அறமும் ஆலமும்- கடிதம்

ஆலம் மின்னூல் வாங்க

ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்

மதிப்பிற்குரிய எனதருமை ஜெ அவர்களுக்கு ,

தங்களது ஆலம், நாவலை  நேற்றுதான் படித்துமுடித்தேன். காலை ஆரம்பித்து மதியத்திற்குள் படித்துமுடித்தேன். கடந்த ஆண்டு தங்களது பத்து லட்சம் காலடிகள் ,குமரித்துறைவி ஆகிய இரண்டையும் விட சற்று ரத்தம் அதிகமாக தாளில் ஒட்டிக்கொண்டது இந்த நாவலில். ரத்தம் தெரித்தாலும் வாழ்க்கை தத்துவங்கள் மிக மிக யதார்த்தமாக பல இடங்களில் சம்பாஷணைகள் மூலம் அறியப்பெற்றேன். மிக அற்புதம் . ஆதி நஞ்சு எப்படி நம் மனதை மனிதனை மாற்றும் என்பதை அறியப்பெற்றேன்.எளியோர் நஞ்சம் பகைமை கொண்டால் வலியோர் நெஞ்சம் வதைபடும் என்பதை மிக தெளிவாக வடித்துள்ளீர்கள்.  குறிப்பாக வீரலெக்ஷ்மியின் பாத்திரவடிவமைப்பு கோப்ரா வின் பாத்திரம் மற்றும் சந்தானம். அதிலும் சந்தானம் முதலில் ஒரு கொடூரனாக பின்னர் ஒரு ரத்த கொடூரனாக அதன் பின்னர் மகனின் பாசஊற்றாக என பாத்திரம் விரிந்த காலம் நன்றாக அமைந்திருந்தது.

ஒரு கேள்வி ,  நம்முள் இருக்கும் நஞ்சு இப்படி நம்மை மாற்றுவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பாதிக்கும் எனின் அதனை எப்படி கையாள்வது?

 ஆன்மிகம் மட்டும்தான் இதனை மடைமாற்ற முடியுமா ? அல்லது உங்கள் கூற்றுப்படி உள்ளுள் இருக்கும் கிருமியின் படி நம் வாழக்கை வாழப் பழகிக்கொள்ளவேண்டுமா?

நன்றி
அன்புடன்
க ராஜாமணி
நாகர்கோயில்

அன்புள்ள ராஜாமணி

நான் என் அறம் வெளிவந்த காலகட்டத்தில் உலகளாவிய இலக்கியவிமர்சனத்தில் பின்னைப்பின்தவீனத்துவம் – அல்லது டிரான்ஸ்மாடர்னிசம்- எப்படி அறம் என்னும் விழுமியத்தை மதம், மரபு ஆகியவற்றைச் சார்ந்த ஒற்றைக்கொள்கையாக அன்றி ஒரு செயல்வரையறையாக உருவாக்கிக் கொள்வது என்று பேசிக்கொண்டிருப்பதை வாசித்துக் கொண்டிருந்தேன். அன்று அறம் கதைகள் நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான முன்னகர்வு

ஆனால் இன்று அனைவரும் அறம் பற்றிப் பேசுகையில் ஆலம் நேராகத் திரும்பி id கொண்டுள்ள முதன்மை பற்றி பேசுகிறது. மானுட உள்ளுணர்விலுள்ள வன்முறை- அழிவின் மீதான விருப்பு பற்றி பேசுகிறது. என் தரப்பு அல்ல அது. ஏன் அதை எழுதினேன் என்றும் தெரியவில்லை. ஆனால் அறம் சார்ந்த விவாதத்தின் ஒரு வலுவான தரப்பு என்று மட்டும் சொல்வேன்.

நம்முள் உறையும் அந்த நோயுடன் நாம் இடைவிடாது போரிட்டுக்கொண்டே இருக்கிறோம். மானுடம் இலக்கியம் வழியாக, தத்துவம் வழியாக, ஆன்மிகம் வழியாக அதனுடன் போரிடுகிறது. அது எளிதில் வெல்லப்படும் சக்தி அல்ல. ஆனால் அது வெல்லப்பட்டது என்பதற்கான சான்று இன்று மானுட நாகரீகம் இப்படி இருப்பதுதான்.

ஜெ

பின்னைப் பின்நவீனத்துவம்- கடிதம்

பின்நவீனத்துவம் பின்னகர்ந்த பின்… அஜிதன் உரை

முந்தைய கட்டுரைகுருகு
அடுத்த கட்டுரைஇன்னுமொரு ஆங்கிலச் சிறுகதைத் தொகுதி- கடிதம்