கன்னிநிலம், வாசிப்பு

அன்புள்ள ஜெ,

மணிப்பூர் என்று ஒரு மாநிலம் இருப்பதே எனக்கு மிக சமீபக்காலமாகத்தான் தெரியும். இந்திய மேப்பிலே பார்த்த ஞாபகம்தான் இருந்தது. இந்தப்பிரச்சினைகள் வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். இதைப்பற்றி எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். கட்டுரைகளுக்கு பக்க அளவு இருந்தமையால அவையெல்லாம் ஒரு சுருக்கமான புரிதலையே அளித்தன.

அவற்றை புரிந்துகொள்ள எனக்குச் சிரமம் இருந்தது. அவற்றிலுள்ள தகவல்கள் மனதிலே நிற்கவில்லை. தற்செயலாகத்தான் உங்களுடைய கன்னிநிலம் நாவலை வாசித்தேன். மணிப்பூர் பற்றியது என்று இருந்தமையால்தான் வாசிக்க முடிவெடுத்தேன். திரில்லர் நாவல் என்று தெரிந்திருந்தது. ஒரே மூச்சிலே அந்நாவலை வாசித்து முடித்தேன். எனக்கு அங்கே சென்று வாழ்ந்த ஓர் அனுபவத்தை அளித்தது அந்நாவல். அங்குள்ள இனக்குழுப்பூசல்கள், அங்குள்ள மக்களின் வாழ்வியல் எல்லாமே ஒரே நாவல் வழியாக பிடிகிடைப்பதுபோல் இருந்தது.

மணிப்பூர் அரசியலைப்பற்றியும் அந்நாவல் ஒரு புரிதலை அளிக்கிறது. மணிப்பூரிலே இந்திய ராணுவம் இருப்பதை அந்த ஊர் மக்கள் எதிர்க்கிறார்கள், இந்தியா ராணுவ ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுதான் இங்கே ஊடகங்களில் திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்யப்படும் கருத்து . அங்கே பல்வேறு இனக்குழுக்கள் இருக்கின்றன என்ற விசயமும் அவர்களுக்குள் பெரிய மோதல் நிகழ்கிறது என்பதும் இந்நாவலை வாசித்தபோதே புரிந்தது. இந்திய ராணுவம் எல்லா இனக்குழுக்கள் மேலும் ஆதிக்கம் செலுத்தியிருப்பதனால் அங்கே கலவரம் நடப்பதில்லை. ராணுவம் கொஞ்சம் விலக்கப்பட்டாலும் கொலைக்கலவரம் நடைபெறுகிறது. ராணுவம் வெளியேறவேண்டும் என்று சொல்பவர்கள் ராணுவம் வெளியேறினால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மற்ற இனக்குழுக்களை அடக்கி அதிகாரம் அடையலாம் என நினைப்பவர்கள்தான். ராணுவத்தின் தரப்பு, மக்களில் ஒவ்வொரு இனக்குழுக்களின் தரப்பு, உண்மையான அரசியல் சூழல் எல்லாமே சொல்லப்பட்ட படைப்பு கன்னிநிலம். ஆனால் ஒரு நல்ல காதல்கதையாகவும் உள்ளது. ஷிராய் லில்லி என்ற மலர மனதில் ஆழமாக நிலைகொள்கிறது

மனோகரன் சிவராமன்  

கன்னிநிலம் வாங்க

கன்னிநிலம் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் செல்லும் வழி
அடுத்த கட்டுரைபின்பின்நவீனத்துவம் – கடிதம்