ஆனந்த குமாரசாமியின் எழுத்துக்கள் தமிழ்ச்சூழலுக்கு மிக முக்கியமானவை. ஏனென்றால் இந்தியச் சிற்பக்கலை– கட்டிடக்கலை – மரபுக்கலைகளின் மிகப்பெரிய களஞ்சியம் தமிழ் நிலம். ஆனால் அவற்றை அறிய, விவாதிக்க நம்மிடம் அறிவுத்தளம் இல்லை. எளிமையான சமூகவியல் அரசியல் பார்வைகளின் அடிப்படையிலான கருத்துக்களை நாம் சிந்தனை என எண்ணிக்கொண்டிருக்கிறோம். கலை குறித்த சிந்தனைகளுக்கு அவை எந்த வகையிலும் உதவியானவை அல்ல. கலைச்சிந்தனை என்பது ஒரு பண்பாட்டின் சாராம்சம் நோக்கிச் செல்லும் கூர்மைகொண்டதாக இருந்தாகவேண்டும்.
அவற்றில் ஈடுபாடும் அறிவும் உடையவர்கள் இரண்டு வகை. மரபான முறையில் தொன்மங்களாக, நம்பிக்கைகளாக மட்டுமே அறிந்திருப்பவர்கள். வெறும் தரவுத்தொகுப்பாக அறிந்திருக்கும் ஆய்வாளர்கள். கூடுதலாக நமக்குத்தேவை மேலைக் கலைக்கோட்பாடுகளை அறிந்து, கீழை கலைமரபுகளையும் அறிந்து, அவற்றினூடாக உரையாடி தனக்கான பார்வையை உருவாக்கிக்கொண்ட தத்துவ சிந்தனையாளர்கள். ஆனந்த குமாரசாமி அவ்வகையில் மிகப்பெரிய முன்னோடி. அவரிடமிருந்தே நாம் நமக்கான கலைநோக்கை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தோம். ஓரளவு அவருக்கிணையான இன்னொருவரைச் சொல்லவேண்டும் என்றால் அபனீந்திரநாத் தாகூரை குறிப்பிடலாம்.
இந்தியக்கலையின் நோக்கங்கள் : ஆனந்த குமாரசுவாமி – நூல் வாங்க
ஆனந்த குமாரசாமியின் சிந்தனைகள் முறையாகவும் முழுமையாகவும் தமிழில் வாசிக்கக்கிடைத்ததே இல்லை. முந்தைய மொழியாக்கங்களில் த.நா.குமாரசாமியின் மொழியாக்கம் மட்டுமே வாசிக்கும்தன்மை கொண்ட நடை உடையது. பல மொழியாக்கங்கள் மொழிவதைகள். காரணம் ஆனந்தாவின் மூலமொழி சற்றுப் பழைய பிரிட்டிஷ் நடை கொண்டது. பல கலைசார்ந்த கலைச்சொற்கள் நிறைந்தது.
அண்மையில் தாமரைக்கண்ணன் ஆனந்தகுமாரசாமியின் எழுத்துக்களை தொடர்ச்சியாகக் கவனப்படுத்தி வருகிறார். குருகு இணையதளம் முதலிய பண்பாட்டு ஆய்வு த்தளங்களில் ஆனந்தா பற்றிய விவாதங்கள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன. அதையொட்டி வெளிவந்திருக்கும் சிறிய நூல் இந்தியக் கலையின் நோக்கங்கள். இதை முன்னர் ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை தமிழாக்கம் செய்துள்ளார். ஆனால் அது கடினமான சைவத்தமிழ் நடை. இந்நூல் எளிய மொழியாக்கம்.