தேவதேவன் கவிதைகள் குறித்து 20 வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்தேன். கவிஞர் குட்டி ரேவதி தான் என்னை அழைத்திருந்தார். அப்போது வாசித்த என் கட்டுரையின் தலைப்பு -பாடலின் மூலமாய் தேடலும் தேடலை துயரமாக உணர்தலும் என்பதாகும்.
தேவதேவன் கவிதைகளை எடுத்துக்கொண்டு..எப்படி கவிதை அவரை பாட வைக்கிறது? பிறகு வாழ்வு எப்படி பாடலாகிறது? பாடல்களில் எவ்விதம் முரண் படர்கிறது? முரண்களை அனுப்பவிப்பது ஏன்? பாடல் தன் மூலத்தை அதாவது வாழ்வை எப்படி தேடுகிறது? அப்படி தேடுவதால் அந்த பாடல் ஏன் துயரமாகிறது? என்று கேள்வி கேட்டு அந்த கட்டுரையை எழுதினேன். அதன் கையெழுத்து பிரதி பழுப்பேறி பக்கங்கள் சிதைந்த நிலையில் 2023-ல் மீண்டும் தேவதேவனின் விண்மாடம் தலைப்பிலான கவிதைகளை வாசித்து இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்..
இந்த 20 வருட கால ஓட்டத்தில் நானும் தேவதேவன் கவிதையினுடான தொடர்பும் விலகாதபடி இழையோடு வருகிறோம் இம்முறை விண்மாடம் வாசித்தபோது ஒரு வாசகனாய் எனக்குள் நிகழ்த்திய அகவினைகளை குறிப்புகளாய் இங்கு குறித்து வைக்கிறேன்.
இலக்கிய வெளியில், இன்றைய கால கட்டத்தில் தொழில் நுட்ப முன்னேற்ற யுகத்தில், எல்லாவற்றிலும் நுண் அரசியல் கோலோச்சும் நெருக்கடியான சூழலில், உடனடி பலனை உச்சத்தை அடைய துடிக்கும் மனநிலை கொண்டோர் மத்தியில், கவிதையால் ஆன்மிக தளத்தை எட்ட முயல்பவர் அல்ல தேவதேவன் எட்டிவிட்டவர் என்றே சொல்லலாம் அதன் சாட்சியங்கள் தான் இந்த கவிதைகள். நான் உம்முடைய சாட்சியங்கள் குறித்து ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன் என்ற சங்கீதம் 119/46 தான் இந்த அபிப்ராய உரைக்கு அச்சாரம்.
நான் கவிஞர் தேவதேவன் 360 டிகிரி கோணத்தில் முழுமையாக அறிந்து கொள்ள திரு பிச்சுமணிகைவல்யத்தின் துணையை நாடினேன். பிச்சுமணி கைவல்யம் தான் சொன்னார் .சூர்யா உனக்கு தேவதேவன் பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள்… வாழ்வில் முரண்பாடுகளை கொண்டு முரண்பாடுகளற்ற நிலையை ( உன்னத நிலையை) சாதிக்க முடியாது என்பது விஞ்ஞானம். இது உங்களுக்கும் தெரிந்திருப்பது குறித்து சந்தோசம் ஆனால் சித்தரித்தல் எனும் போது அதாவது கவிதையில் , முரண்பாடுகளை கொண்டுதான் முரண்பாடற்ற உன்னத நிலையை சிருஷ்டிக்க முடியும் சாதிக்க முடியும் இதை தான் தேவதேவன் தமது கவிதைகளில் தொடர்ந்து சிருஷ்டிக்கிறார் என்றார் .நண்பர்களே .. இந்த விண்மாடத்திலும் அதுதான் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. (தேவதேவன் தான் பிச்சுமணி கைவல்யம் என்று இன்றைய வாசகனுக்கு தெரியும் தானே)
விண்மாடம் கவிதைத்தொகுப்பில் ….
வான் விரிவெங்கும் -என்ற கவிதையில் இருளோடு இருளாய் இருந்தவை /ஒளியோடு ஒளியாயிருக்க இயலவில்லையா? என்று முரணோடு இருளும் ஒளியும் முயங்குவைக்கிறார்
அந்த இடம் -என்ற கவிதையில் முரணாக இருக்கும் மண்ணில் ஓடும் நதியையும் வானில் ஒளிரும் சூரியனையும் நம்முன் காட்சிப்படுத்துகிறார் முரணாக இருந்தாலும் அதை இணைக்கும் தேவதேவன் , காலத்துடனும் காலமற்றதனுடனும் /ஒரே வேளையில்/ சமமாய் காலூன்றியபடி -என்று அச்சித்திரத்தை வரையும் போது முரண்பாடு தன் முழு தரிசனத்தை தந்தபடி முன்னால் வந்து குந்திக்கொள்கிறது.
அறியாதவற்றை அறிவதற்கு – என்ற தலைப்பில் தேவதேவன் அறியாதவற்றை அறிவதற்கு அறிந்தவைகளிலிருந்து தானே தொடங்க வேண்டும் ( அறிந்தவை – அறியாதவை) என்று ஆரம்பித்து …வாழ்வையும் மரணத்தையும் /வேறு வேறாய் பிரிக்காமலிருந்தால் /வாழ்ந்திருப்போமல்லவா? / வாழ்வின் வாழ்வை/ வாழ்வுக்கேயுரிய சுவையுடன் … என்று இங்கும் மரணத்தையும் வாழ்வையும் தான் நம் முன் வைக்கிறார் அது நமக்கு வாளாகவும் கேடயமாகவும் மாறி நிற்கிறது எனலாம்.
தூறலை ரசிக்கும் நாம் ஏன் வெள்ளத்தை வெறுக்கிறோம்? மெல்லிய தூறல் வெள்ளத்தை தன்னுள் கொண்டது என்கிறார் . நீர் கண்ட இடமெல்லாம் யாசித்து / வானில் அதனை திரட்டி வைத்தோம் .என்று மெல்லிய தூறல் என்ற கவிதையில் சொல்கிறார் தேவதேவன் . அருவி, ஆறு நதி என தேடி தேடி அதனை ரசித்து எண்ணங்களால் அதை வானில் நாம் தான் திரட்டி வைத்தோம் இன்று அது நம்மை தேடி வந்து நம் முகம் பார்க்கிறது என்பது புதிய அவதானிப்பு.
அறையையும்அறையின் குளிமையையும் அறையின் வெளியும் வெளியின் வெப்பமும் ஒரு நேர்கோட்டில் சந்திக்க வைக்கிறார். இவன் அறைக்குள் இருக்கிறான் ஜன்னலிலிருந்து வெயில் அறைக்குள் பாய்க்கிறது அப்போது வெளியே இருக்கும் மரக்கிளையின் நிழலும் அறைக்குள் விழுகிறது ஆதவன் தன் ஜோலி மறந்து அறைக்குள் அவன் போடும் ஆட்டத்தை வாய் பிளந்து பார்க்கிறானாம் ( அதாவது அறைக்குள் மரக்கிளை, சூரியன் )என்று காட்சி படுத்துவதன் மூலம் வெப்பம் -குளிமை அறை- வெளி என்ற முரண்பாட்டைதான் நமக்கு முன்னிலைப்படுத்துகிறார்.
இப்படியாக தொகுப்பு முழுக்க முரண்பாடுகளும் அவற்றை நேர்க்கோட்டில் சந்திக்க வைப்பதும் நமக்குள் தர்க்கவெளியை நிகழ்த்துவதும் பின் தேவதேவனே தீர்வாக சூட்சம ரகசியத்தை காட்சிப்படுத்துவதும் அதனூடாக தான் கண்டடைந்த ஆன்மிக தரிசனத்தை காட்டுவதும் ஆன்மிக எழுச்சி நோக்கி நம்மை நகர்த்துவதும் இத்தொகுப்பில் வெகுஜாலமாய் நிகழ்த்திக்காட்டுகிறார். உதாரணத்துக்கு..
நடனம் என்பது என்ன ? என்ற கேள்வியுடன் ஒரு கவிதை தொடங்குகிறது.இங்கும் அங்கும் எங்குமாய் / காற்றின் வெளியில் அசையும் இடையறாத நகர்வு தானே ? என்று கேட்கிறார் தேவதேவன். பிறகு அவரே நகர்ந்துக்கொண்டேயிருப்பதை எப்படி பிடிக்க முடியும் ? என்றும் கேட்கிறார் ( காதுகள் நாவல் எழுதிய வெங்கட்ராமன் ஜெயமோகனை பார்த்து கேட்டாராம் . கொதிக்க கொதிக்க எப்படி காபியை குடிக்கிறீங்க? ஓடிக்கொண்டே இருக்கும் பெண்ணை எப்படி ரசிக்க முடியும் என்று கேட்டது நினைவில் வருகிறது) தேவதேவன் பதிலாக நகர்ந்துக்கொண்டேயிருப்பதை … வருடும் விரல்களால்/ பார்வையால்/ அன்பால் பிடிக்க முடியும் என்கிறார். கடைசிவரை அவர் நடனம் என்பதன் பொருளை சொல்லவே இல்லை. வாசகன் அதை வாழ்வு என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும்
தண்ணீரில் படகு போல் ஒரு இலை ஓடுகிறது. தேவதேவன் எழுதுகிறார் – தானே வாகனமும் /தானே பயணியும் /தானே பயணமுமாகிறது/ ஓடும் தண்ணீரில் /படகாகிய ஓர் இலை. –எனக்கு பின்னணியில் நானே சத்யமும் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறேன் என்ற இறைகுரல் ஒலிப்பதை புறக்கணிக்க முடிவதில்லை
துக்கம் தாளாமல் ஒருவன் ..இனி செத்தால்தான் எனக்கு நிம்மதி என்கிறான் இவரோ அதில்கூட மரணம் தான் இயற்கை ,மானுட வாழ்வு எல்லா பிறப்பிற்கும் காரணம் என்ற எத்தணை பெரிய உண்மையை இவன் சொல்கிறான் என்று சித்தனைபோல் சிலாகிக்கிறார். இதற்கு முன் ஒரு கவிதையில்.. உட்குருத்தை பாதுகாத்துக்கொள்ளவே /பட்டைகள் தன் மரித்துக்கொள்கிறது என்ற கவிதை வரிகளை எனக்கு சாதகமாக நான் இங்கு இணைத்து வாசிக்கிறேன். இது எதிர்மறை சிந்தனை அல்லவா எனகேட்போருக்கு ..
இன்னொரு கவிதையில். ஒரு குழந்தை நாய் குட்டி கேட்கிறது அப்பாவிடம். …அப்பா , அப்பா /எனக்கு லொள், லொள் என்று குரைக்குமே/ அங்கேயும் இங்கேயும் ஓடுமே/ அந்த நாய்குட்டி அல்ல.. பொம்மை நாய்குட்டி வேணும் என்றது குழந்தை. தேவதேவன் எழுதுகிறார் இறுதி வரியை… நாய்க்குட்டியிலிருந்து ஒரு நாய் குட்டியை மீட்க பார்க்கிறது குழந்தை என்று நான் இந்த பாஸிட்டிவ் தரிசனத்தை சபாஷ் என்றேன்
கமோமைல் தேநீர் குடித்தாலும் அது வாசனையுடன் தொண்டையில் இறங்கும் போது தான் பூத்திருந்த தாய் நிலத்தை அந்த வாசனையில் விரித்து காட்டுகிறது என்றும்
ஒரு காகம் புலரி வேளையில் வாய் திறந்து மிழற்றிய குரலில் பேரண்டத்தை பேரமைதியை பார்க்க முடிகிறது என்றும் தேவதேவனால் தான் எழுத முடியும் . ஏனேனில் அது அனுபவித்த தரிசனம் கண்டடைந்த அவதானிப்பு. அதை நாம் உணர என்ன செய்யலாம் ? வாழ்வின் முரண்களை சமன்படுத்த பழகணும் காந்தம் எப்படி வட துருவத்தையும் தென் துருவத்தையும் சமமாக பாவித்து நேர்கோட்டில் வைத்து இயக்கம் கொள்கிறதோ அப்படி அதற்கு முன் விடுதலை பற்றிய புரிதல் இருக்கவேண்டும் ..அது என்ன விடுதலை ? தேவதேவன் எழுதுகிறார்
எதை செய்துகொண்டிருக்கையிலும் / நிழல் போல் ஒரு சாத்தான் / அதை பின் தொடர தொடங்கிவிடுகிறான்/ அதுதான் தான் என்பதை ஒருவன் அறிந்து கொள்வது தான் அறிவு என்கிறது விடுதலை.— இந்த விடுதலையெனும் அறிவை நீ பெற்று விட்டால் அதாவது உன்னை பின் தொடரும் சாத்தான் நீதான் என்று தெரிந்துக்கொண்டால்… விண்மாடத்தில் நீயும் ஒரு தேவன் – தேவதை என்கிறது இந்த தொகுப்பு.
20 வருடங்களுக்கு முன்…..தேவதேவன் பாடலின் மூலமாய் தேடலும் தேடலை துயரமாக உணர்தலும் என்று அவர் கவிதைகள் குறித்து கட்டுரை வாசித்தேன் .இன்று எங்கும் எதிலும் துயரமில்லை துயரத்தின் மூலம் எது என்று விஸ்தாரமாய் விளங்கிக்கொள்ளப்பட்டு விடுதலையை பேசுவதால் மகிழ்வை நமக்கு கடத்தும் மகா சம்பவம் இந்த வாசிப்பில் நடந்தேறுகிறது
கம்பராமயணத்தில் கன்னிமாடம் இடம் பெறுகிறது , சிலப்பதிகாரத்தில்.. விண் பொர நிவந்த வேயா மாடத்து -என்று கலங்கரைவிளக்கை மாடம் என்கிறது வீட்டில் துளசி மாடம் விளக்கு மாடமும் உண்டு. எல்லா மாடமும் மண்ணோடு தொடர்புடையது . விண் என்பது வானத்தை குறிப்பது வானம் என்பது வெற்றிடத்தை அர்த்தமாய் அறிவுறுத்துவது. அப்படியாயின் ஆகாயத்தில் மாடம் , விண்மாடம் என்பது முரணை இணைத்து முழு உண்மை காண்பது ஆகும்
ஆக தேவதேவன் இந்த கவிதைகளில் இயற்கையின் வாழ்வின் முரண்பாடுகளை கொண்டு யதார்த்தத்திலும் புனைவிலும் காட்சி சித்திரத்தை வரைகிறார் .
அது ஒரே நேர்கோட்டில் வடபுலமும் தென் புலமும் கொண்ட காந்த துண்டு போல மனத்தில் வினையாற்றுகிறது .
வரிகளின் மூலம் தமது அவதானிப்புகளை முன் வைத்து அவர் பெற்ற ஆன்மிகதரிசனத்தை நம்மை காண அழைப்பு விடுக்கிறார். .
கவிதையின் மூலம் வாசகனை ஆன்மிக எழுச்சிக்கு முன் நகர்த்தும் பணியை அரூபமாய் செய்கிறார்
தேடல் உள்ள வாசகன் தேவதேவன் வரிகளின் மூலம் மிக சுலபமாக அப்பேருண்மையை பேரமைதியை கண்டடைவான். என்பதே நான் கண்ட வாசிப்பின் தரிசனம்
அமிர்தம் சூர்யா
தேவதேவன் கவிதைகள் இணையப்பக்கம்