அன்புள்ள ஜெ
டிவிட்டரில் அஜிதன் அவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்லி ஒரு யூடியூப் இணைப்பையும் பகிர்ந்திருந்தார்
A fairly neat video essay series on post-postmodernist movements like re-modernism, performatism, meta modernism all of which I touched upon in some sense in my speech, almost instinctively. I consider this a validation of a genuine zeitgeist felt by artists all over the world. Those who don’t try to engage with it are only losing the plot. The problem with “post modernists” in Tamil is their purported presentism, while being outdated all the while. Lack of creativity and genuine quest is hidden under the veil of being trendy.
நான் அந்த இணைப்பிலுள்ள வீடியோக்களை தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன். என்னுடைய கேள்வி இதுதான். அஜிதன் பேசிய விஷயங்கள் தத்துவ உலகுக்குப் புதியவை அல்ல. அவரே அவற்றை பத்தாண்டுகளாக நிலைபெற்றுவிட்ட சிந்தனைகள் என்று சொல்லித்தான் முன்வைக்கிறார். அவை ஒன்றும் கல்வித்துறை ஆய்வேடுகளில் மட்டும் கிடைப்பவை அல்ல. அவை யூடியூபிலேயே கிடைக்கின்றன.
ஆனால் இங்கே கோட்பாடு தத்துவம் எல்லாம் சுடச்சுட வாசிப்பதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இவற்றை கேள்விப்பட்டதாகவே தெரியவில்லையே. அவர்கள் இன்னும் ஐம்பதாண்டு பழைய பின்நவீனத்துவக் கருத்துக்களை அல்லவா சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? அஜிதனின் உரை வெளியானபின் அதற்கு எதிர்வினையாற்றியவர்கள்கூட கூகிளில் அதைப்பற்றி தேடிப் பார்க்கவில்லை. அவர்கள் அறிந்த பழைய விஷயங்களையே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. டிரான்ஸ்மாடர்னிசம் என்பதன் இரு முக்கியமான அம்சங்கள். அறத்தை வரையறை செய்வது. மரபை மறுவரையறை செய்வது. மரபிலிருந்து இன்றைய அறத்தை உருவாக்கிக் கொள்வதும், அறத்தை ஆம்னிபொடண்ட் ஆக இல்லாமல் ஒரு ஃபங்ஷனல் வேல்யூ ஆக வரையறை செய்வதும்தான் டிரான்ஸ்மாடர்னிஸம் என்று சொல்லலாம். அதைத்தான் விஷ்ணுபுரம், கொற்றவை முதல் அறம் தொகுதி வரை செய்கிறது. வெண்முரசும் குமரித்துறைவியும் அதன் அடுத்த கட்டங்கள்.
ஆனால் விஷ்ணுபுரம் வந்தபோது அது போஸ்ட்மாடர்ன் காலகட்டத்தில் பழமைமையை திரும்பக் கொண்டு வருவது என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். வெண்முரசு இலக்கியத்தை ஐம்பதாண்டு பின்னால்கொண்டு சென்றுவிட்டது என்றார்கள். கதையை சிடுக்காக எழுதுவதும், மொழியை சிக்கலாக்குவதும், எல்லாவற்றையும் நிராகரிப்பதும்தான் புதிய டிரெண்ட் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
வியப்பும் ஒருவகை சலிப்பும்தான் உருவாகிறது. இன்றைக்குக் கூட ஒருவர் ‘அறம், மதிப்பீடு, விழுமியங்கள் எல்லாம் ரொம்ப பழசான கான்செப்ட் புரோ. எல்லாத்தையும் கட்டுடைச்சாச்சு’ என ஆரம்பித்தார். அவர் ஓர் அறிவுஜீவி. ’இப்டிச் சொல்றதுதான் ரொம்ப பழைய கான்செப்ட் புரோ’ என்று சொல்லி அனுப்பினேன்.
அன்பு கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள அன்பு,
நானும் அந்த வியப்பை அடைந்தேன். டிரான்ஸ்மாடர்னிசம் அல்லது போஸ்ட்போஸ்ட்மாடர்னிஸம் என்ற பெயரை விக்கியில் இருந்து பார்த்துக்கூட எவரும் இங்கே சொல்லவில்லை – அவ்வளவுதான் வாசிப்பு. அனைவருக்கும் போஸ்ட்மாடர்னிச கட்டுடைப்பு என்ற சொல் மட்டுமே தெரிந்திருந்தது. சரியாகச் சொன்னால் அறம் தொகுதி வரும் ஆண்டுதான் அறத்தை மறுவரையறை செய்வது பற்றிய நவீன கோட்பாடுகள் பேசப்பட்டுக்கொண்டிருந்தன.
ஆனால் எந்தக் காலத்தில் இலக்கியத்தை தமிழ்க் கோட்பாட்டு விமர்சகர்கள் உடனே புரிந்துகொண்டு, உடனே வரையறைசெய்துள்ளார்கள்? ஐம்பதாண்டு பழைய கொள்கைகள் கைக்கு வந்தபிறகே அவர்களால் பேசமுடியும். அவர்கள் பேசுவது நேரடியாக அல்ல. மேற்கே அறிவுத்துறையில் பேசப்படுபவை அங்குள்ள நாளிதழ்களின் ஞாயிற்றுக்கிழமை கட்டுரைகளாக வந்தபின் அக்கட்டுரைகளிலுள்ள மேற்கோள்வரிகளைக் கொண்டே அவர்களால் பேசமுடியும்.
ஜெ