விஷ்ணுபுரம் செல்லும் வழி
நோன்பு என நிகழ்தல்
அன்புள்ள ஜெ,
நேற்று புத்தக கண்காட்சியில் உங்களை சந்தித்தது பெரும் ஆறுதலும் ஊக்கமும் தருவதாக இருந்தது. கண்காட்சிக்கு இந்த ஆண்டு செல்லத் தோன்றவில்லை. ஆனால் தளத்தில் உங்களது அறிவிப்பைப் பார்த்த பிறகே கிளம்பி வந்தேன்.
விஷ்ணுபுரம் குறித்து நீங்கள் சொல்லியது அனைத்தும் உண்மை. ஒருவரது வாழ்க்கையையே மாற்றக்கூடிய வலிமை பெற்ற நூல்களில் முதன்மையானது அது. ஏனெனில் அது காட்டுவது குருதியும் நிணமும் சிதறிக் கொட்டும் பல்லாயிரக்கணக்கான மக்களுடையதும், அதன் வழியாக அந்த நகரத்தினுடையதும், முமுக்ஷக்களுடையதுமான வாழ்க்கைகளை. மரபின் பெருமையை அறிந்தும் அதனுடன் பொருத்திக் கொள்ள வழி தெரியாமல், அன்றாடத்தின் அடிமைத்தனம் மற்றும் காலம் தரும் சுமையுடனும் வலியுடனும் இருந்து சற்றே தலையை மேலே தூக்கி பார்க்க முடிகிற ஒருவன், இன்மையும் அதன் உண்மையும் பிணங்கியும் முயங்கியும் உருவாகும் எல்லையற்ற மாயத்தைக் கண்டு பதைபதைத்து நிற்கையில் விஷ்ணுபுரம் தருவது மிக அவசியமான ஒரு முன்னகர்வையே. பிங்கலனாகவும் திருவடியாகவும் காசியபனாகவும் பிரசேதனராகவும் சூரியதத்தராகவும் அஜிதனாகவும் சந்திரகீர்த்தியாகவும் பவதத்தராகவும் அகத்தில் மாறி மாறி வாழ்ந்து பார்த்து அறியும் அனுபவம் விலைமதிப்பற்றது.
2008ல் இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்து 2012 வரை வாசித்தேன். கிட்டத்தட்ட உன்மத்த நிலைக்கு வெகு அருகில் வரை சென்று வந்தேன். பிறகு 2013ல் வேறு ஒரு புனைபெயரில் அது குறித்து உங்களுக்கு கடிதம் எழுதினேன். முழுமையாக என்னை உடைத்து மாற்ற அந்த ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது.
சங்கரன் இ.ஆர்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் நாவல் பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். என் வாழ்க்கையையே விஷ்ணுபுரம் நாவலுக்குப் பின் நாவலுக்கு முன் என பிரிக்கலாம். நான் அந்நாவலை ஒரு பெரிய கோர்ஸ் போல ஓராண்டு எடுத்து படித்தேன். அதைப்படிக்க துணைப்படிப்புகள் தேவை. அவற்றையும் படித்தேன். இன்றைக்கு இரண்டு இந்தியாக்கள் உருவகிக்கப்படுகின்றன. மதவெறி இந்தியா. மதநீக்கம் செய்யப்பட்ட இந்தியா. இரண்டுக்கும் அப்பால் ஒரு ஞான இந்தியாவை அந்நாவல் வழியாக அறிந்தேன்
சாரங்கன்