நுண்ணுயிர்களின் ஆடல் – கடிதம்
ஜெயமோகன்,
சாரங்கனின் நுண்ணுயிரிகளின் ஆடல் கடிதம் படித்தேன். நரேனின் ” கனவு காய்ச்சல் ” மொழிபெயர்ப்பு கதையை படிக்கும் முன் ரே ப்ராட்பரியின் “Fever Dream ” படித்தேன். நரேனின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். தலைப்பு “காய்ச்சல் கனவு ” என்று இருக்க வேண்டுமோ ?
ரே ப்ராட்பரியின் “Fever Dream ” அற்புதமான கற்பனை . அது குறித்து சில வார்த்தைகள் .
இந்தக் கதைக்கும் என் வாழ்க்கைக்கும் ஒரு நேரடித் தொடர்பு உண்டு .
உண்மை பெரும்பாலும் அதீத கற்பனைக்கும் அப்பால் உள்ளது .
ஆங்கில மருத்துவத்தின் அடிநாதமே கிருமிக் கோட்பாடுதான் (Germ Theory). நான் சி .எம் .சி மருத்துவ கல்லூரியில் MD Physiology படித்து கொண்டிருந்தபோது இரு கருதுகோள்களை பதிப்பித்தேன். அவை சுருக்கமாக,
- பெரும்பாலான நோய்களுக்குப் பின்னால் ஒரு பொதுவான அடிப்படை வழிமுறை உள்ளது. பெரும்பாலான நோய்கள் வார்பர்க் விளைவை (Warburg effect) நோக்கி செல்கின்றன. பொதுவான சொற்களில் – பெரும்பாலான நோய்கள் இறுதியில் புற்றுநோய் போன்ற நிலையை வெளிப்படுத்துகின்றன.
புற்றுநோய் செல்களைக் கொல்வது கடினம். மரணம் என்பது செல்கள் இறவா நிலையை அடைவதினால் உறுப்புகளின் ஒருங்கிணைந்த கட்டுமானம் தகர்தல். அதாவது மரணம் என்பது செல்களின் இறவா நிலை நோக்கிய பயணம் .
- எனது அடுத்த கருதுகோள், கிருமிக் கோட்பாட்டிற்குப் பிறகு மருத்துவத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றம் என்பது என் கருத்து .
நோயைப் புரிந்து கொள்ள, நமது யூகாரியோடிக் செல்கள் எவ்வாறு உருவாகின என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எண்டோசைம்பியோடிக் (Endosymbiotic) கோட்பாட்டின் படி: யூகாரியோடிக் (Eukaryotic) செல்களின் பரிணாமம் என்பது இரு புரோகாரியோடிக் (Prokaryotic) செல்கள் – ஆர்க்கியா (அஸ்கார்ட்) மற்றும் ஆல்பாபுரோட்டியோபாக்டீரியம் (ரிக்கெட்சியா) ஆகியவற்றுக்கு இடையேயான பலன்தரும் இணைப்பின் விளைவாகும் என்று கூறுகிறது.
முந்தையது செல்லின் நியூக்ளியசை உருவாக்குகிறது, பிந்தையது செல்லின் மைட்டோகாண்ட்ரியாவை உருவாக்குகிறது. நம்மை புரிந்து கொள்ள ஆர்க்கியா (அஸ்கார்ட்) மற்றும் ஆல்பாபுரோட்டியோபாக்டீரியம் (ரிக்கெட்சியா) ஆகியவற்றுக்கு இடையேயான டிரில்லியன் வருட போரை புரிந்து கொள்ள வேண்டும் .
நமது யூகாரியோடிக் செல்களில் இரு வேறு மரபணுக்கள் உள்ளன . ஒன்று நமது நியூக்ளியஸ் உடைய மரபணு, மற்றொன்று மைட்டோகாண்ட்ரியா உடைய மரபணு. அதாவது நம் செல்லில் இரு வேறு உயிர்கள் வாழ்கின்றன. இவற்றுக்கிடையே ஒரு ஒத்திசைவான தொடர்பு உள்ளது .
நியூக்ளியஸ் மற்றும் மைட்டோகாண்ட்ரியா ஆகிய இரு அமைப்புக்கிடையிலான ஒத்திசைவு குலைவதினால் நோய் உண்டாகிறது .
இந்த கருதுகோள்கள் என் காலத்தில் நிரூபிக்கப்பட வாய்ப்பு குறைவு .
—
இலக்கியமும் அறிவியலும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது.
ஒரு கிருமி எப்படி ஒருவரைக் கொன்றாலும் அவனில் என்றென்றும் வாழ்கிறது என்பது ரே பிராட்பரியின் அற்புதமான கற்பனை. ஒரு கிருமி எவ்வாறு ஒரு நபரை ஆக்கிரமித்து அவனது உடலாக மாறுகிறது என்பதை அவர் ஊகிக்கிறார்.
கோடிக்கணக்கான ப்ரோகேரியோடிக் செல்கள் நமது யூகார்யோட்டிக் செல்கள் உடன் இணைந்து உருவாக்கியதே நம் உடம்பு. உண்மையில் நம் யூகாரியோடிக் செல்லை உருவாக்கியதே மேற்கூறிய இரு ப்ரோகேரியோடிக் செல்கள்தான். நான் என்பது ஒருமை அல்ல பன்மை.
இறுதியாக மரணம் என்பது இறவா நிலை நோக்கிய பயணம் .
நன்றி ,
Dr .வசந்தகுமார் நடேசன் .