நீண்டகாலமாக இலக்கியவிழாக்களுக்குச் செல்வதை தவிர்த்துவந்தேன், முதன்மைக் காரணம் அங்கே நம்மை நாம் ஓர் எழுத்தாளன் என பெயரை முன்வைப்பதைத் தவிர வேறெதையும் செய்யமுடியாது என்பதுதான். 1992ல் இரண்டு இலக்கிய விழாக்களுக்கு ஒரே ஆண்டில் சென்று வந்தபின் அந்த ஏமாற்றம் உறுதியாகியது. ஏராளமான எழுத்தாளர்கள், ஏராளமான சந்திப்புகள், ஏராளமான உரையாடல்கள், ஏராளமான கேள்விபதில்கள், சொற்கள் சொற்கள்…. அதில் நம்மை எவரேனும் கவனிக்கிறார்களா, எவரேனும் நம்மை நினைவில்கொள்வார்களா என்னும் ஐயம் எழுந்து கொண்டே இருக்கும்.
ஆனால் இலக்கியவிழாக்களில் ஆங்கிலத்தில் எழுதும் புகழ்மிக்க முகங்கள் எல்லாமே கலந்துகொள்கின்றன. வில்லியம் டார்லிம்பிள் இல்லாமல் இலக்கியவிழாவையே நடத்திவிடமுடியாது என்று தோன்றும். ராமச்சந்திர குகா, ஜனிஸ் பரியத், அமிஷ் திரிபாதி என பலர் அடிக்கடி தென்படுபவர்கள். காரணம், அவர்களின் பதிப்பகங்களின் கோரிக்கை. அப்படியென்றால் இவற்றினூடாக விற்பனைக்கு ஒருவகை ஊக்கம் கிடைக்கிறது.
நான் இலக்கிய விழாக்களுக்குச் செல்வதும் பதிப்பகத்தாருக்காகவே. தமிழில் இதற்கு முன் பெருமாள் முருகன் எல்லா இலக்கிய விழாக்களிலும் இருக்கும் முகம். அவருடைய இலக்கிய முகவரும் பதிப்பாளரும் ஆற்றல்மிக்கவர்கள். அவரைத் தவிர அம்பையும் சல்மாவும் அவ்வப்போது தென்படுபவர்கள். சிவகாமி, வாசந்தி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரையும் கண்டிருக்கிறேன். சாரு நான் கலந்துகொண்ட ஒரே இலக்கியவிழாவில் அவரும் பங்கெடுத்திருக்கிறார்.
இலக்கிய விழாக்களில் பொதுவாகப் பேசப்படுவது அரசியல் சரிநிலைகள் சார்ந்த எளிய கருத்துக்கள்தான். தாராளவாதம், முற்போக்கு, பெண்ணியம், விளிம்புநிலை வாழ்க்கை, மாற்றுப்பாலுறவு என வழக்கமான பேசுபொருட்களும் அவற்றுக்கான வழக்கமான தேய்வழக்குகளும் உண்டு. நான் அவற்றைக் கடந்து ஒரு சில தீவிரமான இலக்கியக் கருத்துக்களைச் சொல்லிவிடவேண்டும் என எப்போதுமே முயல்கிறேன். என் இந்திய ஆங்கிலம் இங்கே இந்தியாவில் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் எவரேனும் கவனிக்கிறார்களா என தெரியவில்லை.
சென்ற மாதம் கேர்ளா லிட் ஃபெஸ்ட் கோழிக்கோடு சென்றேன். அதன்பின் வடோதரா இலக்கிய விழா. அதன்பின் இரண்டு இலக்கிய விழாக்களை தவிர்த்துவிட்டேன். மகன் திருமண வேலைகள். சினிமா வேலைகள்.
இன்று மதியம் திருவனந்தபுரம் வழியாக ஜெய்ப்பூர். ஜெய்ப்பூர் இலக்கிய விழா. ஜெய்ப்பூர் இலக்கியவிழா ஒரு சந்தைபோலிருக்கும் என சகரியா சொல்லியிருக்கிறார். பிப்ரவரி 5 வரை ஜெய்ப்பூரில் இருப்பேன்.
ஜெய்ப்பூர் இலக்கியவிழாவில் சுசித்ரா ராமச்சந்திரன் என்னுடன் கலந்துகொள்கிறார். ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கமான The Abyss பற்றி ஓர் அரங்கு உள்ளது. ஆங்கிலத்தில் இலக்கியம் வாசிப்பவர்கள் பலவகையிலும் கண்ணுக்குத் தெரியாதவர்களாக உள்ளனர். நாடெங்கும் நகர்களில் மட்டும் வாழ்பவர்கள். பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்தவர்கள். அவர்களிடையே ஒரு படைப்பு இப்படி பலவகையான அரங்குகள் வழியாகவே சென்றடைய முடியும்.
பிப்ரவரி 6 அன்று டெல்லியில் என் A Fine Thread and Other Stories நூலின் சம்பிரதாயமான வெளியீட்டுவிழா. அங்கிருந்து திருவனந்தபுரம். அங்கே மாத்ருபூமி இலக்கியவிழா. அது முடிந்துதான் வீடுதிரும்புவேன்.