அகநிலவாழ்க்கை- கடிதம்

விஷ்ணுபுரம் செல்லும் வழி

நோன்பு என நிகழ்தல்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் பற்றிய கட்டுரை வாசித்தேன். என் வாழ்க்கையையே விஷ்ணுபுரம் வாசிப்புக்குப்பின் இன்னொன்றாக உணர்கிறேன். 2010ல் விஷ்ணுபுரம் நாவலை ஒரு நண்பர் தந்தார். எட்டு முறை நான் அதை வாசிக்க முயன்றேன். ஆனால் தொடக்கம் அமையவில்லை. ஏனென்றால் நான் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவன் ஆனாலும் எனக்கு கோயில் பற்றிய அறிமுகமே இல்லை. எல்லாமே அன்னியம். நான் பிடெக் எம் டெக் படித்து டாக்டரேட் படிக்க ஐரோப்பா வந்துவிட்டவன். எனக்கு இந்தியாவோ தமிழ்நாடோ தெரியாது. ஒரு பள்ளிக்கூடம், மூன்று கல்லூரிகள், ஒரு வீடு, நாலைந்து தெருக்கள், அவ்வளவுதான் என் இந்திய வாழ்க்கை

ஒரு டெஸ்பரேட் மனநிலையில் ஒரு விடுமுறை நாளில் நான் விஷ்ணுபுரத்தை படித்தேன். அந்த முதல்காட்சி என்னை உலுக்கியது. மணலைத் தோண்டி ஒரு மாபெரும் விஷ்ணுவை கண்டெடுக்கிறார்கள். அது என் மனம் அல்லவா? அங்கே புதைந்த விஷ்ணுவை அல்லவா தோண்டி எடுக்கிறேன். இந்த எளிய புரிதல் எட்டு முறை வாசித்தும் ஏன் கிடைக்கவில்லை? ஆச்சரியமாக இருந்தது. அப்படியே வாசிப்பு தீ போல பற்றிக்கொண்டது.

விஷ்ணுபுரம் எப்போதுமே இரட்டைநிலைகளில் இருக்கிறது. அவநம்பிக்கை- நம்பிக்கை, தத்துவம்- பக்தி, வரலாறு- மித். இதெல்லாமே என் மனம்தான். அதில் எல்லா கதாபாத்திரங்களும் நானே. பக்தியால் அவதியுறும் திருவடி, ஞானத்தால் அவதியுறும்  பிங்கலன் கற்பனையால் அவதியுறும் சங்கர்ஷணன் எல்லாமே நானே. இந்த புரிதல் வந்ததுமே நாவல் என்னுடைய சொந்த நூல் ஆகிவிட்டது. ஒருமுறை என் மனைவியிடம் சொன்னேன். என் ஆத்மாவை எண்ணூறு பக்கமாக இதோ ஷெல்பில் வைத்திருக்கிறேன். ஸ்ரீ யார் என்று எவராவது கேட்டால் சொல், இந்த புத்தகம்தான் என்று.

விஷ்ணுபுரத்தை நான் இதுவரை துளித்துளியாக ஆறேழுமுறை படித்துவிட்டேன். படிக்கப்படிக்கத் தீராதது. அதன்பின் தொடர்ச்சியாக இந்து மெய்ஞானநூல்களை பயின்றேன். இந்திய கலையை கொஞ்சம் தெரிந்துகொண்டேன். இந்திய வரலாற்றை படித்தேன். 13 முறை இந்தியா வந்து நீண்ட பயணங்கள் செய்தேன். இந்தியா என்ற கனவும் ரியாலிட்டியும் என்னுள் ஆழமாக பதிந்தது. நான் இன்றைக்கு வெளியே எங்கே வாழ்ந்தாலும் ஆழத்தில் இந்தியாவிலும் வாழ்கிறேன்.

நான் ஒன்று சொல்வேன். எவருக்கானாலும் அவருடைய சொந்த நிலம் என ஒன்று தேவை. உடல் எந்த நிலத்தில் வாழ்ந்தாலும் அவருடைய உள்ளம் அந்த நிலத்தில்தான் வாழும். அந்த மனநிலம் என்பது மொழியாலானது. மொழிக்கு அப்பாலுள்ள இமேஜ்களாலானது. மெடபர்கள் ஆர்க்கெடைப்ஸ் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். பண்பாடு என நாம் சொல்வது அதைத்தான். அந்த நிலத்தை நாம் வாசிப்பின் வழியாகவே மீட்டுக்கொள்ள முடியும். நான் விஷ்ணுபுரம் வழியாகவே அதை மீட்டு என் மனமாக ஆக்கிக்கொண்டேன்.

விஷ்ணுபுரம் வாசித்ததுமே என் பார்வை மாறிவிட்டது. கோயில்களை, புராணங்களை, தத்துவ நூல்களை, திருவிழாக்களை, மலைகளை, ஆறுகளை எல்லாம் வேறுவகையிலே பார்க்க ஆரம்பித்துவிட்டேன். நெல்லைக்கு செல்லும்போது தாமிரவர்ணி என்ற பெயர் அடாடா என என்னை புல்லரிக்கச் செய்தது. சோனா என்றால் பொன். இது செம்பு. எல்லா நதிகளுமே சிந்தனையில்தானே ஓடிக்கொண்டிருக்கின்றன. பிரக்ஞாதாரா என்று கூட ஓர் ஆறு வருகிறது விஷ்ணுபுரத்தில்.

அண்மையில் ஒருநாள் ஒரு கோயிலில் ஒரு வெண்கல மணியை பார்த்தேன். அதை பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்படி ஒரு பரவசம். அந்த வளைவு, அந்த வட்டம் எல்லாமே எத்தனை தொன்மையான ஒரு வடிவம். அந்த ஓசை எப்படியெல்லாம் இங்கே கேட்டிருக்கும். ஒவ்வொன்றுமே அழகாக ஆகிவிட்டன.

ஆனால் வெறும் நெகிழ்வை அளிக்கும் நாவல் அல்ல விஷ்ணுபுரம். அதில் ரெவெரென்ஸ் என்பதே இல்லை. அதிலுள்ள நையாண்டிகள் நம் மரபின்மேல் எவராலும் முன்வைக்கப்படுவதில்லை. ஞானமென்பதே பாடபேதங்களின் வரிசை தானே என்ற வரியை அடிக்கடி சிரித்தபடி நினைத்துக்கொள்வேன். மரபை நமக்கே உரிய சிரிப்புடன் மிக நெருக்கமான ஒன்றாக உணரக்கூடிய ஒரு மனவிஸாலத்தை அளித்தது அந்நாவல். அதன்பின் தமிழில் 40 நாவல்கள் வரை வாசித்தேன். உங்கள் நாவல்கள் உட்பட புகழ்பெற்ற எல்லா நாவல்களையும் வாசித்திருப்பேன். அவையெல்லாம் இலக்கியங்கள். விஷ்ணுபுரம் ஒரு படி மேல். அது ஞானநூலும்கூட

ஆ.க. சீனிவாசன்

 விஷ்ணுபுரம் நாவல் வாங்க

விஷ்ணுபுரம் நாவல் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைஆனந்தக் குமாரசாமியும் தமிழும் – தாமரைக்கண்ணன்
அடுத்த கட்டுரைமறையா முகங்கள், லிங்கராஜ்