காந்தியின் தேசம்

guha

 

என் நண்பர் ஒருவர் சொன்னார். ஓர் இடதுசாரி அவரிடம் சொன்னாராம்,  ராமச்சந்திர குகா எழுதிய ‘இந்தியவரலாறு-காந்திக்குப்பிறகு’ என்ற இருபாகங்களினாலான சமகால வரலாற்று நூல் ஓர் இந்துத்துவநூல் என்று.ஒருவேளை ராமச்சந்திர குகா இந்த விமர்சனத்தை வேறெங்கிருந்தும் சந்தித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். நான் ஆச்சரியத்துடன் கேட்டேன் ‘ஏன் அப்படிச் சொல்கிறார்?’ என்று .அது, ’இந்தியாவைப் புகழ்ந்து பேசுகிறது’என்று அந்த நண்பர் சொன்னாராம். நம் இடதுசாரிகள் அளவுக்கு விசித்திரமான பிறவிகளை வேறெங்கும் பார்க்கமுடியாது. இங்கே இடதுசாரி அரசியல் என்பது எந்த மதத்தை விடவும் ஆழமான மூடநம்பிக்கைகளால் ஆனது. வாசிப்புக்கும் சிந்தனைக்கும் எதிரானது.

இந்தியா உடைந்து சிதறவேண்டுமென இடதுசாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அப்போதுதான் அதை சீனாவின் ஆதிக்கத்துக்குள் எளிதில் கொண்டுசெல்ல முடியும். எளிதில் சிவப்பாக்க முடியும் திபெத் போல நேபாளம் போல. ஒருங்கிணைந்த இந்தியா என்றைக்குமே சீனாவுக்கு எதிரான சக்தி. அவர்களின் வரலாற்றுத்தர்க்கம் இது உடையும் என்றே சொல்கிறது. ஏன் உடையவில்லை என்று புரியவில்லை

கிழக்கு வெளியீடாக ஆர்.பி.சாரதி மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள குகாவின் நூலின் சாராம்சமான கேள்வி உண்மையில் அதுதான். இந்தியா பெருங்குழப்பத்தில் கலவரத்தில் அவநம்பிக்கையில் பிறவிகொண்ட தேசம். 1947ல் நிகழ்ந்த கலவரங்களைக்  கண்ட எந்த அரசியல் நிபுணரும் இந்தியா சில ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்காது என்றுதான் நினைத்திருப்பார். உண்மையில் தேசியத்தலைவர்களுக்கே அந்த எண்ணம் இருந்திருக்கலாம்.  இந்தியாவைச்சுற்றி இருந்த எல்லா நாடுகளும் ஜனநாயகத்தை இழந்தன. பொருளாதார ரீதியாகப் பெரும் சரிவைச் சந்தித்தன.

 

[ராமச்சந்திர குகா]

ஆனால் இந்தியா அரைநூற்றாண்டுகளாக ஜனநாயக நாடாகவே நீடிக்கிறது.  மெதுவாக என்றாலும் உறுதியான பொருளியல் வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது. அதன் அத்தனை சிக்கல்களுடனும் போராட்டங்களுடனும் இன்னும் உயிருள்ள ஒரு பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது ஏன் என்ற கேள்வியைத்தான் இந்தப் பெரிய நூல் மிக விரிவாக நுட்பமான தகவல்களினூடாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா உடைந்து சிதறுவதற்கான எல்லா நியாயங்களும் இருக்கிறது, உடைந்து சிதற எந்த வாய்ப்பும் இல்லை என்றே இந்நூல் முடிகிறது. அந்த விந்தையை இதுவரையிலான அரசியல் வரலாற்றைக் கறாரான தகவல்கள் வழியாக விவரிப்பதனூடாகக் கண்டடைய முயல்கிறது.

 

ஆகவே நம் இடதுசாரி மூடநம்பிக்கையாளர்களின் கசப்பு விளக்கக்கூடியதுதான். அவர்கள் இந்தியாவின் வரலாறு,பண்பாடு, சமகால ஜனநாயகம்,பொருளியல் அனைத்தைப்பற்றியும் மிக இருண்ட ஒரு சித்திரத்தையே உருவாக்கிவந்திருக்கிறார்கள். ரஜனிபாமி தத்தின் ‘இன்றைய இந்தியா’ முதல் இன்று வரும் நாளிதழ் கட்டுரைகள் வரை அந்த மனநிலையைக் காணலாம். அவர்கள் அளிக்கும் அத்தனை தகவல்களையும் இன்னும் நுட்பமாகவும் விரிவாகவும் திரட்டி அளிக்கிறார் குகா.  அதேசமயம் கடந்த அறுபதாண்டுக்காலத்தில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மேற்கத்திய தாராளவாத அரசியல் ஆய்வாளர்களும் இடதுசாரி ஆய்வாளர்களும் இந்தியா பற்றி முன்வைத்த மிக இருண்ட ஆருடங்கள் எப்படிப் பொய்த்துப்போயின என்று சொல்கிறார். இன்றுவரை அவர்கள் உருவாக்கும் எதிர்மறைச்சித்திரம் எத்தனைதூரம் உள்ளீடற்றது என உடைத்துவைக்கிறார்.

அதேபோல இன்று இந்தியா பற்றி அதே மேலை ஆய்வாளர்கள் முன்வைக்கும் சாதகமான ஆருடங்களையும் தகவல்களின் அடிப்படையில் நிராகரிக்கிறார் குகா. இந்நூல் உண்மையில் இந்தியாவைப் புகழ்வதோ வாழ்த்துவதோ அல்ல. சொல்லப்போனால் இந்நூல் காட்டுமளவுக்கு இருண்ட சித்திரங்களை உள்நோக்கமும் குரோதமும் கொண்ட மேலைஆய்வாளர்களும் இடதுசாரிமூடநம்பிக்கையாளர்களும்கூட முன்வைத்ததில்லை. இந்நூல் அதனூடாக ஓடும் அந்த வசீகரமான மர்மத்தை மட்டுமே அறியமுயல்கிறது.

குகா அவரது நூலை இப்படி முடிக்கிறார். ‘ இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் இல்லை, சாதாரண மனிதர்களின் கையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இந்திய அரசியல்சட்ட்டம் உருத்தெரியாத அளவு திருத்தப்படாவிட்டால், தேர்தல்கள் உரிய காலத்தில் முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டால், மதச்சார்பின்மை பெரும்பாலும் பரவியிருந்தால்,நாட்டுமக்கள் தாங்கள் விரும்பும் மொழியில் எழுதவும் பேசவும் முடிந்தால், ஒருங்கிணைந்த சந்தையும் சுமார்திறமைகொண்ட ஆட்சிப்பணி அமைப்பும் இருந்தால், கூடவே சொல்ல மறந்துவிட்டேனே இந்திப்படங்கள் பார்க்கப்பட்டுப் பாடல்கள் கேட்கப்பட்டால் இந்தியா நிலைத்துவாழும்’

குகாவின் பட்டியலில் முதலாவதாகச் சொல்லப்படுவது இந்திய அரசியலமைப்புச்சட்டம்தான். ஒரேநாடாக இந்தியாவை இன்றும் காப்பாற்றிவருவதில் அரசியலமைப்புச்சட்டத்தில் இருக்கும் தொலைநோக்குப்பார்வை,ஜனநாயகப்பிடிப்பு,நடைமுறை நோக்கு மற்றும் இலட்சியவாதத்துக்கு பெரும் முக்கிகியத்துவம் உண்டு. இன்றும் இந்தியாவின் எந்த அறச்சிக்கலும் அரசியலமைப்புச்சட்டத்தின் நோக்கங்களுக்கு இசைவாக விளக்கப்படுமென்றால் நியாயமாகவே அதன் எல்லா குடிகளாலும் உணரப்படுகிறது. குகாவின் நூல் முழுக்க அதற்கான ஆதாரங்களைக் காணலாம்.அந்த அரசியல்சட்டம், அடிபப்டையில் காந்தி அரைநூற்றாண்டுகளாகப் போராடிவந்த விழுமியங்களுக்காக நிலைகொள்வதாக உறுதிகொண்ட ஒன்று. . அரசியலமைப்புச்சட்டத்தின் சிற்பிகளான அம்பேத்கார் தலைமையில் அமைந்த குழுவுக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.

ஒரு தேசமாக இந்தியாவை நிலைநாட்டுவதில் காந்தி என்ற குறியீட்டுக்கு, காந்தியம் என்ற கோட்பாட்டுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் குகாவின் நூல் பலநூறு ஆதாரங்களை சாதாரணத் தகவல்களாகவே அளித்துச்செல்கிறது. உதாரணமாக இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல்.1952இல் இந்தத் தேர்தலை இந்தியா சந்திக்கும்போது அப்போதுதான் அரசியல்சட்டம் எழுதிமுடிக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் பெற்று ஐந்தாண்டு ஆகாத தேசத்தில் பலபகுதிகளில் சுதேசிமன்னர்கள் அப்போதும்கூட செல்வாக்குடன் இருந்தனர். மக்களில் கணிசமானவர்களுக்கு இந்தியா என்ற தேசம் பற்றிய பிரக்ஞையே இல்லை. ஜாதியால் மதத்தால் இனத்தால் நிறத்தால் மொழியால் பிரிந்து கிடந்த பலநூறு மக்கள்கூட்டங்களின் பெருந்தொகையாக இருந்தது இந்தியா. அனைத்துக்கும் மேலாக ஜனநாயகத்தைப்புரிந்துகொள்ளும் கல்வியறிவு பெரும்பாலானவர்களுக்கு இருக்கவில்லை

ஆகவே இந்தியாவின் முதல் தேர்தல் பெரியதோர் அற்புதமாக இருந்தது. அது வெற்றிகரமாக நிகழ்ந்ததே இன்றும் நீடிக்கும் இந்திய ஜனநாயகத்துக்கான அடிப்படையை அமைத்தது. இந்திய அரசியல்சட்டத்துக்கு இந்தியமக்கள் அளித்த அங்கீகாரம் அது. அந்த அங்கீகாரத்தை இமயம் முதல் குமரி வரை ஒரே குரலில் மிகமிகப்பெரும்பான்மை வாக்குகள் வழியாக இந்திய மக்கள் அளித்ததற்குக் காரணமாக அமைந்தது காந்தி என்ற ஒற்றைச்சொல். அதைத் தன் அடையாளமாக முன்வைத்த நேருவின் ஆளுமை. அதை முதல் தொகுதியிலேயே மிகத்தெளிவாக முன்வைக்கிறார் குகா

இரண்டாவது பகுதி,நேருவின் மரணத்துடன் ஆரம்பிக்கிறது. முதல் பகுதி காட்டிய நேரு உண்மையில் ஆட்சியாளருக்கு அவசியமான நடைமுறை நோக்கு குறைவான இலட்சிவாதி மட்டுமே. அவரது வாழ்க்கையின் இறுதிக்காலம் மனமுடைந்த நிலையில் இருந்தது. சீனா இந்தியாமேல் தொடுத்த போர்,தன் வசீகரத்தின் மீதும், தார்மீகத்தின் அடிப்படை வல்லமை மீதும் நேருவிற்கு இருந்த நம்பிக்கையை குலைத்தது. அவரைக் கிட்டத்தட்ட செயலற்றவராக ஆக்கியது. பெரும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அவர் ஐம்பதுகளில் ஆரம்பித்த பெருந்தொழில்மயமாக்கம் வறுமை ஒழிப்புக்குப் பெரிய அளவில் உதவவில்லை. கிராமப்புறங்களில் சுதந்திரத்தின் மறுமலர்ச்சி உருவாகவில்லை என்பதை நேரு கண்டார். வாழ்நாளெல்லாம் காந்தியக்கொள்கைகளை எதிர்த்து நவீனமயமாதலை ஆதரித்துவந்த நேரு அந்நம்பிக்கையை இழந்தார். காந்திய வழிமுறைகளை நோக்கிச் செல்லவும் மனமில்லாதவராக இருந்தார். 1964ல் அவர் மறைந்தார்

வழக்கம்போல நேருவின் மரணத்துக்குப்பின் இந்தியா அழியும் என ஆருடங்கள் கிளம்பின. இந்தியாவின் ஜனநாயகமே நேரு என்ற மனிதரின் ஆளுமையின் கவர்ச்சியால் உருவான ஒரு கொப்புளம் மட்டுமே என்றனர் ஆய்வாளர்கள். அதற்கேற்ப இந்தியா பஞ்சத்தால் இருண்டு கிடந்தது. மொழிவழி மாநிலப்பிரிவினைக்கான கிளர்ச்சிகள் மனக்கசப்புகளாக ஆகிப் பிராந்தியவாதங்களாக வளர்ந்திருந்தன. ஆனால் காங்கிரஸ் எளிதாகவே அடுத்த தலைவரைக் கண்டுகொண்டது. இந்தியாவின் அமைப்பு,சிறு கசங்கலுமில்லாமல் தலைமை மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.

லால்பகதூர் சாஸ்திரி பற்றிப் பொதுவாக இந்திய ஊடகம் மிக எதிர்மறையான சித்திரத்தையே அளித்து வருகிறது. நானும் அச்சித்திரத்தை வெகுநாள் கொண்டிருந்தேன். அவர் திறமையற்ற கோழையான கூழைக்கும்பிடு ஆசாமி என்ற சித்திரம். இச்சித்திரத்தை உருவாக்கி நிலைநிறுத்தியதில் காங்கிரஸுக்குப் பெரும்பங்குண்டு. நேருவுக்குப்பின் நேரடியாக இந்திரா காந்திக்கு வரும் மனநிலையில் உதித்த தந்திரம் அது. அத்துடன் நம் இதழாளர்களின் மேட்டுக்குடிச்சிந்தனைக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்குடிப்பிறப்போ ஆங்கில ஞானமோ தோற்றப்பொலிவோ உள்ளவரல்ல சாஸ்திரி . மிக எளிய மனிதர். ஒரு சாதாரண ’தேசி’.

குகா காட்டும் லால்பகதூரின் சித்திரமே வேறு. அவர் ஒரு சமரசமாகவே தலைமைக்கு தேர்வுசெய்யப்பட்டாரென்பது உண்மை. பிடிவாதக்காரரும் அரசியல் அடித்தளம் உடையவருமான மொரார்ஜி தேசாயைத் தவிர்ப்பதற்கான குறுக்குவழி அது. ஆனால்,மிகச்சில மாதங்களிலேயே அரசையும் ஆட்சியையும் தன் முழுப்பிடிக்குக் கொண்டுவந்தார் லால் பகதூர். ஒருகட்டத்தில் அவர் உண்மையான இந்திய ஆட்சியாளராக ஆனார். அவரது காலகட்டத்தில்தான் இந்தியா மேல் முதன்முதலாகப் பாகிஸ்தான் படை எடுத்தது.

ஒரு முதன்மையான ஆட்சியாளர் செய்யக்கூடிய அனைத்தையும் செய்தார் லால் பகதூர்.  உண்மையிலேயே தகுதியான மனிதர்களிடம்  போரை ஒப்படைத்தார். தெளிவான விரைவான ஆணைகளை அளித்தார். நாட்டு மக்களுக்கும் ராணுவத்துக்கும் ஊக்கமூட்டும் அரசியல் கோஷத்தை உருவாக்கி அதை முன்னிறுத்தினார் [ஜெய் ஜவான் ஜெய் கிசான்] முந்தைய சீனப்போரின்போது நேருவால் இவை எவற்றையுமே செய்யமுடியவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். இந்தியா அடைந்த போர்வெற்றி இந்தியாவின் தேசியத் தன்னம்பிக்கையை மிக ஆழமாக நிலைநாட்டியது. சீனப்போரின் சோர்விலிருந்து இந்தியா அதிசயகரமாக மீண்டு வந்தது

இந்தியாவில் உணவுப்பஞ்சங்களை சமாளிக்கப் பசுமைப்புரட்சியை ஆரம்பித்து வைத்து அதன் ஆரம்பவெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவரும் சாஸ்திரிதான். இன்னும் சொல்லப்போனால் வெறும் இரண்டு வருடங்களில் நேருவின் பதினைந்து வருட ஆட்சியின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நடைமுறைத்தீர்வு காண சாஸ்திரியால் முடிந்தது என்பதே உண்மை. அதற்குக் காரணம், அவர் இந்திய சாமானியர்களின் பிரதிநிதி என்பதே. நேருவையும் பின்னர் வந்த இந்திராவையும்போல இந்திய சாமானிய வாழ்க்கையை அறியாத உயர்குடியினர் அல்ல அவர்.

லால்பகதூர் மேலும் பத்து வருடம் உயிருடனிருந்திருந்தால் நேரு குடும்ப ஆதிக்கம் இந்தியாவில் உருவாகியிருக்காதென்பதில் ஐயமில்லை.  ஆனால் 1966ல் சாஸ்திரி இறந்தார். அன்று காங்கிரஸின் பொறுப்பில் இருந்த கு.காமராஜ் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் மத்தியஸ்தங்களுக்குத் தலைமை வகித்தார். அப்போதும் செல்வாக்கு மிக்க போட்டியாளராக இருந்த மொரார்ஜி தேசாயைத் தவிர்ப்பதே முக்கியமான நோக்கமாக இருந்தது. மொரார்ஜிதேசாயை சக்திவாய்ந்த மும்பை- அகமதாபாத் தொழில்கூட்டணி ஆதரித்ததனால் பிற தொழில்வட்டங்கள் அனைத்தும் அவரை எதிர்த்தன. ஆகவே காமராஜ் நேருவின் மகளான இந்திராகாந்தியை முன்னிறுத்த முடிவெடுத்தார்.

[லால் பகதூர் சாஸ்திரி]

காமராஜ் அப்படி முடிவெடுக்கப் பல காரணங்கள் இருந்தன. நேருவின் பெயர் தேர்தல் வெற்றிகளுக்கு உதவும் என நினைத்திருக்கலாம். அதைவிட வெறும் நாற்பத்தொன்பது வயதான அனுபவமற்ற பெண்மணியான இந்திரா,தன் கட்டுப்பாட்டில் இருப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அதன்வழியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய ஒரு அநீதியை காமராஜ் இழைத்தார் என்பதே உண்மை. பின்னர் தன் வாழ்நாளெல்லாம் அதற்காகக் காமராஜ் வருந்திக் கண்ணீர் சிந்தினார்

ராம் மனோகர் லோகியாவால் குங்கி குடியா [முட்டாள் பொம்மை] என வர்ணிக்கப்பட்ட இந்திரா,படிப்பறிவு குறைந்தவர். மோசமான மாணவியாக அறியப்பட்டவர். வாசிப்போ சிந்தனையோ அற்றவர். தந்தையின் நிழலாக இருந்துவந்தது மட்டுமே அரசியல் தகுதியாகக் கொண்டவர். தாயில்லாமல் வளர்ந்து மேட்டிமைப்போக்கு கொண்ட விஜயலட்சுமிபண்டிட் போன்ற அத்தைகளால் அவமதிக்கப்பட்டு முரட்டுத்தனமும் தனிமையுணர்ச்சியும் கொண்டவராக உருவானவர்.

ராமச்சந்திர குகாவின் இந்நூல்,ஆரம்பம் முதலே இந்து பழைமைவாதத்தை இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நோயாகச் சித்தரிக்கிறது. இந்தியாவின் பிறவிக்கணத்தில் காந்தியைக் கொலைசெய்தது அது. இந்தியாவின் ஆரம்ப வரலாறு முழுக்க அது உருவாக்கிய அழிவுகள் தேசத்தைப் பின்னுக்கிழுத்தன. அதற்கு நிகரான அழிவுச்சக்தியாக இந்திராகாந்தியைக் காட்டுகின்றன,குகா விமர்சனமே இல்லாமல் வைத்துச்செல்லும் நேரடித் தகவல்கள். தன்னுடைய பாதுகாப்பின்மையுணர்வால் இந்திராகாந்தி காந்தி, அம்பேத்காரும் நேருவும் உருவாக்கிச்சென்ற இந்தியாவின் ஜனநாயகக் கட்டுமானத்தை அழித்தார். இந்தியாவில் பொதுநிர்வாகத்துறை நியமனங்களிலும் ஜனநாயக அமைப்புகளிலும் அரசியல் செல்வாக்கைச் செலுத்திய முதல் ஆட்சியாளர் இந்திராதான். ஆட்சியின் மையத்தில் சதிகார துதிபாடிக் கும்பல் ஒன்றை அமர்த்தி அனைவரையும் அவர்களுக்கு அடிபணிய வைத்தது அவர்தான்.

இந்தியாவின் முதல்பெரும் பிரிவினைக்கோரிக்கையானது உண்மையில் ஜம்முகாஷ்மீரின் டோக்ரி மக்களின் போராட்டத்தை இந்து போராட்டமாக உருமாற்றிக் காஷ்மீர் முஸ்லீம்களின் அவநம்பிக்கையை எழுப்பிய பாரதிய ஜனசங்கத்தின் சிருஷ்டி எனக் காட்டுகிறார் குகா. அன்றுவரை இந்தியாவின் பகுதியே காஷ்மீர் என்று சொல்லிவந்த ஷேக் அப்துல்லாவின் குரல் மாறுபட ஆரம்பித்தது அப்போதுதான். ஆனால் அஸ்ஸாம், பஞ்சாப், மேகாலயா, மணிப்பூர் என எல்லாப் பிரிவினைக்கோரிக்கைகளும் இந்திராகாந்தியின் உருவாக்கங்களே. அவரால் பிராந்திய தன்னதிகாரங்களை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. மக்களின் ஜனநாயகத் தேர்வுகளை எதேச்சாதிகாரமாக அவர் கலைத்து ஒடுக்கினார். உணர்வுகளை அவமதித்தார்.

அதைவிட மோசமாக, இந்திரா மாநில உணர்வுகளை அழிக்க அதைவிடத் தீவிர மாநிலப்பிரிவினையுணர்வுக்ளை உருவாக்கினார், சிறந்த உதாரணம் பிந்திரன் வாலே. ஒரு ராட்சதனை உருவாக்கி அவனைஅழித்து அரசியல் லாபம் பெறுவதே அவரது வழியாக இருந்தது. அதற்கு தேசம் பெரும் விலை கொடுக்க நேர்ந்தது. இந்திராகாந்தியே அதற்குப் பலியானார்.

இந்திய அரசியல் சூழலில் அரசியல் விவாதங்களை சீரழித்ததில் முன்னோடியான அரசியல்வாதி அவர்தான். தன் கொள்கைக்கு எதிரான எந்தப் பேச்சையுமே தேசத்துரோகம் , அன்னியநாட்டுச்சதி, தன்னைக்கொல்ல முயற்சி என்று வசைபாடுவதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். கடைசியாக, இன்று இந்தியாவில் நீடிக்கும் ஆயுதபேர ஊழல்களுக்கு அடித்தளமிட்டதே அவர்தான்.

அனைத்துக்கும் மேலாக நெருக்கடி நிலை. இந்திராவின் நெருக்கடிநிலைமூலம் இந்தியாவில் உருவானது வெறும் அடக்குமுறை மட்டுமல்ல, இந்த தேசத்தை எப்படி ஏகாதிபத்தியமயமாக்குவதென்ற முன்னுதாரணமும்கூடத்தான். நாளை என்றாவது இந்தியா சர்வாதிகார நாடாகுமென்றால் அதற்கான வழிகாட்டி இந்திராதான். இந்தியாவின் எல்லா அமைப்புகளையும் வெற்றிகரமாகச் சீரழித்ததுடன் இன்றும் இந்தியாவில் நீடிக்கும் போலீஸ் அடக்குமுறைக்கு இந்திய ஆயுதப்படைகளைப் பழக்கியதும் நெருக்கடிநிலையே.

எல்லா சர்வாதிகாரிகளும் அவர்களின் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையால் அழிகிறார்கள். இந்திரா அவரது நெருக்கடிநிலையை ரத்து செய்து தேர்தலைச் சந்தித்ததும் அதனால்தான்.  இந்தியாவின் ஜனநாயகம் திருப்பியடித்தது. இந்தியாவின் பிரச்சினைகள் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுபவை, ஆனால் ஜனநாயகம் இயற்கையானது என நிரூபித்த தேர்தல் அது. அதன் நாயகர்களாக உருவாகி வந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சாரிய கிருபளானியின் அழியாத சித்திரத்தை இந்நூல் காட்டுகிறது.

இந்திய ஜனநாயகம் என்பது காந்தியின் கொடை என்பதை மீண்டும் நிரூபித்தது ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சாரிய கிருபளானியின் பங்களிப்பு. காந்தியர்களான அவர்களே இந்திய ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டுவந்தார்கள். பின்னும் இந்தியாவின் பெரும் மக்களியக்கமான சூழியலியக்கங்கள் காந்தியவாதிகளாலேயே உருவாக்கப்பட்டன. அந்த மரபு இன்று அண்ணா ஹசாரே வரை நீடிக்கிறது.

வரலாறு அளித்த வாய்ப்பை ஜனதா கட்சி வீணடித்ததை குகா சுருக்கமான தகவல்கள்மூலம் விளக்குகிறார்.இரு விஷயங்கள் கவனத்துக்குரியவை. நெருக்கடிநிலைக்காலத்தில் செய்யப்பட்ட கட்டாயக் கருத்தடை மற்றும் காவல்துறை ஒடுக்குமுறை மூலம் தலித்துக்களும் இஸ்லாமியர்களும் காங்கிரஸைக் கைவிட்டார்கள். ஆகவேதான் இந்திரா தோற்றார். ஆனால் ஜனதா வந்ததுமே காந்தியவாதிகளான அதன் வழிகாட்டிகள் கழற்றிவிடப்பட்டார்கள். இரு புதிய அதிகார சக்திகள் உருவாகி வந்தன. இந்துக் கட்சியான பாரதிய ஜனசங்கம் ஜனதாவின் முக்கியமான அம்சமாக இருந்தது. லோகியாவின் சோஷலிசக் கட்சியின் துண்டுகள் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் முகங்களாக மாறி ஜனதாக்கட்சியின் இரண்டாவது பெரிய அம்சமாக இருந்தன.

ஜனதாகட்சியின் ஆட்சி பலவகைகளில் முக்கியமானது என்று குகா காட்டுகிறார். முக்கியமாக எளிதில் ஜனநாயகப்படுகொலை செய்யமுடியாதபடி அரசியல்சட்டம் திருத்தப்பட்டது. ஜனநாயக அமைப்புகளின் அதிகாரம் பாதுகாக்கப்பட்டது. இந்திரா உருவாக்கிய பல தேசிய அழிவுகள் சீர்செய்யப்பட்டன. ஆனால் அதிகாரம் பெற்ற இந்துத்துவசக்திகள் இக்காலகட்டத்தில் இந்தியாவின் வரலாற்றில் மிக அதிகமான மதக்கலவரங்களை உருவாக்கினர். கலவரம் எதற்காக யாரால் தொடங்கப்பட்டிருந்தாலும் கடைசியில் இஸ்லாமியரே பாதிக்கப்பட்டனர் என்று குகா காட்டுகிறார்

அதேபோலப் பிற்படுத்தப்பட்டோர் அதிகாரம் பெற்ற மறுகணமே தலித்துக்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்தது. இந்திய வரலாற்றிலேயே தலித்துக்களுக்கு எதிரான அதிக வன்முறை நிகழ்ந்த காலகட்டம் அதுவே. ஆதலால் தலித்துக்களும் இஸ்லாமியரும் மீண்டும் காங்கிரஸுக்கே சென்றார்கள். இந்திரா வெற்றிகரமாக ஜனதா கட்சியைப் பிளந்து சிதறடித்து ஆட்சிக்கு வந்தார். அவரது மரணம் ராஜீவ்காந்தியை அரசியலுக்குக் கொண்டுவந்தது. ராஜீவ் காலகட்டம் அதுவரை இந்தியா கொண்டிருந்த இடதுசாரிப் பொருளியலை முழுமையாகக் கைவிட்டு வலதுசாரிப் பொருளியலுக்குத் திரும்ப வழிகோலியது.

இந்நூலை வாசிக்கையில் தகவல்களாக சரித்திரம் தொகுத்தளிக்கப்பட்டிருப்பதையே காண்கிறோம். அந்தத் தொகுப்பில்தான் குகாவின் கருத்துநோக்கு உள்ளதே ஒழிய அவ்ர் வாதாடுவதில்லை. பலகோணங்களில் இந்திய அரசியல் பொருளியல் நிகழ்வுகளை தொகுத்தளித்தபடி சரித்திர விவரணை ஓடிச்செல்கிறது. வாசகனாக நாம் உருவாக்கிக்கொள்ளும் அவதானிப்புகளே இது அளிக்கும் அனுபவம்.

உதாரணமாக, ஜெபி பற்றி ஓர் அமெரிக்கத் தோழிக்கு இந்திரா எழுதிய கடிதமொன்றில் அவர்  தன் தந்தையின் தோழரான ஜெபியை அவமரியாதையாகப் பேசியிருக்கும் இடம். ஜெபியின் பிரம்மசரிய சோதனைகளைக் கிண்டலடிக்கிறார் இந்திரா. அவருக்குக் காந்திய மதிப்பீடுகளில் இருந்த அவநம்பிக்கைக்கான சான்று இது.அவர் காந்தியத்தைக் குறைத்து மதிப்பிட்டாரென்பதற்கு ஜெபி அவரைக் கீழே இறக்கிக் காட்டியதே சான்று.

இந்திய அரசியலை அவதானிக்கும் மேலைநாட்டு அரசியல்நோக்கர்கள் தொடர்ந்து இந்தியா மேல் முன்வைக்கும் ஆழமான அவநம்பிக்கை ஆச்சரியமளிக்கிறது. பலசமயம் அதற்குத் தர்க்கமே இருப்பதில்லை. ஐம்பதாண்டுகளில் பல்வேறு முறை அந்த மோசமானஆருடங்கள் பொய்யான பிறகும் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக நீடிப்பதை அவர்கள் நம்பவில்லை என்று முதலில் பட்டாலும் அவர்கள் நம்ப விரும்பவில்லை அல்லது அப்படி இருப்பதையே விரும்பவில்லை என்றுதான் இறுதியாகத் தோன்றுகிறது.

காரணம் ஐரோப்பா,தங்கள் உச்சகட்ட சாதனையாக முன்வைப்பது அவர்களின் ஜனநாயகத்தைத்தான். பலநூறு வருடப் போராட்டங்கள், போர்களுக்குப்பின் அவர்கள் அடைந்த ஒன்றைப் பெரிதும் ஏழை மக்கள் நிறைந்த ஒரு நாடு சாதாரணமாக அடைந்ததை ஏற்க அவர்களால் முடியவில்லை. அதிலும் பேதங்களும் பற்றாக்குறைகளும் நிறைந்த ஒரு நாடு. இந்தியா ஆப்ரிக்க நாடுகளைப்போல ஜனநாயகம் சீரழிந்து வறுமையில் மூழ்கிப்போனதென்றால் அவர்களுக்குள் உள்ள வெள்ளையன் நிறைவடைந்திருக்கக்கூடும்

அதற்கு மாற்றாக உள்ளது இந்நூலின் கடைசியில் இந்தியக்குடியுரிமை பெற்ற பிரிட்டிஷ் அறிவியலாளர் ஹால்டேன் எழுதிய வெளியிடப்படாத கடிதத்தில் இந்தியாவைப்பற்றி சொல்லியிருக்கும் மதிப்பீடு.’ஐரோப்பாவை விட இந்தியாவே அதிக வேறுபாடுகள் கொண்டதாக உள்ளது.இது எதிர்காலத்தில் உடைந்தாலும் உடையலாம். ஆனாலும் இது அற்புதமான சோதனை.எனவே நான் இந்தியக்குடிமகன் என்று சொல்லிக்கொள்வதையே விரும்புகிறேன்’

என் உணர்வுகளைத்தொட்ட வரி இது. சமீபகாலங்களில் இனப்பன்மைக்காக முயலும் கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சென்று அங்கே இன்னும் தனித்தனியாகவே வாழும் மக்களையும் நடுவே இனக்கலப்பால் உருவான குழந்தைகளையும் காணும்போது நான் நினைத்துக்கொள்வதுண்டு– இப்படியே இவர்கள் இன்னும் சிலநூறு ஆண்டுகள் சென்றால் ஓர் இந்தியாவாக உருமாறக்கூடும் என்று.

பன்மையில் ஒருமையை நிலைநாட்டும் சக்தியாக நான் காண்பது இரு கூறுகளைத்தான். ஒன்று, இந்திய மெய்ஞான மரபு. இன்னொன்று அது காட்டிய சமரச வழியை நவீன அரசியல் சித்தாந்தமாக ஆக்கிய காந்தியம். அத்தனைக்கும் அப்பால் இந்தியா இந்தியாவாக இன்றும் நீடிக்கும் மர்மத்திற்குக் காரணம் அவ்விரு வாழும் பாரம்பரியங்கள்தான்.

அதை நாமறியாவிட்டாலும் நம் எதிரிகள் அறிவார்கள். ஆகவேதான் எப்போதுமே இந்திய ஞானமரபுக்கும் காந்தியத்துக்கும் எதிராக உச்சகட்ட அவதூறுப்பிரச்சாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

நாம் அரசியல் பேச்சுகளில் எப்போதுமே அன்றாட அரசியலை அன்றாடச்செய்திகளில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அரசியலைத் தொகுத்துப்பார்க்க முடிவதில்லை. அத்தகைய பார்வையை உருவாக்கும் அரிய நூல் இது.ஆர்.பி.சாரதியின் மொழியாக்கம் மிகச்சரளமான வாசிப்பை அளிக்கிறது,

 

[இந்திய வரலாறு காந்திக்குப்பிறகு. [பகுதி 2]  ராமச்சந்திர குகா. தமிழாக்கம் ஆர்.பி.சாரதி. கிழக்கு பிரசுரம். விலை 350]

 


காந்தியின் கையில் இருந்து நழுவிய தேசம்- இந்திய வரலாறு-காந்திக்கு பிறகு பகுதி ஒன்று


ஒரு வரலாற்று நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன்

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ
அடுத்த கட்டுரைஜான்சன் சில பாடல்கள்