இரு தெய்வங்கள்

வாரிசா?

அஜிதனின் உரையும் நானும்.

அஜிதன் என் வாரிசா என்ற விஷயத்தை விவாதித்துத் கொண்டிருந்தபோது பரவலாகக் காணக்கிடைக்கும் ஒன்றைப் பற்றி தனியாகச் சொல்லவேண்டும் என்று தோன்றியது.

இங்கே இலக்கியவாதிக்கு அறிவுரை, ஆலோசனை சொல்ல எவருக்கும் எந்த தயக்கமும் இல்லை. இலக்கியவாதி மற்றவர்களால் வழிநடத்தப்பட வேண்டியவன் என்றே நினைக்கிறார்கள். சந்திக்கும் அனைவரிடமிருந்தும் ஆலோசனை, அறிவுரை கேட்காமல் 90 வயதானாலும் எழுத்தாளன் இங்கே வாழமுடியாது

வாரிசு ஆக ஒருவர் எழுதவரும்போது சொல்லப்படும் ஒரு பொதுவான ஆலோசனை உண்டு. பலர் அந்த வாரிசிடம் ‘கரிசனையுடன்’ சொல்வார்கள். ‘நீங்கள் இன்னாரின் மகன் என்பதனால் பலர் பொய்யாகப் புகழ்வார்கள். அதை நம்பிவிடாதிருங்கள்..’  மிக நுட்பமாகச் சொல்லப்படும் ஒரு சூழ்ச்சி அல்லது அப்பட்டமான அசட்டுத்தனம் மட்டும்தான் இது.

இதைச் சொல்பவரின் மனநிலை என்ன? இவர் தன்னை ஒரு மெய்யான, மற்றவர்களைவிட ஒரு படி மேலான வாசகர் என்று   நம்பிக்கொண்டிருக்கிறார். ஆகவே ‘பிறர்’ பற்றி ‘நல்லெண்ணத்துடன்’ எச்சரிக்கை செய்கிறார். ஆனால் மெய்யான நுண்ணுணர்வு கொண்ட எவரும் இதைச் சொல்ல மாட்டார்கள்.

ஏன்? இந்தப்பேச்சு இரண்டு நிராகரிப்புகளை நிகழ்த்துகிறது. ஒன்று, அது ‘இலக்கியவாசகன்’ என்னும் உருவகத்தையே நிராகரிக்கிறது. இலக்கிய வாசகன் என்னும் கருத்துருவகம் எத்தனை முக்கியமானது என இந்தப் பேச்சை முன்வைப்பவர் அறிவதில்லை. ஏனென்றால் அவர் தன்னை இலக்கியவாசகராக நினைக்கவில்லை. தன்னை ஒருவகை ‘சான்றோன்’ என எண்ணிக்கொண்டிருக்கிறார். அதாவது அவர் ஞானம் கனிந்தவர், விவேகமானவர், ஆகவே இலக்கிய வாசகன் பற்றி எச்சரிக்கை செய்கிறாராம்.

ஓர் இலக்கியப்படைப்பை வாசிக்கும் வாசகன் ஒன்றும் அசடோ சூழ்ச்சிக்காரனோ அல்ல. நம் சூழலில் இலக்கியவாசகன் என்பவன் மிக அரிய ஒருவன். நம் சமூகத்தின் அளவை கொண்டு பார்த்தால் லட்சத்தில் ஒருவன். ஒருவன் இலக்கியப் படைப்பை வாசிப்பவனாக அவன் வந்து சேரவே பல படிகளைக் கடந்திருப்பான். பல கல்விநிலைகள் வழியாக பரிணாமம் அடைந்திருப்பான். ஆகவே அவனுக்கு தன் ரசனை என்ன, தன்னுடைய தேவை என்ன, தனக்கு கிடைப்பதென்ன என்று நன்றாகவே தெரியும். தனக்கான முடிவுகளும் தெரிவுகளும் இருக்கும். தான் முன்செல்லவேண்டிய பாதையும் தெரியும். அவன் ஒருவேளை விவாதிக்காமல் இருக்கலாம். ஆனால் இலக்கியவாசகனுக்கு தான் நுண்ணுணர்வுள்ள வாசகன் என்னும் தன்னுணர்வும் இருக்கும்.

ஓர் இலக்கிய வாசகனுக்கு இலக்கிய வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் அறிதலின் இன்பமோ ஆன்மிக வழிகாட்டலோ அன்றி வேறுவகை லாபம் ஏதுமில்லை. ஆகவே அவனுக்கு உள்நோக்கமோ லாபப்பார்வையோ இருக்க வாய்ப்பில்லை. அவனுடைய தெரிவுகளோ நிராகரிப்புகளோ உள்நோக்கம் கற்பிக்கப்படும்போது இலக்கியவாசகன்  அப்படிப் பேசுபவன் மேல் இளக்காரமும் அவமதிப்புமே கொள்வான். அவன் தன்னை சான்றோன் என பாவனை செய்யும் பாமரன் அல்லது சில்லறைச் சூழ்ச்சிக்காரன் என்றே நினைப்பான்.

இலக்கிய வாசகர்கள் தனக்கான எழுத்தாளரை கண்டுகொள்வது, அவரை ஆழமாக பின்தொடர்வது உலகமெங்கும் சாதாரணமாக நிகழ்வது. உண்மையில் அப்படி ‘ஆதர்ச’ ஆசிரியர்கள் இல்லாத ஒருவர் நல்ல வாசகர் அல்ல.  ‘நான் எல்லாரையும் படிப்பேன், எனக்கு எல்லாருமே சமம்’ என்று சொல்லும் ஒருவர் இலக்கிய ரசனை கொண்டவரே அல்ல.

ஆனால் இலக்கிய வாசகர்  ஓர் அரசியல்கட்சித் தலைவருக்கு துதிபாடும் தொண்டனைப் போன்றவர் அல்ல. இலக்கிய வாசகருக்கும் அவரது எழுத்தாளருக்குமான உறவு ஒரு வகை ஆசிரிய மாணவ உறவு. ஆசிரிய மாணவ உறவே பலநிலைகளில் உள்ளது. தந்தை- மகன் உறவாக இருக்கலாம். கிருஷ்ண- அர்ஜுன உறவாகவும் இருக்கலாம். அதிலுள்ளது கல்வியை பகிர்தல். அதில் வாசகன் பெறுபவனாக இருக்கிறான். ஆகவே நன்மை அடைபவன் அவனே. ஆசிரிய மாணவ உறவு என்பது இந்த பூமியில் மானுடம் உருவான காலம் முதல் இருந்து வரும் அறிவியக்கம் என்னும் மாபெரும் அமைப்பை நிலைநிறுத்தும் ஒரு தொடர்ச்சி. ஆசிரியரையும் மாணவரையும் இணைப்பது கல்வி என்னும் இனியதும் தூயதுமான ஒரு செயல்பாடு.

ஆனால் அரசியல் தலைவருக்கு துதிபாடும் தொண்டன் ஆண்டானை வழிபடும் அடிமை அல்லது அரசனை பணியும் படைவீரன் போன்றவன். அங்கே அரசன் சேவையை பெறுபவனாகவும் தொண்டன் அளிப்பவனாகவும் இருக்கிறான். அங்கே இருப்பது கண்மூடித்தனமான வழிபாட்டுணர்ச்சி. வினாவற்ற அடிபணிதல்.மூர்க்கமான குழுவுணர்ச்சி. இந்த வேறுபாடு இலக்கியமறிந்த எவருக்கும் தெரியும். தெரியாதவர் வெறும் வம்பர் அன்றி வேறல்ல.

இலக்கிய வாசகர் என்னும் உருவகத்தை  நிராகரிக்கும் ஒருவர் இலக்கியவாதியே அல்ல. அந்த உருவகம் ஒருவகையில் புனிதமானது, ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கிட்டத்தட்ட கடவுள் போன்ற ஒன்று. இந்த உலகிலுள்ள அத்தனை இலக்கியமேதைகளும் அந்தக் கடவுளை  நோக்கித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் தோன்றியபோதே அவனும் தோன்றிவிட்டான். இலக்கியவாசகன் அந்த அழியாத பேருருவத்தின் ஒரு துளிதான் ஒவ்வொரு தனி வாசகனும். இலக்கியம் மீது எளிய மதிப்பு கொண்ட, இலக்கியவாதி என தன்னை நம்புகிற எவரும் அந்த இலக்கியவாசகனை அவமதிக்க மாட்டார்.

ஆனால் தமிழ்ச்சூழலில் எந்த அடிப்படை அறிதலுமில்லாத அரசியல்வாதிகள், இலக்கியத் தகுதியற்ற அற்பர்கள்  இலக்கியவாசகன் என்னும் உருவகத்தின் மீதான அவமதிப்பைச் செய்துகொண்டே இருக்கின்றனர். இங்கே ஒவ்வொருவருக்கும் தெரியும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த வாசகர்களைப் போல கூர்ந்த பார்வையும் விரிவான வாசிப்பும் கொண்டவர்களை தமிழகத்தில் வேறெந்த சூழலிலும் பார்க்க முடியாது என. இங்கே இன்று எந்த மேடையிலும் தீவிரமான ஓர் ஆழ்ந்த இலக்கிய உரையாடலை நிகழ்த்துபவர்கள் அவர்களில் இருந்து வருபவர்களே. எந்த எழுத்தாளருக்கும் அவர்களின் மிகச்சிறந்த வாசகர்கள் இந்த வட்டத்திலுள்ளவர்களே. அதை பதிவுசெய்த எழுத்தாளர்களே பலர் உண்டு – இந்திய அளவிலேயேகூட.

ஆனால் அவர்கள் என் வாசகர்கள் என்பதனாலேயே எந்த வாசிப்பும், எந்த அடிப்படை அறிவுமில்லாத அற்பர் கூட்டத்தால் இழிவுசெய்யப்படுகிறார்கள். வெறும் தொண்டர்க்கூட்டம் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலும் கிண்டலாகவே கடந்துசெல்கிறார்கள். அவ்வப்போது சில எழுத்தாளர்களும் அந்தக்கூட்டத்தில் இணைந்துகொண்டு ‘சவுண்டு’ விடுவது உண்டு. ஏனென்றால் ஓர் இலக்கியவாசகன் எந்த அளவுக்கு கூர்மையானவனோ அந்த அளவுக்கு இரக்கமற்றவனும்கூட. அவனுடைய நிராகரிப்புகளும் திட்டவட்டமானவை. அவற்றை அவன் வெளிப்படுத்தாமலிருப்பதும் இல்லை. ஏனென்றால் அவனுக்கு லாபநோக்கம் இல்லை, ஆகவே அவனிடம் எச்சரிக்கைகளும் இடக்கரடக்கல்களும் இல்லை. விளைவாக சிலர் புண்பட நேரிடலாம். அதற்கு எதுவும் செய்ய முடியாது. அது காலத்தின் கருத்து. இலக்கியமென்னும் அறிவியக்கத்தின் தராசு.

ஓர் எழுத்தாளன் வாசகர் தன்னை ஏற்பதில்லை என்பதனாலேயே  வாசகரை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறார் என்றால் அவர் எழுத்தாளர் அல்ல, ஆழமான தாழ்வுணர்ச்சி கொண்ட எளிய மனிதர், அவ்வளவுதான். அவர்  வாசகர் என்னும் உருவகத்தையே சிறுமை செய்கிறார் என்றால் அவர் ஏதும் எழுதப்போவதுமில்லை. இறந்துவிட்ட ஆளுமை அவர். வாசகர் என்னும் பேருருவம் தன் முன் உள்ளது, என்றோ அது தன்னை கண்டடையும் என்னும் நம்பிக்கை எழுத்தாளனுக்கு இருந்தாகவேண்டும். அதுவே அவனை பேசவைக்கிறது. ஏனென்றால் வாசகர் என்னும் தொகுப்புதான் மானுட அறிவியக்கத்தின் தோற்றம், காலப்பேருருவம் அது.

வாசகர்கள் ஒருவரை ஏற்பதும் மறுப்பதும் எளிதாக நிகழ்ந்துவிடுவதில்லை. மிக எளிய எழுத்தாளர்கள், எதையும் உண்மையில் உருவாக்க முடியாதவர்கள் அடிக்கடி சொல்லும் ஒன்று உண்டு. ‘இப்பல்லாம் இலக்கியம் யாருக்கு சார் வேணும்? எல்லாரும் காக்காய் புடிச்சு, பணம் செலவு பண்ணி மீட்டிங் போட்டு எழுத்தாளர் ஆயிடறானுங்க. சண்டை சச்சரவு பண்ணி புகழ் அடைஞ்சிடறாங்க. சாதிதான் சார் இங்க எல்லாமே…நமக்கு அதெல்லாம் வேண்டாம்னு இருக்கேன்’ . இந்தப் பரிதாபமான கூற்றுக்கு பின்னால் உள்ளது உண்மையில் வாசகன் என்ற அந்த பேருருவம் மீதான அவமரியாதை. அவனை உள்ளூர நம்ப முடியாத தாழ்வுணர்ச்சி.

இந்த மனநிலையால் இழிவுசெய்யப்படுவது  இலக்கியம் என்னும் இயக்கமும் கூடத்தான். எப்படியும் பத்தாயிரம் ஆண்டுகளாக இங்கே இருந்துகொண்டிருக்கும் ஒரு மானுடப்பேரியக்கம் இலக்கியம். அதற்கென சில செயல்முறைகள் உள்ளன. அதற்கென வடிவங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. நல்ல படைப்புக்கு தன்னை வாசகனுக்கு தொடர்புறுத்திக்கொள்ளத் தெரியும். ஆகவேதான் எங்கோ எவரோ எழுதியது மொழியாக்கம் வழியாக நம் ஆத்மாவுக்குள் வந்துசேர்கிறது. அதுதான் இலக்கியத்தின் ஆற்றல். அதை நாம் நம்பவேண்டும், அந்த நம்பிக்கை இல்லாதவன் இலக்கியவாசகனோ எழுத்தாளனோ அல்ல.

உண்மை, சிலசமயம் சில நல்ல படைப்புகள் உரிய கவனம் பெறாதுபோகலாம். பேரிலக்கியங்களே கவனம் பெறாது போய்விட்ட சூழல் அமைந்ததுண்டு. ஒரு காலகட்டத்தின் பொதுமனநிலையுடன் ஒவ்வாதபடி விலகி நின்றிருக்கும் பெரும்படைப்புகள் நிராகரிக்கப்பட்டதுமுண்டு. இலக்கியத்தை விட கேளிக்கைப் படைப்புகளே எல்லா காலகட்டத்திலும் புகழ்பெற்றிருக்கின்றன. வெறும் விளம்பரமும் பரபரப்பும் சில படைப்புகளை புகழ்பெறச் செய்யக்கூடும். பல படைப்புகளுக்கு கூடவே ஒரு கலாச்சார அறிமுகமும் தேவையாகின்றது.

ஆனால் இலக்கியம் தன் இயல்பான ஆற்றலால் வாசகனைச் சென்றடையும். எல்லா நல்லபடைப்புகளும் எப்படியோ மானுட உள்ளத்தைச் சென்றடைகின்றன என்று இலக்கியத்தை ஓர் அக அனுபவமாக அடைந்த எவருக்கும் ஓர் உறுதிப்பாடு இருக்கும். ஓர் இலக்கியப்படைப்பின் மீதான விமர்சனம் ஏற்போ மறுப்போ ஆக இருக்கலாம். ஆனால் இலக்கியம் செயல்படும் முறையை ஒட்டுமொத்தமாக வெறும் வம்புச்செயல்பாடாக அல்லது ஊழலாக மட்டுமே காணும் ஒருவர்  மறைமுகமாக இலக்கியத்தையே நிராகரிக்கிறார்.

ரிக் வேதத்தில் ஒரு வரி உண்டு, “நான் பிரம்மத்தை நிராகரிக்காமல் இருப்பேனாக. பிரம்மம் என்னை நிராகரிக்காமல் இருப்பதாக. பரஸ்பர நிராகரிப்பு நிகழாதிருக்கட்டும்”

***

முந்தைய கட்டுரைவிஷ்ணு சாஹராஜ விலாசம்
அடுத்த கட்டுரைA Fine Thread- மொழிபெயர்ப்பாளர் குரல்