”அன்னார் ஓயா இலக்கியப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்” என்று வழக்கமாக ஒரு சொலவடை உண்டு. என்னைப் பற்றி நானே அப்படி எழுதிக்கொள்வேன். இலக்கியப் பணி என்பது எழுத்துப்பணி அல்ல. அது வேறு. அது பணி அல்ல. பணியில் பணிதல் உள்ளது. சூழலுக்கு, அமைப்புகளுக்கு, சம்பிரதாயங்களுக்கு பணிதன். பணிந்தேயாகவேண்டும்.
இதை மலையாளத்தில் ‘நெட்டோட்டம்’ என்பார்கள். அதாவது அமராமல் ஓடிக்கொண்டே இருப்பது. நான் அண்மையில் இலக்கிய நெட்டோடியாக மாறிவிட்டிருக்கிறேன் என தோன்றுகிறது.
அப்படி ஆற்றிய பணிகள் சென்ற பதினைந்து நாட்களாக திரும்பிப் பார்க்கையில் என்னை திருவிழாவில் இருந்து திருவிழாவுக்குச் சென்று பொம்மை விற்பவராக உணரச்செய்கின்றன. ஒருவகையில் வாழ்த்தப்பட்ட வாழ்க்கைதான்.
சென்ற ஜனவரி ஒன்று அன்று தத்துவ முகாம் -புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிந்து திரும்பி வந்து ஒருவாரம் நாகர்கோயிலில் இருந்தேன். அது ஒரு நல்ல காலகட்டம். ஒரு திரைக்கதையை முடித்தேன். உடனே மீண்டும் பயணங்கள். ஜனவரி 9 கிளம்பி கோவை சென்றேன். அங்கே சில இலக்கிய ஒளிப்பதிவு வேலைகள்.
ஜனவரி 11 காலையில் நான் ஜி.எஸ்.எஸ்.வி நவீன், செந்தில்குமார் ஆகியோர் கிளம்பி காரில் பாலக்காடு அருகே சித்தூர் சென்றோம். வேதசகாயகுமார் பணியாற்றிய கல்லூரி அது. அங்கே அவருடைய மாணவர்களால் அவருக்கு ஆண்டுதோறும் நினைவுநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நான் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினேன்.
வேதசகாயகுமாரின் மாணவரான பேரா.முத்துலட்சுமி, பேரா.மனோகரன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைப்பவர்கள். கவிதாமணாளன் ஆசிரியத்துவத்தில் பொற்றாமரை என்னும் இலக்கிய இதழ் சித்தூரிலிருந்து வெளியிடப்படுகிறது. அதை நான் வெளியிட்டேன். முதல் இதழிலேயே கவிஞர் இசையை பூபாலன் எடுத்த முக்கியமான நேர்காணல் இடம்பெற்றுள்ளது (பொற்றாமரை இதழ்)
விழாவில் என் நண்பர்களான மலையாள எழுத்தாளர்களும் வாசகர்களும் வந்திருந்தார்கள். வேதசகாய குமார் பற்றிய என் நினைவுரைக்குப் பின் அதே உரையை மீண்டும் மலையாளத்தில் ஆற்றும்படி கோரினார்கள். ஆகவே சுருக்கமாக மீண்டும் நான் சொன்னவற்றை மலையாளத்தில் சொன்னேன். மலையாள விமர்சனச்சூழலில் பின் புலத்தில். (ஆனால் ஒரு பெயரை கொஞ்சம் தவறாக நினைவிலிருந்து சிலமுறை சொல்லிவிட்டேன்)
உரைக்குப்பின் நண்பர்கள் ஊர்திரும்பினர். நான் லோகமாதேவியுடன் அவரது காரில் பொள்ளாச்சி வந்தேன். அங்கே ஈரோட்டு நண்பர்கள் கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் அனந்தகுமார், ஓசூர் பாலாஜி ஆகியோர் வந்தனர். அவர்களுடன் காரில் ஏறிக்கொண்டு கோழிக்கோடு சென்றேன்.
கோழிக்கோட்டில் டி.சி.புத்தக நிறுவனம் ஒருங்கிணைக்கும் இலக்கிய விழா. கேரளா இலக்கிய விழா என்னும் இதுதான் ஆசியாவிலேயே பெரியது என்கிறார்கள். அரங்குகளின் எண்ணிக்கை மற்றும் வாசகர் பங்கேற்பு சார்ந்து.
இரண்டு அரங்குகள் எனக்கு. ஒன்று நித்ய சைதன்ய யதி நினைவுகூரல். அதில் குருவுடனான என் உறவு, நவீன சிந்தனைச்சூழலில் நாராயணகுருவின் வேதாந்தம் எதை முன்வைக்கிறது ஆகியவற்றைப் பற்றிப் பேசினேன். டாக்டர் கே.டி. சூப்பி தலைமை வகித்தார். உள்ளுணர்வு- கற்பனை- தர்க்கம் என்னும் மானுட உள அமைப்பில் தர்க்கத்துக்கு முதலிடம் அளிப்பது இன்றைய சிந்தனை. உள்ளுணர்வுக்கு முதலிடம் அளித்து அங்கிருந்து தர்க்கம் நோக்கி வருவதையே வேதாந்தம் முதன்மையாக முன்வைக்கிறது என்றேன்.
மறுநாள் இலக்கிய மொழியாக்கம் பற்றிய அரங்கு. நான், சாருநிவேதிதா இருவரும் தமிழை பிரதிநிதித்துவம் செய்தோம். டாக்டர் தேவிகா ஒருஙிணைத்தார். கன்னட ஆங்கில எழுத்தாளர் வசுதேந்திரா கலந்துகொண்டார்.
நான் விவாதத்தில் வலியுறுத்திய கருத்து ஒன்றே. இலக்கியத்தை வெறுமே மொழியாக்கங்கள் வழியாகக் கொண்டுசெல்ல முடியாது. அதற்குத்தேவை தொடர் இலக்கியப் பண்பாட்டு விவாதங்கள். அது இந்திய ஆங்கிலச் சூழலில் இல்லை. அங்கே முதன்மை இலக்கிய விமர்சகர்களே இல்லை. மதிப்புரைகளே உள்ளன. அவை ஆங்கிலச்சூழலில் அரசியல் விவாதங்களாகவே உள்ளன. நமக்கு இன்று தேவை ஆங்கிலத்தில் எழுதும் இலக்கிய அறிஞர்கள்.
13 ஆம்தேதி மாலையில் கோழிக்கோட்டிலிருந்து நேராக சென்னை சென்றேன். அங்கே புத்தகக் கண்காட்சியில் வாசகர்களைச் சந்தித்தேன். 14 முதல் 16 வரை மூன்றுநாட்கள். ஒவ்வொருநாள் மாலையிலும் நான்கு மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு நிமிடம் கூட அமராமல் வாசகர்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. நீண்ட வரிசையில் நின்று கையெழுத்து வாங்கியவர்கள் பற்றி பலர் எழுதியிருந்தனர்.
அந்த வரிசைக்குக் காரணம் என் வாசகர்கள் என்னுடன் மானசீகமாக உரையாடலில் இருப்பவர்கள் என்பதே. எழுதுபவர்கள் உண்டு, எதையும் எழுதாதவர்கள் உண்டு. அவர்களின் குடும்பத்தினருக்கும் என்னை தெரியும். ஒரு பெண்மணி சொன்னார். ‘நீங்க எங்க குடும்பத்திலே ஒருத்தர்…பேசாத நாளே இல்லை’ அந்த அணுக்கமே எனக்கும் வாசகர் சந்திப்பு பெரும் கொண்டாட்டமாக அமைய வழிவகுக்கிறது.
பொங்கல் அன்று காலையில் நாலைந்து பொங்கல் சாப்பிட்டேன். ஆகவே மதியம் சாப்பிடவில்லை. தூக்கக் கலக்கம். முந்தையநாள் இரவில் ஒரு காபியைச் சாப்பிட்டதனால் சரியாகத் தூக்கமில்லை. ஆனால் தொடர்ச்சியான வாசக முகங்கள் அளித்த பரவசம் அதை ஈடுகட்டியது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழினி, உயிர்மை, சால்ட் பதிப்பகம், சீரோ டிகிரி பதிப்பகம், எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி பதிப்பகம் ஆகியவற்றுக்கு ஒரு சுற்று சென்று வந்தேன். விஷ்ணுபுரம் ஸ்டாலுக்கு மனுஷ்யபுத்திரன் வந்திருந்தார். மிஸ் யூவுக்குப் பின் அவருடைய மிகப்பெரிய கவிதைத் தொகுதி ‘உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா?” கொண்டு வந்து தந்தார்.
இந்த விழாவரங்கில் தேவதேவனின் பெரிய தொகுப்புகள் உட்பட பல கவிஞர்களின் பெருந்தொகைகள் வந்துள்ளன. நாம் சிறிய கவிதைநூல்களை கண்டு வளர்ந்தவர்கள். நமக்கு இதிலொரு துணுக்குறல் உள்ளது. ஆனால் இது ஓர் இயல்பான நிகழ்வென நினைக்கிறேன். இதில் ஒரு சீண்டுதல் உள்ளது. அது என்றுமே கவிதையின் இயல்பு.
இன்றைய கவிதைகள் சிறியவை. அவை மின்பக்கங்களில், செல்பேசிப் பக்கங்களில் மின்னிமறைகின்றன. நேற்று நீண்ட நாவல்களும் பேருரைகளும் விளைந்த சூழலில் கவிதை கூரிய மின்வெட்டென தோன்றி அதிர்வை அளித்தது. இன்று எல்லாமே மின்னிச்செல்லும் தன்மை கொண்டுள்ளன. இன்ஸ்டா புகைப்படங்கள், ரீல்ஸ், முகநூல் குறிப்புகள்… கவிதை அவற்றிலொன்றாக ஆக பிடிவாதமாக மறுக்கிறது என படுகிறது. வேண்டுமென்றால் மூன்றுகிலோ எடையுள்ள இந்நூலை வைத்துக்கொண்டு ஆறுமணிநேரம் கவிதையில் மூழ்கியிரு…. அப்படி இருந்தால் நீ கவிதை வாசகன், நீ எனக்குப் போதும். மின்னிச்செல்வனவற்றை மட்டுமே நாடுபவன் எனக்கு தேவையில்லை என அது சொல்கிறது போலும்.
கோயில்பட்டியில் இருந்து கவிஞர் ஆகாயமூர்த்தி வெளியிடும் தினவு என்னும் இலக்கிய இதழை அவரும் கவிஞர் யவனிகா ஸ்ரீராமும் கொண்டுவந்து தந்தனர். தினவு கல்குதிரை போலவே அமைப்பும் வடிவும் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் வாசிப்புத்தன்மையுடன் உள்ளது என புரட்டிப்பார்த்தபோது தோன்றியது. கவனமாக உள்ளட்டக்கமும் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளன
17 மாலை கிளம்பி 18 காலை நாகர்கோயில் வந்தேன். வந்து அரைமணிநேரம் கழித்து உடைமாற்றி, பெட்டிமாற்றிக்கொண்டு காரில் திருவனந்தபுரம். அங்கிருந்து விமானநிலையத்தில் வடோதரா. அங்கே வடோதரா லிட் ஃபெஸ்ட். அது முழுக்கமுழுக்க மாணவர்களால் ஒருங்கிணைக்கப்படும் இலக்கிய விழா. பாருல் பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பது. ஒரு தனியார் பல்கலை அது. 2003ல் தொடங்கப்பட்டது.
மிகப்பிரம்மாண்டமான வளாகம். நவீனக் கட்டுமானங்கள். மருத்துவம் பொறியியல் கலைக்கல்வி என எல்லாமே ஒரே வளாகத்தில். தமிழக மாணவர்களே பத்தாயிரம்பேருக்குமேல் அங்கே பயில்கிறார்கள். அரங்கிலேயே பலர் தமிழ் மாணவர்கள். பாருல் பல்கலை மாணவர் பாராளுமன்றம் என்னும் அமைப்பை தேசமெங்கும் ஒருங்கிணைக்கிறது. மாணவர்களை கொண்டு விவாத அரங்குகளை நிகழ்த்துவது அதன் செயல்முறை.
அந்த இலக்கியவிழாவிலேயே இந்தியா முழுக்க இருந்து மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். எனக்கு பொறுப்பேற்றிருந்தவர் அர்ஷியான் கஷ்மீரைச் சேர்ந்த மாணவர். கஷ்ர்மீர் பல்கலைக்கழகத்தில், ஸ்ரீநகரில் படிப்பவர். அந்நிகழ்வுக்காக வந்திருந்தார். சென்ற இரண்டு ஆண்டுகளில் கஷ்மீரிலிருந்து வெவ்வேறு இந்திய பல்கலைகழகங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பத்து மடங்குக்கும் மேல் கூடியிருக்கிறது என்றார்கள். பாருல் பல்கலையிலேயே இரண்டாயிரம் பேருக்குமேல். பெரும்பாலும் பொறியியல், மருத்துவம், உயிரியல் தொழில்நுட்பம்.
அர்ஷியான் ஒரு அருமையான மாணவர். பணிவும் இனிய பண்புகளும் கொண்டவர். நான் கிளம்பியதுமுதல் வீடுவந்து சேர்வது வரை எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார்.
எனக்கு 19 ஜனவரியில் ஓர் விவாத அரங்கு. தெலுங்கு எழுத்தாளரும் கவிஞருமான ரமேஷ் கார்த்திக், பகவந்த் அனமோலா, அனுராதா சர்மா பூஜாரி ஆகியோர் கலந்துகொண்டனர். நான் அதில் இன்றைய வாசிப்புச் சூழல், மொழியாக்கச் சூழல் பற்றிப் பேசினேன்.
என் அரங்கு முடிந்ததும் அர்ஷியானுடன் அருகே உள்ள பட்டேல் சிலை (ஒருமைப்பாடு சிலை.) பார்க்கச் சென்றிருந்தேன். மிகப்பிரம்மாண்டமான சிலை. தொலைவிலேயே அது மலைகளுக்கு நிகராக எழுந்து நின்றிருப்பதைக் காணமுடிந்தது. அழகிய சிலையும்கூட. அந்தி ஒளியில் எழுந்து நின்றிருந்தது. கடுமையான முகத்துடன் பட்டேல் மலைகளை, கீழே ஓடும் நர்மதையை பார்த்துக் கொண்டிருந்தார்
அந்த இடம் ஒரு சுற்றுலா மையமாக ஆகிவிட்டிருந்தது. சராசரியாக ஒருநாளுக்கு ஐந்தாயிரம்பேர் வருகிறார்கள்.மிகச்சிறந்த விஷயம் ஒன்றை கவனித்தேன். அங்கே ஓர் எல்லைக்குமேல் மின்சார வண்டிகள் மட்டுமே செல்லமுடியும். பெரும்பாலான ஓட்டுநர்கள் இளம்பெண்கள். ஓட்டுவதற்கான உரிமையுடன், கடனாக மின்வண்டிகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அது அந்தப் பகுதியில் ஒரு பெரிய பொருளியல் புரட்சி.
இருபதாம் தேதி நள்ளிரவில் நாகர்கோயில் திரும்பினேன். இன்னும் பத்துநாட்கள், ஜெய்பூர் இலக்கிய விழாவுக்குச் செல்லவேண்டும். அதன் பின் டெல்லியில் என் நூல் A Fine Thread and Other Stories வெளியீட்டு விழா. நேராக வந்திறங்குவது மாத்ருபூமி இலக்கியவிழாவில்.