்னுவது குழந்தை வளர்ப்பு என வாழ்கின்றனர்.
ரீவ்ஸ் அவர்களிடம் இவ்வாறு காட்டில் வாழ்வதில் உங்களுக்கு மிகப்பெரிய சவாலாக எதை எண்ணுகிறீர்கள் என கேட்கிறார். அவர்கள் அதற்கு சொன்ன பதில் என்னை திகைக்க வைத்தது, தலை சுற்றியது.
அவர்கள் இடத்திலிருந்து எவ்வகையிலேனும் ஒரு மருத்துவ வசதி பெற வேண்டுமென்றால் மூன்று நாட்கள் பயணத்தின் பின்பே சென்றடைய முடியும். இவர்கள் மத்தியில் குழந்தை இறப்பு விகிதம் அதிகம். ஆனால் அவர்கள் இதை சவாலாக எண்ணவில்லை. இயற்கை சீற்றங்கள், காடழிப்பு, வனவிலங்கு ஆபத்து, நோய் என நான் நினைத்த எதையும் சொல்லவில்லை.
அவர்கள் மிகப்பெரும் சவாலாக சொன்னது: பன்டு (Bantu) என்ற அண்டை இனக்குழு இவர்களிடம் தொடர்ந்து செய்யும் இனப்போர். தலைமுறைகளாக கொன்றழித்துக்கொண்டிருக்கின்றனர். இரு குழுக்களிலும் பேச்சுவார்தைக்கும் சமாதானத்திற்கும் குரல் எழுந்தபடியே இருந்தும் சண்டைகள் கொலைகள் தொடர்கின்றன.
21ம் நூற்றாண்டிலும் காட்டினுள் இரு இனக்குழுவுக்குள்ளும் சரி வளர்ந்த(?) நாகரீகம் அடைந்த(?) இரு நாடுகளுக்குள்ளும் சரி பகைமை கனலென எரிந்துக்கொண்டேதான் இருக்கிறது.
பாரதம், பைபிள், ஆலம் என தொடரும் சகோதர யுத்தம்.
And the Lord said unto Cain, Where is Abel thy brother? And he said, I know not: Am I my brother’s keeper?
And he said, What hast thou done? the voice of thy brother’s blood crieth unto me from the ground.
ஸ்ரீராம்