ரம்யாவின் நீலத்தாவணி

இன்று இரண்டு வகையான வாசகர்கள் காலப்போக்கில் எழுத்தாளர்களாகிறார்கள் என நினைக்கிறேன்.முதல்வகையினர் சமூகவலைத்தளங்களில் தொடங்கி, அங்குள்ள விவாதங்களில் ஈடுபட்டு, அங்குள்ள எளிய ‘கலாய்ப்புகள்’ மற்றும்  கொண்டாட்டங்கள் வழியாக ஓர் உரைநடையை கண்டடைந்து பின்னர் எழுதத் தொடங்குபவர்கள். சிறிய  நிகழ்வுச்சித்தரிப்புகள், அனுபவக்குறிப்புகளை எழுதி தைரியம் பெற்று, சில சிறுகதைகளையும் நாவல்களையும் வாசித்து, மெல்ல எழுத்தாளராக தன்னை உணர்பவர்கள் இவர்கள்.

இவர்களை இலக்கியவாசகர்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தேவையில்லை என்பது என் எண்ணம்.  இவர்களின் சகவலையர்களின் வாழ்த்தும் போற்றியும் இவர்களின் எழுத்துடன் இணைந்தே நமக்குக் கிடைக்கும்.  இவர்களுடைய ஏதேனும் ஒரு படைப்பு மெய்யான தீவிரம் கொண்டதாக நம் நம்பிக்கைக்குரிய எவருக்கேனும் தோன்றி, அவர் பரிந்துரை செய்து நாம் வாசித்து  நமக்கும் தோன்றி, அவர் தன் எல்லையை கடக்கக்கூடுமென நம்பிக்கை எழுந்தாலொழிய நாம் மேலே கவனிக்கவேண்டியதில்லை. அவர்களுக்கான வாசகர்வட்டம் வேறு. அது அவர்களுக்கு அமையும். சமூகவலைத்தள அரட்டைகள் வழியாக அதை ஈட்டிக்கொள்ள அவர்களுக்கும் தெரியும். நாம் கண்டுகொள்ளவேண்டிய தேவையே இல்லை.

என்ன காரணம்? முன்பு குமுதவிகடகுங்குமம் வழியாக எழுதவந்தவர்கள் எத்தனை எழுதினாலும் அந்த ‘குவிகு நடை’யை அவர்களால் கடக்கவே முடியாது என்பதை கண்டிருப்போம். அந்த நடை ஓர் அரட்டை மனநிலையை உருவாக்கி, மேற்கொண்டு ஆழமான எதையுமே தொடர்புறுத்த முடியாதபடி செய்துவிடுவது. அந்த ஆசிரியரும் அந்த மனநிலையிலேயே இருப்பதனால் அவரால் ராஜேஷ்குமார்- பாலகுமாரன்- சுஜாதா என்னும் ஒரு வழக்கமான பரிணாமவளர்ச்சியை அன்றி முன்னகரவே முடியாது. அப்படி ‘ராபாசு’ படிநிலைகளிலேயே நின்றுவிட்ட பல தமிழ் எழுத்தாளர்கள் உடனே நினைவுக்குள் வருவார்கள். அவர்களில் சிலர் வேறுவகையில் இலக்கியவாசிப்பினூடாக முன்னகர்ந்திருந்தால் ஒருவேளை முக்கியமான படைப்பாளியாக ஆகிவிட்டிருக்கக் கூடும்- சிறந்த உதாரணம் க.சீ.சிவக்குமார்.

இன்று எழுதவரும் இன்னொருவகை எழுத்தாளர்கள் தீவிர இலக்கியத்திற்கு அறிமுகமாகி, அதனுடன் ஏதேனும் வகையில் எதிர்வினையாற்றிக்கொண்டு ,அதன் விளைவாக எழுதவருபவர்கள். தீவிரமே அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும் கூறு. தீவிர இலக்கியம் மீதான ஓர் ஈர்ப்பும் நிகரான ஒவ்வாமையும் அவர்களை எழுதச்செய்கிறது. அவர்களுக்கு வடிவப்பயிற்சி முழுமையாக கைவராமலிருக்கலாம், மொழிநடை முதிராமலிருக்கலாம். ஆனால் அவர்கள் இலக்கியத்தை மாற்றியமைக்கும் அகவிசை கொண்டிருக்கிறார்கள். தங்கள் வரவை அறிவிக்கிறார்கள். இலக்கியவாசகன் எந்நிலையிலும் அவர்களைக் கவனித்தேயாகவேண்டும். குருத்து எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அதில் பெருமரத்தை உருவாக்கும் விசை உறைகிறது.

ரம்யா ஒரு வாசகராக தமிழ் இலக்கியம் மீது எதிர்வினையாற்றியபடி என் தளத்தில் அறிமுகமானார். ஈராண்டுக்குள் நவீனத் தமிழிலக்கியத்தின் பெரும்பகுதியை வாசித்தார். கூடுகைகளில் பேசினார். விவாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். தமிழ் நவீன இலக்கிய முன்னோடிகள் பெண்ணெழுத்தை சரியாக கவனிக்கவில்லை, அதை பெண்களின் கோணத்தில் வாசிக்க அவர்களால் இயலவில்லை என்னும் எண்ணம் ரம்யாவுக்கு உண்டு. விரிவான வாசிப்பினூடாக உருவானது அந்த உளப்பதிவு. ஒருவகையில் அது உண்மை. க.நா.சு அநுத்தமா பற்றியோ ஆர்.சூடாமணி பற்றியோ சொல்லியிருக்கும் உதிரிவரிகளிலுள்ள கேலியும் தட்டிக்கொடுக்கும் தன்மையும் இன்று உறுத்தலாகவே தெரிகின்றன.

ரம்யா தமிழில் ‘பெண்ணுரிமை’ க்குரல்கள் இலக்கியத்தில் பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளன என்று நம்புபவர். ஆனால் பெண்ணெழுத்து போதிய வலுவுடன் உருவாகவில்லை. காரணம் பெண்களின் எழுத்து ஒன்று பெண்ணுரிமைக் கோரிக்கையாக வெளிப்பட்டது. அல்லது  மெல்லுணர்வு எழுத்தாக வெளிப்பட்டது. தீவிர இலக்கியத்தளத்தில் தொடக்ககால பெண்ணுணர்வுகள் வெளிப்பட்டபோதிலும் அவை கவனிக்கப்படவோ வளரவைக்கப்படவோ இல்லை. அன்றைய விமர்சகர்களால் அவை பொருட்படுத்தப்படவில்லை, அல்லது மட்டம்தட்டப்பட்டன. ஆகவே அவை தொடக்கமாக மட்டுமே நின்றுவிட்டன என எண்ணுபவர். அனேகமாக எல்லா இலக்கியமேடைகளிலும் ரம்யாவின் குரல் இதையொட்டியே எழுந்து வருகிறது.

பெண்ணெழுத்தை முன்வைக்கும் நோக்குடன் ரம்யா தொடங்கிய நீலி இணைய இதழ் இன்று தமிழில் பெண்ணெழுத்தின் வெவ்வேறு பக்கங்களை ஆராயும் முக்கியமான இலக்கியக்களமாக அமைந்துள்ளது. பெண் செயல்பாட்டாளர்கள், முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள், மறைந்த ஐரோப்பியப் பெண் இலக்கியமேதைகள் என தமிழ்ச்சூழல அறியாத ஒரு பக்கம் அதில் விரிகிறது.  மிகுந்த கருத்துத்தெளிவுடன் ரம்யா அவ்விதழை நடத்தி வருகிறார். (நீலி மின்னிதழ்)

ரம்யா எழுதிய சிறுகதைகளின் தொகுதி நீலத்தாவணி  இப்போது வெளியாகியுள்ளது.பல்வேறு களங்களைச் சேர்ந்த கதைகள். தன்வரலாற்றுத்தன்மை கொண்ட நீலத்தாவணி ஓர் எல்லை என்றால் மறைந்த நாடகநடிகை பாலாம்பாள் பற்றிய கதை இன்னொரு எல்லை.

யாவரும் பதிப்பகம் வெளியீடாக நீலத்தாவணி பிரசுரமாகியுளளது

 

 

 

முந்தைய கட்டுரைமுகில்களின் வடிவம், கடிதம்
அடுத்த கட்டுரைபாலமுருகனடிமை சுவாமிகள்