பைபிளை அறிதல்… கடிதம்

பைபிளை அறிதல்… கடிதம்

ஹலோ சார்,

நான் பல முறைகள் Bibleஐப் படிக்க முயற்சித்து உள்ளேன். ஆனால் அதன் பரந்த தன்மை, அதன் அமைப்பு, ஏராளமான கதாபாத்திரங்களின் சித்தரிப்பு மற்றும் பல்வேறு தொன்மங்கள் ஆகியவற்றை தொகுத்து கொள்வது சிரமமாக இருந்ததால் முடிக்க  முடியவில்லை.

இந்த சவால்களையும், இதற்க்கு அப்பால்  உள்ள  சவால்களையும், சிறில், இந்த வகுப்பின் துவக்கத்தில் கொடுத்து, அவற்றை கடந்து செல்வோம்  என்று  இவ்வகுப்பை துவக்கினார். பல்வேறு தொன்ம மற்றும் வரலாற்று நிகழ்வுகளுடன்  புத்தகத்தின் பிரிவுகள் மற்றும் கூற்றுகளுடன் அவர் தொடர்பு படுத்தியது, புத்தகத்தின் உள்ளடக்கத்திற்குள் நுழைய ஒரு நல்ல அடித்தளத்தை அளித்தது. இது எவ்வாறு தொகுக்கப்பட்டது, எதனால் இதற்குள் முரண்பாடுகள் வருகின்றன, சமகால மற்ற மரபுகளுடன் அது எவ்வாறு ஒத்துப்போகிறது, வேறுபடுகிறது போன்ற விவரங்கள் இந்த புத்தகத்தின் கட்டமைப்பை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.

அதன்பின் அவர் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடுகளின் பல்வேறு அத்தியாயங்களுக்கு எங்களை அழைத்துச் சென்று, வாசித்து அதன் கருத்துகளை, மெய்மைகளை, பிரமாண்டத்தை உணத்தினார். இயேசு எளிய மனிதர்களின் மீட்சிக்காக வாழ்ந்தவர் என்பதை உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ளமுடிந்தது. பல்வேறு கேள்விகளை சிறில் தெளிவுபடுத்திய விதம் அவரது புலமையை காண முடிந்தது.

இப்போது பெரிதும் மதிக்கப்படும் இறையியல் புத்தகத்தை வாசிப்பதற்கான, புரிந்துகொள்வதற்க்கான திறவுகோல் சிறில் அவர்களால் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வை வழங்குவதற்காக சிரில் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக, அவருக்கு நன்றி.

ஒவ்வொரு முறையும் எங்களுக்கு சிறந்த பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதற்காக  உங்களுக்கும் நன்றி.

அன்புடன்,

ஆனந்த், திருப்பூர்.

அன்புள்ள ஆனந்த்

பைபிள் என்றல்ல எந்த மதநூலையும் நேரடியாக எவரும் படித்துவிட முடியாது. அந்த நூலை படிப்பதற்கான ஒரு மனநிலை உருவாகவேண்டும். மனநிலை என்பதை விட அறிவுச்சூழல் என்பதே சரி. Contextualization என்று மேலும் குறிப்பாகச் சொல்லலாம். அதை ஓர் அறிஞர்- ஆசிரியரே உருவாக்கி அளிக்க முடியும். அதற்குரிய கல்விச்சூழலில் அந்த ஆசிரியர் கற்பித்தால் மேலும் சிறப்பு. இதுவே தத்துவத்திற்கும் பொருந்தும். வெறுமே நூல்களை வாசித்தால் நாம் ஆங்காங்கே நம் கவனம் குவியும் சில புள்ளிகளை, உதிரிக்கருத்துக்களை மட்டுமே தொட்டுக்கொண்டு மேலே செல்வோம். ஒட்டுமொத்தப் புரிதல் உருவாகாது. நாம் அடைந்த உதிரிக்கருத்துக்களை நம் கற்பனையால் இணைத்துக்கொண்டு அதுவே அந்த மதம் அல்லது தத்துவம் என மயங்குவோம். அதை தவிர்க்கவே இந்த வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன

 

ஜெ

முந்தைய கட்டுரைஓர் ஆங்கில மொழியாக்கம்
அடுத்த கட்டுரைஆழ்வாரப்பிள்ளையின் சதிர்ப்பாடல்