வெண்முரசு முழுத்தொகுப்பு வெளியீடு : முன்பதிவு
அன்புள்ள ஜெ,
வெண்முரசு முழுத்தொகுப்பு வெளிவரவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் வெண்முரசு தொகுப்புகளை அன்றன்று வாசித்து முடித்தவன். வெண்முரசு இணையப்பக்கத்திற்குச் சென்று அவ்வப்போது வாசிப்பதுமுண்டு. வெண்முரசு முழுத்தொகுப்பை வாங்கவேண்டும் என இருக்கிறேன். விலை சற்று அதிகம். ஆனால் இன்று வீட்டுக்கு ஒரு ஃபர்னிச்சர் வாங்கவேண்டுமென்றாலும் அவ்வளவு ஆகிவிடுகிறது. ஒரு சாதாரண டிவி விலையே அவ்வளவுதான்.
(ஆனால் டிவி வாங்கினால் அதை எவருமே பார்ப்பதில்லை. என் குழந்தைகள் ஏறிட்டும் பார்ப்பதில்லை. மனைவி மட்டும் அரை மணிநேரம் பார்ப்பாள். அனைவருக்குமே இணைய ஊடகம்தான் இன்றைக்கு. அவரவர் கைகளில் அவரவர் உலகம். வெண்முரசு நூல்கள் ஒரு பத்து இருபது ஆண்டுகளுக்கு கூடவே இருக்கப்போகும் செல்வம் என்றவகையில் அது முக்கியமான முதலீடுதான் என நினைக்கிறேன்.)
என் நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து வாங்கலாமா என்ற எண்ணம் உள்ளது. அவர்களிடம் பேசிவிட்டேன். அவர்களில் இருவர் வெண்முரசு அங்கே இங்கே வாசித்தவர்கள்தான். ஒரு தொகுப்பாக வாங்கிவிடுவது என்றும், செர்ந்தே வாசிப்பது என்றும் முடிவெடுத்துள்ளோம். ஒவ்வொரு வாரமும் வாசித்தவற்றை நேரிலோ அல்லது ஆன்லைனிலோ பேசிக்கொண்டால் இன்னும் தெளிவு உருவாகும். தொடர்ச்சியாக விடாமல் வாசிக்கவும் முடியும்.
வெண்முரசை நான் ஒரே ஓட்டமாக வாசித்திருக்கிறேன். அப்போது வெண்முரசு ஒரு கதையோட்டமாகவே இருந்தது. அடுத்தது என்ன என்ற கேள்வியே முன்னால் கொண்டுசென்றது. ஆனால் அவ்வப்போது ஊடாக வாசித்தபோது இந்திய தத்துவம், இந்திய சம்பிரதாயங்கள், இந்தியப் பண்பாட்டு மரபுகள், இந்தியாவின் தலங்களின் பழைய வரலாறு என்று மிகப்பெரிய கலைக்களஞ்சியம் அது என்ற எண்ணம் உருவானது. இந்து புராணங்கள் ஏறத்தாழ எல்லாமே இந்நாவல்களில் உள்ளன. வெறும் புராணக்கதைகளாக இல்லாமல் அவற்றின் ஆன்மிகமான, தத்துவார்த்தமான உள்ளர்த்தம் துலங்கும்படியாக அவை அமைந்துள்ளன.
வெண்முரசு நூல்களை ஒரு ஆன்மிகமான வகுப்புகளாகவே வாசிக்கவேண்டும். ஒரு முதுகலைப்பட்டம் பெறுவதுபோல அதை வாசித்து முடிப்பது. வெண்முரசு வாசித்தவருக்கு தத்துவம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் ஒரு தெளிவு இருக்கும். எதைப்பற்றியும் கொஞ்சமாவது தெரிந்திருக்கும். எந்த விவாதத்திலும் தன்னம்பிக்கையுடன் கலந்துகொள்ள முடியும்.
நான் என் நண்பர்களுடன் ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்குச் செல்வதுண்டு. வெண்முரசுக்குப் பின் பெரும்பாலான சொற்பொழிவுகள் சாதாரணமாக ஆகிவிட்டன. கேட்டு திரும்பும்போதே இப்படி இல்லை இது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டேன். நீயே சொற்பொழிவாற்றலாம் என்று என்னைப்பற்றிச் சொன்னார்கள் என் நண்பர்கள். அண்மையில் ஒருவர் பாசுபதம் பற்றிப் பேசினார். கிராதம் நாவலில் இருந்து பாசுபதம் என்பது பற்றி நான் பேசினேன். எனக்கே அப்படி ஒரு நம்பிக்கை வந்தது
ரா. ராகவமூர்த்தி