தருணாதித்தன், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. பல வருடங்களாக ஆசைப்பட்ட தருணம் நேற்றுதான் அமைந்தது. விஷ்ணுபுரம் விழாவுக்கு வர வேண்டும் என்று எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தும் இறுதியில் தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலவில்லை. தொடர்ந்து நீங்கள் எழுதி வரும் கட்டுரைகளும் புத்தகங்களும் நவீன இலக்கியம் பற்றி எனக்குத் தெளிவும் வழியுமாக அமைந்தன. அவ்வப்போது கடிதத் தொடர்புதான். சென்ற ஆண்டு உங்களுடைய ஆக்க முயற்சியினால் திரு ஜா ராஜகோபாலன் நடத்திய பயிற்சியில் பிரபந்த அமுதத்தில் சில துளிகள் கிடைத்தன.

பல வருடங்களாக எழுதி வந்தாலும், 2016இல் நீங்கள் என்னுடைய இரண்டு கதைகளை ஆக்க பூர்வமாக விமர்சித்தது ஒரு திருப்பு முனை.  நீங்கள் விமரிசனத்தில் சில குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் தவிர்த்தால் எதிர்காலத்தில் மேலும் வீச்சுள்ள புதிய கதைகளை உருவாக்கும் எழுத்தாளராக அவர் ஆக முடியும் என வாழ்த்தி எழுதி இருந்தீர்கள்.

அப்போது உங்களுக்கு

ஒவ்வோரு நாளும் இவ்வளவு எழுதிக் கொண்டு, இவ்வளவு படித்துக் கொண்டு, நண்பர்கள் வட்டம், பிரயாணங்கள்  எல்லாவற்றுக்கும் நடுவே, புதிய எழுத்தாளர்களை ஆழ்ந்து படித்து , அவற்றைப் பற்றி விரிவான மதிப்பீடுகளுக்கு நன்றிஎன்னுடைய கதைகளைப் பற்றி மிகத்துல்லியமாக எழுதி இருக்கிறீர்கள். குறைகளை மிகச் சரியாக காட்டி இருக்கிறீர்கள், அதே சமயம் எப்படி திருத்தினால் இன்னும் மேம்படும் என்ற குறிப்புகளுடன். அதுதான் எனக்கு முக்கியம். நீங்கள் சொல்லி  இருக்கிற  மாபெரும்  முன்னோடிகள்தான்  என்னுடைய குரு பரம்பரை. மிகச் சரியான கணிப்பு.”  என்று கடிதம் எழுதி இருந்தேன்.

அதற்கு பதிலாகஉங்கள் மொழிநடைக்குள் இருக்கும் இயல்பான நகைச்சுவை பெருகுகஎன்று வாழ்த்தி இருந்தீர்கள்.

 அந்த ஊக்கத்திலேயே தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். இப்போது முதல் சிறுகதைத் தொகுப்புமாயக்குரல்எழுத்து பிரசுரம் (ஸீரோ டிகிரி) வெளியீடாக வந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தை உங்களுக்கு அளிக்க முடிந்ததும், உங்களுடன் படம் எடுத்துக் கொண்டதும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

மிக்க நன்றி

தருணாதித்தன்

அமேசானில் மாயக்குரல் வாங்க

எழுத்து பிரசுரத்தில் மாயக்குரல் வாங்க

முந்தைய கட்டுரைஎழுத்தாளனுக்கான பாதை
அடுத்த கட்டுரைஒரு கலைஞனின் தசாவதாரம்