இந்தியக் கலையின் நோக்கங்கள், தாமரைக்கண்ணன், அழிசி பதிப்பகம்
ஆசிரியருக்கு,
ஆனந்த குமாரசாமியின் மூன்று கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு அடங்கிய ’இந்திய கலையின் நோக்கங்கள்’ தொகுப்பை நீங்கள் வெளியிட்டதை உங்கள் ஆசியாகவே கருதுகிறேன். என் முதல் நூல். இதை மிக அழகாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் அழிசி ஸ்ரீனிவாசனுக்கு நன்றிகள்.
2017 ஜனவரியில் உங்களுடனும் நண்பர்களுடம் கொடஜாத்ரி சென்றோம். அதுதான் உங்களுடனான என் முதல் பயணம். இரண்டாம் நாள் பயணத்தில் செல்வேந்திரன் உங்களிடம் ‘நம்முடைய இன்றைய சிந்தனைகளை செதுக்கிய 10 நபர்களை சொல்லுங்கள் ஜெ’ என்றார். ”டி.எஸ்.எலியட், ஐ,ஏ.ரிட்ச்சர்ட், வில்லியம் எம்ப்சன், ஹெரால்ட் ப்லூம், தோரோ, எமர்சன், ஜெ.எஸ்.மில், செல்லி, எஸ்ரா பவுட், அரவிந்தர், ஆனந்த குமாரசாமி” என்றீர்கள். நானும் கிறுக்கலாக குறித்துக்கொண்டேன். இதில் இருவர் மட்டுமே இந்தியர். அரவிந்தரை வீட்டு பூஜை அறையில் படமாக தெரியும். ஆனந்த குமாரசாமி யார் என தெரியாது. விக்கிபீடியாவில் படித்தேன், சிவ நடனம் புத்தகம் பற்றியும் அறிந்து கொண்டேன், படிக்க முயன்றேன். ஆனால் படிக்கவில்லை.
மீண்டும் 2021 புத்தாண்டு நாளில் நீங்கள் ஜெயராம் இந்திய ஓவியங்கள் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்தீர்கள். அதில் இந்திய கலைபற்றிய பார்வையில் ஆனந்த குமாரசாமியின் பங்களிப்பு என்ன என்று கூறினீர்கள். அது இன்று தமிழ் விக்கியில் இன்னும் விரிவாக உள்ளது. அன்றைய நிகழ்விற்கு வரும் போது நான் அறிவியல் தத்துவம் நூலை மொழிபெயர்த்து முடித்திருந்தேன். மேற்கொண்டு என்ன மொழிபெயர்ப்பது என தெரியாமல் துழாவிக்கொண்டிருந்தேன். நிகழ்வில் எதாவது கிடைக்கும் என உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது. சரியாக நீங்களும் ஆனந்த குமாரசாமியின் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றீர்கள். அடுத்தநாளே சிவநடனம் கட்டுரையை மொழிபெயர்க்க துவங்கினேன். முதலில் அவரின் மொழி புரிந்துகொள்ள கடினமாக இருந்தாலும் இன்று இல்லை.
ஆனந்த குமாரசாமியின் நூல்களில் சிவநடனத்திற்கு தமிழில் இரு மொழிபெயர்ப்புகள் உள்ளன. இதில் சிவநடனம் கட்டுரைக்கு மட்டும் மூன்று மொழிபெயர்ப்புகள் உள்ளன. இவைகளை ஒப்பீடு செய்துபார்த்தேன். அதில் இலங்கையைச் சேர்ந்த சோ.நடராசன் அவர்களின் மொழிபெயர்ப்பு மொழி பழமையானது மற்றும் ஆங்கில மூலத்தின் துணையுடன் வாசிக்கவேண்டியது என்றாலும் சரியான மொழிபெயர்ப்பு.
த.நா.குமாரஸ்வாமி மொழிபெயர்த்த கோதம புத்தர்: சிந்தனை அமுதம் (The living thoughts of gowthama buddha) நூலை சீர்மை பதிப்பகம் தற்போது மீண்டும் பதிப்பிற்கு கொண்டுவந்துள்ளது.
பெரும்பாலும் அவரின் முக்கிய நூல்கள் என தேடினால் கிடைப்பது the dance of shiva, History of Indian and Indonesian art, The transformation of nature in art, Christian and Oriental Philosophy of Art, ‘Figures of speech, or, Figures of thought’ போன்றவையே. இதில் the dance of shiva, History of Indian and Indonesian art தவிர பிறவை பிற்காலத்தில் 1930-க்கு பிறகு அவர் கலை சார்ந்த விளக்கங்கள் மற்றும் விவாதங்களை தவிர்ந்து மெட்டாபிசிக்ஸ் சார்ந்தும் தூய அழகியல் சார்ந்தும் எழுதியவை. இதில் தாந்தே, எக்கார்ட், பிளேட்டோவை தொடாத ஒரு கட்டுரை கூட இல்லை. இவைகளையே அவரின் முக்கியமான ஆக்கங்கள் என அவரின் வாழ்கை வரலாற்றை எழுதி, முக்கியமான கட்டுரைகளை தொகுத்த ரோஜர் லிப்ஸி போன்ற மேற்க்கத்திய அறிஞர்கள் முன்வைக்கின்றனர். இவை முக்கியமான ஆக்கங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேசமயம் அவர் இந்திய கலை மற்றும் தெய்வங்கள் பற்றி எழுதியவையும் முக்கியமானவை. இவை பெரும்பாலும் இன்று நூல்களாக கிடைப்பதில்லை. பல கட்டுரைகள் தொகுக்கப்படாமல் வெளிவந்த இதழ்களில் மட்டும் உள்ளன. விரிவாக தேடினால் அவற்றை எப்படியும் இணையத்தில் அர்க்கைவ் போன்ற தளங்களில் கண்டுபிடித்துவிடலாம். அவ்வாறு கிடைத்த மிக முக்கியமான கட்டுரைகளையே தற்போது மொழிபெயர்த்து தொகுப்பாக கொண்டுவரும் பணியில் இருக்கிறேன்.
அந்த வகையில் ஸ்ரீலக்ஷ்மி கட்டுரை நீலி இதழில் வெளிவந்துள்ளது, புத்தரின் வடிவம் பற்றிய கட்டுரை அகழ் இதழில் வெளிவந்துள்ளது. அடுத்து சமணக்கலை பற்றி அவர் எழுதிய கட்டுரைகளை மொழிபெயர்க்க இருக்கிறேன். அதில் மிக சுவாரஸ்யமான கட்டுரை சமண கலை மற்றும் தொன்மங்களுக்கும் வேத படிமங்களுக்குமான தொடர்பு. உங்களுடைய இரண்டு தத்துவ வகுப்புகள் இல்லாமல் இக்கட்டுரைகளை சரியான புரிதலில் படித்திருக்கக்கூட முடியாது. தத்துவ வகுப்புகள் அளித்த தெளிவே இந்த தளங்களில் மொழிபெயர்ப்பதற்கான அடித்தளத்தை எனக்கு அமைத்தன.
இந்த மொழிபெயர்ப்புகளை படித்த நண்பர்கள் இருவருடன் நடந்த விவாதங்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். முதல் விவாதம் ஈரோடு கிருஷ்ணனுடன் நிகழ்ந்தது. முதலில் நான் பெரும்பாலும் மூல கட்டுரையின் மொழியை அப்படியே தமிழில் கொண்டுவர முயற்சித்தேன். ஆனந்த குமாரசாமியின் துவக்ககால கட்டுரைகளில் மொழியும் சிக்கலானது, சுவார்ஸ்யமும் குறைவானது. பல கருத்துக்களை அடுக்கிச் செல்வார். இத்தகைய கட்டுரைகளில் மொழிபெயர்ப்பாளன் மூலத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா அல்லது வாசகனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா என கேட்டார் கிருஷ்ணன். உடனே நான் மூலத்திற்குதானே விசுவாசமாக இருக்க வேண்டும் என்றேன். அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நீங்கள் ஊகித்து அறிந்துவிடுவீர்கள். ஆனால் கிருஷ்ணின் பதில் அப்போது சரியாக இல்லை என நான் நினைத்தாலும் பின்னால் அதுவே சரி என உறுதியானது. முதலில் மொழிபெயர்த்த அனைத்தையும் மீண்டும் மொழிபெயர்த்து திருத்தினேன். அதுவே தற்போது நூலாக வெளிவந்துள்ளது.
இரண்டாவது விவாதம் எழுத்தாளர் விஷால் ராஜாவுடன் நிகழ்ந்தது. குமாரசாமியின் கட்டுரைகளில் அப்போதைய மேற்கு உலகுடன் அவர் நிகழ்த்திய விவாதம் இடையிடையே நிகழ்ந்துகொண்டே இருக்கும். அது முக்கியமானது என்றாலும் தற்போதைய வாசகனுக்கு அது கட்டுரையின் ஒருமையை சிதைப்பதாக தெரியும். அது அந்த காலகட்டத்தின் தேவை. இந்த காலகட்டத்திற்கு இதை மறுஆக்கம் செய்யலாம், க.நா.சு தன் மொழிபெயர்ப்புகளில் செய்திருப்பதில் போல என்றார் விஷால். இதை கவனத்தில் கொண்டே ஸ்ரீலக்ஷ்மி கட்டுரையை மொழிபெயர்த்தேன். அவர் அக்கட்டுரையை மிக அழகாக கொண்டுசென்றிருப்பார். கவித்துவமாக முடித்திருப்பார். ஆனால் அதில் நிகழும் விவாதம் அதன் அழகை குலைத்திருக்கும். ஆகவே அதை நீக்காமல் கட்டுரையில் இருந்து வெளியே எடுத்து அடிக்குறிப்பாக கொடுத்தேன். இது அக்கட்டுரையை மேலும் அழகியதாக்கியது. கிருஷ்ணன் சொல்லியதும் இதுவே. மூலத்தின் வடிவை மொழியை இன்றைய காலத்திற்காக மாறி மொழியாக்கம் செய்யும் போது அது மேலும் ஒருமையுடன், அழகியதாக, வாசிக்க உகந்ததாக ஆகிறது. (நிச்சயமாக இதை புனைவிற்கும், நித்யாவின் கட்டுரைகள் போன்று கவித்துவமான தத்துவ கட்டுரைகளுக்கும் சொல்லமாட்டேன்). இதுவே மூலத்திற்கு செய்யும் நிஜ விசுவாசம் என்றார் கிருஷ்ணன்.
இந்த மொழிபெயர்ப்புகள் வழியாக நான் எனக்கான பாதையை அமைத்துக்கொண்டேன். தற்போது குருகு இதழில் கிருஸ்துவின் வடிவங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதிவருகிறேன். பல நூல்கள் மற்றும் கட்டுரைகளை தழுவி எழுதுகிறேன். இதில் ஆனந்த குமாரசாமியின் பார்வையும், அவருடைய கட்டுரைகளின் முறைமையும் மிக உதவிகரமாக இருந்தன.
இனி ஆனந்த குமாரசாமியின் முழுதொகுப்பை முடிக்கவேண்டும். மேலும் பல திட்டங்கள் உள்ளன. இவைகளை துவங்கி வைத்த உங்களுக்கும் பலவகையில் உதவியாக இருக்கும் நம் நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
தாமரைக்கண்ணன் அவிநாசி.