இரு நூல்கள்- கடிதங்கள்

கோவை ஞானி பற்றி பலவாறாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய நூல்கள் இன்று ஏராளமாக வாங்கக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை 2020க்குப்  பிறகு வாசிக்க வந்த என்னைப் போன்ற வாசகர்கள் புரிந்துகொள்வது கடினம். அவர் எந்த சூழலில் இருந்து பேசினார் என்பது தெரியவில்லை.  அன்றைய மார்க்ஸிய விவாதங்களும் தமிழிய விவாதங்களும் நமக்கு பிடிகிடைப்பதில்லை. காரணம் இன்றைக்கு அவை யெல்லாம் மாறிவிட்டிருக்கின்றன.

இன்று தமிழ்ச்சூழலில் மார்க்ஸிய விவாதங்கள் அனேகமாக இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. இணைய உரையாடல்கள் எல்லாமே வசைகள்தான். வினவு தளம் அப்படி எல்லா விவாதங்களையும் தனிப்பட்ட வசைகளாக ஆக்கியது. என்னைப்போன்ற ஒருவர் உண்மையில் கோவை ஞானி என்னதான் சொன்னார் என்று இன்றைக்கு தெரிந்துகொள்வது மிகவும் கடினம். அன்றைக்கு நிகழ்ந்த விவாதங்களையும் அவை நிகழ்ந்த சூழலையும் படிக்கச் சுவாரசியமாக சுருக்கமாக எவரும் எழுதியதில்லை. எழுதினாலும் இன்னொரு தரப்பை வசைபாடி ஒருதலைப்பட்சமாக எழுதப்பட்ட சில உதிரிக்குறிப்புகளே உள்ளன.

ஆகவே கோவை ஞானி போன்ற அறிஞர்கள் அப்படியே காணாமலாகிவிடும் சூழல்தான் இன்றைக்கு உள்ளது. இன்னும் நாலைந்தாண்டுகளில் அவரை எவராவது வாசிப்பார்களா என்பதே சந்தேகமான விஷயம்தான். கோவை ஞானியின் வாழ்க்கை வரலாறு என்று நினைத்துத்தான் உங்கள் நூலை வாங்கினேன். ஆனால் வெறும் நினைவுகளாக இல்லாமல் ஓர் அரசியல் சிந்தனையாளரை முழுமையாக அவருடைய சூழலுடன் சேர்த்து அறிமுகம் செய்துள்ளீர்கள். மிகுந்த மனநிறைவை அளிக்கும் நூல் அது. அதேசமயம் மிக விரிவான ஒரு வரலாற்றுச்சித்திரத்தையும் அது அளிக்கிறது. நன்றி

கோ.மாணிக்கவாசகம்

je,

சாதி ஓர் உரையாடல் நான் வாசித்த முக்கியமான நூல். ஓர் ஆய்வு நூலின் சலிப்பு இல்லாமல் சாதி என்ற அமைப்பு எப்படி உருவானது என்றும் எப்படி நிலை நிற்கிறது என்றும் அதைப் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் என்னென்ன என்றும் சொல்லும் நூல் அது.

கேள்வி பதிலாக அமைந்திருப்பதனாலேயே அதை சலிப்பில்லாமல் வாசிக்க முடிகிறது. பொதுவாக இங்கே சாதி பற்றிப் பேசுபவர்கள் எல்லாருமே அரசியல் அடிப்படையில் முன்னரே அவர்கள் முடிவெடுத்த சில நிலைபாடுகளை முன்வைப்பவர்கள் மட்டுமே. தமிழகத்தில் எல்லாருமே கொள்கை அடிப்படையில் சாதிக்கு எதிரானவர்கள். ஆனால் சாதி ஒழியவில்லை. அரசியல் வலிமை பெறும்போது சாதி வலிமை பெறுகிறது. அந்த புதிரை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

சிவபாலன்

முந்தைய கட்டுரைசிறு சிறுகதைகள்: கடிதம்
அடுத்த கட்டுரைகதிர்காமு ரத்தினம்