புறப்பாடு வாங்க
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடுமையாகத் தேடிக் கிடைக்கவேயில்லை. போன வருடம், எப்படியோ தெரிந்த நண்பருடைய புண்ணியத்தில், சென்னையிலிருந்து வந்திறங்கியது இந்தப் புத்தகம். இதைக் கடுமையாகத் தேடிக்கொண்டிருந்ததற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது. அது படித்து முடித்தபோது நிறைவேறியது.
அதாவது, அறம், புறப்பாடு என்கிற இரண்டு புத்தகங்களையும் படிக்காமல் ஜெயமோகன் என்கிற ஒரு உலகத்திற்குள் நுழைய முடியாது. அப்படி நுழைந்தாலும், ஜெமோ நின்று நிலைக்கும் இலக்கிய உலகத்தையும், அவருடைய சொந்த வாழ்க்கைக்கும் அவருடைய இலக்கிய வாழ்க்கைக்குமான பிணைப்பையும் அறவே புரிந்துகொள்ள முடியாது. இவற்றைப் புரியாமல், அவருடைய எழுத்துக்களை நெருங்குவது கடினம்.
அறம் படித்து பல வருடங்கள் இருக்கும். ஒவ்வொரு கதையும் இப்போதும் தலைக்குள் உட்கார்ந்திருக்கிறது. தேவை உண்டென்றால் இழுக்க இழுக்க அக்கதைகள் தலைக்குள்ளிலிருந்து வெளியே வரும். வந்துகொண்டேயிருக்கும். அதற்குப் பின்னர் இந்தப் ‘புறப்பாடு’.
இளமைக்காலங்களில் ஒருவனைத் தன் வீட்டிலோ, கல்லூரியிலோ, ஏன் போய்க் குடிகொள்ளும் எவ்விடத்திலுமோ இருக்கவிடாது, சதா துரத்திக்கொண்டேயிருக்கும் பயணங்கள் பற்றியது இந்தப் புறப்பாடு. வீடு அந்நியமாகவும், ஒரே இடத்தில் தரித்து நிற்றல் சாபமாகவும், பிழைத்தல் கடவுளின் பிச்சை என்று நம்புபவனுமான ஒருவனுடைய வருடக்கணக்கான பயணங்கள் எவ்வளவு துயரமானவை. பெரும் இலக்கியம் போல விரிகிறது அந்த நாடோடி வாழ்க்கை.
வீட்டைத் துறத்தல் ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடிக்கிறது. ஆயிரம் கதைகளை அவனுள் ஊற்றுகிறது. போய்ச்சேர்ந்த இடத்தில், வயிற்றுப் பிழைப்பிற்காக செக்ஸ் கதைகளையும், பிரம்மவசியம் பற்றியும், மலையாள மாந்திரீகம் பற்றியும் எழுதித்தள்ளும் ஒரு இளைஞனின் எதிர்காலம் ஒரு எழுத்தாளன் என்கிற கூட்டில் வந்து சேராமல் எங்குதான் போகும்? எந்தவொரு தேடலும் இன்றி, எந்தவொரு இலட்சியமும் இன்றி, எந்தவொரு தேவையுமின்றி, கையில் ஒரு பைசா பணமும் இன்றி, வந்து நிற்கும் ஒரு ரயிலில் – அது எங்கே போகிறது என்கிற விபரமே இல்லாமல் – அதில் தொற்றி, மனம் சொல்லும் ஒரு நிறுத்ததில் இறங்கி, மீதி வாழ்க்கையையும், சோற்றையும் அந்த நிலத்திலேயே அலைந்து தேடி, உயிர் பிழைத்தல் எல்லோருக்கும் வாய்க்கும் ஒரு காரியம் என்றா நினைக்கிறீர்கள்?! இந்த நிலையற்ற அலைச்சலை தொடர்ச்சியாகத் விரும்பித் தேடிக்கொண்டேயிருக்கும் ஒரு இளமை விசித்திரமானது. அந்த ஓர்மம் ஆச்சரியமானது. இதுதான் ஒரு எழுத்தாளனை ஒரு சாமானியனிடத்திலிருந்து பிரித்து வைக்கிறது என்று நினைக்கிறேன்.
நல்ல கதைகளை, சுய அலைதல்களே கொடுக்கின்றன. பன்றிகள் கூட்டில் சதா தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவனால் சொல்லப்படும் வாழ்க்கை பற்றிய கதைகள் எவ்வளவு வீரியமானவை? ஏதோவொரு கடைக்கு முன்னால் போய் நின்றுகொண்டு, நான்கு நாட்கள் வற்றிய வயற்றை நிறைக்க ஒரு குவளை தேநீர் யாசிக்கும் ஒருத்தன் எழுதும் பசி பற்றிய கதைகள் எவ்வளவு நியாயமானவை? இந்த வீரியமும் நியாயமும் நிறைந்து வழியும் கதைகள் இவை. இந்தச் சுய கதைகளுக்கூடாக பின்னர் ஒரு பரந்த இலக்கிய உலகத்தைக் கட்டமைத்தவர் இந்த ஆசான்.
இந்தப் புறப்பாடு இல்லையென்றால் ஜெயமோகன் இல்லை. ஜெயமோகன் இருக்கலாம், அதற்கு முன்னால் இருக்கும் எழுத்தாளர், ஆசான் போன்றவை இருக்க வாய்ப்பில்லை.
அமல்ராஜ் பிரான்ஸிஸ்
முகநூல் குறிப்பு