ஆக்காண்டி – வாசிப்பு அனுபவம்

‘ ஹிட்லரைப் போன்ற மனிதன் வரலாற்றின் வெற்றிடத்தில் தன்னந்தனியாகத் தோன்றுவதில்லை’, யாத்வஷேம் நாவலில் வரும் ஒரு வரி.  அதே உணர்வுதான் ஏற்பட்டது வாசு முருகவேலின் ஆக்காண்டி படித்ததும் .

வாசு முருகவேல் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் விருந்தினராக அறிமுகமானார்.அரங்கில் அவருடைய பதில்கள் மிக இயல்பாக மெல்லிய பகடியுடன், சற்றே எச்சரிக்கையுணர்வுடன் இருந்தன. இடைவேளையில்  உரையாடிய பொழுதில் அவருடைய ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது. அரங்கிலே அவருடைய இரண்டு புத்தகங்களை வாங்கினேன்.

யூதர்கள் வரலாறு படித்த நாட்களிலிருந்தே எனக்கு இலங்கைத்தமிழர் வரலாறு பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்து வந்தது. சில நூல்களும் படித்திருக்கிறேன். ஜெப்னா பேக்கரி,ஆக்காண்டி இரண்டு நாவல்களும் இலங்கைவரலாற்றின் சில பக்கங்களை ரத்தமும் சதையும் கண்ணீருமாக பதிவு செய்திருக்கின்றன.

ஜெப்னா பேக்கரி தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள்(சோனகர்கள்) இயக்கத்தை சேர்ந்தவர்களால் தங்கள் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்ட வரலாற்றுச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.ஆக்காண்டி அச்சம்பவத்திற்கானகாரணங்களை விளக்கக்கூடியதாக இருக்கிறது. இரண்டு நாவல்களுமே மனிதம் என்பதை கேள்விக்குரியதாக ஆக்கியுள்ளன.

வன்முறை மனிதர்களிடம் காலம் இனம்,மொழி,நாடு பேதமில்லாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சோளகர் தொட்டி,வெள்ளையானை போன்ற பல புனைவுகள் இவ்வுண்மையைப் பதிவு செய்திருக்கின்றன.

ஆதிக்க வெறி மனிதனை மிருகமாக்குகிறது. மைதிலி சரண் குப்த தன்னுடைய ஒரு காவியத்தில்,’மனிதனைத் தாழ்ந்தவன் என்று சொன்னால் நான் மன்னித்துவிடுவேன்.ஆனால் அவனை மிருகம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். நான் மன்னிக்கவே மாட்டேன் ‘,என்பார். அது உண்மை என்று தான் தோன்றுகிறது.

வெளியுலகில் நடக்கும் எதுவும் அறியாமல் ஊருக்கு வெளியே வாழும் எளிய  சின்னஞ்சிறு குடும்பம் சின்னாபின்னமாகும் கதை வாயிலாகப் பல்லாயிரம் மக்களின் அழிவு சொல்லப்பட்டிருக்கிறது.முன்னும்பின்னுமாகச் செல்லும் கதை பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. இஸ்லாமியர்,பௌத்தர்,சைவர்,கிறுஸ்துவர்,என்று மாறி மாறி உலகெங்கிலும் அழித்துக்கொள்வதை 135 பக்கங்களுக்குள்,எளிய மொழி நடையில் உணர்ச்சிபூர்வமாகக் கடத்தியிருக்கிறார்.

இரும்புக்கதிரை ஒரு படிமமாகப் பல இடங்களில் உருவகமாகிறது. எதையும் பேசவிரும்பாத தாசன்,ஏதாவது பேசியே ஆகவேண்டுமென்று விரும்பும் அகிலன் இருவரும் பிணைக்கப்பட்டு வதைமுகாமில் துன்புறுத்தப்படும் போதெல்லாம் பின்புலத்தில் வரும் தூய்மையான வெள்ளைத்துணி முரண்.

‘புத்தர் நிர்வாணமாக இருப்பாராமே! ராணுவத்தினர் இருத்தினால் அவனும் இருப்பான்’முரண் நகை. பா திக்கப்பட்ட இளைஞர்களை இயக்கம் பயன்படுத்திக்கொள்வது தாசன் மூலமாக உணர்த்துவது போல இஸ்லாமியர்களை கிறுஸ்துவர்களுக்கு எதிராக மூளைசலவை செய்வது,இனப்பகையை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்வது என்று  உலக நடப்பு அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

நிர்வாணமாக ,உடல் முழுவதும் காயங்களுடன்,துப்பாக்கி ஏந்திய காவலர் நடுவில் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் கிடைக்கும் உணவான மரவள்ளிக்கிழங்குக்கு மிளகாய்ப்பொடி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றுகிறதே!மனிதர்களின் வாழ்வாசை எத்தகையது!

கதையின் ஆரம்பித்தில் ஆடுகள் கருகிய தோலுடன் பரஞ்சோதியின் காணிக்குள் நுழைவதே பின்னால் வரப்போகும் பேராபத்தை உணர்த்துவதாக அச்சத்தைத் தூண்டுகிறது.மந்தையாடுகள் போல மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள்.

கலங்காத உறுதியுடன் இருக்கும் தாசன் முகம் தெரியாமல் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்படும் பெண்களில் தங்கையை உணர்ந்து அலறுவது நம்மையும் கலங்கிக் கண்ணீர் வடிக்கச் செய்கிறது.

வலிமையான சொற்களில் தன் மக்களின் வலியை உலகிற்கு உணர்த்தியுள்ள வாசு முருகவேலுக்கு அம்மக்களுக்கு அமைதியாக கண்ணீர் வடிப்பதைத் தவிர நம்மால் என்ன செய்துவிட முடியும்?

கனத்த இதயத்துடன்

ஷீலா

விருதுநகர்

 

முந்தைய கட்டுரைஅகவாழ்வின் நெரிசல் – கோ.புண்ணியவான்
அடுத்த கட்டுரைஆல்பா மேல் – கடிதங்கள்