உடைவும் மீள்வும்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்பு ஜெ

டெக்ஸாஸில் காடோ என்ற ஏரியின் ஒரு சிறு கிளையின் கரையில் இரண்டு நாள் தங்கி இருந்தேன். ஏரிக்கரை மர கேபினில் இருந்து வெளியே நின்று பார்த்தால் இரண்டு பக்கமும் ஒரு நதி போல அந்தக் கிளை விரிகிறது. எந்தப் பக்கம் போனாலும் ஏரியை அடைந்து விடலாம். நான் நின்ற இடத்திலிருந்து எந்த வழி எனக்கு உகந்த வழிஎந்த வழி சீக்கிரம் என்னை ஏரிக்குக் கொண்டு சேர்க்கும் என்று அறிய முடியாதுஇமைக்கணம் வாசித்த பின்பு இதுபோல் இரு பாதைகளின் முன்னால் நின்றிருப்பதாக உணர்கிறேன்.

ஒரு பாதையில் தொடர்ந்து கீதையைப் பயிலஉங்கள் கட்டுரையும்கீதை உறையும்சித்பவானந்தர் உறையும் உடன்வர தத்துவப் பயிற்சியை நோக்கிய பயணம். மற்றொரு பாதையில் வெண்முரசு மூலமாகவே அந்தத் தத்துவங்களைப் புரிந்து உள்வாங்கிக் கொண்டு தொடர் வாசிப்புப் பயணம். எந்தப் பாதை எனக்குச் சரியாக இருக்கும் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

ஒரு இலக்கியவாசகனாகப் புனைவு அளிக்கும் நிகர் வாழ்க்கை தொடர்ந்து வாசிக்க ஒரு மிகப்பெரிய உந்துதல். ஆனால் இலக்கிய வாசகனாவதற்கு முன்பிருந்தே வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளும் தேடல்களும் இருந்து கொண்டே இருந்தது. சமய சொற்பொழிவாளர்களின் கீதை உரைகளும்பாரதியாரின் மொழிபெயர்ப்பையும் வினோபாவின் கீதை உரையையும் வாசிக்க முயற்சி செய்தது உண்டு. மற்ற இலக்கியங்கள் விட்டு வெண்முரசு மேல் தீவிர ஆர்வம் வந்ததற்குக் காரணமும் வாழ்க்கை அளவே விரிந்த படைப்பு என் கேள்விகளுக்கு விடை சொல்லும் என்ற நம்பிக்கைதான். நான் வாழும் அமெரிக்கச் சூழலில் எனக்கு ஒரு குருவோ மரபு சார்ந்த கீதை வாசிப்புக்கான வாய்ப்போ அமைவது மிக அரிது. வாய்ப்புகள் அமையும் வரை வெண்முரசையே தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பது நல்லதல்லவா?

வெண்முரசு பாதையில் எனக்குள்ள மிகப்பெரிய ஐயம் என் வாசிப்பனுபவம் சார்ந்தது. பாண்டவர்கள் கானேகிய பின் இளைய யாதவரையும் இருள் சூழ்ந்த பின் ஒவ்வொரு வெண்முரசு நாவலையும் கடப்பது கடினமாகவே இருந்தது நீர்க்கோலத்தில் நளனையும் தமயந்தியையும் நாடு கடத்தி விட்டு அந்த மக்கள் அடைந்த கீழ்மையின் எல்லைகள் என்னை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாக்கின. ஹிட்லர் பால் பாட்மாவோ என எத்தனை முறை சரித்திரத்தில் இத்தகைய ஆட்சியாளர்களையும் அவர்களோடு சேர்ந்து கொண்டு பயத்தினாலும் சுயநலத்தினாலும் கீழ்மையின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் சாதாரண மக்களையும் பார்த்திருக்கிறோம்.

குருதிச்சாரலில் அத்தனை அன்னையரின் கண்ணீரும் வீணாகத்தானே சிந்தப்படுகிறது. சிறிதளவு யோகப் பயிற்சி இருந்ததனால் இந்த நிகர் வாழ்க்கையின் மனச்சோர்வு அன்றாட வாழ்க்கையில் ஒட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது. ஆனாலும் எந்த ஒரு புதிய விஷயத்தையும் தொடங்குவதற்கும் பெருங்காரியங்களில   ஈடுபடவும் தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. எனக்குள்ளும் அதேயளவு கீழ்மைக்கான சாத்தியக்கூறுகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றனவெளிவரவில்லை அல்லது வாய்ப்பு கிடைக்கவில்லை அவ்வளவுதானே என்ற எண்ணம் வதைத்தது.

இந்த மனநிலையிலிருந்து இருந்து எப்படி வெளிவரப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது இளைய யாதவர் மூன்றாவது தூதாக வேதமுடிபு கொள்கையின் சார்பாக உரையாற்றியதும் அனைத்தும் மாறின. வேதங்களும் அதில் கூறப்பட்டிருக்கும் மெய்மையும் மானுடம் மொத்தத்திற்குமான பொதுச் சொத்து அதைச் சடங்குகளுக்குள் வைத்து ஒரு குறிப்பிட்ட குழுவின் சொத்தாக ஆக்குவதை நான் ஒப்பமாட்டேன் என்று அவர் கூறுவது எனக்கு ஒரு தரிசன காட்சியாக அமைந்தது. தான்தன் குடும்பம்நண்பர்கள்தன் குலம்தன் நாடுதன் நாட்டு மக்கள் தான் வாழும் காலம் என அனைத்தையும் தாண்டி என்றுமுள்ள மானுட உள்ளங்களுக்காக இந்த மெய்மையின் கோட்பாட்டை நிலை நிறுத்திச் சென்றிருக்கும் பெருங்கருணை என்னை அழ வைத்தது. அதிலிருந்து முன்னும் பின்னும் ஒரு கோட்டை இழுத்து புத்தன் முதல் காந்தி வரை அனைத்து ஞானிகளையும் அவர்கள் கருணையையும் ஒரே புள்ளியில் கண்டேன்.

இந்த உச்ச நிலை மனோபாவத்தோடு இமைக்கணத்தைக் கையில் எடுத்தேன் பீஷ்மரும் அசுவத்தாமரும் வந்து இளைய யாதவர் உடன் உரையாடிச் சென்றதும் என் மனதில் குழப்பங்கள் நீங்கிடச் செயலூக்கம் பிறந்ததது. எப்படியும் மீண்டுவிடலாம் இனி அயர்ச்சி அவ்வளவு எளிதில் நம்மைத் தீண்டாது என்று நம்பிக்கை வந்து விட்டது. இருப்பினும் நான் நின்றிருக்கும் இந்த இடத்தைத் தக்க வைக்க நினைக்கிறேன்

தன்னறத்தில் செயல் ஒவ்வொரு நாளும் விடுதலையை நோக்கிச் செலுத்தும் என்று கூற கேட்டிருக்கிறேன்தன்னறம்  எதுவென்று உணரும் பக்குவமோ பயிற்சியோ எனக்கு இல்லை என்று உணர்கிறேன். அரைகுறையாய் கீதையைப் படித்ததால் அதைப் பற்றின குழப்பமே மிஞ்சுகிறது. இதனால் நான் நிற்கும் இடம் அவ்வளவு உறுதியானது இல்லை என்று அறிவேன். ஆகவேதான் இந்தத் தற்காலிக தெளிவிலிருந்து அடுத்த அடி எங்கு வைப்பது என்று ஊசலாடிக் கொண்டிருக்கிறேன்.

பாலாஜி

அன்புள்ள பாலாஜி,

என்  நாவல்களான விஷ்ணுபுரம், கொற்றவை, காடு, ஏழாம் உலகம், வெள்ளையானை உட்பட எல்லா படைப்புகள் பற்றியும் இந்தக் கேள்வி வருவதுண்டு. அவற்றை வாசிப்பது, வாசிக்கையில் சோர்வையும் உடைவையும் அளிக்கிறது. நிலைகுலையச் செய்கிறது.  அதனால் அன்றாட வாழ்க்கையில் ஒரு விலக்கம் உருவாகிறது. வாசித்தபின் பல நாட்களுக்கு ஒரு வெறுமை உருவாகிறது. அதை ஏன் அடையவேண்டும்? வாசிப்பு என்பது இன்பம் அளிப்பதுதானே?. இந்த வினாக்களுக்குப் முப்பதாண்டுகளாக நான் பதில் எழுதிக்கொண்டே இருக்கிறேன். மூன்று தலைமுறைகளுக்கு.

காஃப்காவின் புகழ்பெற்ற ஒரு மேற்கோள் உண்டு. “நாம் நம்மில் கத்திபோல குத்தி இறங்கும் படைப்புகளையே வாசிக்கவேண்டும். மண்டையில் ஓர் அடி போட்டு நம்மை உசுப்பி எழுப்பவில்லை என்றால் ஒரு நூலை வாசிப்பது எதற்காக? நூல் நம்மை மகிழ்விக்க வேண்டுமா? புத்தகங்கள் இல்லை என்றால் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். நம்மை மகிழ்விக்கும் படைப்புகள் நாம் நமக்காக எழுதிக்கொண்டவையாக இருக்கும்.  ஆனால் ஒரு பேரழிவு போல நம்மை வந்து அறையும் படைப்புகளே நமக்குத்தேவை. ஆழ்ந்த துயரில் நம்மை ஆழ்த்துபவை.  நம்மைவிட ஆழமாக நாம் நேசிக்கும் ஒருவரின் சாவு போல நம்மை வந்தடைபவை. தன்னந்தனி காட்டுக்குள் துரத்தப்பட்டவர்களாக உணரச்செய்பவை. தற்கொலைக்கு நிகரானவை. நம்முள் உள்ள உறைந்த கடலை வெட்டும் பனிக்கோடரி போன்றிருக்கவேண்டும் ஒரு புத்தகம். நான் அப்படி நம்புகிறேன்” 

இது ஒரு நவீனத்துவ எழுத்தாளரின் சிந்தனை. நவீனத்துவப் படைப்புகள் கத்தி போல கூர்மையாக நம்மில் இறங்குபவை. சுந்தர ராமசாமி ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் ஜே.ஜே. என்னும் எழுத்தாளன் பற்றிச் சொல்வதுபோலமூளைக்குள் துருப்பிடித்த ஆணியை குத்தி வைப்பதுநல்ல நவீனத்துவ எழுத்து. என் எழுத்துக்களிலேயே ஏழாம் உலகம் அல்லது கன்யாகுமரி அல்லது இரவு அத்தகைய தன்மை கொஞ்சம் உள்ளது

ஆனால் நான் முன்வைக்கும் எழுத்து விஷ்ணுபுரம் போன்றவை உருவாக்கும் வெறுமை, தனிமை ஆகியவற்றால் ஆனது. அவற்றின் பக்கங்களை வாசிக்கையில் கொந்தளிப்பு, நெகிழ்ச்சி, சீற்றம், துயரம், நிலைகுலைவு என பல உணர்வுகள் தாக்குகின்றன. அதாவது பல கத்திக்குத்துக்கள். ஆனால் முடிந்தபின் நம்முள் எல்லா சொற்களும் காலியாகிவிட்ட உணர்வு உருவாகும். வெறுமையும் தனிமையும் எஞ்சும். மீள நீண்டநாட்களாகும். அந்த இயல்பு காவியங்களுக்குரியது. செவ்வியல் பெருநாவல்களுக்கு உரியது. அவை வாசகனை முழுமையாகச் சூழ்ந்துகொண்டு, அவனிடமிருக்கும் எல்லா கேள்விகளையும் எதிர்கொள்கின்றன. அவனுடைய எல்லா நம்பிக்கைகளையும் மறுபரிசீலனை செய்கின்றன. ஒரு துளி மிச்சமில்லாமல் அவனை ஆட்கொண்டு நிறைக்கின்றன.

ஆகவே அவை நவீனத்துவ நாவல்களைப் போல வெறும் கொந்தளிப்பையும் கேள்விகளையும் எஞ்சவிடுவதில்லை. வெறுமைக்கு நிகரான ஒரு மனநிலையை உருவாக்குகின்றன. அந்நூல்களை வாசித்து முடிக்க முடியாமல் சிலர் நின்றுவிடுவதுண்டு. வாசித்து முடித்தவர்கள் அதை எழுதி தெரிவிக்கிறார்கள். இருபத்தைந்தாண்டுகளாக அவ்வாறு கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. வெண்முரசு வரிசையில் ஒவ்வொரு நாவலின் முடிவின்போதும் அத்தகைய கடிதங்கள் வருகின்றன.

ஆழ்நிலை யோகப்பயிற்சிஆன்மிகப் பயிற்சி எதுவானாலும் ஓர் சோர்வின் அம்சமும் உண்டு. அதைஉண்மையை நேருக்குநேர் சந்திப்பதன் விளைவான சோர்வுஎன்று சொல்லலாம். நம்மை நாமே நேருக்குநேராக அறிவதன் விளைவான சோர்வு அது. நாம் நினைத்திருப்பது போன்றதல்ல நம் அகமும் நம் புறமும் என உணர்வதன் விளைவான ஒருவகை துயர். நல்ல இலக்கியப் பயிற்சி என்பது உண்மையில் ஓர் யோகதியான பயிற்சிதான். ஆழ்ந்த அறிதல்தான் அங்கே நிகழ்கிறது.

எந்த அறிதலும் இல்லாமல், ஆன்மிகஇலக்கிய ஆர்வமே இல்லாமல் வாழ்ந்தால் அந்த வெறுமையும் சோர்வும் இல்லாமல் இருக்குமே? இதைச் சிலர் கேட்பதுண்டு. அப்படி இருப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் மகிழ்ச்சியாக, நிறைவாக இருக்கிறார்களா என்று பாருங்கள். திகைப்பீர்கள். பெரும்பாலானவர்கள் எப்போதுமே கொந்தளிப்பு நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் காண்பீர்கள். அவர்கள் எதிரிகளை உருவாக்கிக்கொண்டு, அவர்களுக்குச் சவால்விட்டுக்கொண்டு, அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சிகள் செய்துகொண்டு, பொருமிக்கொண்டு ஒவ்வொரு நாளும் வாழ்கிறார்கள். ஒவ்வொரு சிறுவிஷயத்துக்கும் பெரும் நிலைகுலைவை அடைகிறார்கள். பூசலிடுகிறார்கள். துயருறுகிறார்கள். நியாயம் கேட்கிறார்கள். வாழ்க்கையின் மெய்யை அவர்களும் அவ்வப்போது சந்திக்கவேண்டும். துரோகங்கள் வழியாக, பிறருடைய தன்னலத்தைச் சந்திப்பதன் வழியாக, இழப்புகள் வழியாக. அப்போது அவர்கள் உடைந்து சிதறிவிடுகிறார்கள்.

எதையும் வாசிக்காமல் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்று உண்மையில் தெரிந்தால் நான் வாசிக்கவே வேண்டாம் என்றுதான் சொல்வேன்மகிழ்ச்சிதான் வாழ்க்கையில் முக்கியம். ஆனால் அது இயல்வது அல்ல. வாழ்க்கை தன்னியல்பாகவே கடுந்துயர்களும் கொந்தளிப்புகளும் கொண்டது. நாம் வாழ்க்கையை ஒன்றும் செய்ய முடியாது. வாழ்க்கைக்கு எதிர்வினையாற்றும் நம் அகத்தை மட்டுமே சற்றேனும் ஆள முடியும். ஆள்வதற்கு அதை அறியவேண்டும். அதை அறிவதற்கான வழி இலக்கியம், தியானம் ஆகியவை.

இலக்கியம் அளிக்கும் அறிதல் நம்மை உடைக்கிறது. நாம் அதுவரை நம்மையும் உலகையும் பற்றி கொண்டிருக்கும் நம்பிக்கைகள், உருவகங்கள் அழிகின்றன. ஒரு புல்டோஸரால் நம் இல்லத்தின் அஸ்திவாரத்தை மோதி மொத்தமாக நொறுக்கி கற்குவியல்களாக ஆக்குவது போன்றது அது. ஆனால் நமக்கு இல்லம் தேவை. நாம் அந்த கற்குவியல்களைக்கொண்டு இன்னொரு இல்லம் கட்டிக்கொள்வோம். இம்முறை புதிய நம்பிக்கைகள், அறிதல்களைக் கொண்டு அதை கட்டிக்கொள்கிறோம். விளைவாக அது இன்னும் வசதியானதாகவும் உறுதியானதாகவும் இருக்கிறது.  இதுதான் இலக்கியத்தின் செயல்பாடு என்பது.

அந்த உடைவின் வெறுமை நம்மை சோர்வுறுத்துகிறது. ஆனால் அது மெய்யான சோர்வு அல்ல. அப்போது நம் அகம் மிகத்தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அடிபட்ட விலங்கு புண்ணை நக்குவதுபோல நம் அகம் தவிக்கிறது. வெவ்வேறு வகைகளில் நம் அறிதல்களை மாற்றி மாற்றி அடுக்கிப்பார்க்கிறது. மெல்ல மெல்ல நாம் நமக்கே உரிய ஒரு சிந்தனை அமைப்பை உருவாக்கிக் கொள்கிறோம். அது நம் சிந்தனை. நாமே கண்டடைந்த நமது வாழ்க்கைப்பார்வை. அதை அடையச்செய்வதே இலக்கியத்தின் நோக்கம்.

எல்லா ஊர்களிலும் புதிய இல்லங்கள் இருக்கும், பழைய இல்லங்களில் ஒடுங்கி வாழ்பவர்களும் இருப்பார்கள். பழைய இல்லங்களை இடித்தே புதிய இல்லங்கள் கட்ட முடியும்.

உங்கள் குழப்பங்கள் அத்தகையவை. நீங்களே உங்கள் வழியை தெரிவுசெய்துகொள்ள முடியும். உங்களுடைய அடிப்படை இயல்பு கற்பனை மேலோங்கியது எனில் உங்களுக்கு வெண்முரசு மட்டுமே போதும். இல்லை அது நடைமுறைத்தன்மை ஓங்கியது எனில் தத்துவமும் – யோகப்பயிற்சியும் முதன்மையாக தேவைப்படுபவை. அவற்றை நேரடி ஆசிரியர் பரிந்துரைக்கலாம். இல்லையேல் தானே தன்னை மதிப்பிட்டுக் கண்டடைந்துகொள்ளவேண்டும்.

வெண்முரசு ஒரு யோகப்பயணத்துக்கு நிகரானதே. அது இலக்கியம் அளிக்கும் அலைக்கழிப்பை அளிக்கும். நிகர்வாழ்க்கையை அளிப்பதன் விளைவு அது. ஆனால் அதற்குள் செறிவான தத்துவமும் யோக அனுபவத்தை அளிக்கும் உருவகங்களும் மொழிநிகழ்வுகளும் உள்ளன. அந்த உருவகங்களைத் திறக்கும் ஆழ்நிலை அமைந்தால் அதுவே யோகம் நிகர்த்த ஓர் அகப்பயணம்தான்.

வெண்முரசு அதன் தனிநாவல்கள் வழியாக தொடர்ச்சியாக ஓர் உடைவை நிகழ்த்திக் கொண்டே செல்வது உண்மை. ஆனால் அதன் ஒட்டுமொத்தம் வெறும் உடைவை அளிப்பது அல்ல. அது நம்பிக்கையை அளிப்பது. இப்பிரபஞ்சத்தின் மாபெரும் நெறியை கண்முன் நிறுத்துவது. அதில் நம் இடமென்ன என்றும் சொல்வது. நேர்நிலை ஆற்றலை அளிப்பது. எண்ணங்கள் சிந்தனைகளாக அல்ல, உணர்வுகளாக. வெண்முரசு வாசகர் வாசிப்பினூடாக மாறிக்கொண்டே இருக்கிறார். அவர் வளர்வது அவருக்கே தெரிய வாய்ப்பில்லை. ஆனால் திரும்பிப்பார்த்தால் வந்த தொலைவு தெரியும்

ஜெ

முந்தைய கட்டுரைஅஃக் இதழ்
அடுத்த கட்டுரைபுத்தகமும் விக்ரகமும்