ரூமியை புனைதல்
அன்புள்ள ஜெ,
இப்போதுதான் தாகங்கொண்ட மீனொன்று மற்றும் ரூமி கவிதைகள்: இதயங்களின் உதவியாளர் ஆகிய இரு புத்தகங்களையும் படித்துமுடித்தேன்.
பிறந்த உடனேயே ஒரு குழந்தை எழுத தொடங்கிவிட்டால் அது என்ன எழுதும்? எதை பற்றி எழுதும்? அது எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் என்னுள் நீண்ட காலமாக இருந்துவந்தது. அக்கேள்விகளுக்கான விடையை ரூமியின் கவிதைகளில் நான் கண்டடைந்தேன். மிக மிக தூய்மையான இதயத்தில் இருந்து இக்கவிதைகள் வந்துள்ளன.
ஒரு சிறுதுளி கூட கசப்பில்லை. பேரருளும் பெரும் வெளிச்சமும் மட்டுமே ஒவ்வொரு கவிதையிலும் திரண்டிருக்கின்றது. என் இதயத்திலுள்ள முட்களையெல்லாம் இன்று நான் இழந்திருக்கிறேன். எடையற்று உணர்கிறேன். இவற்றை எல்லாம் கவிதைகள் என்று கூட கூறமாட்டேன், இவை ஆதனில் விளையும் பயிர்.
தாகங்கொண்ட மீனொன்று புத்தகத்தை மொழியாக்கம் செய்த என். சத்தியமூர்த்தி அவர்களுக்கும், ரூமி கவிதைகள்: இதயங்களின் உதவியாளர் புத்தகத்தை மொழியாக்கம் செய்த க. மோகனரங்கன் அவர்களுக்கும் மிக்க நன்றி. மொழியாக்கம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
தாகங்கொண்ட மீனொன்று புத்தகத்தின் பிற்பகுதியில் ரூமியை பற்றிய அறிமுக குறிப்புகள் உள்ளன, அதனை முதலிலேயே படித்துவிட்டு அதன் பிறகு கவிதைக்குள் நுழைவது சாலச்சிறந்தது.
கவிதைகள் மேல் ஆர்வங்கொண்டவர்கள் அனைவரும் இவ்விரு புத்தகங்களையும் கட்டாயம் படிக்க வேண்டும். இந்த இரு புத்தகங்களும் என்னை அருவியில் நிற்பதை போல உணர வைக்கவில்லை, அருவியாகவே ஆக்கிவிட்டது. ஒரு துளியும் சத்தம்போடாத அமைதியான அருவியாக.
சோர்பாவும் ரூமியும் அருகருகே ஆடிக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்திலேயே சோப் எங்கப்பா சோப் எங்கப்பா என்று இன்னொரு பெருசும் ஆடிக்கொண்டிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் வெகு அருகில்தான்
மாயாண்டியும் சுடலை மாடனும் வெறியாட்டு நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
– மணிமாறன்