விஷ்ணுபுரம் செல்லும் வழி

 விஷ்ணுபுரம் நாவல் வாங்க

இந்த ஆண்டு புத்தக விழாவில் வழக்கத்தை விட கூடுதலாக விஷ்ணுபுரம்  விற்றுக்கொண்டிருந்ததைக் கண்டேன். விஷ்ணுபுரம் எப்போதுமே மிகப்பெரிய அளவில் விற்பதில்லைஅது வெளிவந்த முதற்சில ஆண்டுகளை தவிர்த்தால். ஆனால் விற்காமலாவதுமில்லை. கால்நூற்றாண்டுக்கும் மேலாக அது எப்போதுமே விற்றுக்கொண்டிருக்கும் நூல். அதன் வாசகர்கள் பொதுவாக புனைவு வாசிப்பவர்கள் அல்ல. அதற்குரிய தனி வாசகர்கள் அவர்கள். வாசிப்பு, தத்துவத்தேடல், கலைப்பயிற்சி என  சில படிகளினூடாக அங்கே வந்து சேர்பவர்கள். அவர்கள் பெருகுவதில்லை, எப்போதும் இல்லாமலாவதுமில்லை.

இவ்வாண்டு அதை வாங்குபவர்கள் நாலைந்து பேரிடம் நானேஅது அவ்ளவு ஈஸியா படிக்கக்கூடிய புத்தகம் இல்லைஎன்று சொல்ல முற்பட்டேன். “தெரியும்சார். தெரிஞ்சுதான் வாங்குறேன்என்றார்கள். பலர் வெண்முரசு படித்து முடித்து வாங்குபவர்கள். வெண்முரசு எவரும் வாசிக்கலாம். அதில் நவீன இலக்கியம் கண்டடைந்த எல்லா கதைகூறல் முறைமைகளும் உள்ளன. படிமங்களாலேயே முன்னகரும் பகுதிகள் உள்ளன. தூய கவித்துவம் மட்டுமே கொண்ட பகுதிகளும் உள்ளன. ஆனால் அதன் வலுவான கதையோட்டம், தெளிவாக வரையறை செய்யப்பட்ட கதைமாந்தர்கள் ஆகியவை வாசிப்பை முன்னெடுத்துச்செல்ல உதவுவன

விஷ்ணுபுரம் அப்படி அல்ல. அதன் கதையோட்டம் துண்டுபட்டது. தொட்டுத்தொட்டுச் செல்லும் கதையில் கதாபாத்திரங்கள் வெவ்வேறு  இடங்களில் தோன்றுகிறார்கள். ஒவ்வொரு முறையும் நுணுக்கமாக அவர்கள் உருமாறியிருக்கிறார்கள்.  அவ்வாறுதான் கதைமாந்தரின் பரிணாம வளர்ச்சி வெளிப்படுகிறது. கதை நிகழ்வுகளை வாசகர்கள் நினைவில் இணைத்துக்கொள்ளவேண்டும். ஆகவே அது சீரான வாசிப்பை அளிப்பது அல்ல. வாசிப்பு துண்டுபடுவதனாலேயே அதன் வாசகர்கள் பலர் அவ்வப்போது வாசிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்குகிறார்கள்.

புத்தகக் கண்காட்சியில் பார்த்த சிலரிடம் மிகச்சுருக்கமாக விஷ்ணுபுரம் வாசிப்பைப் பற்றிப் பேசினேன். நேரமில்லை என்பதனாலேயே அவ்வளவு செறிவாகச் சொல்லவேண்டியிருந்தது. 

விஷ்ணுபுரத்தின் வடிவம் சிக்கலானது என தோன்றலாம். அதை பின்நவீனத்துவ நாவல்களுக்குரிய மீமொழிபு (மெட்டாநரேட்டிவ்) கொண்ட நாவல் எனலாம். ஆனால் இந்தியப் புராணங்களுக்குரிய வடிவமும் அதுதான். உண்மையில் நாம் அறிவார்ந்த பலவற்றை அறியும் விதமே அதுதான். நாம் எப்படி ஓர் அறிவுத்தளத்துக்குள் நுழைகிறோம்? முதலில் ஒரு புரிந்துகொள்ளமுடியாத அனுபவம். ஒரு கனவு போன்ற திறப்பு. அதன் வசீகரத்தால் நாம் அதனுள் ஈர்க்கப்படுகிறோம். கிடைப்பவற்றை வாசிக்கிறோம்.  அங்கும் இங்குமாக சிலவற்றை அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். அவற்றை ஒன்றுடனொன்று பொருத்திப்பொருத்தி ஒரு முழுமையான சித்திரத்தை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்கிறோம்.  

நாம் மூலநூல்களை பயில்வதும் அவ்வாறே. தொன்மையான மூலநூல்கள் நமக்கு பெரும்பாலும் எவராலோ அறிமுகம் செய்யப்பட்டு நமக்கு கிடைக்கின்றன. அவற்றின் சில பகுதிகள் நமக்கு புரிகின்றன. சில பகுதிகள் பின்னர் தான் புரிகின்றன. சிலவற்றுக்கு பாடபேதம் உள்ளது. திருமந்திரமோ உபநிடதமோ நாம் நம்முள் அவற்றை எப்படி வளர்த்து முழுமையாக்கிக் கொள்கிறோம் என்பதை ஒட்டியே பொருள் கொள்கின்றன. மொத்தமாக ஒரே மூச்சில் நாம் உள்வாங்கிக் கொள்வதில்லை

இதுவே சாத்தியமான அறிதல் என்பது ஒரு புறம். இதுவே அறிதலுக்கான சிறந்த வழிமுறை என்பதும் முக்கியமானது. ஏனென்றால் இப்படி நாமே முயன்று கற்பதன் வழியாக நம்முடைய முழு ஆற்றலையும் குவிக்கிறோம். நம் கற்பனை, அறிவுத்திறன், உள்ளுணர்வு ஆகியவை முழுமையாக அந்தக் கல்வியில் ஈடுபடுகின்றன. அவ்வாறு நாம் வளர்கிறோம். ஓர் இடம் நமக்குப் புரியவில்லை என்றால்தான் அங்கே நம் கற்பனை வீச்சு பெறுகிறது. நம்மால் உணரமுடியாத ஒரு புள்ளியில்தான் நம் நுண்ணுணர்வு முழுக்கூர்மையை அடைகிறது. நம்முடைய தொழிலை நாம் அப்படித்தான் கற்றுக்கொண்டிருப்போம். 

அதேபோலத்தான் தத்துவம், ஆன்மிகம் ஆகிய துறைகளில் கல்வி நிகழமுடியும். அதாவது நூல்களில் ஞானம் இருக்கும், நாம் அப்படியே அவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்பது பிழையானது. நூல்கள் புதையல் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டும் வரைபடங்கள் போல. வரைபடத்தை புதிரவிழ்த்து புரிந்துகொண்டு பயணம் செய்து புதையலை எடுக்கவேண்டியவர்கள் நாமேதான். வரைபடம் கையிலிருந்தால் புதையல் கிடைத்துவிட்டதாகப் பொருளில்லை.   

விஷ்ணுபுரம் போன்ற நூல்களின் அமைப்பு அவ்வாறுதான் அமைந்துள்ளது. அந்த அமைப்பு வாசகனுடன் விளையாடவோ அவனை குழப்பவோ உருவாக்கப்பட்டது அல்ல. அந்நாவலில் மிக நீண்ட வரலாற்றுக் காலகட்டத்தைச் சொல்லவேண்டியிருக்கிறது. சிந்தனையின் பல படிநிலைகளையும் அவற்றுக்கிடையேயான உரையாடலையும் சொல்லவேண்டியிருக்கிறது. அந்த உயர்சிந்தனைக்கு நிகராக சாமானியர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்றும் சொல்லவேண்டியுள்ளது. சிந்தனையும் உள்ளது, கூடவே தியானம் வழியாக உருவாகும் படிமங்களும் உள்ளன. ஆகவே தான் அது செறிவானதாக உள்ளது. செறிவு எப்போதுமே சிக்கலானது.

விஷ்ணுபுரம் வாசிப்பு சிக்கலானது. ஆனால் இன்றுவரை அதை வாசித்துணர்ந்த எவரும் அந்த வாசிப்பு பயனற்றது என சொல்ல நேரிட்டதில்லை. நவீனத் தமிழிலேயே வாசிப்புக்காகச் செலவிடும் உழைப்பு முழுமையாகவே பயனுள்ளது என ஒருவர் உணரும் நூல் விஷ்ணுபுரம் மட்டுமே. அதை கடந்துசெல்லும் ஒருவர் இந்திய சிந்தனைமுறைகள், இந்திய கலைமரபுகள், இந்திய வரலாற்றின் அடுக்குகள் ஆகிய அனைத்தையும் அறிந்துகொள்பவர் ஆகிறார். அவற்றினூடாக ஓடிச்செல்லும் மானுடனின் ஞானத்தேடலின் ஒரு பகுதி என தன்னை அவர் உணர முடியும்.  

ஒரு நாவலை  வாசித்தபின் வாசகன் தான் மாறிவிட்டிருப்பதை உணரமுடிந்தால் அது மகத்தான நாவல். விஷ்ணுபுரம் அவ்வாறு வாசகர்களின் மொத்தச் சிந்தனையையும் மாற்றியமைத்திருப்பதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். இருபத்தைந்தாண்டுகளாகவிஷ்ணுபுரம் வழியாக என் வாழ்க்கைநோக்கே மாறியது’ என எழுதப்பட்ட ஒரு வாசகர்கடிதமாவது வராமல் ஒரு மாதம்கூட கடந்துசென்றதில்லை.

அந்நாவலின் அமைப்பு பற்றிய ஒரு சுருக்கமான வடிவை சிலருக்கு அளித்தேன். இந்திய வரலாறு எப்படி இருக்கிறது? ஒரு தொல்குடிக்காலம். குகை ஓவியங்கள், தொல்கற்செதுக்குகள் ஆகியவை அதன் கலையும் ஆன்மிகமும் வெளிப்படும் வடிவங்கள். அங்கேதான் விஷ்ணுபுரம் தொடங்குகிறது. அந்த மாபெரும் சிலை அக்காலகட்டத்தைச் சேர்ந்தது. நம் ஆழ்கனவுகளில் உறைவது அது. அதை ஒருவர் தன் கனவில் இருந்து அகழ்ந்து எடுக்கலாம். அதுவே நாவலின் தொடக்கம்

அடுத்தது புராண காலகட்டம். தொன்மங்களாக வரலாறு கிடைக்கின்றது. அதுவே தொடக்க வேதாந்த காலகட்டம். அதன்பின் பௌத்த- சமணக் காலகட்டம். அதன்பின் பக்தி இயக்க காலகட்டம். அதன் பின் ஒரு வீழ்ச்சி. அதன் பின் மறுகண்டடைவு. இதுதான் இந்திய வரலாறு. இந்தியாவையே ஒரு கோயில்நகரமாக கற்பனை செய்து கொள்கிறது இந்நாவல். அந்த தத்துவக் காலகட்டங்கள் இந்நாவலில் முன்பின்னாக உள்ளன. முதல் பகுதியில் பக்தி காலகட்டம் காட்டப்படுகிறது. ஒரு மாபெரும் திருவிழா. அதன்பின் காலத்தில் பின்னால் சென்று பௌத்த காலகட்டம். அந்த பௌத்த காலகட்டத்திற்குள் முந்தைய தொன்மங்களாக அதற்கு முன்பிருந்த  புராணகாலகட்டம் சொல்லப்படுகிறது. வீழ்ச்சியும் மீள்கண்டடைவும் மூன்றாவது பகுதி. 

இந்த முன்பின் வடிவம் ஏன் என்றால் ஞானத்தேடல் எப்படி மதமாக அமைப்பாக ஆகிறது, மதத்திற்குள் இருந்து மீண்டும் எப்படி ஞானத்தேடல் தொடங்குகிறது என காட்டுவதற்காகத்தான். முதல் பகுதியில் எவரெல்லாம் உண்மையான மனிதர்களோ அவர்களெல்லாம் மூன்றாம் பகுதியில் தொன்மங்களாக ஆகிவிட்டிருக்கின்றனர். முதல்பகுதியில் எவரெல்லாம் தொன்மங்களோ அவர்கள் மெய்யான மானுடராக இரண்டாம் பகுதியில் வருகின்றனர்.

விஷ்ணுபுரம் தத்துவ விவாதங்களை முன்வைக்கிறது. ஆனால் தத்துவங்களை தியானத்திற்குரிய உருவகங்களாக முன்வைக்கிறது. காலம் என்பது ஒரு தத்துவம். காலபைரவன் என்னும் கரிய நாய் உருவகம்.ஞானத்தின் பெருக்கு என்பது ஓரு தத்துவம். பிரக்ஞாதாரா என அதன் பெயர். அதையே ஒரு அனல்நதியாக அல்லது ரத்தநாளமாக உருவகித்தால் சோனா என்னும் ஆறு.  நாவலில் உள்ள பல்வேறு படிமங்களை வாசகர் கற்பனையால் கொஞ்சம் விரித்தெடுத்துக் கொண்டால் அந்த தத்துவங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும். உண்மையில் விஷ்ணுபுரம் வழியாக இந்திய மெய்யியலுக்குல் செல்வது மிக எளிது. அந்த படிமங்கள் தியான உருவகங்களாகவே கூட வரும், அகத்தே வளரும்.

நவீன இலக்கியம் என்பது பொதுவாக நவீன உலகைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய ஒன்றாகவே இருக்கும். விஷ்ணுபுரம் என்றுமுள்ள அகக்கேள்விகளை நோக்கிச் செல்லும் ஆக்கம். இந்தியாவின் பண்பாட்டினூடாக அந்த மெய்ஞானத்தேடல் எப்படியெல்லாம் உருமாறி வந்துள்ளது என அறிவதற்கும், அவற்றை உணர்ந்து நம் அகப்பயணத்தைச் செய்வதற்கும் உதவும் ஆக்கம்.  

முந்தைய கட்டுரைஎம்.ஆர்.எம். அப்துற் றஹீம்
அடுத்த கட்டுரைகன்னிநிலம், வாசிப்பு